ஜெயக்கொடி பிக்சர்ஸ் சார்பில் ஜே.பி.அமல்ராஜ் தயாரித்துள்ள புதிய படம் ‘உயிர்க்கொடி’.
இந்தப் படத்தில் பி.ஆர்.ரவி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். கதாநாயகியாக பெங்களூரைச் சேர்ந்த அஞ்சனா நட்சத்திரா நடித்துள்ளார்.
மேலும் ஜே.பி.அமல்ராஜ், ‘கோலிசோடா’ கீதா, ‘வெண்ணிலா கபடி குழு’ ஜானகி, மாம்பா சரத், பாபு குரு, ஷோபா, சுந்தர்.டி., அர்ஜூன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கவிநாத், இசை – விக்னேஷ் பாஸ்கர், பின்னணி இசை – ஏ.ஜெ.அலி மிர்ஸா, படத் தொகுப்பு – சத்ய நாராயணன், நடனம் – ட்ரீம்ஸ் காதர், தயாரிப்பு – ஜே.பி.அமல்ராஜ், எழுத்து, இயக்கம் – பி.ஆர்.ரவி.
இந்தப் படத்தின் கதை மிக, மிக வித்தியாசமானது. இதுவரையிலும் தமிழில் யாரும் தொட்டிருக்காத கதை என்றுகூட சொல்லலாம்.
கர்நாடகா செல்லும் ஒரு தமிழ்ப் பெண் அங்கே ஒரு வீட்டில் தன் குழந்தைக்கு குடிக்கத் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடிக்கும்போது, தமிழர்களையே வெறுக்கும் ஒரு கன்னடப் பெண் அதனை தட்டிவிடுகிறாள். ‘தமிழர்களுக்கு தண்ணியில்லை’ என்கிறாள் அந்த கன்னடப் பெண். இதனால் வெகுண்டெழும் தமிழ்ப் பெண், “குளிக்கிற தண்ணீரையே குடிக்கக் கொடுக்க மறுக்கும் உன்னை, சீக்கிரமே ஒரு தமிழன், குடிக்கிற தண்ணீரால் குளிப்பாட்டுவான்..” என்று சாபமே விடுகிறாள்.
இந்த சாபம் பலிப்பது போலவே அடுத்தடுத்து சில சம்பவங்கள் அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கிறது. அந்தப் பெண்ணையும், தீவிரமாக தமிழ் பேசும் ஹீரோவையும் ஒரு ரவுடிக் கும்பல் கடத்திப் போய் யாருமற்ற காட்டில் இருக்கும் ஒரு மிகப் பெரிய குழியில் தள்ளிவிடுகிறார்கள்.
கிட்டத்தட்ட 5 நாட்களுக்கும் மேலாக அந்தக் குழியிலேயே இருக்கும் கன்னடப் பெண்ணும், தமிழ்ப் பையனும் எப்படி அந்தச் சிக்கலில் இருந்து மீண்டு வருகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இந்தக் கதையில் ஹீரோவாக நடிக்க தமிழ்த் திரையுலகில் யாருமே சம்மதிக்காததால் தானே ஹீரோவாக நடித்ததாக சொல்கிறார் இயக்குநர் ரவி.
இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ‘பெங்களூரு கண்மணியே’, ‘கண்ணில் காவிரி ஏனோ’, ‘மங்களூரு மல்லிகையே மனசு மருகுதல் ஏனோ’ ஆகிய பாடல்கள் இனிமையான இசையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் படப்பிடிப்பு 55 நாட்கள் இரு கட்டப் படப்பிடிப்பாக ராமநாதபுரம், கமுதி, பெங்களூர், கோவா, பொள்ளாச்சி, அவினாசி ஆகிய இடங்களில் நடந்துள்ளது.
ராமநாதபுரம் அருகில் இருக்கும் கமுதி விளக்கு என்னும் ஊரில் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் மக்கள் நடமாட்டமே இல்லாத இடத்தில் 20 அடி ஆழத்தில், 5 அடி அகலத்தில் கடினமான மண்பாறை கொண்ட அந்த இடத்தில் ஆழமாக குழியைத் தோண்டி அதில்தான் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள்.
இதற்காக மதுரையில் இருந்து பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து பயன்படுத்தியிருக்கிறார்கள். மேலும் 50 தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு குழிக்குள் தண்ணீரை உற்றி அதில் கதாநாயகனும், நாயகியும் தவிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.
நாயகனும், நாயகியும் உணவில்லாமல் மயங்கிய நிலையில், களைப்புடன் கூடிய தோற்றத்தில் இருப்பதற்காக 5 நாட்கள் சரியாக உணவு உண்ணாமல் பழச்சாறு மட்டுமே அருந்தியிருக்கிறார்கள்.
இதனால் படப்பிடிப்பின் கடைசி நாளில் நாயகியின் உடல் நிலை சோர்வாகி மயங்கிவிட்டாராம். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து ஓய்வெடுக்க வைத்து பின்பு மீண்டும் படப்பிடிப்புக்கு அழைத்து வந்ததாக சொன்னார் இயக்குநர் ரவி.