full screen background image

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை அமலா நடிக்கும் புதிய தொடர் ‘உயிர் மெய்’..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை அமலா நடிக்கும் புதிய தொடர் ‘உயிர் மெய்’..

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் புத்தம் புது முயற்சியாக மருத்துவத்தின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி வரவிருக்கும் தொடர்தான் ‘உயிர் மெய்’.

மாறுபட்ட தொடர்களை தருவதில் எப்போதும் முதன்மையாக இருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி, மேலும் அடுத்த கட்ட புது முயற்சியாக ஒரு மாபெரும் மருத்துவமனையை கதைக் களமாக கொண்டு உருவாக்கும் மருத்துவத் தொடரே இந்த ‘உயிர் மெய்’ தொடர்.

தயானந்த் இண்டஸ்ட்ரீஸின் ஸ்தாபகரான திரு.தயானந்தின் வாழ்க்கை கனவுதான் இம்மருத்துவமனை. உலக தரத்துடன் நிர்மாணிக்கப்பட்ட இம்மருத்துவமனையில் அனைத்து மருத்துவ பிரிவுகளும் இருந்தாலும், இதன் அவசர சிகிச்சைப் பிரிவு மற்ற மருத்துவமனைகள் பார்த்து பொறாமைப்படும் விதத்தில் போற்றத்தக்கதாக அமைந்திருக்கிறது.

அவசர சிகிச்சை பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர் கவிதா சந்தீப், இவருக்கு கீழே பணியாற்றும் டாக்டர் புவனா நடராஜன், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கரண்பெல்லா, அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோ அருண்மணி, அமெரிக்காவில் மருத்துவம் படித்துவிட்டு அறுவை சிகிச்சையில் பயிற்சி எடுக்க வந்திருக்கும் டாக்டர் தமிழ்செல்வன்,  அவசர சிகிச்சை பிரிவு நர்ஸ்.ஜென்னி இவர்களே இத்தொடரின் முக்கியமான கதாபாத்திரங்கள்.

இவர்களைத் தவிர அலுவலகத்தில் பணி புரியும் ஏழுமலை, பன்னீர்செல்வம் மற்றும் இதர நர்ஸ்கள் சரளா,  வித்யா, சுமதி… இப்படி அனைவருமே நமது சமுதாயத்தின் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை நினைவூட்டுவார்கள்.

‘மைதிலி என்னை காதலி’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சினிமா நட்சத்திரம் நடிகை அமலா, இக்கதையின் முக்கிய கதாபாத்திரமான டாக்டர் கவிதா சந்தீப் கேரக்டரில் நடிக்கிறார்.

‘உயிர் மெய்’ தொடரில் ஒரு முக்கிய பிரம்மாண்டமும் இருக்கிறது. கதையின் களமான ஒரு மிகப் பெரிய மருத்துவமனையை கலை இயக்குனர் தோட்டாதரணி அமைத்துள்ளார்.  20 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான மருத்துவமனையில்தான் தற்போது  படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த உயரிய படைப்பான ‘உயிர் மெய்’ தொடரை பூஷன் மற்றும் ப்ரியா இயக்க,  ஒளிப்பதிவை அருண்மொழி ஏற்க, கதை, திரைக்கதையை ராதிகா எழுத, இவர்கள் கூட்டணியில் இந்த பிரம்மாண்ட தொடர் உருவாகி வருகிறது.

இத்தொடர் பற்றி இயக்குநர் பிரியா கூறும் போது, “இது கண்டிப்பாக பார்ப்பவர்கள் மனதில் புதிய உணர்வை, உருக்கத்தை ஏற்படுத்தும். வழக்கமான தொடர்போல் அல்லாமல், நேயர்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு படைப்பாகவும், ஒவ்வொரு காட்சியும் அழகுபட… பார்ப்பவர் மனதை வசீகரிக்கும்விதமாக உருவாக்கி வருகிறோம்..” என்றார்.

இத்தொடரின் அழகுக்கு மேலும் பெருமை சேர்க்கும்விதமாக, இதன் தலைப்பு பாடலுக்கான  இசையை, இயைமைப்பாளர் தரண் அமைக்க, பாடலை சினேகன் எழுத, ஹரிச்சரண் பாடலைப் பாடியுள்ளார்.

முற்றிலும் மாறுபட்ட இப்படியொரு புதுமையான தொடரை படைப்பது பற்றி ஜீ தமிழ் தொலைக்காட்சி பிஸ்னஸ் ஹெட் என்.எஸ்.ஈஸ்வரன்  கூறும்போது, “உயிர் மெய்’ தொடர் கட்டாயமாக மக்கள் குடும்பத்தோடு,  பார்த்து ரசித்து, அவர்கள் கொண்டாடும் ஒரு தொடராக இருக்கப் போகிறது. ஒவ்வொரு மனிதனின் உணர்வையும் பிரதிபலிக்க இருக்கும் இத்தொடர் நேயர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியத் தொடராக அமையப் போவது உறுதி..” என கூறினார்.

குளோபல் ஒன் ஸ்டுயோ இத்தொடரை தயாரித்து வழங்க, வரும் ஆகஸ்ட் மாதம்  18-ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளிவரை, இரவு  8  மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘உயிர் மெய்’ ஒளிபரப்பாக உள்ளது.

Our Score