full screen background image

சமூக வலைத்தளங்களால் சீரழியும் இளைஞிகளைப் பற்றிய கதை..!

சமூக வலைத்தளங்களால் சீரழியும் இளைஞிகளைப் பற்றிய கதை..!

ஆண்டவர் மூவிஸ் சார்பில் மும்தாஜ் யாஸ்மின் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘உயிரே உன்னை நான் அறிவேன்’.

இந்தப் படத்தில் ராகுல், ஷ்யாம் என்ற இரண்டு நாயகர்கள் அறிமுகமாகிறார்கள். இதேபோல் மோனிஷா, சஞ்சனா என்ற புதுமுகங்கள் ஹீரோயினாக நடிக்கிறார்கள். மற்றும் பல புதுமுகங்களும் இதில் நடிக்கிறார்கள். படம் சம்பந்தப்பட்ட அனைவருமே தமிழ்த் திரையுலகத்திற்கு முற்றிலும் புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவு – கே.வி.ராஜன், இசை ஏ.ஆர்.நேசன், பாடல்கள் அசோக் தேவன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வெற்றிச் செல்வன்.

இப்போதைய சூழலில் சமூக வலைத்தளங்களால் பல பயன்கள் உண்டு என்றாலும் இன்னொரு பக்கம் சில சீரழிவுகளும் இதனாலேயே ஏற்பட்டிருக்கின்றன.

இன்றைய இளைஞர்கள் குறிப்பாக மாணவர், மாணவிகள் நேரம் போவதே தெரியாமல் எப்போதும் பேஸ்புக், டிவிட்டர் என்றே பொழுதைக் கழித்து வருகிறார்கள். இதனை மையக் கருவாகக் கொண்டுதான் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

கல்லூரி மாணவியான ஹீரோயினுக்கு இணையம் மூலமாக ஒரு ஆணின் நட்பு கிடைக்கிறது. அது கூடா நட்பு என்றே தெரியாமல் அந்த மாணவி அந்த முகம் தெரியாத ஆணிடம் மனதைப் பறி கொடுக்கிறாள். இன்னொரு பக்கம் இதே வலைத்தளம் மூலமாக இன்னொரு இளைஞனும் அதே இளைஞியின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான்.

முக்கோண காதலாக இருக்கும் இந்தச் சிக்கலான பிரச்சினையில் இருந்து அந்தப் பெண் எப்படி தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறாள் என்பதை சமூக விழிப்புணர்வு உள்ள சமூகக் கருத்துடன் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்..!

படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்துள்ளது. பாடல் காட்சிகள் ஊட்டி, ஏற்காடு, ஏலகிரி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

Our Score