கர்நாடகாவில் சினிமா தொழிலாளர்கள் அமைப்புக்கு மாற்றாக வேறொரு புதிய அமைப்பை சில தயாரிப்பாளர்கள் முன் வைத்ததை எதிர்த்து அங்கேயிருக்கும் பெப்ஸி தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பெப்ஸி எனப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்திற்கு நான்கு மொழிகளிலும் கிளைகள் உண்டு என்றாலும், அந்தந்த மாநிலங்களில் தனித்தனி தலைப்புகளில் அச்சங்கங்கள் அழைக்கப்படுகின்றன.
கர்நாடகாவில் Karnataka Chalana Chitra Karmikara Kalavidara Tantragnara Okkuta என்ற பெயரில்தான் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் செயல்படுகிறது. இப்போது இந்த அமைப்புக்கு மாற்றாக புதிய தொழிலாளர்களைக் கொண்ட ஒரு அமைப்பிற்கு கர்நாடக மாநில பிலிம் சேம்பர் ஆதரவளித்து, அனுமதியும் அளித்து கர்நாடக சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது. இதனை எதிர்த்து கர்நாடக பெப்ஸியின் தொழிலாளர்கள் சென்ற வாரத்தில் இருந்து திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெங்களூரில் சென்ற வாரமே முகாமிட்ட உத்தமவில்லன் படக் குழுவினர் ஷூட்டிங் நடத்த முடியாமல் தவித்துவிட்டனர். பிரச்சினை எப்போது தீரும் என்பது தெரியாமல், சென்னைக்கே பேக்கப் செய்துவிட்டனர். தற்போது சென்னையில் இதற்காக செட் போட இடம் தேடும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் ‘உத்தமவில்லன்’ படக் குழுவினர்.
“ஸ்டிரைக் சீக்கிரமாக முடிவடைந்தால் திரும்பவும் பெங்களூர் வந்து ஷூட் செய்வோம். இல்லையெனில் சென்னையில்தான் எடுத்தாக வேண்டும். எங்களுக்கு வேறு வழியில்லை..” என்று சொல்லியிருக்கிறார் ‘உத்தமவில்லன்’ படத்தின் இயக்குநர் ரமேஷ் அரவிந்த்.
மேலும் பல கன்னட சினிமாக்களின் ஷூட்டிங்கும் தடைபட்டு நிற்க.. சமரசப் பேச்சுகள் அங்கேயும் தொடர்ந்து நடந்திருக்கிறது. இந்தப் புதிய அமைப்பின் உதயத்திற்கு ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைதான் பிரதான காரணமாக இருக்கிறது.. இவர்களைவிட மிகக் குறைந்த சம்பளத்தில் ஆட்கள் கிடைக்கும்போது அவர்களை வைத்தே நாங்கள் வேலை வாங்கிக் கொள்கிறோம் என்று தயாரிப்பாளர்களில் ஒரு தரப்பினர் கூறுகின்றனராம்.
4 நாட்களுக்குப் பிறகு நேற்றைக்கு இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டுள்ளனர் ராஜ்குமார் குடும்பத்தினர். ராஜ்குமாரின் மகன்களான நடிகர்கள் சிவராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார் இருவரும் தொழிலாளர் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி, வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்படும் என்றும், புதிய சங்கத்தின் அனுமதி பற்றி விரைவில் பேசி தீர்க்கப்படும் என்று உறுதிமொழியளித்ததைத் தொடர்ந்து ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளதாம்.
பெங்களூரில் நேற்றில் இருந்துதான் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியதாம். ‘உத்தமவில்லன்’ ஷூட்டிங் பெங்களூரிலா.. சென்னையிலா என்று தெரியவில்லை..!