full screen background image

உருட்டு உருட்டு – சினிமா விமர்சனம்

உருட்டு உருட்டு – சினிமா விமர்சனம்

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் சார்பில் பத்ம ராஜு ஜெய்சங்கர் தயாரித்திருக்கும் இந்த உருட்டு உருட்டுபடத்தை கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாஸ்கர் சதாசிவம்.

இந்தப் படத்தில் கஜேஷ் நாகேஷ் (சந்துரு), ரித்விகா ஸ்ரேயா (சர்மி), மொட்டை ராஜேந்திரன் (மூணு பொண்டாட்டி முனுசாமி), அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா, தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் (டபுள் டாக்குமெண்ட் தர்மராஜ்) ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு யுவராஜ் பால்ராஜ் , பாடல் இசை அருணகிரி, பின்னணி இசை கார்த்திக் கிருஷ்ணன், பாடல்கள் –  பெப்சி தாஸ், பாஸ்கர், எடிட்டிங் திருச்செல்வம், நடனம்  தினா, விளம்பர வடிவமைப்பு விஜய் கா.ஈஸ்வரன், பத்திரிக்கை தொடர்பு புவன் செல்வராஜ்.

எந்நேரமும் குடியில் மிதந்து கொண்டிருக்கிறார் நாயகன் சந்துரு என்ற கஜேஸ். அதே ஊரில் டபுள் டாக்குமெண்ட் என்ற பட்டப் பெயரோடு வாழ்ந்து வரும் ஹீரோயினின் அப்பா எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு கெட்டவரா இருக்கிறார். ஏழைகள், படிக்காதவர்களின் நிலங்களை போலி டாக்குமெண்ட் வைத்து சுருட்டுவதை கொள்கையாக வைத்திருக்கிறார்.

ஹீரோயினும், ஹீரோவும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறார்கள். பின்பு சினிமா பாணியிலேயே சில பல சில்லரை வேலைகளுக்கு நடுவில் காதலிக்கவும்  துவங்குகிறார்கள்.

காதலிக்கோ தன் காதலன் மற்றவர்கள் மாதிரி நல்லதொரு குணநலனோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், நாயகனோ குடிப்பது மட்டுமே தன்னுடைய வேலை என்று நினைத்து அதன் போக்கிலேயே போய்க் கொண்டிருக்கிறார்.

இவர்களது காதல் விவகாரம் காதலியின் அப்பாவுக்கும் தெரிந்துவிட வீடு தேடி வந்து மிரட்டி விட்டு போகிறார். ஆனாலும் காதலர்கள் கேட்கவில்லை. இந்த நேரத்தில் ஊருக்குள் இருந்தால் காதலனை கொலை செய்து விடுவார்களோ என்று பயப்படும் ஹீரோயின் மாமா வீட்டுக்குப் போகிறேன்என்று அப்பாவிடம் சொல்லிவிட்டு ரகசியமாக நாயகனையும் அங்கே அழைத்துப் போகிறார்.

ஹீரோயினின் மாமாவான மூணு பொண்டாட்டி முனுசாமி ஒரு சித்த வைத்திய மருத்துவர். அதனால் அவர் ஏதாவது செய்து நாயகனை காப்பாற்றி விடுவார் என்று நாயகி நினைக்கிறார். இன்னொரு பக்கம் நாயகனை எங்கே பார்த்தாலும் வெட்டித் தள்ளுங்க..” என்று ஹீரோயினின் அப்பா தன்னுடைய அடியாட்களிடம் சொல்லிவிட்டார். அவர்களும் ஹீரோவை வலைவீசி தேடுகிறார்கள்..

இறுதியில் என்ன நடக்கிறது?.. நாயக நாயகி இணைந்தார்களா?.. நாயகர் தன்னுடைய குடிப் பழக்கத்தை விட்டானா?.. சித்த வைத்தியம் பலித்ததா?.. ஹீரோயினின் அப்பா என்ன செய்தார்?.. என்பதெல்லாம் படம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய திரைக்கதை.

தமிழ் திரையுலகில் காமெடியின் உச்சமான நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனான கஜேஸ்தான் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.

சினிமாவுக்கு ஏற்ற முகமெல்லாம் இல்லை. கொஞ்சமும் மேக்கப்பில்கூட திருத்தம் செய்யப்படவில்லை. இப்போது இருப்பது மாதிரியே நடித்துவிட்டு போகிறேன் என்று நடித்திருக்கிறார். சில இடங்களில் ரசிக்க முடிகிறது. ஆனால் பல இடங்களில் அவருடைய நடிப்பில் செல்பே எடுக்கவில்லை.

எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரி முகபாவனையோடு காட்சி அளிப்பதனால், இந்த மூஞ்சியை ஹீரோயின் எதுக்கு காதலிக்கிறார் என்று நம்மிடமே ஒரு கேள்வி எழுகிறது. ஆனால், தண்ணி அடித்து விட்டு பேசும் அந்த சில இடங்களில் மட்டுமே கஜேஸ் ஒரு நடிகனாக தெரிகிறார்.

நாயகி ரித்விகா ஸ்ரேயா சினிமாவுக்கு ஏற்ற ஒரு முகம். அப்பாவைப் போலவே அடாவடியா என்று சந்தேகிக்கும் அளவுக்கு அறிமுகக் காட்சிகளில் நடித்திருக்கும் ஹீரோயின் போகப்போக காதலனை திருத்த நினைக்கும் ஒரு அழகான, அதிசயமான காதலியாகத் தெரிகிறார்.

இறுதிக் காட்சியில் அவர் செய்யும் அந்த படுகொலையைத்தான் நம்மால் ஜீரணிக்கவே முடியவில்லை. பூ ஒன்று புயலானது பணியில் வசனம் பேசிவிட்டு அவர் அழுகின்ற அந்தக் கட்சியில் மட்டும் நாயகியாகவே தெரிகிறார்.

நாயகியின் மாமாவாக நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன் இந்த படத்தைப் பார்க்கும் அத்தனை ஆண்களின் வயிற்றெரிச்சலையும் வாங்கிக் கொட்டியிருக்கிறார். படத்தில் அவருக்கு மூன்று மனைவிகள். மூணு பொண்டாட்டி முனுசாமி என்ற பெயரைத் தக்க வைக்கும் அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.

இவரது மனைவிகளாக நடித்திருக்கும் அஸ்மிதா, ஹேமா, சின்னாளப்பட்டி சுகி மூன்று பேருமே ஆண்டிகளின் பிரியர்களுக்காக சில காட்சிகளை படத்திலும், பாடல் காட்சியிலும் கொடுத்திருக்கிறார்கள்.

படத்தில் காதல் தோல்வியால் வருத்தப்படும் அங்காடி தெரு சுப்பையா இந்தப் படத்தில் தனியாக நம்மை கவர்ந்து இருக்கிறார். அதேபோல் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சேர்மன் ராஜ், மிப்பு நடேசன், பாலா லட்சுமணன் மூவரும் சற்றும் குறைவின்றி நடித்திருக்கிறார்கள்.

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் பத்மராஜூ ஜெய்சங்கர் தன்னுடைய முரட்டு பார்வையிலேயே வில்லத்தனத்தைக் காட்டி இருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு இன்னொரு வில்லன் பராக்!

இசையமைப்பாளர் அருணகிரியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படிதான் இருக்கிறது. கொங்கார வங்காரா என்ற பாடல், தியேட்டர் ரசிகர்களையும் தாண்டி இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இன்னொரு மெலடியான காதல் பாடலும் காதுகளில் இரைச்சல் இல்லாமல் அழகாக விழுகிறது. பின்னணி இசை அமைத்திருக்கும் கார்த்திக் கிருஷ்ணா இது மிடில் பட்ஜெட் கிராமிய படம் என்பதை அந்த இசையிலேயே காட்டி இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் யுவராஜ் பால்ராஜ் பாடல் காட்சிகள் அத்தனையையும் வெகு ரசனையாக கலர்ஃபுல்லாக படமாக்கி இருக்கிறார். மொட்டை ராஜேந்திரனின் வீட்டில் நடைபெறும் கலவரங்களை பல்வேறு காட்சி கோணங்களில் எடுத்து நம்மை தொடர்ந்து பார்க்க வைத்திருக்கிறார்.

இயக்குநர் பாஸ்கர் சதாசிவம் நமது இப்போதைய இளைய சமுதாயம் குடியினால் அழிந்து கொண்டிருக்கும் விஷயத்தை கொஞ்சம் காமெடியாகவும், கொஞ்சம் காதலாகவும், கொஞ்சம் செண்டிமெண்டாகவும் கொடுப்பதற்காக முயற்சி செய்திருக்கிறார்.

இதற்காகவே கிளைமாக்ஸ் காட்சியில் இதுவரையிலும் எந்த ஒரு காதலியும் செய்யாத ஒரு செயலை செய்வது போலவும் கதை திரைக்கதை அமைத்திருக்கிறார்.

ஆனால் ஒரு தவறு செய்வதற்கு ஆளாளுக்கு இப்படி சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு நாங்களே தண்டனை கொடுத்து விடுகிறோம் என்று சொல்லிவிட்டு இறங்குவது எந்த வகையிலும் நியாயம் அல்ல. இந்தக் கதைக்கு இந்த கிளைமாக்ஸ் நிச்சயம் சரியானது அல்ல. தவறானது.

ஒரு குடிமகன் குடித்தால் அவனை கொலை செய்வோம் என்று சொல்லிவிட்டு பெண்கள் இறங்குவது எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல.

குடி, குடி என்று குடிப் பழக்கமே இளைஞர்களை குடிக்கிறது என்று சொல்லும் இந்தப் படத்தில் குடியை திறந்து வைத்திருக்கும் மத்திய, மாநில அரசுகளைப் பற்றி ஒரு முணுமுணுப்புகூட இல்லாதது போங்கய்யாநீங்களும் உங்க டிராமாவும்என்றுதான் சொல்ல வைத்திருக்கிறது..

ஒரு நல்ல செய்தியை கமர்சியல் படமாகவும், கொஞ்சம் நகைச்சுவையாகவும் படம் முழுவதும் இன்றைய யூத்துக்கள் உட்கார்ந்து பார்ப்பதற்கு ஏற்ற வகையிலும் படத்தை எடுத்துக் கொடுத்திருக்கும் இயக்குநர், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

உருட்டு உருட்டுஎன்றாலே பொய் பொய்யாக சொல்கிறான்என்றுதான் அர்த்தம். இந்தப் படத்தில் அதே பாணியில் பொய் பொய்யாக கதை, திரைக்கதையை எழுதி வைத்திருக்கிறார் இயக்குநர்! இன்னும் கொஞ்சம் உண்மை தன்மையோடு படத்தை எடுத்திருக்கலாம்.

இப்போது இருக்கின்ற வகையில் நிச்சயமாக ஒரு முறை பார்க்கக் கூடிய படங்களின் லிஸ்டில் இந்தப் படமும் இடம் பிடித்து விட்டது.

RATING : 2.5 / 5

Our Score