2016-ம் ஆண்டின் துவக்கமே நடிகர் ஆரிக்கு மிக பிரகாசமாய் இருக்கிறது. ஒரு பாரம்பரியம் உள்ள தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் பெருமை பேச்சில் தெரிகிறது.
“என் மகிழ்ச்சியை சொல்லில் சொல்லி அளவிட முடியாது. அபிராமி திரையரங்குகளின் உரிமையாளர் ராமநாதன் சாரிடம் இருந்து அழைப்பு வந்தவுடன் சற்று பதற்றமாய்தான் இருந்தது. அது அவர் படத்தில் நடிக்க சொல்லி வந்த அழைப்பு என்பதை அறிந்தவுடன் என் உற்சாகத்துக்கு அளவே இல்லை. வளரும் நடிகனான எனக்கு அவரது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து நடிக்க அழைத்ததில் மிக மிக பெருமை.
அபிராமி மெகாமால் தயாரிக்கும் ‘உன்னோடு கா’ என்று இந்தப் படத்தில் நான் பிரபு சாருடன் இணைந்து நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நகைச்சுவை கலந்த காதல் கதையான ‘உன்னோடு கா’ படத்தில் எனக்கு இணையாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடைபெற்று கொண்டு இருக்கிறது.
திறமையான புதிய இயக்குனர் ஆர்.கே., ‘சென்னை-28’, ‘மங்காத்தா’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவை ஆற்றிய சக்தி சரவணன், ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் இசை அமைப்பாளர் சத்யா என்று பல திறமையான தொழில் நுட்பக் கலைஞர்களோடு இந்தப் படத்தில் இணைந்து இருப்பது ‘உன்னோடு கா’ படத்தின் மேல் ஏறும் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியிருக்கிறது.
பிரபு சாருடன், ஊர்வசி மேடமும் இணைந்து நடிப்பது ‘உன்னோடு கா’ படத்தின் இன்னுமொரு சுவாரஸ்யம். காமெடிக்கு மனோபாலா சார், மன்சூர் அலிகான் என்று ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.
இந்த மாத இறுதியில் ‘உன்னோடு கா’ படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. முழுக்கு முழுக்க ஜனரஞ்சகமாக, குடும்பத்தோடு வந்து ரசிக்க கூடிய படமாக இது இருக்கும்..” என்கிறார் உற்சாகத்துடன் ஆரி.









