வட்டிக்கு கடன் வாங்கி கஷ்டப்படும் மீனவர்களின் கதைதான் ‘உள்குத்து’ திரைப்படம்

வட்டிக்கு கடன் வாங்கி கஷ்டப்படும் மீனவர்களின் கதைதான் ‘உள்குத்து’ திரைப்படம்

சென்ற ஆண்டு வெளிவந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற  ‘திருடன் போலீஸ்’, ‘ஒரு நாள் கூத்து’  திரைப்படங்களை தயாரித்த ‘கெனன்யா பிலிம்ஸ்’ தயாரிப்பாளர் ஜெ.செல்வகுமார் மூன்றாவதாக தயாரித்துள்ள திரைப்படம்  ‘உள்குத்து’.

இந்தப் படத்தில் தினேஷ் நாயகனாகவும், நந்திதா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் பால சரவணன், ஸ்ரீமன், ஷரத் லோகிதஸ்வா, திலீப் சுப்பராயன், ஜான் விஜய், சாயாசிங், முத்துராமன், செஃப் தாமோதரன், மிப்பு சாமி, கதிர், ஃப்ரின்ஸ், ஜெயவாணி மற்றும் மூணார் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – பி.கே.வர்மா, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், கலை இயக்கம் – விதேஷ், இணை தயாரிப்பு – ஜி விட்டல்குமார்.

உள்குத்து திரைப்படம் வரும் டிசம்பர் 29-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது. இதையொட்டி, படத்தின் இயக்குநரான கார்த்திக் ராஜூ படம் பற்றி நிறையவே பேசினார்.

அவர் பேசும்போது, “நான் சென்னையில் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தைப் படித்துவிட்டு, சினிமாவில் தொழில் நுட்பப் பணியில் சேர்ந்தேன்.

என் வேலை படப்பிடிப்பு தளங்களுக்கு சென்று இரட்டை வேடங்கள் பற்றி நடிகர்களுக்கு சொல்லிக் கொடுப்பதுதான்.

‘படையப்பா’, ‘முதல்வன்’, ‘அந்நியன்’, ‘பாய்ஸ்’, ‘சச்சின்’, ‘எந்திரன்’, ‘தசாவதாரம்’, ‘சந்திரமுகி’, ‘கில்லி’, ‘போக்கிரி’ போன்ற படங்களில் தொழில் நுட்ப வேலைகளை செய்தேன். இதன் மூலம்தான் சினிமா ஆர்வம் எனக்குள் வந்தது.

அந்த அனுபவத்தில்தான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமலேயே இயக்குநர் ஆனேன். நான் இயக்கிய முதல் படம் ‘திருடன் போலீஸ்’. அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் இப்போது ‘உள்குத்து’ என்ற படத்தை இயக்கியுள்ளேன்.

ulkuthu movie stills

எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் மீன் சந்தை ஒன்று உள்ளது. அங்கு மீன் விற்பனை நடைபெறும். சின்ன பசங்க நான்கைந்து பேர் அந்த மீனை வெட்டி கிலோவுக்கு 20 ரூபாய் என சுத்தம் செய்து கொடுப்பார்கள். அதை நான் ரொம்ப நாளாகவே கவனித்து வந்தேன்.

மீன் சந்தையில் புதன், சனி, ஞாயிறு மட்டுமே வேலை இருக்கும். மற்ற நாள்களில் அந்த சிறுவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்தேன். அப்போது தோன்றியதுதான் இந்தக் கதை.  அவர்களை சார்ந்த கதையை  எழுதலாம் என்று முடிவு செய்தேன். அதுதான் இந்த ‘உள் குத்து’ திரைப்படம்.

மேலும், அந்த  சந்தையில் மீன் விற்பர்களிடம் தகவல்களை சேகரித்தேன். அதுவும் மிக சுவாரசியமாக இருந்தது.

மீனவர்களுக்கு மீன் வாங்க கையில் காசு இருக்காதாம். பின்னர் காலையில் மீனவர்கள் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்குவார்கள். அவர்களுக்கு கடன் கொடுப்பவர்கள் ஒரு லட்சத்தில் பத்தாயிரம் ரூபாயை எடுத்துவிட்டு மீதமுள்ள தொண்ணூறு ஆயிரம் ரூபாயை மட்டுமே மீனவர்கள் கையில் தருவார்கள். மாலையில் ஒரு லட்சம் ரூபாயாக மீனவர்கள் கடன் கொடுப்பவர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டுமாம்.

‘மீன் விற்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்..?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘மீனை நாங்கள் ஐஸ் பாக்ஸில் போட்டு விடுவோம். மறுநாள் விற்பனை செய்வோம்’ என்றார்கள். ‘ஆனால், அன்று ஐந்தாயிரம் ரூபாய்க்கு மட்டும் விற்று இருந்தால் எங்கள் பாடு திண்டாட்டம்தான். அடி, உதைகூட சமயத்தில் விழும். எங்களால் எதுவுமே செய்ய முடியாது. ஏனென்றால் மீண்டும் நாங்கள் அவர்களிடம்தான் எங்கள் தேவைக்கு பணம் வாங்க வேண்டியிருக்கும். அது கந்து வட்டியா இருக்குமோ என்றுகூட எங்களுக்கு சொல்ல தெரியவில்லை’ என்றார்கள்.

ulkuthu movie stills

அதேபோல் அந்த பசங்களும் சில விஷயங்களை என்னிடம்  சொன்னார்கள். ‘நான் மீன் வெட்டினால் ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் கொடுப்பார்கள். ஒரு நாளைக்கு அதிகப்பட்சம் இரண்டு மணி நேரத்தில் இருபது முதல் இருப்பத்தைந்து கிலோவரை மீனை வெட்டுவேன். அதன் பின் எனக்கு எந்த வேலையும் இல்லை’ என்றான் அந்த சிறுவன்.

நான் இந்த சின்ன பசங்களை மையப்படுத்தி அதில் ஒரு ரவுடித்தனத்தை உட்புகுத்தி கதையை தயார் செய்தேன். இந்த சின்ன பசங்களுக்கு வேலை இல்லாத நேரத்தில் இவர்களை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று கற்பனையில் ஒரு கதையை உருவாக்கினேன்.

அவர்களிடம் இதை பற்றி விசாரித்தேன். அவர்களும் என் கற்பனையில் வந்தது போல் அவர்களை சிலர் தவறான விஷயத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டனர்.

அதை மையப்படுத்தியும் ஒருவன் தன் வீட்டில் உள்ளவர்களைவிட நண்பனிடம்தான் அதிக விஷயங்களை பகிர்ந்து கொள்வான் என்கிற உண்மையுடன், 25 வருட கால நட்பை மையப்படுத்தியும், ஒரு நண்பனுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவன் நண்பன் எப்படி அதை கையாளுவான் என்றும் இந்த கதையை அமைத்திருக்கிறேன்.

ulkuthu movie stills

‘உள் குத்து’ என்பது உள்ளே ஒன்றை வைத்து, வெளியே ஒன்றை செய்வது என்று அர்த்தம். இந்த கதையும் அதை சார்ந்துதான் இருக்கும்.

மதுரை பேருந்து நிறுத்தத்தில் என் நண்பன் ஒரு கடை வைத்திருக்கிறார். அவரின் வாழ்க்கை முறையும் இப்படித்தான். காலையில் ஐம்பதாயிரம் ரூபாய் கேட்டால், அதை கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி என ஐயாயிரம் ரூபாய் எடுத்துவிட்டு மீதம் நாற்பத்தி ஐந்தாயிரம் ரூபாயை கையில் கொடுப்பார்கள். மாலையில் அதைத் திருப்பி தராவிட்டால் பெரிய பிரச்சனையை கடன் வாங்கியவர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் கொடுப்பார்களாம்.

இது இப்போது எல்லா துறையிலும் நடக்கும் ஒன்றாக ஆகிவிட்டது. ரோட்டோரம் கடை போடுபவர்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. எனவே வேறுவழி இல்லாமல் அவர்கள் கந்து வட்டிக்கு வாங்கித்தான் ஆக வேண்டும்.

கந்து வட்டி கொடுப்பவர்கள் தங்களது பணத்தை அடியாள் வைத்துதான் வசூல் செய்வார்கள். கந்து வட்டி கும்பல் தலைவனிடம் வேலை செய்யும் ஐந்து பேரில் நான்கு நண்பர்கள் எப்படி இருப்பார்கள்..? அதில் ஒருவனை ஒரு பிரச்சனையில் தலைவன் கொலை செய்தால்.. மற்ற நண்பர்கள் எப்படி தலைவனை கையாளுவார்கள் என்பதே படத்தின் கதை.

ulkuthu movie stills

சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் சமீபத்தில்  கந்து வட்டி பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டார். அந்தச் சம்பவம் எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்துள்ளது.  இந்தக் கதை ஒரு வருடத்திற்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டதால், தற்போதைய நிகழ்வுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

‘திருடன் போலீஸ்’ படத்தின் படப்பிடிப்பின்போதே நான், தினேஷ், பால சரவணன் ஆகிய மூவரும் மீண்டும் இணைவதாக முடிவு செய்துவிட்டோம். தினேஷ் கதைக்காக கடுமையாக உழைக்க தயாராக இருக்கும் ஒரு நபர்.

ஏற்கனவே நந்திதா, தினேஷ் இருவரும் ‘அட்டக் கத்தி’யில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். எனவே நந்திதாவையே கதாநாயகியாக முடிவு செய்தோம். நந்திதா துணிக் கடையில் வேலை செய்யும் பெண்ணாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் தினேஷ் மீன் வெட்டும் இளைஞனின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் P.K.வர்மா இவர் ‘அட்டக்கத்தி’, ‘குக்கூ’ போன்ற படங்களில் வேலை பார்த்தவர். ‘குக்கூ’ படத்தை பார்த்து அவருடனும் வேலை செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.  

ulkuthu movie stills

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனை ‘பண்ணையாரும் பத்மினியும்’ இசையைக் கேட்டவுடனேயே அவருடன்தான் வேலை செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். படத்தின் சில காட்சிகளை பார்த்த பின்புதான் ஜஸ்டின் இசையமைத்துக் கொடுத்தார். படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள். ஒரு பாடலை பாடலாசிரியர் விவேக்கும், மற்றொரு பாடலை கவிஞர் கட்டளை ஜெயா எழுதியுள்ளார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் பெரும் பகுதியை கன்னியாகுமரி அருகேயிருக்கும் முட்டம் என்ற இடத்தில் நடத்தினோம். படப்பிடிக்கு ஏற்ற அருமையான இடம் அது. ‘கடலோரக் கவிதைகள்’ படம் முழுவதும் நடந்த இடம் அதுதான்..!

எனக்கு காமெடி மற்றும் அதை சார்ந்த உணர்ச்சிமயமான கதைகளையே படமாக எடுக்க பிடிக்கும். கதைக்குத் தேவைப்பட்டால் கிராபிக்ஸ் அமைத்துக் கொள்வேன். ஆனால் கிராபிக்ஸ் சார்ந்த படம் எடுக்க மாட்டேன்…” என்றார் இயக்குநர் கார்த்திக் ராஜு.

Our Score