‘புரட்சித் தலைவர்’, ‘மக்கள் திலகம்’ என்றெல்லாம் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மறைந்து 33 ஆண்டுகள் ஆனாலும், இன்றைக்கும் அவர் தமிழகத்தில் மறக்க முடியாத ஒரு மனிதராகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அப்படி அவரது நிழலாகவே தன்னை உருமாற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார் ‘நாமக்கல் எம்.ஜி.ஆர்.’ என்றழைக்கப்படும் அவரது தொண்டர்.
எம்.ஜி.ஆர். போன்ற தோற்றத்திலேயே எப்போதும் தென்படும் இவர் எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட விழாக்களில் அவசியம் கலந்து கொள்வார். மேடை நிகழ்ச்சிகளில் அவரைப் போலவே ஆடிப் பாடுவார்.
இப்போது இவர் அதே எம்.ஜி.ஆர். கெட்டப்பில் ஒரு படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். அந்தப் படத்தின் பெயர் ‘உழைக்கும் கைகள்’. தயாரிப்பாளர் கே.சூர்யா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் நாமக்கல் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக கிரண் மயி நாயகியாக நடிக்கிறார். மேலும், போன்டா மணி, பிரேம்நாத் மற்றும் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
சங்கர் கணேஷ் இசையமைக்க செந்தில்நாதன் – நாமக்கல் எம்.ஜி.ஆர் இருவரும் இணைந்து இந்தப் படத்தை இயக்கி உள்ளர்கள்.
தற்போது நாடெங்கும் பற்றி எரிந்து கொண்டிருக்கும் விவசாயிகள் பிரச்சனையை மையமாக வைத்து புகழ் பெற்ற எம்.ஜி.ஆர். படமான ‘உழைக்கும் கரங்கள்’ படம் போல இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் கே.சூர்யா பேசுகையில், “தமிழகத்தில் இன்றும் யாரும் எம்.ஜி.ஆரை மறக்கவில்லை. நாமக்கல் எம்.ஜி.ஆரை பார்த்தவர்கள் அவரைத் தொட்டுப் பார்த்தும் கிள்ளி பார்த்தும் பிரமித்து போனார்கள். இந்த படம் முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் படத்தை பார்ப்பது போலவே இருக்குமாறு செந்தில்நாதனும் நாமக்கல் எம்.ஜி.ஆரும் சேர்ந்து இயக்கம் செய்துள்ளார்கள்.
தற்போது நாடெங்கிலும் மிகப் பெரிய பிரச்சினையாக உருவாகியிருக்கும் விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளது..” என்றார்.
இந்தப் படத்திற்காக பிரபல சண்டை இயக்குநரான ஜாகுவார் தங்கத்தின் சண்டைப் பயிற்சியில் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் தென்காசியில் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளன.
இந்தப் படத்தில் நாமக்கல் எம்.ஜி.ஆருக்காக நடிகர் ‘லொள்ளு சபா’ ஜீவா குரல் கொடுத்திருக்கிறார்.
இந்தப் படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது.