full screen background image

உடன்பிறப்பே – சினிமா விமர்சனம்

உடன்பிறப்பே – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை 2டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் நடிகை ஜோதிகாவும், நடிகர் சூர்யாவும் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, சிஜா ரோஸ், சூரி, கலையரசன், ‘ஆடுகளம்’ நரேன், சித்தார்த், நிவேதா சுரேஷ், வேல்ராஜ், வேல.ராமமூர்த்தி, தீபா, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – இரா.சரவணன், ஒளிப்பதிவு – ஆர்.வேல்ராஜ், இசை – டி.இமான், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – சி.கே.முஜிபூர் ரஹ்மான், ஒலிக் கலவை – டி.உதயக்குமார், ஒலி வடிவமைப்பு – சச்சின் சுதர்சன், பாடல்கள் – யுகபாரதி, சினேகன், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், சூப்பர் சுப்பராயன், ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, விளம்பர வடிவமைப்பு – கபிலன், தலைமை தயாரிப்பு மேற்பார்வை – சிவக்குமார், மக்கள் தொடர்பு – யுவராஜ்.

இது நடிகை ஜோதிகாவின் 50-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாவட்ட விவசாயிகள் பிரச்சனையை மையப்படுத்தி  வெளியான  கத்துக்குட்டி’ படத்தின் இயக்குநரான இரா.சரவணனின் இரண்டாவது திரைப்படம் இது.

குடும்பத்தோடு அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த உடன்பிறப்பே’ திரைப்படம் நேரடியாக அமேஸான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஆயுத பூஜை சிறப்பு திரைப்படமாக இன்று வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகத்தில் அழிக்க முடியாத ஒரு சென்டிமென்ட் அண்ணன் – தங்கை சென்டிமென்ட். நடிகர் திலகமும், நடிகையர் திலகமும் நடித்த பாசமலர்’ தொடங்கி ‘கிழக்கு சீமையிலே’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆகிய படங்கள்வரை பல்வேறு திரைப்படங்களுக்கும் அண்ணன், தங்கை சென்டிமென்ட்டை பல இயக்குநர்களும் பல்வேறுவிதமாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

இந்த ‘உடன்பிறப்பே’ படமும் அது போன்ற அண்ணன், தங்கை பாச உணர்வுகளை மையப்படுத்தி கூடவே விவசாயிகளின் நலன், சமூக அக்கறை, நகைச்சுவை கலந்த ஒரு குடும்ப பாங்கான திரைப்படமாக உருவாகியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் அண்ணன், தங்கையான பாச மலர்களாக இருந்த ஜோதிகா-சசிகுமாரின் பாசப் போராட்டம்தான் இந்தப் படம்.

அண்ணன் சசிகுமார் அடிதடிகளுக்கு அஞ்சாதவர். ஆனாலும், நேர்மையான சில நல்ல விஷயங்களுக்காக மட்டுமே அதைச் செயல்படுத்துவார். இவரது தங்கை ஜோதிகாவின் கணவரான சமுத்திரக்கனி ஒரு பள்ளி ஆசிரியர். எதையும் நேர்மையாகச் செய்ய வேண்டும். சட்டத்துக்குட்பட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பவர்.

இரண்டு குடும்பத்தினரும் நட்புறவோடு இருக்கும்போது மாமாவைப் போல தானும் ஒரு பெரிய அடாவடி ஆளாக வேண்டும் என்று சமுத்திரக்கனியின் மகன் நினைக்கிறான். இது அவனது வாழ்க்கையைப் பாதிக்கும் என்று சொல்லி சசிகுமாருக்கு அட்வைஸ் செய்து அவரைத் திருத்தப் பார்க்கிறார் சமுத்திரக்கனி. ஆனால் பலனில்லை.

ஒரு நாள் விளையாட்டின்போது பசங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது கனியின் மகனும், சசிகுமாரின் மகனும் கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட.. இவர்களை ஜோதிகா காப்பாற்ற முனைகிறார். ஆனால், அந்த நேரத்தில் யாராவது ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும் என்பதால் தன் அண்ணன் மீதிருந்த பாசத்தால், தன் மகனைவிட்டுவிட்டு அண்ணன் மகனைக் காப்பாற்றுகிறார் ஜோதிகா.

தன் மகன் இறந்த சோகத்திலும், அவன் ஏன் அடிப்பதற்காக ஓடினான் என்பதிலும் சசிகுமாரின் அடாவடித்தனம் இருப்பதை உணர்ந்த சமுத்திரக்கனி அன்றோடு சசிகுமாருடனான உறவைத் துண்டித்துக் கொள்கிறார்.

இந்த உறவு அறுந்துபோய் இப்போது 20 வருடங்களாகிவிட்டது. சமுத்திரக்கனியின் மகள் தாமரை இப்போது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறாள். சசிகுமாரின் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறான்.

ஆனால், இப்போதும் சமுத்திரக்கனிக்கும், சசிகுமாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லை. ஊரே இதை சுட்டிக் காட்டி உணர்த்தினாலும் சமுத்திரக்கனி இறங்கி வரவில்லை. இனி எந்தக் காரணத்திற்காகவும் மச்சான் சசிகுமாருடன் உறவு இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் சமுத்திரக்கனி. ஆனால் இன்னொரு பக்கம் தனது அண்ணன் சசிகுமாரும் கணவன் சமுத்திரகனியும் ஒன்று சேர மாட்டார்களா என ஏங்கித் தவிக்கிறார் தங்கை ஜோதிகா.

சமுத்திரக்கனியின் வைராக்கியம் உடையும்வகையில் ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையில் நடக்கிறது. அது என்ன என்பதும், இறுதியில் மாமனும், மச்சானும் சேர்ந்தார்களா.. அண்ணனும், தங்கையும் இணைந்தார்களா என்பதும்தான் இந்த ‘உடன்பிறப்பு’ படத்தின் திரைக்கதை.

ஜோதிகாதான் படத்தின் மையப்புள்ளி என்பதால் படம் மொத்தமுமே அவரைச் சுற்றித்தான் நடக்கிறது. தஞ்சாவூரை சேர்ந்த பெண்ணாகவே மாறியிருக்கிறார்  ஜோதிகா. மாதங்கி’ என்ற தனது கதாபாத்திரத்தை வைத்து மொத்தப் படத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறார் ஜோதிகா.

ஒரு பக்கம் கணவர் சமுத்திரக்கனி; மற்றொரு பக்கம் தன்னை வளர்த்தெடுத்த அண்ணன் சசிகுமார் என்று இருவரையும் விட்டுக்கொடுக்காமல் பேலன்ஸ் செய்யும் நடிப்பு வேலையை படம் முழுவதிலும் செய்திருக்கிறார் ஜோதிகா.

வழக்கம்போல அவர் நடிக்கும்போது அவருடைய கண்ணும், உடலும் சேர்ந்தே நடித்திருக்கிறது. அவருடைய ஸ்டைலான அந்த அரை கண்ணில் பேசும் மேனரிசம் மட்டும் இந்தப் படத்தில் குறைவு.

கிளைமாக்ஸில் தன்னுடைய அண்ணனை பற்றி கண்களில் கண்ணீரை தாரை,  தாரையாக வடித்து பேசும்போது நம்மையும் சேர்ந்து அழ வைத்துவிட்டார். கிளைமாக்ஸில் ஜோ ரசிகனின் மனதைத் தொட்டிருப்பது உறுதியானது.

சசிகுமார் அண்ணன் கதாபாத்திரத்தை செவ்வனே செய்துள்ளார். அவருடைய அறிமுகக் காட்சி நன்று.  உருக்கத்தைவிடவும் தெனாவெட்டாகவும், பாசமாகவும், நட்பாகவும் அவர் பேசும் பேச்சுக்கள் நடிப்பைவிடவும் இயல்பாக இருப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது. இயக்குநரின் இயக்குதல் திறமையால் தனது அண்ணன் கதாபாத்திரத்தை முழுமையாகச் செய்து முடித்துள்ளார்.

படத்திற்கு படம் நீதி போதனைகளை சொல்லிக் கொடுக்கும் சமுத்திரக்கனிக்கு இந்தப் படத்தின் கதாபாத்திரமும் அதேதான். ஆனால் சில விஷயங்களை இவர் சொன்னால்தான் அது எளிமையாகப் புரிகிறது என்பதால் இந்தக் கதாபாத்திரத் தேர்வு மிகச் சரியானதுதான்.

நீதி, நேர்மை பற்றி எப்போதும் விழிப்புணர்வு கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கண்ணியமான பள்ளி ஆசிரியராக தன்னுடைய நடிப்பை வழக்கம்போல் கனகச்சிதமாக நடித்துள்ளார் சமுத்திரக்கனி.

கடைசி காட்சியில் ஜோதிகா செய்த செயலைக் கேள்விப்பட்டு “நான் ஒண்ணுமே இல்லம்மா…” என்று கனி சொல்லும்போது அந்தக் காட்சிக்கே பெருமை சேர்த்திருக்கிறார்.

சூரி இதற்கு முன்பு கடைசியாக நடித்த ஒரு சில திரைப்படங்களில் அவருடைய நகைச்சுவைகள் சரியாக எடுபடவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இந்தப் படத்தில் காமெடியைக் கொட்டியிருக்கிறார். கூடவே குணச்சித்திரத்திலும் தனது நடிப்பைத் தெளித்திருக்கிறார்.

தமிழ்ச் சினிமாவில் யாருக்குமே வராத தைரியமாக இந்தப் படத்தில் “தாமரை மலர்ந்தே தீரும்” என்று கிண்டல் செய்திருக்கிறார் சூரி. இதற்காகவே சூரியை தனியாகப் பாராட்ட வேண்டும்.

சசிகுமார் மனைவியாக சிஜா ரோஸ். கண்ணம்மா’ கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றவர்.. நிஜ வாழ்க்கையில் இன்னமும் திருமணமாகதவர்.. ஆனால் இந்தப் படத்தில் ஒரு டீன் ஏஜ் பையனுக்கு அம்மாவாக அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார்.

வில்லனாக வரும் கலையரசனுக்குள் இருக்கும் அந்த மிருகம் வெளிப்படும்போது அவரது நடிப்பு ரசிப்பாக இருந்தது. அதேபோல் அவரது அப்பாவாக ஊரின் பெரிய மனிதராக ஆடுகளம்’ நரேன். சசிகுமாரின் உறவினர்களான வேல ராமமூர்த்தி, தீபா ஆகியோரும் இயக்குநரால் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சசிகுமாரின் மகனாக நடித்திருக்கும் புதுமுகம் சித்தார்த், கதாநாயகி ஜோதிகாவின் மகளாக நடித்திருக்கும் நிவேதிதா சதீஷ் இருவருக்கும் மிக அழகான அறிமுகம் இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறது. இவர்கள் இருவரும்தான் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் காரணமாக இருக்கிறார்கள்.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் வேல்ராஜ் குறையில்லாமல் காட்சிகளுக்கு அழகு செய்திருக்கிறார். அதோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

டி இமானின் இசையில் பாடல்கள் ஓஹோ இல்லையென்றாலும் கேட்கும் ரகம்தான். சோகக் காட்சிகளுக்கு பின்னணி இசையும் ஒரு பலமாகக் கிடைத்திருக்கிறது.

ஜோதிகா, சசிகுமார் சமுத்திரக்கனி மூவரும் பேசும் பல வசனங்களும் கதைக்கும், திரைக்கதைக்கும் பக்க பல மாக இருந்திருக்கிறது.

குறிப்பாக கனியின் மகள் நிச்சயத்தார்த்ததின்போது நடைபெறும் பேச்சுவார்த்தைகள் அசத்தல். ஒரு குடும்பத்தின் கதை என்றாலும் அதை பொதுவெளியில் எப்படி உறவுகள் விட்டுக் கொடுக்காமல் பேசுவார்கள் என்பதை இந்த வசனங்கள் மூலமாக உண்மையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

பல இடங்களில் திரைக்கதையில் இருக்கும் டிவிஸ்ட்டுகள்கூட படத்தை இறுதிவரையிலும் பார்க்க வைக்கிறது. கலையரசனின் இன்னொரு முகம் இப்படி வெளிப்படுமென்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதேபோல் கலையரசன் எங்கே.. எப்படி காணாமல் போனார்.. அவர் என்ன ஆனார்.. என்கிற டிவிஸ்ட்டுகள்தான் படத்தின் இறுதி முடிச்சு.

ஒரு குடும்பக் கதையில் கிரைம் கதையை நுழைத்திருந்தாலும் அது எப்படி பாசப் போராடத்திற்கு உறுதுணையாய் அமைகிறது என்பதை கச்சிதமாகக் திரைக்கதையில் செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர்.

தன் பையனைவிட்டுவிட்டு அண்ணன் மகனைக் காப்பாற்றும் அந்த ஒரு காட்சியே மாதங்கி தன் அண்ணன் மீது வைத்திருக்கும் பாசத்தைக் காட்டுகிறது.

இருந்தும் தனது அண்ணனுக்காக, கணவரை எதிர்த்துப் பேச வேண்டிய நேரத்தில் ஜோதிகாவின் அமைதியான பேச்சும், அண்ணனிடம் பாசத்துடன் பேச வேண்டிய சில காட்சிகளும் இதில் இல்லாமல் இருப்பது கொஞ்சம் ஏமாற்றம்தான்.

அண்ணன்-தங்கை பாசப் போராட்டம், ஆழ்துளை கிணறுகளால் கிராமங்களில் தண்ணீர் பிரச்சினை எழுந்திருப்பது, கடன் தவணை கட்ட முடியாத விவசாயியின் வாழ்க்கை போராட்டம், மார்வாடியின் வட்டி கதை ஆகிய சமூக அக்கறை கொண்ட விஷயங்களையும் இந்த சென்டிமெண்ட் கதையில் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன்.

பாசமலர்’களாய் இருப்பவர்களுக்கும், இருக்க நினைப்பவர்களுக்கும் நிச்சயமாக இந்தப் படம் பிடிக்கும்தான்..!

Rating : 3.5 / 5

Our Score