தேர்தல் கமிஷனரிடம்கூட அஜீத் ரசிகர்கள் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை கேட்டுவிட்டார்கள். அந்த அளவுக்கு அவர்களின் ஆர்வக் கோளாறு தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது.
சென்ற மாதத்தில் “மிக விரைவில் வலிமை படத்தின் அப்டேட் உங்களுக்குக் கிடைக்கும்” என்று அந்தப் படத்தின் இயக்குநரான ஹெச்.வினோத் சொன்னதாக சில செய்திகள் பரவின.
ஆனால் எதன் வாயிலாக அவர் அதைச் சொன்னார் என்பது தெரியவில்லை. போனி கபூரும் “விரைவில் சொல்கிறேன்” என்று மட்டுமே தனது டிவீட்டர் ஐடியில் தெரிவித்திருந்தார்.
இ்ந்த நேரத்தில், “வலிமை’ படத்தின் அனைத்து வியாபாரங்களும் முடிந்துவிட்டது. ஓவர்சீஸ் ரைட்ஸ், உள்ளூர் தியேட்டர்கள் ரைட்ஸ், சேட்டிலைட், ஓடிடி ரைட்ஸ் என்று அனைத்துமே முடிந்துவிட்டது” என்று @DirectorHVinoth என்ற டிவீட்டர் ஐடியில் வெளியிடப்பட்டிருந்தது.
இதனை உண்மை என்று நம்பி ரீஷேர்களும், காப்பி பேஸ்ட்டுகளும், கமெண்ட்டுகளும் பறந்தன. ஆனால் கடைசியில் இயக்குநர் வினோத் பெயரிலான இந்த ஐடியும் போலி என்பதையறிந்து இந்த ஐடியை தற்போது டிவீட்டர் நிர்வாகம் முடக்கிவிட்டது.

ஆனாலும் இந்தச் செய்திக்கு கண், காது, மூக்கு வைத்து “ஒட்டு மொத்தமாக ‘வலிமை’ படத்தின் வியாபாரம் 200 கோடியைத் தாண்டிவிட்டது” என்று இன்றைக்கு செய்திகளை பரப்பி வருகிறார்கள். இதற்கு ஹேஸ்டேக்காக #ValimaiRecordBusiness என்பதையும் கிரியேட் செய்துவிட.. தற்போது இது இந்தியாவில் மிகப் பெரிய அளவில் டிரெண்ட்டாகிவிட்டது.
எப்படியோ, ‘வலிமை’ வந்தாலும் செய்திதான்.. வராவிட்டாலும் செய்திதான் என்கிற நிலைமையே தற்போதுவரையிலும் நீடித்து வருகிறது.
இந்தக் குழப்பத்தையெல்லாம் தவிர்க்கும் பொருட்டு தயாரிப்பு நிறுவனம் இப்போதாவது படத்தின் ஸ்டில்ஸ்களையாவது வெளியிட்டால் அவரது ரசிகர்களுக்கு சந்தோஷமாக இருக்கும்.
‘வலிமை’ படத்திற்காக இன்னமும் 3 நாட்கள் தமிழகத்திலும், வெளிநாட்டில் 4 நாட்களுமாக மொத்தமாக 7 நாட்கள் படப்பிடிப்பு பாக்கியிருக்கிறது. இதனை முடித்துவிட்டால் மற்றைய வேலைகளை முடித்து ரிலீஸுக்குத் தயார் செய்துவிடுவார்களாம்.
இப்போதைக்கு ‘வலிமை’ படம் பற்றி நமக்குத் தெரிய வந்த கடைசி செய்தி இதுதான்.