full screen background image

டியூப்லைட் ஹீரோவின் கதையைச் சொல்லும் ‘டியூப்லைட்’ திரைப்படம்

டியூப்லைட் ஹீரோவின் கதையைச் சொல்லும் ‘டியூப்லைட்’ திரைப்படம்

ஆஸ்ட்ரிச் மீடியா புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரவி நாராயணன் தயாரித்துள்ள திரைப்படம் ‘டியூப்லைட்’.

இந்தப் படத்தில் இந்த்ரா கதாநாயகனாகவும், மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் கதாநாயகியாக நடித்த கேரளாவைச் சேர்ந்த அதிதி என்பவர் நாயகியாகவும் நடித்திருக்கிறார்.

பாண்டியராஜன் இந்தப் படத்தின் ஒரு வித்தியாசமான முழு நீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் மலையாளத்தில் காமெடி ஹீரோவாக புகழ் பெற்றவரும் ‘டம்மி டப்பாசு’ என்ற தமிழ்ப் படத்தில் ஹீரோவாக நடித்தவருமான பிரவீன் ரமேஷும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – ஸ்ரீதர். படத் தொகுப்பு – சி.எஸ்.பிரேம். கலை  இயக்கம் – முருகன், நடன இயக்குநர் – ஸ்ரீகிரிஷ், சண்டை பயிற்சி – வின் வீரா, ஆடை வடிவமைப்பாளர் – சின்னசாமி. நாயகன் இந்த்ராவே கதை திரைக்கதை வசனம் எழுதி இசையமைத்து படத்தையும் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

இயக்குநர் இந்த்ரா,  கார்ப்பரேட் கம்பெனிகளில் பணி புரியும் ஊழியர்களின் ஆளுமை திறனை வளர்க்க ஒரு நூதன பயிற்சியை நாடகம் மூலம் அளிக்கும் பயிற்சியாளராக இருந்தவர். இதற்கு முன்னர் பல விளம்பரப் படங்களை இயக்கி அதற்கு இசையும் அமைத்தவர்.

படம் பற்றிப் பேசிய தயாரிப்பாளர் ரவி நாராயணன், “ஒரு தனித்துவமான கதைக் களத்தோடுதான் எங்களின் ஆஸ்ட்ரிச் மீடியா புரொடக்ஷன் தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

அந்த சமயத்தில்தான் இயக்குநர் இந்த்ரா, இந்த ‘டியூப்லைட்’  கதையோடு எங்களை அணுகினார். வித்தியாசமான நகைச்சுவை களம் என்பதால், படத்தின் கதையை கேட்டவுடன் எங்களுக்கு பிடித்துவிட்டது. நாங்கள்  எதிர்பார்த்ததைவிடவும் ‘டியூப்லைட்’ திரைப்படம் அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது..” என்றார்.

நாயகன் இந்த்ரா பேசும்போது,  “திரையுலகில் நிலைத்து நிற்க படைப்பாற்றல் என்பது மிக, மிக முக்கியம். தினம்தோறும் உலக சினிமா மூலம் தங்களின் ரசனைகளை வளர்த்துக் கொண்டே போகும்  ரசிகர்கள், தங்களின் எதிர்பார்ப்புகளையும்  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றனர். அவர்களின் ஆசையை, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்வகையில் இந்தப் படத்தின் கதை இருக்கிறது.

எதையும் ஐந்து நொடிகள் தாமதமாகவே  புரிந்து கொண்டு எதிர்வினையாற்றும் ஓர் இளைஞனின் வாழ்க்கைக் கதைதான் இந்தப் படம்.

ஒரு டியூப்லைட் பிரகாசமாக ஒளிர்வதற்கு குறைந்தது 3 முதல் 5 வினாடிகள்வரை தேவை. ஏறக்குறைய அதே குணாதிசயத்தைத்தான் எங்கள் ‘டியூப்லைட்’ படத்தின் கதாநாயகனும் பெற்று இருக்கிறார்.

சாதாரணமாக சொல்லப்படும் எந்த ஒரு விஷயமும், அவருக்கு ஐந்து வினாடிகள் கழித்துதான் புரியும். இதுதான் இந்த ‘டியூப்லைட்’ படத்தின் கதை கரு.

நிஜத்திலும் என்னுடைய குணாதிசயமும் ஓரளவுக்கு இந்தப் படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரம் போலத்தான் இருக்கும். ஒரு நாள் என் நிஜ வாழ்வில் தினமும் எனக்கு நடக்கும் சில சம்பவங்களை யோசித்துக் கொண்டிருக்கும்போது, இதையே கதையாக செய்தால் என்ன… இதுவரை வராத புதுமையான கதையாக வருமே..? என்று எனக்கு தோன்றியது. உடனேயே கதையை தயார் செய்தேன்.  

மேலும் இந்தப் படத்தில் உடல் அசைவுகளை கொண்டு உருவாகும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். காதலை, நட்பை, பிரச்னையை… ஸ்லாப்ஸ்டிக் காமடி மற்றும் பாடி லேங்க்வேஜ் காமெடி மூலம் சொல்லி இருக்கிறேன். 

நான் நகைச்சுவை ஜாம்பவான்கள் சார்லி சாப்ளின் மற்றும் மிஸ்டர் பீன் ஆகியோரின் மிக பெரிய ரசிகன். ஆதலால், வசனங்கள் இல்லாமல், உடல் அசைவுகளை கொண்டு உருவாக்கப்படும் நகைச்சுவை யுக்தியை இந்த படத்தில் கையாண்டு இருக்கிறேன்.

சமீப காலமாகவே இந்த வகையான நகைச்சுவை காட்சிகள் நம் தமிழ் படங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருகிறது. நிச்சயமாக எங்களின் இந்த ‘டியூப்லைட்’ படம், உடல் அசைவுகளை கொண்டு உருவாக்கப்படும் நகைச்சுவை முறைக்கு புத்துயிர் கொடுக்கும்.

இந்தப் படத்தில் இதுவரை யாரும் கண்டிராத வித்தியாசமான பாண்டியராஜனை ரசிகர்கள் காண்பார்கள் என்பதை உறுதியாகவே சொல்லுவேன்.  அவர் நடித்த கடைசி நாளில், ‘என்னை இப்படி ஒரு கோணத்தில் நானே யோசிச்சுப்  பார்க்கல..’ என்று சொல்லி எங்களை பாராட்டிவிட்டுப் போனார்.  படம் சிறப்பாக வந்திருக்கிறது. மிக விரைவில் வெளியாகவுள்ளது..” என்றார்.

Our Score