சென்ற 3, 4 வருடங்களாகவே படம் வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே படத்தின் வெற்றி விழாவை கொண்டாடி வருகின்றனர் சில தயாரிப்பாளர்கள். படம் வெற்றி பெற்றுவிட்டதாக மட்டுமே சொல்லும் அவர்கள் படத்தின் லாபக் கணக்கை மட்டும் சொன்னதே இல்லை.
ஆனால் “இது அனைத்துமே பொய்யானவை. நடிகர்களை திருப்திபடுத்தவும், அவர்களது மார்க்கெட்டை கூட்டுவதற்காக தயாரிப்பாளர்கள் செய்யும் சதி வேலை இது…” என்கிறார் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியம்.
இது தொடர்பாக கடந்த வாரம் வெளிவந்த ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ பத்திரிகையிலும், விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் தான் வெளியிட்ட ஒரு ஆடியோ பதிவிலும் தெளிவாக பேசியிருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.
அவர் கூறியிருப்பது இதுதான் :
“தமிழ் சினிமாவில் பணம் போட்டு படம் தயாரிக்கிற தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் எல்லாருமே இப்போது பெருத்த நஷ்டத்தில்தான் இருக்கிறார்கள்.
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இதுதான் நிலைமை. ஆனால், இதை மறைத்து விட்டு படம் ரிலீஸான இரண்டாவது நாளே வெற்றி விழா கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்…?
அதுவும் அந்த வெற்றி விழாவை பைவ் ஸ்டார் ஓட்டல்ல கொண்டாடுகிறீர்கள். அதற்கும் தயாரிப்பாளர்தான் பில் செட்டில் செய்கிறார். எந்த தைரியத்தில் வெற்றி விழா கொண்டாடுகிறீர்கள்… உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கிறதா.. இல்லையா..?
‘கபாலி’ ரிலீஸ் ஆனதில் இருந்து வைத்துக் கொள்ளுவோம். அதன் பிறகு தீபாவளிக்கு வந்த ‘காஷ்மோரா’, ‘கொடி’, ‘தொடரி’, ‘போகன்’, ‘பைரவா’, ‘கத்தி சண்டை’… இப்ப ரிலீஸ் ஆன ‘சிங்கம்-3’ எல்லாத்தையும் சேர்த்துதான் சொல்றேன்… இவை எல்லாமே நஷ்டத்தைக் கொடுத்த படங்கள்தான்.
‘பைரவா’வுக்கு நாங்கள் கொடுத்த விலையில் 25 சதவிகிதம் நஷ்டம்தான் கிடைத்த்து. சூர்யாவின் ‘சிங்கம்-3’ படத்திற்கே நாங்கள் எதிர்பார்த்த ஓப்பனிங்கே கிடைக்கவில்லை. ‘போகன்’ படம் வெளியான மறுநாளே கேக் வெட்டி சக்சஸ் மீட் கொண்டாடினாங்க. ஆனால் அந்தப் படமும் வியாபார ரீதியா தோல்விப் படம்தான்.
‘கபாலி’யால் நாங்கள் 40 சதவிகிதம் நஷ்டத்தைத்தான் சம்பாதித்தோம். இது தயாரிப்பாளர் தாணுவுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும வெற்றுப் பெருமைக்காக நூறு நாள், இருநூறு நாள் அப்படீன்னு சீன் போட்டுக்கிட்டிருக்காங்க.
‘ரெமோ’ படம் தமிழகம் முழுக்க ஹிட்டுன்னு சொன்னால், அதை நாங்க ஏத்துக்க முடியாது. கோவை மற்றும் செங்கல்பட்டு மண்டலங்கள்ல மட்டுமே போட்ட முதல் வந்துச்சு. கூடவே 5 சதவிகிதம் லாபமும் கிடைத்தது. ஆனால் மற்ற அனைத்து மண்டலங்களிலும் ‘ரெமோ’ படத்தால் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம்தான்.
அதே நேரம் சமீபத்துல சில படங்கள்ல மகிழ்ச்சியான அளவுக்கு லாபத்தையும் நாங்க பார்த்திருக்கோம். மொழி மாற்றுப் படமான அமீர்கானின் ‘தங்கல்’ படம் நல்ல லாபத்தைக் கொடுத்தது. அதேபோல் இளம் அறிமுக இயக்குநரின் படைப்பான ‘துருவங்கள் 16’ படமும் லாபத்தைக் கொடுத்த்து. இந்த இரண்டு படங்களிலும் போட்ட பணத்தைவிட மூன்று மடங்குக்கு மேல் லாபம் கிடைத்தது. நாங்கள் இல்லையென்று மறுக்கவேயில்லை.
இதேபோல் ‘அப்பா’, ‘இறுதிச் சுற்று’, ‘பிச்சைக்காரன்’ மாதிரியான படங்களும் நெருக்கடியான காலங்கள்ல நிம்மதியான லாபத்தைக் கொடுத்த படங்கள். ஆனால் அதே விஜய் ஆண்ட்டனியின் ‘சைத்தான்’ படமும் நஷ்டம்தான்.
ஏகபோக வசதிகளுடன் ஒரு படத்தில் நடித்து கோடிகளை வாங்கிக்கிட்டு ராஜாவாட்டமா அடுத்த படத்துக்கு கிளம்பிருவார் ஹீரோ. ஆனால் வீட்டையும், பண்ட பாத்திரத்தையும் அடமானம் வைச்சு பணத்தைத் திரட்டி அந்தப் படத்தை வாங்கி விநியோகம் செய்கிற நபர்களும் பெரும் எதிர்பார்ப்போடு திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்களும் படங்களின் நஷ்டத்தால் சுருண்டு விழுகிறார்கள்.
மாஸ் ஹீரோக்களெல்லாம் இங்கே லாஸ் ஹீரோக்களாகத்தான் இருக்கிறார்கள். பெரிய ஹீரோக்களின் ரசிக பட்டாளத்தால் படம் வெளியாகும் முதல் நாளன்று தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் படத்தின் லட்சணம் தெரிஞ்சதும் அடுத்த சில நாட்களில் தியேட்டரில் ஈயாடும்.
ஆனால் இதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் எல்லாருமா சேர்ந்து கேக் வெட்டி வெற்றி விழா கொண்டாடுறாங்க. அதுவும் தயாரிப்பாளர் செலவு. இது முழுக்க, முழுக்க ஏமாத்து வேலை.
மாபெரும் வெற்றி, மக்கள் விரும்பும் வெற்றி, மகிழ்ச்சி, 25-வது நாள், 50-வது நாள், 200-வது நாள்னு விளம்பரம் போடுறீங்களே உண்மையிலேயே தியேட்டர்ல ஓடித்தான் விளம்பரம் போடுறீங்களா…? மனசாட்சியோட விளம்பரம் குடுக்கணும்.
மக்களை வேணா விளம்பரம் போட்டு ஏமாத்தலாம். தொழில்ல இருக்கிற எங்களுக்கு தெரியும் எவ்ளோ நஷ்டம்னு…? சொன்ன இத்தனை படத்துலயும் ஒரு விநியோகஸ்தர்கள்கூட பத்து காசு லாபம் சம்பாதிக்கல. அப்புறம் எதை வைச்சி ‘வெற்றி’ன்னு சொல்றீங்க..?
‘மக்கள் திலகம்’, ‘மக்கள் நாயகன்’, ‘நான்தான் அடுத்த எம்.ஜி.ஆர்’னு சொல்லிக்கிற நடிகர்கள் எல்லாருமே அவர்கள் சினிமாவுல பின்பற்றிய நடைமுறைகளை பின்பற்றி தொழில் பண்றீங்களா..?
எம்.ஜி.ஆர். ஒரு படம் ரிலீஸ் பண்ணா வாங்குன விநியோகஸ்தர்கள் தொடங்கி தியேட்டர்ல தட்டை முறுக்கு விக்கறவங்களுக்குக்கூட லாபம் வந்துச்சான்னு கேட்டு திருப்தியான பதில் வந்தால்தான் அடுத்த படத்துக்கு போவாராம். ஒருவேளை பதில் திருப்தி இல்லைன்னா தேவர் பிலிம்ஸ்ல கதை அடுத்த கதையை ரெடி பண்ண சொல்லுவாராம்.
அதனால்தான் கடந்த 50 வருடங்களாக சினிமா தொழில் நல்லாயிருந்துச்சி… கடந்த 10 வருஷமா தமிழ் சினிமா மரண படுக்கைக்கு போனதுக்கு காரணம் இந்த மாதிரி நடிகர்கள்தான்.
மேலே சொன்ன நடிகர்கள் படத்தை ரிலீஸ் செய்த விநியோகஸ்தர்களை கூப்பிட்டு என்னிக்காவது பேசியிருக்கீங்களா..? என் படத்தை வாங்கினீங்களே.. லாபம் வந்துச்சா? என்ன கலெக்ஷன் ஆச்சின்னு என்னிக்காவது கேட்டிருக்கீங்களா…?
படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ்.. சனிக்கிழமை வெற்றி விழா கொண்டாடுறீங்க… தயாரிப்பாளர் செலவுல. டெக்னீஷியன்களுக்கு தங்கச் சங்கிலி போடுறேன்னு சொல்றீங்க. இன்னொரு நடிகர் டைரக்டருக்கு கார் வாங்கித் தர்றாரு.
உண்மையிலயே உங்க படத்தை விநியோகம் செய்ததால் அந்த விநியோகஸ்தர் அவர் வைச்சிகிட்டிருந்த காரையே வித்துகிட்டிருக்காரு… அது உங்களுக்கு தெரியுமா…?
தமிழ்நாட்டுல இருக்குற 900 தியேட்டர்ல.. இல்ல.. இருக்குற விநியோஸ்தர்கள்கிட்ட கேளுங்க… இல்ல உங்க படத்தை ரிலீஸ் செய்யும் 600 தியேட்டர்களின் உண்மையான வசூல் என்னன்னு கேளுங்க.
சிலர் பண்ற தப்பு படம் பெரிய வெற்றி பெற்று விட்டதுன்னு நடிகர்கிட்ட பொய்யா சொல்லி அவரோட அடுத்த படத்துக்கு தேதி வாங்கி படம் பண்றது.. ஏன் இப்படி பொய் பேசுறீங்க…?
உண்மையான வசூல் நிலவரம் அந்த நடிகர்களுக்கு தெரியுமா. நிஜமாவே முன்னணி நடிகர்கள் என்று சொல்லும் இவர்களின் நிஜ வசூல் நிலவரம் தெரிஞ்சாதான் படம் எடுக்கிற எல்லார் கஷ்டமும் அவர்களுக்கு தெரியும். அப்பத்தான் நாமா வாங்குற சம்பளம் நியாயம்தானா, விக்கிற விலை சரிதானான்னு தெரியும்.
எனக்கு தெரிஞ்சவரை இனி எல்லா நடிகர்களும் அவங்கவங்க படத்தை நீங்களே வெளியிட்டுக்குங்க. அப்போ உங்களுக்குண்டான உண்மையான வசூல் நிலவரத்தை தெரிஞ்சுக்குவீங்க.
கபாலி வசூல் உண்மையான நிலவரம் ரஜினிக்கு சொல்லப்பட்டதா..? தாணு சார் அதை செய்தாரான்னு என்க்கு தெரியாது. எங்க சங்கம் எந்த நடிகருக்கும் ரெட் கார்டு எதையும் போடாது. விநியோகஸ்தர்கள் இனிமேலாச்சும் புத்திசாலித்தனமா நடந்துக்க வேண்டியதுதான்.
நடிகர்கள் நேரடியாக சொந்த செலவில் படத்தை ரிலீஸ் செய்து அவர்களின் மார்க்கெட் நிலவரத்தை தெரிஞ்சிக்கட்டும். அதோடு, இப்ப பல நடிகர்கள் அரசியல் பேசுறேன்னு எதையாவது சொல்லிகிட்டிருக்காங்க. நான் முதல்வரை பாக்க போறேன்… பிரதமரை பாக்க போறேன்னு சொல்லிகிட்டிருக்கிறது எந்த விதத்தில் சரி.
என் படம் ரிலீஸ் ஆகும்போது 100 ரூபாய்க்கு மேல் யாரும் டிக்கெட் விற்க கூடாதுன்னு ஒரு அறிக்கைவிட முடியுமா..? படம் வரும்போது 500, ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்கும்போது கை தட்டி ரசிக்கிறீங்க ஏன்..? டிக்கெட் விலையை ஒரே மாதிரி வைக்க என்னிக்காவது நடிகர்கள் முயற்சி எடுத்திருக்கீங்களா…?
தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் என 3 பிரிவினர்தான் சினிமாவில் பணம் போடுகிறவர்கள். அவர்களை அழைத்து என்னிக்காவது இந்த நடிகர்கள் பேசியிருக்கிறீர்களா…?
பணம் கொடுத்து வாங்கும் நிலையில் இப்போது எந்த விநியோகஸ்தர்களும் இல்லை. காரணம், கடைசி கோவணம்வரை உருவிவிட்டார்களே… இனி எப்படி நாங்கள் பணம் கொடுத்து படம் வாங்குவது என்று விநியோகஸ்தர்கள் கண்ணீர் விடுகிறார்கள்.
இந்த பிம்பத்தை உடைக்கிற வேலையில் நாங்க இப்போ இறங்கியிருக்கிறோம். அதாவது தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் சென்னையில் நடக்கும். கூடிய விரைவில் நடக்கவிருக்கும் அந்தக் கூட்டத்தில் சமீபத்திய படங்களின் லாப, நஷ்டத்தைப் பற்றிய புள்ளி விபரத்தை வெளியிட இருக்கிறோம்.
நாங்க சொல்றது பொய்யின்னு தயாரிப்பாளரோ, அல்லது ஹீரோவோ மறுத்தால் தாராளமா வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து விசாரிக்கட்டும். அதன் மூலமா எங்களின் நஷ்டமும், ஹீரோக்களின் பெரும் லாபமும் அடிச்சு, பிடிச்சு வெளில தெரியுமே..?
எங்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. ஹீரோக்கள் மாறுவாங்க. அவங்க பின்னாடி பணப் பெட்டியைத் தூக்கிட்டு அலையும் தயாரிப்பாளர்கள் திருந்துவாங்கன்னு நினைச்சோம்.
ஆனால் அது நடக்குற மாதிரியில்லை. ‘சக்ஸஸ்.. சகஸஸ்..’ன்னு சொல்லி ரசிகனை ஏமாத்தி எங்களின் நஷ்டத்தைப் புரிஞ்சுக்காமல் இருக்கிற ஹீரோக்களின் படங்களின் வசூல் லட்சணத்தை மாவட்டவாரியா, ஒவ்வொரு தியேட்டர் வாரியாக எங்க கூட்டமைப்பின் கூட்டங்களில் வெளியிடுவோம். இதன் மூலமாக ஹீரோக்களின் உண்மையான வெயிட்டை மக்கள் உணர்வார்கள். போலி பில்டப்பை வெறுப்பார்கள்.
இனியும் பொய்யான வெற்றி தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்ற வேண்டாம். உண்மையான நிலையை தெரிந்து கொண்டு தொழில் செய்தால் எல்லாருக்குமே நன்மையாக இருக்கும்…” என்று பொரிந்து தள்ளியிருக்கிறார் தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியம்.
இவருடைய கூற்றுப்படி ரஜினியையும் உள்ளடக்கி எந்த நடிகர் நடித்த படமும் தியேட்டர்காரர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தைக் கொடுக்கவில்லை. மாறாக அதில் நடித்த நடிகர்களுக்கு மட்டுமே பணத்தைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.
திருப்பூர் சுப்ரமணியம் சொல்வது போலவே அனைத்து நடிகர்களும் தாங்கள் நடித்த படங்களை தாங்களே வாங்கி ரிலீஸ் செய்தால்தான் உண்மை நிலவரம் அவர்களுக்குத் தெரிய வரும்.
இப்படியும் ஒரு காலக்கட்டம் நிச்சயம் தமிழ்ச் சினிமாவுலகத்தில் வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் முதல் கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் இனிமேல் எந்தப் படத்தையும் எம்.ஜி. அடிப்படையில் வாங்குவதில்லை என்று தங்களது சங்கக் கூட்டத்தில் தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறார்களாம்.
இப்படியே அனைத்து பகுதி விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு சங்கத்தினரும் இது போன்ற விதிமுறைகளை கொண்டு வந்து திரைத்துறையை ஒரு நேர்மையான வியாபாரக் கண்ணோட்டத்திற்குள் சீரமைத்தால் தமிழ்ச் சினிமாவுலகத்திற்கு அது மிகவும் நல்லதாக இருக்கும்.