ஹவுஸ் மேட்ஸ், மிடில் கிளாஸ், ஆரோமலே போன்ற சில படங்கள் தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் போட்ட முதலீட்டை எடுத்துக் கொடுத்திருக்கின்றன. இது பாராட்டத்தக்க விஷயம்தான். இப்படி இருக்கின்ற நிலையில் திருப்பூர் சுப்ரமணியன் போன்ற அனுபவம்மிக்க ஆட்கள் சினிமா நன்றாக இல்லை, நடிகர்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்று சொல்கிறார்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை தெலுங்கு சினிமாவில் இது போன்ற மித்தாலஜிக்கல் படங்களை மிக அட்டகாசமாக எடுப்பார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. சுவாரசியமாக இருக்கிறது. மகேந்திரனுக்கு இது ஒரு திருப்புமுனை கொடுக்கும் படமாக இருக்கும்.
இசையமைப்பாளர் ஷாஜித் பேசும்போது, “இந்த படத்தில் முதலில் ஹர்ஷவர்தன் சார்தான் இசையமைப்பாளராக இருந்தார். அவர் ரொம்பவே பிஸியாக இருந்ததால் இந்த படத்தில் முழு நேரமாக செயல்பட முடியவில்லை. இயக்குநர் மணி என் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை கொடுத்தார். நான் கேரளாவை சேர்ந்தவன். ஆனால் இங்கே சென்னையில் தங்கியிருக்கிறேன். தெலுங்கு படத்திற்கு இசையமைத்திருக்கிறேன்.
குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் சஞ்சய் பேசும்போது, “இந்த படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். என் மீது முழு நம்பிக்கை வைத்து இயக்குநர் கொடுத்துள்ளார்” என்று பேசினார்.
படத்தின் தயாரிப்பாளர் சீனிவாசன் பேசும்போது, “தெலுங்கில் நான் மூன்று படங்கள் தயாரித்துள்ளேன். தமிழில் இது எனது முதல் படம். தமிழில் இதை ஏன் தயாரித்திருக்கிறேன் என்றால் குமரிக் கண்டம், பழமையான தமிழர்கள் என இது முழுக்க தமிழுக்கான கதை.
நடிகர் கல்லூரி வினோத் பேசும்போது, “மகேந்திரன் எனக்கு நெருக்கமான நண்பர். அவர் முதலில் கதாநாயகனாக நடித்த ‘விழா’ திரைப்படத்தில் நானும் நடித்திருந்தேன். நாமெல்லாம் பள்ளிக்கூடம் படிக்கப்போன காலத்தில் மகி அவரது தந்தையுடன் நடிக்க போய்க் கொண்டிருந்தார். இந்த படத்தில் அவர் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தயாரிப்பாளருக்கு நிச்சயம் இந்த படம் லாபத்தை தரும். இந்த படம் வெளியான பிறகு இயக்குநர் மணிக்கு நிறைய படங்கள் தேடி வரும்” என்று பேசினார்.
கதாநாயகி சாஹிதி அவான்ஷா பேசும்போது, “த்ரிக்கண்டா’ படம் பவர்ஃபுல் மித்தாலஜி, சைக்காலஜி, ஆக்சன், அற்புதமான விசுவல்ஸ் என எல்லாவற்றையும் உள்ளடக்கி உள்ளது. தமிழ் சினிமா தான் எனக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த படத்தின் கதையைக் கேட்டபோது எனக்கு எப்படி திரில்லிங்காக இருந்ததோ படம் பார்க்கும் உங்களுக்கும் அதே உணர்வு ஏற்படும்” என்று பேசினார்.
நாயகன் மகேந்திரன் பேசும்போது, “இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகப் பெரிய அனுபவம். மாஸ்டர் படம் எனக்கு தெலுங்கில் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. சிறு வயதில் நடித்தபோது நான் தமிழ், தெலுங்கு என மாறிமாறி நடித்தேன். எனக்கு அங்கே நல்ல வரவேற்பை கொடுத்து இருக்கிறார்கள். அப்படி தெலுங்கில் நல்ல படம் நடிக்கலாம் என நினைத்தபோதுதான் இயக்குநர் மணியை சந்தித்தேன். இந்த படம் ஒரு கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று சொல்லலாம்.
ஒவ்வொரு கட்ட படப்பிடிப்புக்குப் பிறகும் அதை போட்டு பார்த்துவிட்டு இன்னும் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என இயக்குநரும், தயாரிப்பாளரும் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். அந்தக் கஷ்டத்திற்கு இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும். அப்படி எதிர்பார்த்த ஒரு தெலுங்கு படமாக இந்த படம் இருக்கிறது.
மாஸ்டர் சஞ்சய் இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். நானே ஒரு குழந்தை நட்சத்திரம். என் படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடித்திருப்பதை பார்க்க எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமா எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. அதேபோல சஞ்சய்க்கும் இந்த சினிமா நிறைய கொடுக்கும்.
இயக்குனர் ஹாரூண் பேசும்போது, “தெலுங்கிலேயே நிறைய கதைகள் இருக்கும்போது, தமிழை தேடி வந்ததற்காக தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2026 நிச்சயமாக நல்ல வருடமாக இருக்கும். ஏனென்றால் இனிமேல் நல்ல கதைகள் வரும். நல்ல கதைதான் ஹீரோ. இப்போதைய சூழலில் நாயகனைவிட கதையின் நாயகர்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது.
ஒரு படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டுவது ட்ரைலர்கள்தான். நல்ல படம் பண்ணியிருக்கிறோம் என்று நீங்கள் பெருமையுடன் சொல்லலாம். படங்களின் பட்ஜெட்டை பொறுத்து சாதாரண இடத்திலோ, சத்யம் தியேட்டரிலோ, பீனிக்ஸ் மாலிலோகூட விழா நடத்தலாம். ஆனால் எல்லா படத்திற்கும் கியூப் கட்டணம் என்பது ஒன்றாகத்தான் இருக்கிறது. இதை யார் பேசுவார்கள் என்று தெரியவில்லை” என்று பேசினார்.
இயக்குநர் மணி தெலக்குட்டி பேசும்போது, “இந்த படத்தை தமிழில் எடுக்க சென்னையில் முழுக்க ஆதரவு கொடுத்தது மகேந்திரன்தான். குமரிக்கண்டம் பகுதியில் கதை நடப்பது போல இதை ஒரு புனைவு கதையாக உருவாக்கியிருக்கிறேன். இந்த டைட்டில் ஏன் வைத்தோம் என்பது படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும். மெகா ஸ்டார், பவர் ஸ்டார் போல மகேந்திரனுக்கு ‘சவுத் இந்தியன் ஸ்டார்’ என்பது பொருத்தமான பட்டம்தான்” என்று கூறினார்.









