டி.ராஜேந்தர் இயக்கவிருக்கும் புதிய திரைப்படம் ‘இன்றைய காதல்டா’..!

டி.ராஜேந்தர் இயக்கவிருக்கும் புதிய திரைப்படம் ‘இன்றைய காதல்டா’..!

‘ஒரு தாயின் சபதம்’, ‘என் தங்கை கல்யாணி’, ‘சம்சார சங்கீதம்’, ‘எங்க வீட்டு வேலன்’, ‘மோனிஷா என் மோனலிசா’, ‘சொன்னால்தான் காதலா’, ‘வீராசாமி’ ஆகிய படங்களை தயாரித்த சிம்பு சினி  ஆர்ட்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘இன்றைய காதல்டா’..!

இந்தத் திரைப்படத்தை ‘தமிழ்த் திரையுலக அஷ்டாவதனி’ என்று புகழப்படும் டி.ராஜேந்தர் எழுதி, இயக்கப் போகிறார்.

இதற்கான அறிவிப்பை இன்று காலை அவருடைய இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

இத்திரைப்படம் மிகப் பெரும் பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படவுள்ளது.

இத்திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் பெண் தாதா கேரக்டரில் நமீதா நடிக்க உள்ளாராம். இளம் கதாநாயகர்கள், கதாநாயகிகளை இத்திரைப்படத்தில் அறிமுகம் செய்யப் போவதாகச் சொல்கிறார் டி.ஆர். மேலும் பல இன்றைய முன்னணி நட்சத்திரங்களும் படத்தில் நடிக்கவிருக்கிறார்களாம்.

ராதாரவி, இளவரசன், வி.டி.வி.கணேஷ், பாண்டு, வெண்ணிற ஆடை மூர்த்தி, ரோபோ சங்கர், மதன்பாப், கவண் ஜெகன், மைதிலி என்னை காதலி சுரேஷ், கூல் சுரேஷ், ராஜப்பா, கொட்டாச்சி, தியாகு போன்ற நடிகர்கள் நடிக்கவிருப்பதாக டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

“இது முழுக்க, முழுக்க இளமை சொட்டும் காதல் கதை..  காதலைத் தவிர படத்தில் வேறு எதுவும் இருக்காது…” என்றும் அழுத்தமாய் சொன்னார் டி.ஆர்.

படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், ஒளிப்பதிவு மேற்பார்வை, இயக்கம் என்று அனைத்தையும் டி.ராஜேந்தரே செய்யவிருக்கிறாராம்.

இத்திரைப்படத்தை பரூக் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.பரூக் துணை தயாரிப்பு செய்யவிருக்கிறார். இணை தயாரிப்பு - உஷா ராஜேந்தர்.