கான்பிடன்ட் பிலிம் கேஃப் என்கிற தயாரிப்பு நிறுவனம், ஆர்.கே. ட்ரீம் வேர்ல்டு, ஒயிட் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகியவற்றுடன் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘டார்ச் லைட்’.
நடிகை சதா படத்தின் பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ரித்விகா, புதுமுகம் உதயா, இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா ரங்கநாதன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சக்திவேல், இசை – ஜேவி, பாடல்கள் – வைரமுத்து, படத் தொகுப்பு -மாரீஸ், கலை – சேகர், நடனம் – சிவ ராகவ், ஷெரீப், தயாரிப்பு அப்துல் மஜீத், எம்.அந்தோனி எட்வர்ட், ரங்கநாதன் ராஜு, கண்ணன் பாஸ்கர், எழுத்து, இயக்கம் – மஜீத்.
இந்தப் படம் வறுமையால் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்கள் பற்றிப் பேசுகிறது. பெண்களைப் போகப் பொருளாக்கி அவர்களை தங்கள் இச்சையைத் தீர்க்கும் ஒரு நுகர்பொருளாக்கிடும் சமூக அவலத்தையும் அதன் பின்னணியில் இயங்கும் இழிவான ஆண்களையும் இப்படம் தோலுரிக்கிறது.
படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கிய நிலையில் நடிகை சதா மட்டுமே தைரியமாக முன் வந்து நடித்திருக்கிறார்.
இந்தப் படத்திற்கு சென்சாரில் சான்றிதழ் தர மறுத்திருக்கிறார்கள். மிகுந்த போராட்டத்துக்கு பின்பே மும்பை சென்சார் அலுவலகத்தில் சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.
இது பற்றி இயக்குநர் மஜீத் கூறும்போது, “இது ஒரு பீரியட் பிலிம். 1990-களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
இது நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்கள் பற்றிய கதை.
வறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படிப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இந்தக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாக உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி பதிவு செய்து அவர்களது கதையின் பின்னணியில் இதைப் படமாக்கினேன்,
கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே படமாக்கி உள்ளேன். படம் சிறப்பாக வந்துள்ளது. சினிமா ரசிகர்கள் அனைவருக்குமே பிடித்த படமாக இது இருக்கும்.
சென்சாருக்கு சென்றபோது சென்னை சென்சார் அலுவலகத்தில் சான்றிதழ் தர மறுத்தார்கள். போராடிப் பார்த்து தோற்றுப் போனோம். பிறகு, வேறு வழியில்லாமல் மும்பை சென்று அங்கேயுள்ள சென்சார் அலுவலகத்தில் முறையிட்டேன். அவர்கள் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தனர். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது… ” என்றார்.