இன்று பிப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை. மாசி மாதம் 3-ம் தேதி. இந்த மாசியில் முதல் சுபமுகூர்த்த தினமான இன்று ஏகாதசி வேறு..!
இந்த சுபயோக சுப தினத்தில் 4 திரைப்படங்களுக்கு பூஜை போட்டிருக்கிறார்கள்.
TSP Creations மற்றும் The Chennai Mobiles நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்’. இந்தப் படத்தின் பூஜை பாரீஸ் கார்னரில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தப் படத்திலும் புதுமுகங்களே நடிக்கவுள்ளனராம். ஒளிப்பதிவு – பிரேம்கார்த்திக்-ராஜ்குமார். இசை – ஜென்சன், படத்தொகுப்பு – கே.வி.சந்திரகுமார். எழுத்து – இயக்கம் – குகன்.
தமிழ் திரைக்களம் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் எம்.தங்கபாண்டியன், ஹரி, பி.எஸ்.வாசு மூவரும் இணைந்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கிறார்களாம்.
ஒரு படத்திற்கு ‘எட்டு’ என்று தலைப்பிட்டுள்ளார்கள். இன்னொரு படத்திற்கு ‘நீ மனிதன்தானா’ என்பது தலைப்பு.
இதிலும் நடிக்கவிருப்பது முற்றிலும் புதுமுகங்களே.. ஒளிப்பதிவு – எஸ்.சுப்ரமணி. பா.லெனின் என்பவர் எழுதி, இயக்குகிறார்.
இதே நாளில் ‘பத்மஸ்ரீ’ என்ற படத்திற்கும் பூஜை போட்டுள்ளார்கள். இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரோசையா கலந்து கொண்டு படத்தைத் துவக்கி வைத்திருக்கிறார்.
நாளை காலை ஏவி.எம். ஸ்டூடியோவில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்.கே. நடிப்பில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்ற படம் துவங்கவுள்ளது.
ஆக.. இந்த மாதம் 5 படங்கள் ஒரே வாரத்தில் துவங்கி அதிர வைக்கின்றன.