full screen background image

“மிஷ்கினை விலைக்கு வாங்கிவிட்டேன்..” – ‘துப்பறிவாளன்’ விஷால் பேட்டி..!

“மிஷ்கினை விலைக்கு வாங்கிவிட்டேன்..” – ‘துப்பறிவாளன்’ விஷால் பேட்டி..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான நடிகர் விஷால் நடிப்பில் அடுத்து வெளிவரப் போகும் திரைப்படம் துப்பறிவாளன்.

இத்திரைப்படத்தில் விஷாலுடன் அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, வினய், கே.பாக்யராஜ், பிரசன்னா ஆகியோரும் நடித்துள்ளனர். மிரட்டல் இயக்குநரான மிஷ்கின் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியின் சார்பில் நடிகர் விஷாலே தயாரித்திருக்கிறார்.

படம் இந்த மாதம் வெளிவர இருக்கிறது. இதையொட்டி நடிகர் விஷால் ‘துப்பறிவாளன்’ படம் பற்றி மிக விரிவாகப் பேசினார்.

“மிஷ்கின் இயக்கத்தில் நான் நடித்துள்ள இந்த ‘துப்பறிவாளன்’ ஒரு டிடெக்டிவ் ஜானர் படம். Sherlock Holmes கதை மாதிரியான ஒரு படம். பழம்பெரும் நடிகர் ஜெயசங்கர் நடித்த துப்பறியும் படங்கள், தெலுங்கில் கிருஷ்ணா நடித்த துப்பறியும் படங்கள் போன்ற ஒரு படமாகவும் இது இருக்கும்.

thuparivaalan (6)

இதில் பிரசன்னா, வினய், பாக்கியராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட ஐந்து பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அனு இம்மானுவேல் பிக் பாக்கெட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் பாக்யராஜ் சாரை நீங்கள் மூன்றாவது ஷாட்டில்தான் கண்டுபிடிப்பீர்கள். அவர் இதுவரையிலும் பண்ணாத புதுமையான ஒரு நெகடிவ் ரோலை செய்துள்ளார். வினய்தான் படத்தில் மெயின் வில்லன். படத்தில் 6.2 உயரமுள்ள ஹீரோவுக்கு, அதே 6.2 உயரத்தில் வில்லன் வாய்த்திருக்கிறார்.

நல்ல கதையம்சம் கொண்ட படத்தை பார்க்க ஆவலாக இருக்கும் ரசிகர்களுக்கு ‘துப்பறிவாளன்’ விருந்தாக இருக்கும். என்னுடைய சினிமா கேரியரில் நான் நடித்த முழு நீள ஸ்டைலிஷான படம் இந்த ‘துப்பறிவாளன்’தான்.

மிஷ்கினுக்கு என்னுடைய உடல் மொழி, ஸ்டைல் என்று அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று ஆசை.  இது மிஷ்கினின் இயக்கத்தில் வெளிவரும் விஷால் படமாகத்தான் இருக்கும். விஷால் நடக்கும்போது இப்படித்தான் இருக்க வேண்டும்.. சிரிக்கும்போது, ரொமனஸ் செய்யும்போது இப்படிதான் இருக்கும் வேண்டும் என்று அவருடைய பாணியில்தான் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

thuparivaalan (3)

வழக்கமாக நான் என்னுடைய படங்களில் கை, கால்களை ஆட்டி வசனம் பேசித்தான் பழக்கம். ஆனால் ‘துப்பறிவாளனில்’ நான் ஏற்று நடித்திருக்கும் கணியன் பூங்குன்றன் கதாபாத்திரம் எப்போதும் அமைதியாகத்தான் இருக்கும். அதிபுத்திசாலிகள் அதிகம் பேச மாட்டார்கள். அதுபோலத்தான் இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் இருக்கும். இந்தப் படத்துக்காக மிஷ்கின் ஸ்டைல் கண்ணாடியை அணிந்து நடித்துள்ளேன்.

ஆக்சன் காட்சிகள்தான் துப்பறிவாளன் திரைப்படத்தின் U.S.P.  ‘துப்பறிவாளனில்’ வரும் சைனீஸ் ஹோட்டல் சண்டை காட்சி ரசிகர்களை மிரட்டும். இந்த சண்டை காட்சியில் நடிக்க வியட்நாமிலிருந்து சண்டை கலைஞர்கள் வந்தார்கள். சண்டை கலைஞர்கள் ஏழு பேரோடு அடுத்தடுத்து சண்டை போட்டது புதுமையாக இருந்தது. சண்டை காட்சிக்கு கோரியோ தினேஷ் மாஸ்டர். ஆனால் சண்டை காட்சி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பேப்பரில் வரைந்து, அதை வடிவமைத்தவர் இயக்குநர் மிஷ்கின்தான்.

என்னுடைய வாழ்க்கையிலேயே பாடல்கள் இல்லாமல் வெளியாகும் முதல் படம் ‘துப்பறிவாளன்’தான். இந்தப் படத்துக்கு பாடல்கள் தேவை இல்லை. இப்போது மக்கள் பாடல்களே இல்லாமல், வெளிவரும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளார்கள்.

thuparivaalan (2)

படத்தின் இரண்டாம் பகுதியில் பாடலை வைத்தால் ரசிகர்கள் என்னைத்தான் திட்டுவார்கள். B & C சென்டர் ரசிகர்களை மனதில் வைத்து விஷால் இப்படி செய்துவிட்டார் என்று. படத்தில் ஒரேயொரு தீம் சாங் மட்டும் உள்ளது.

‘துப்பறிவாளனில்’ கடைசி 20 நிமிடங்கள் மிகப் பெரிய விஷுவல் ட்ரீட்டாக இருக்கும். நம்ம ஊரிலேயே நல்ல லொகேஷன்கள் உள்ளன. கடைசி இருபது நிமிடங்கள் அமேசான் காட்டில் எடுக்கப்பட்ட காட்சி போல் இருக்கும்.

‘அவன் இவன்’ வந்ததால்தான் எனக்கு ‘பாண்டிய நாடு’ என்ற ஒரு படம் வந்தது. ‘பாண்டிய நாடு’ படம் வந்ததால்தான் இயக்குநர் திரு எனக்கு ‘நான் சிகப்பு மனிதன்’ என்ற கதையை எடுத்துக் கொண்டு வந்தார். ‘துப்பறிவாளன்’ வந்தால் இன்னும் புதுமையான நல்ல படங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். அடுத்து ‘இரும்புத்திரை’, ‘சண்டைகோழி-2’, என்று வித்தியாசமான படங்கள் வரவுள்ளன.

நான் இயக்குநர் மிஷ்கினை விலைக்கு வாங்கிவிட்டேன்… அவர் அடுத்து இயக்கும் படம் எங்களது விஷால் பிலிம் பேக்டரிக்குத்தான். அவர் தொடர்ந்து என்னை வைத்து படங்கள் இயக்குவார்.

thuparivaalan (4)

இனிமேல் ஏழைகளுக்கு உதவி செய்வது போல், பாட்டியை தூக்கிக் கொண்டு போவது போல் காட்சிகளில் நடித்து மக்களை ஏமாற்ற முடியாது. நான் கோடிகளை அடுத்த வருடம்கூட சம்பாதிப்பேன். இப்போது நான் கோடிகளை சம்பாதிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியிருந்தால் திரையுலகமே இருந்திருக்காது. திரையுலகத்தை காப்பாற்றுவதுதான் இப்போது எனது ஒரே குறிக்கோள்.

நான் நடித்த எனது இரண்டு படங்கள் தள்ளிப் போனதால் எனக்கு நஷ்டம்தான். நான் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று உழைக்காமல் இருந்திருந்தால் பல படங்களில் நடித்து 20 கோடிக்கு மேல் சம்பாத்திருப்பேன். ஆனால் திரையுலகம்தான் இப்போது எனக்கு மிகவும் முக்கியம்…” என்றார் விஷால்.

Our Score