full screen background image

துணிவு – சினிமா விமர்சனம்

துணிவு – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் பேவியூ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் போனி கபூரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் அஜீத்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன், வீரா, பக்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ஹெச்.வினோத், ஒளிப்பதிவு – நீரவ் ஷா, இசை – ஜிப்ரான், கலை இயக்கம் – மிலன், படத் தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி, சண்டை இயக்கம் – சுப்ரீம் சுந்தர், ஒலிப்பதிவு – நபாஸ் தமஸ் நாயக், நடன இயக்கம் – கல்யாண், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.

இப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்துள்ளது.

மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் வங்கியை, கொள்ளையடிக்கும் ஒருவனின் துணிச்சல்தான் இந்த ‘துணிவு’ திரைப்படம்.

சென்னையில் பாரிமுனையில் இருக்கிறது ‘YOUR BANK’. இந்த வங்கியில் 500 கோடி ரூபாய் பணம் ரிசர்வ் வங்கியின் அனுமதியில்லாமல், பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அறிகிறது ஒரு கும்பல்.

இந்த 500 கோடி ரூபாயை கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டுகிறது அந்தக் கும்பல். அந்தக் கும்பலுக்குத் தலைவனாக இருப்பவர் அந்தப் பகுதி துணை போலீஸ் கமிஷனர். அதனால் பக்கா பிளானோடு துணிந்து இந்தக் கொள்ளையில் இறங்குகிறது அந்தக் கும்பல்.

ஆனால் இவர்கள் கொள்ளையடிக்கப் போகும் நேரத்தில் உள்ளேயிருந்த நாயகன் அஜீத்குமார் இவர்களை அடித்து, உதைத்துவிட்டு “நான்தான் இந்தக் கொள்ளையை நடத்தப் போகிறேன்” என்கிறார்.

போலீஸ் வருகிறது. கமாண்டோ படையினரும் வருகின்றனர். சிட்டி போலீஸ் கமிஷனரான சமுத்திரக்கனி முன் வந்து அஜீத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். 5 நிமிடங்களுக்கு ஒரு முறை திட்டத்தில் மாற்றம் செய்கிறார் அஜீத். அதேபோல் போலீஸும் இவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதுபோல பாவ்லா காண்பித்து அஜீத்தை பிடிக்க முயல்கிறது.

இன்னொரு பக்கம் இந்த வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் 500 கோடி ரூபாய் விஷயத்தை வெளியில் லீக் செய்யாமல் இருக்க வங்கியின் நிர்வாகம் பெரும்பாடு படுகிறது.

கடைசியில் என்னவாகிறது..? 500 கோடி கொள்ளை போனதா..? அஜீத் தப்பித்தாரா..? இல்லையா..? எதற்காக அவர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டார்..? என்பதெல்லாம் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

“இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நானும் நல்லவனாவே நடிக்கிறது…?” என்று ‘மங்காத்தா’ படத்தில் காக்கி சட்டை போட்ட வில்லனாக அஜீத் மாறியதுதான் அந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது. இந்தப் படத்திலும் அதே கேரக்டர் ஸ்கெட்ச்சில் தனது நடிப்பை பின்புலமாக வைத்து ஜெயித்திருக்கிறார் அஜீத்.

வெள்ளை சட்டை, நரைத்த தலைமுடியுடன், கட்டுமஸ்தான உடற்கட்டுடன், அவருடைய ஸ்டைலான மேனரிசம், கரெக்ட் பாயிண்ட்டில் செய்யும் டயலாக் டெலிவெரி,  எதைப் பற்றியும் கவலைப்படாத வில்லன் என்று அனைத்து வகை நடிப்பிலும் பட்டாசாய் வெடித்திருக்கிறார் அஜீத்.

வங்கிக்குள்ளே அவர் செய்யும் சேட்டைகளினால் எழும் கலகலப்புக்கும் பஞ்சமில்லை. “நானும் கொள்ளையடிக்கத்தான் வந்திருக்கேன்” என்ற ஒற்றை வார்த்தையால் துள்ளியெழுந்த தனது ரசிகர்களைக் கடைசிவரையிலும் அதே நிலையிலேயே படம் பார்க்க வைத்திருக்கிறார் அஜீத்.

வங்கியின் தலைவர், அவரது தம்பி, இவர்களின் தொழில் கூட்டாளி என்று மூவரையும் வரவழைத்து விசாரிக்கும் அந்த அரை மணி நேர காட்சிகளில் அஜீத்தின் ஒன் மேன் ஷோவை பார்த்து சிரித்து, சிரித்தே வயிறு வலிக்கிறது.

சண்டை காட்சிகளில் 25 வயது வாலிபனாக ஆக்சன் காட்டியிருக்கும் அஜீத்தின் ஸ்பீடான ஆக்சன் காட்சிகள்தான், அவருக்கு ரசிகர் பட்டாளத்தை வருடா வருடம் கூட்டிக் கொண்டே செல்கிறது..!

மஞ்சு வாரியருக்கு சொல்லிக் கொள்ளும்படியான வேடமில்லை. என்றாலும் தனது ஸ்டைலான நடை, உடை, பாவனைகளில் ஒரு ஆக்சன் ஹீரோயினாக தனது இருப்பைக் காட்டியிருக்கிறார்.

சமுத்திரக்கனி போலீஸ் கமிஷனராக எப்படியாவது இந்த நிகழ்வை சுமூகமாக முடித்து வைக்கத் திட்டமிடுகிறார். ஆனால் அஜீத்தின் திட்டமிட்ட செயல்களால் அது ஒவ்வொன்றாக முறிந்தாலும், இறுதியில் அஜீத்தை புரிந்து கொண்டு அவருடைய நியாயத்தின் பக்கம் சாயும் கனியின் நடிப்பு, இயக்குநரையும் மீறி பாராட்டுக்குரியது.

கமாண்டோ படையின் தலைவர் “இனிமேல் இந்த ஆபரேஷனை நாங்கள்தான் செய்வோம். இதோ ஆர்டர்…” என்று சொல்லும்போது “ரவி.. இது தமிழ்நாடு.. உங்க வேலையெல்லாம் இங்க வேண்டாம்…” என்று அமைதியாக எச்சரிக்கும்போது தியேட்டரே அதிர்கிறது. இப்படியொரு படத்தில் அரசியல் கலந்த இந்த வசனத்தை வைத்தமைக்காக இயக்குநர் வினோத்திற்கும், வசனம் பேசி நடித்திருக்கும் சமுத்திரக்கனிக்கும் நமது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்..!

வங்கியின் தலைவராக நடித்திருக்கும் ஜான் கோகைன் தனது வில்லத்தனத்தைக் காட்டியிருந்தாலும் அது அஜீத்தின் வில்லத்தனத்திற்கு முன்பாக தோற்றுப் போய்விட்டது. மற்ற இருவரையும் ஏட்டு லத்தியால் வெளுத்து வாங்கும்போது முகத்தைக் கோணிக் கொண்டு பயப்படும் காட்சிகளில் சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இவரைப் போலவே இவரது நண்பரும், தம்பியும் அந்தக் கதாப்பாத்திரமாகவே அடி வாங்கி நடித்திருக்கிறார்கள். பாவம்தான்..!

படத்தில் இன்னொரு முக்கியமான கதாப்பாத்திரம் மை.பா. என்ற கேரக்டரில் நடித்திருக்கும் மோகனசுந்தரம். மனிதர் யதார்த்தமாகப் பேசுகிறேன் என்கிற போர்வையில் பேசும் சாதாரண வசனங்களே, முதல் வரிசையில் இருந்து கடைசி வரிசை வரையிலும் கைத்தட்டலை அள்ள வைக்கிறது.

டிவி நிறுவனங்களின் உள்ளே நடக்கும் அரசியலை புட்டுப் புட்டு வைக்கும் மை.பா. பேசும் பல வசனங்கள் மறுக்க முடியாத உண்மை.

காவல் துறையும், மீடியாவும் சேர்ந்து ஒரு சம்பவத்தை எப்படியெல்லாம் திரிக்க முடியும் என்பதையும் இந்தப் படத்தில் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

அஸிஸ்டெண்ட் கமிஷனராக நடித்தவர்.. போலீஸ் இன்ஸ்பெக்டரான பக்ஸ், வங்கி நிர்வாகிகளால் கொலை செய்யப்பட்ட மகனை பறி கொடுத்துக் கதறும் பெற்றோர்கள்.. மேலும் வங்கியின் உள்ளே மாட்டிக் கொண்டவர்கள் என்று பலரையும் மிகச் சிறப்பாகவே நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் வினோத்.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு கதையின் பிரம்மாண்டத்தை, நிகழ்வுகளில் பிரம்மாண்டமாகக் காட்டியிருக்கிறது. வங்கிக்குள் நடக்கும்  துப்பாக்கி சூடு சண்டை காட்சிகள்.. வெளியில் நடக்கும் வெடிகுண்டு தாக்குதல்.. வங்கியின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்.. கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள், நடுக்கடலில் நடக்கும் சண்டைகள் என்று பலவற்றிலும் காட்சிக்குக் காட்சி பிரம்மாண்டத்தை வடிவமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

சண்டை பயிற்சி இயக்குநரான சுப்ரீம் சுந்தருக்கு ஒரு ‘ஜே’ போடலாம். சூப்பர் ஸ்டார் நாயகன் படம் என்பதால் அதற்கேற்றாற்போல் சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார். கலை இயக்குநரையும் பாராட்டியே ஆக வேண்டும். வங்கிகளையும், வெளிப்புற கட்டிட அமைப்புகளையும் திறம்பட அமைத்திருக்கிறார். பாராட்டுக்கள்.

ஜிப்ரானின் இசையில் பி.ஜி.எம். களை கட்டுகிறது. அஜீத்தின் மாஸை மேலும் கூட்டும் வகையில் அமைந்திருக்கிறது இசை. பாடல்கள் இரண்டுமே கேட்கும் ரகம்தான்.

படம் முழுவதுமே விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் கடைசி அரை மணி நேரம் தீப்பொறி பறக்கிறது. இந்த வேகம்தான் படத்திற்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.

ஒரு வங்கியில் நடக்கும் மோசடியை வெளியே கொண்டு வர நடக்கும் கதைதான், இதற்காக எளிய மக்களுக்கும் புரியும்படியாக வங்கியில் நடக்கும் விஷயங்களை குறிப்பாக பணத்தை முதலீடு செய்வதில் நடக்கும் குளறுபடிகளை பாடம் நடத்துவதுபோல காட்டியுள்ளார் இயக்குநர்.

கோடிக்கணக்கான இந்தியர்களின் பணம் படித்த திருடர்களினால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அந்தக் கொள்ளைகளை மூடி மறைக்கும் அரசியல், அதிகார வர்க்கம் கேள்வியெழுப்பும் அபலை இந்தியர்களை மட்டும் கொலை செய்கிறது.

இதைத்தான் இந்தப் படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர். நம்மை ஏமாற்றி நம்மிடமிருந்து நமது பணத்தை வாங்கி முதலீடு செய்கிறேன் என்கிற பெயரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்து, பின்பு அந்தப் பணம் நஷ்டமடைந்துவிட்டதாகச் சொல்லி பட்டை நாமம் போடும் வேலையை எத்தனையோ வங்கிகளும், அரசு நிறுவனங்களும் தற்போதும் செய்துதான் வருகின்றன.

கடைசியாக எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளும் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு ஒரே நாளில் எல்.ஐ.சி.யின் பங்குகள் லட்சம் கோடியை இழந்தது நினைவிருக்கலாம். இதைத்தான் இந்தப் படத்தில் சுட்டிக் காட்டுகிறார் இயக்குநர்.

“மியூச்சுவல் பண்ட்களில் பணத்தை முதலீடு செய்வது லாபமா.. நஷ்டமா என்பதை இனிமேல் யோசித்து, படித்துத் தெரிந்து கொண்டு பின்பு அதில் இறங்கலாம்” என்பதுதான் இந்தப் படம் சொல்ல வந்திருக்கும் நீதி.

புரிந்து கொண்டோம். இயக்குநருக்கு நன்றி..!

துணிவு – துணிச்சலான கதை, திரைக்கதை..!

RATING : 4 / 5

Our Score