ஒரு தொலைபேசி அழைப்பைத் தொட்டு ஹீரோ அல்லல்படுகிறார். ஒரேயொரு ஏமாற்று வேலையைச் செய்து ஹீரோயினும் அல்லல்படுகிறார். ஏன் இருவரும் இதைத் தொட்டார்கள்..? தொடாமலேயே இருந்திருக்கலாமே என்பதற்கு பதிலாகத்தான் இந்தத் ‘தொட்டால் தொடரும்’ டைட்டில்..!
ஹீரோயின் வங்கியொன்றின் டெலிகாம் சென்டரில் வேலை செய்பவர். உடன் வேலை செய்யும் தோழியை கிண்டல் செய்த்தற்காக ஹீரோவுக்கு போன் செய்து பேசத் துவங்க.. இந்தப் பேச்சு நயமாகவும், அன்பாகவும், கிண்டலாகவும் உருமாறி ஹீரோவுக்குள் காதல் உணர்வைத் தூண்டிவிடுகிறது. இங்கே ஹீரோயினுக்கு அது இல்லை..
இந்த நேரத்தில் ஹீரோயினின் தம்பி விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுகிறார். அவரைக் காப்பாற்ற வேண்டுமெனில் முப்பது லட்சம் ரூபாய் தேவை. அதே முப்பது லட்சம் ரூபாய்க்கு தன்னை இன்ஸூரன்ஸ் செய்திருப்பது ஹீரோயினுக்கு அப்போதுதான் ஞாபகம் வருகிறது.
தான் இறந்தால் பணம் கிடைக்கும். அந்தப் பணத்தை வைத்து தம்பி பிழைத்துக் கொள்வானே என்று சொல்கிறது குறுக்கு புத்தி. வேண்டுமென்றே விபத்தில் சிக்கப் பார்க்கிறாள். தப்பித்தாலும், வேறொரு வழி கிடைக்கிறது.
ஒரு கொலை அஸைண்மெண்ட்டுக்காக அலையும் ஒரு கும்பலை பார்த்துவிட்டு அவர்கள் சிக்னலுக்காக வைத்திருந்த ஒரு பெண்ணின் போட்டோவை நீக்கிவிட்டு தன்னுடைய போட்டோவை அங்கே வைத்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு வருகிறாள்.
அதற்குள்ளாக ஹீரோ மின்னல் வேகத்தில் கிரவுண்ட் பண்டிங் முறையில் இணைய நண்பர்களிடத்தில் முப்பது லட்சம் ரூபாயை கலெக்சன் செய்து கொடுத்துவிட.. ஹீரோயின் முதலில் சந்தோஷப்பட்டாலும் பின்பு பகீரென்றாகிறது.
தன்னை கொலை செய்ய தானே ஐடியா கொடுத்துவிட்டு வந்திருப்பதை அடுத்து அங்கு ஓடிப் போய் பார்க்கிறாள். கொலையாளியின் கைகளுக்கு தன் புகைப்படம் சென்றுவிட்டதை அறிந்து அதிர்ச்சியாகிறாள். தன் காதலை சொல்லத் துடிக்கும் ஹீரோவிடம் ஹீரோயின் இதைச் சொல்ல.. இருவரும் இணைந்து காதலியை கொலை செய்யும் முயற்சியை எப்படி தடுக்கிறார்கள் என்பதுதான் மீதிக் கதை..!
சென்ற வருடம் வெளியான ‘தெகிடி’ படத்தின் அடிநாதமே இன்ஸூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்வதுதான். இதில் கொஞ்சம் மாறுபட்டு கொலையை திட்டமிட்டு செய்துவிட்டு, அதனை தற்கொலை என்று சொல்ல வைக்கும் ஒரு கும்பலின் கதையாக மாறியிருக்கிறது.
தமன்குமார் நன்கு நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. கொடுத்த வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஹீரோ ஹீரோயின்தான் என்று சொல்லும் அளவுக்கு அவருக்குத்தான் அதிக ஸ்கோப். இன்னமும் கொஞ்சம் உடம்பை குறைத்தால் நன்றாக இருக்கும். அருந்ததி முந்தைய படத்தில் ஆள் பாதி, ஆடை பாதியாக நடித்து நடிப்பென்றால் என்ன என்று கேட்டிருந்தார். இதில் முழுக்க மூடி நடித்தும் ‘என் நடிப்பு இதுதான்’ என்று காட்டியிருக்கிறார். வெல்டன் மேடம்..!
உடன் நடித்திருக்கும் பாலாஜியின் கடி ஜோக்குகள் கேட்க நன்றாக இருந்தும் போதுமான இயக்கமில்லாததால் வசனத்திற்கேற்ற சிரிப்பு வரவில்லை. பத்திரிகையாளர்கள் காட்சியில் 3 இடங்களில் கைதட்டல்கள் கிடைத்தன. அது எதற்கு என்று இயக்குநருக்கே தெரிந்திருக்கும். நிச்சயம் இது தியேட்டர்களில் கிடைத்திருக்காது.
படத்தின் துவக்கமே மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சைரன் வைத்த அரசு காரில் செல்லாமல், உடன் பாதுகாப்பு போலீஸார் இல்லாமல்… சொந்த டிரைவரை வைத்துக் கொண்டு ‘விளையாட செல்லும்’ ஒரு காட்சியுடன்தான் துவங்குகிறது.
டாஸ்மாக்கின் சதியால் பின்னால் திறந்த ஜீப்பில் வந்த இளைஞர்கள் அமைச்சருடன் ரகளை செய்ய.. இரண்டு வாகனங்களும் ஒன்றையொன்று விரட்ட.. விபத்து.. அமைச்சர் மரணம். ஆனால் இது கொலையாக இருக்கலாமோ என்று சந்தேகிக்கும் நேரத்தில்தான் துவங்குகிறது ஒரு எதிர்பார்ப்பு..! படம் முழுவதிலும் இந்த சஸ்பென்ஸை கச்சிதமாக்க் கொண்டு போயிருக்கிறார்.
படத்தின் முற்பாதியில் ஹீரோயினின் கேரக்டர் ஸ்கெட்ச், அவருடைய வீட்டுப் பிரச்சினை, சித்தியின் புலம்பல்.. இங்கே ஹீரோவின் ஜாலி டைப்.. அவருடைய ஜாலியான ஒரு பிரெண்ட்.. பின்பு போனில் பேசும் கடலை பேச்சுக்கள் என்று பெரும்பாலும் செல்போனின் மூலமாகவே கதை நகர்வதால் போரடிக்கத்தான் செய்கிறது..
பிற்பாதியில் எப்படி ஹீரோயின் கொல்லப்படப் போகிறாள் என்கிற எதிர்பார்ப்பிலேயே கதை நகர்வதால் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ஆனால், சட், சட்டென்று நகரும் காட்சிகளால் எந்தக் காட்சியும் மனதில் பாரமாக இருக்கும் அளவுக்கோ, மனதைத் தொடும் அளவுக்கோ இல்லாமல் போனது இயக்குநரின் இயக்கத்தினால்தான்..!
அமைச்சரின் அடிவருடியான இன்ஸ்பெக்டர் தனது சொந்த முயற்சியில் இந்தக் கேஸை தொடர்கிறார். ஆட்களைப் பிடிக்கிறார். துப்பாக்கி முனையில் ஒருவனை மடக்கிப் பிடிக்கிறார். பின்பு அவனை அமைச்சரின் மகனே கொலை செய்கிறார். இப்போதைய அரசியல் உலகத்திலும் இது நடக்கத்தான் செய்கிறது.
இன்னொரு பக்கம் அரதப்பழசான காட்சியமைப்புகளும் சலிக்க வைக்கின்றன. செல்போனில்தான் ஹீரோயின் பேசியிருக்கிறார். அந்த நம்பரை பாலோ செய்தாலே ஹீரோயினை கண்டுபிடித்துவிட முடியாதா..? அதுக்கெதுக்கு ஹீரோயின் பேசின வசனத்தை அலுவலக பெண் ஊழியர்களை பேச வைத்து செக்கிங்..? அடுத்த காட்சியில் “அதான் நம்மகிட்ட நம்பர் இருக்கே..?” என்கிறார் பாலாஜி. இதை முதல்லேயே செஞ்சிருந்தா அந்தக் காட்சி தேவையில்லைதானே..?
ஒரு மரத்தின் பின்னால் புகைப்படத்தை வைத்துவிட்டுப் போக.. கொலையாளிகள் வந்து எடுத்துச் செல்வதெல்லாம் எந்தக் காலத்து டெக்னிக்.? அதுவும் நடுராத்திரில..?
ஹீரோ-ஹீரோயினை லாரியில் துரத்தும் வின்சென்ட் அசோகனிடமிருந்து தப்பிக்கும் காட்சியெல்லாம் டூ மச். லாரியில் வருவது வின்சென்ட் மட்டும்தானே.. ஹீரோ இறங்கி ஒத்தைக்கு ஒத்தை பார்த்திருந்தால் ஹீரோவுக்காச்சும் சண்டை போட்ட திருப்தியைக் கொடுத்திருக்கும்..
திடீரென்று ஹீரோவுக்குள் ஒரு சந்தேகம்.. மினி ஆள்காட்டும் கருவி ஹீரோயின் கையில் இருப்பது.. அதை ஹீரோ கண்டுபிடித்தெடுப்பது.. இதைத் தொடர்ந்து ஹோட்டலுக்கு சென்று ஓய்வெடுக்க நினைக்கையில் ஹீரோயினுக்கு இவ்ளோ டென்ஷனிலும், பிரச்சினையிலும் ‘மூடு’ வந்து ‘அதற்கு’ முயல்வது.. என்று திரைக்கதை போக.. படத்தில் சீரியஸ்னெஸ் என்பதே இல்லாமல் போய்விட்டது. திரைக்கதைக்காக இன்னும் நிறைய உழைத்திருக்கலாம்..!
விபத்து காட்சிகளை அழகாக படமெடுத்தவர்கள், வின்சென்ட்டை ஹீரோ துரத்தும் காட்சியில் கோட்டைவிட்டுவிட்டார்கள். வின்சென்ட் மேலேயிருந்து கீழே குதிக்க முயல்வது போன்ற ஆக்சனைகூட அப்படியே காட்டினால் எப்படி..?
வின்சென்ட் ரோப் மூலம் கீழே இறங்குவதைகூட மில்லி, மில்லியாகக் காட்டி சண்டை பயிற்சி இயக்குநரின் மானத்தை வாங்கியிருக்கிறார் படத்தின் இயக்குநர். இப்படி யாராவது படமாக்குவார்களா..?
பாடல் காட்சிகளும், ஒளிப்பதிவும் மட்டுமே இந்தப் படத்தைப் பார்த்த சினிமாக்காரர்களுக்கு திருப்தியானது. ஏரியல் வியூ ஷாட்டுகள் மற்றும் பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் சுதந்திரமான ஸ்டைல் புதிய அழகைக் காட்டியிருக்கிறது. ஹீரோயின் இவ்ளோ அழகா என்று நினைக்கவும் வைத்திருக்கிறது..!
பி.சி.சிவனின் இசையில் ‘பாஸு பாஸு’ பாடல் ஏற்கெனவே இணையம் மூலமாக ஹிட்டடித்துவிட்டது. ‘யாருடா மச்சான்’ பாடல் அடுத்த ஹிட். அந்த பல்பு, லைட்டு செட்டிங்ஸ் செய்த கலை இயக்குநருக்கு ஒரு ஜே. பின்னணி இசை பதட்டத்தைக் காட்டினாலும் சுமாரான இயக்கம் அதை முழுமையாக ரசிக்கவிடாமல் செய்துவிட்டது.
சில, பல இடங்களில் புத்திசாலித்தனமான வசனங்கள் மட்டும் இடம் பெற்றிருக்கின்றன. பாராட்டுக்கள். சீரியஸ் இல்லை.. காமெடியும் இல்லை.. ஆனாலும் படத்தின் இடைவேளைக்கு பின்பு எழுந்து போக எத்தனித்தவர்களையும் உட்கார வைத்திருக்கிறது படம்..!
எப்படியிருந்தாலும் பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் போன்றவர்களின் திரில்லர் கதைகளை ஆர்வத்துடன் வாசிக்கும் ஒரு பீலிங்கை இந்த படம் கொடுத்திருக்கிறது. ஆனால் படிக்க ஓகே. பார்ப்பதற்கு….!???
இயக்குநர் கேபிள் சங்கர் தன்னுடைய வலைத்தளத்தில் இதுவரையில் எழுதிய சினிமா விமர்சனங்களிலெல்லாம் “இது குப்பை.. இது மொக்கை.. இது தேறாது.. இது அசுர மொக்கை.. பாதியிலேயே எழுந்து வந்துவிட்டேன்..” என்று சொல்லிய சில படங்களெல்லாம் இந்தத் ‘தொட்டால் தொடரும்’ படத்தைவிடவும் நன்றாகவே இருந்தன; இருக்கின்றன என்பதை இயக்குநர் கேபிள் சங்கர் இப்போது உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறோம்.
நண்பர் கேபிள் சங்கர், அடுத்த படத்தில் இந்த விமர்சனங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கும் அளவுக்கு ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.