full screen background image

தூக்குதுரை – சினிமா விமர்சனம்

தூக்குதுரை – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தைத் தயாரிப்பாளர்கள் அரவிந்த் வெள்ளைபாண்டியன் மற்றும் அன்புராசு கணேசன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் யோகிபாபு, இனியா, மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்கம் – டென்னிஸ் மஞ்சுநாத், ஒளிப்பதிவு: ரவி வர்மா.கே, இசை – கே.எஸ்.மனோஜ், படத் தொகுப்பு – தீபக் எஸ் துவாரக்நாத், கலை இயக்கம் – ஜெய்முருகன், பாக்கியராஜ், சண்டைப் பயிற்சி இயக்கம் – மான்ஸர் முகேஷ், ராம்குமார், பாடல்கள் – அறிவு, மோகன்ராஜன், நடனப் பயிற்சி இயக்கம் – ஸ்ரீதர், ஆடை வடிவமைப்பாளர் – நிவேதா ஜோசப், உடைகள் – பாலாஜி, ஒப்பனை: ஏ.பி.முகமது, Effects & Logics (VFX): அரவிந்த், நடிகர்கள் தேர்வு (Casting): ஸ்வப்னா ராஜேஷ்வரி, படங்கள்: சாய் சந்தோஷ், தயாரிப்பு மேலாளர் – மனோஜ் குமார், தயாரிப்பு நிர்வாகி: பாலாஜி பாபு.எஸ், நிர்வாகத் தயாரிப்பாளர் – ஜெயசீலன், பத்திரிகை தொடர்பு – டீம் D’One, விளம்பர வடிவமைப்பு: சபா டிசைன்ஸ், இணை தயாரிப்பு – வினோத் குமார் தங்கராஜூ.

‘ட்ரிப்’ படத்தை இயக்கிய இயக்குநரான டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த ’தூக்குதுரை’ திரைப்படம் ‘PRE’ (Period-Royal-Entertainer) ஜானர் வகையைச் சேர்ந்தது. மூன்று விதமான காலக்கட்டங்களில் அதாவது 19-ம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2022 ஆகிய காலங்களில் கதை நடக்கிறது.

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நிர்பதுங்க வர்மன் என்ற மன்ன்ன் அந்தக் கிராமத்து கோவிலில் குடி கொண்டிருக்கும் அம்மனுக்கு ஒரு வைர கிரீடத்தை காணிக்கையாக தந்திருக்கிறார்.

அந்தக் கிரீடம் அந்த ஊரை ஆண்டு வந்த சிற்றரசன் வசம் இருந்து வந்த்து. அது அப்படியே தொடர்ச்சியாக அந்த சிற்றரசனின் தற்போதைய வாரிசுகளாக இப்போதும் அதே கிராமத்தில் வசித்து வரும் ஜமீன்தார் குடும்பத்தாரிடம் பாதுகாப்பாய் இருக்கிறது.

4 வருடங்களுக்கு ஒரு முறை அந்த கிரீடம் ஜமீன்தார் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு கோவிலில் அம்மனுக்கு சாத்தப்படும். திருவிழா முடிந்த்தும் மீண்டும் ஜமீன்தார் வீட்டுக்கே கொண்டு போய் பாதுகாப்பாக வைக்கப்பட்டும். இது 200 ஆண்டுகளையும் கடந்து செய்யப்படும் சடங்கு.

1996-ம் ஆண்டு அந்த ஜமீன்தாரின் மகளான இனியா, ஊர்த் திருவிழாவுக்கு சினிமா படம் காட்ட வந்த யோகிபாபுவுடன் காதல் கொண்டு ஊரைவிட்டு ஓடுகிறார். அப்போது ஜமீன்தாரின் ஆட்கள் அவர்களைப் பிடித்துவிடுகிறார்கள்.

யோகிபாபு எரித்து கொலை செய்து பக்கத்தில் இருக்கும் ஒரு கிணற்றில் தூக்கி எறிகிறார்கள். அதே நேரம் இனியா கொண்டு வந்த பையும் அதே கிணற்றுக்குள் போய் சிக்கிக் கொள்கிறது. இது ஊர்க்காரர்களுக்கும், ஜமீன்தாருக்கும் தெரியாது.

சில காலம் கழித்து இனியாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்து வைத்து வெளியூருக்கு அனுப்பி வைத்துவிடுகிறார் ஜமீன்தார்.  

இப்போது 2023-ம் ஆண்டில் நடக்கும் ஊர்த் திருவிழாவுக்கு அந்தக் கிரீடத்தை வெளியில் எடுக்கப் போகிறார்கள் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. இந்த நேரம் ஸ்மால் திருடர்களான பால சரவணனும், சென்றாயனும், தங்களது குருவான மொட்டை ராஜேந்திரனுடன் அந்தக் கிரீடத்தை கைப்பற்ற அந்த ஊருக்குள் வருகிறார்கள்.

இந்த நிலையில், ஜமீன்தார் மாரிமுத்துவிடம் தற்போது இருக்கும் கிரீடம் போலியானது என்றும், ஒரிஜினல் கிரீடம் அந்தக் கிணற்றில் உள்ள பையில் இருப்பதும் ஊர்க்காரர்களுக்குத் தெரிய வருகிறது.

அந்தக் கிணற்றில் யோகிபாபுவின் பேய் இருப்பதாக வதந்திகள் பரவியிருப்பதால் கிணற்றுக்குள் இறங்கி கிரீடத்தை எடுக்க அந்த ஊர் மக்கள் பயப்படுகிறார்கள். அந்த கிரீடம் எப்படி கிணற்றுக்குள் போனது?.. கிணற்றின் மீதான ஊர் மக்களின் பயத்துக்கு என்ன காரணம்?.. கிணற்றில் இருக்கும் கிரீடம் எடுக்கப்பட்டதா?.. இல்லையா?.. என்பதுதான் இந்த ‘தூக்குதுரை’ படத்தின் மீதிக் கதை.

இந்தப் படத்தின் ஹீரோ யோகிபாபுதான் என்று சொல்லியே விளம்பரப்படுத்தினாலும் யோகிபாபு வருவது ஒரு சில காட்சிகளில்தான். மனிதனாக வந்து நடித்திருக்கும் காட்சிகளைவிடவும் பேயாக நடித்திருக்கும் காட்சிகள்தான் அதிகம். தனது வழக்கமான நக்கல் வசனங்கள் மூலம் சிரிக்க வைக்கிறார். ஆனால், கிளைமாக்ஸில் ஆக்சன் காட்சிகளாகவே இருப்பதால் சண்டை நடிகராகவே தென்படுகிறார் யோகிபாபு.

பால சரவணன், சென்ட்ராயன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரின் கூட்டணி சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.. வசனங்களை பேசிக் கொண்டேயிருப்பதால் திரைக்கதையும் நகர்ந்து, படமும் நகர்ந்துள்ளது.

மாரிமுத்துவின் ஜமீன்தார் கதாப்பாத்திரத்தின் நடிப்பைப் பார்க்கும்போது சின்ன பட்ஜெட், கிராமத்து சப்ஜெக்ட்டுக்களுக்கு செட்டாகும் ஒரு நடிகர் சீக்கிரமாக விடைபெற்று விட்டாரே என்று வருத்தம் மேலோங்குகிறது.

நமோ நாராயணன் அண்ணன் மாரிமுத்து மீது கோபம் கொண்டு அந்தக் கிரீடத்தின் மீதும், கோவிலில் முதல் மரியாதை கொடுக்கும் அந்த ‘உருமா’ மீதும் ஆசை கொண்டு கொலை செய்யவும் துணியும் கேரக்டரில் நடித்திருக்கிறார். இவரது மகனாக நடித்திருக்கும் அஸ்வினும் தன் பங்குக்கு பாதி வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார்.

பேரிளம் பெண்ணான இனியா யோகிபாபுவை தொடாமலேயே காதல் செய்திருக்கிறார். அந்தக் காதலையும் சில நிமிடங்களில் கத்தரித்துவிடுவதால் ஒரு டூயட்டுக்குகூட வழியில்லாமல் செய்திருக்கிறார்கள். 2023-ல் வரும் இனியாவின் அந்தக் கெத்தான தோற்றம் அழகு.

சின்ன பட்ஜெட் படங்களுக்கு உரித்தான வகையில் ரவிவர்மாவின் ஒளிப்பதிவு அமைந்துள்ளது. கே.எஸ்.மனோஜின் இசையும், பின்னணி இசையும் இரைச்சல் இல்லாமல் காதுகளைப் பாதுகாத்துள்ளது. படத் தொகுப்பாளர் தீபக் எஸ்.துவாரகனாத் படத்தை  தன்னால் முடிந்த அளவுக்கு தேற்றியிருக்கிறார். 

படத்துக்கு கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் டெனிஸ் மஞ்சுநாத், முழுக்க, முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை வடிவமைத்திருந்தாலும், அதில் நகைச்சுவை வரும் அளவுக்கு இயக்கமும், வசனங்களும் இல்லாத்தால் நம்மால் சிரிக்கத்தான் முடியவில்லை. பல இடங்களில் கொட்டாவிவிட்டு தூங்கலாம்பா என்று சலிப்படைய வைக்கிறது திரைக்கதை.

மொத்தத்தில் இந்த ‘தூக்குதுரை’ ரசிகர்களை தூங்கத்தான் வைத்துள்ளது..!

RATING : 2.5 / 5

 

Our Score