full screen background image

தொட்ரா – சினிமா விமர்சனம் 

தொட்ரா – சினிமா விமர்சனம் 

ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். 

படத்தில் பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர். ஒரு முக்கிய கேரக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகியுள்ளார். இவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஜெய்சந்திராவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்களுடன் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், கார்த்திக் சுப்புராஜின் தந்தையான கஜராஜ், தீப்பெட்டி கணேசன்,  மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரங்கள் அபூர்வா, சஹானா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இசை – உத்தமராசா, ஒளிப்பதிவு – வி.செந்தில்குமார், படத் தொகுப்பு – ராஜேஷ் கண்ணன், சண்டை பயிற்சி – விக்கி நந்தகோபால், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மதுராஜ்.

தமிழகத்தில் தற்போது மறைந்திருந்து தாக்கும் அனல் பிரச்சினையாக இருக்கும் ஆணவக் கொலை பற்றிய திரைப்படம் இது.

ஆதிக்கச் சாதி பெண்களைக் காதலிக்கும் தாழ்த்தப்பட்ட ஆண்களை கொலை செய்யத் துணியும் ஜாதிப் பெருமையுடன் திரியும் சிலரை அடையாளம் காட்டுகிறது இத்திரைப்படம்.

உடுமலைப்பேட்டை சங்கர்-கவுசல்யா பிரச்சினைதான் இந்தப் படத்தின் மையக் கரு. படத்தின் நாயகனுக்கு சங்கர் என்றே பெயர் வைத்த இயக்குநர் பெண்ணுக்கு மட்டும் ஏனோ கவுசல்யா என்று பெயர் வைக்காமல் திவ்யா என்று பெயர் வைத்திருக்கிறார்.

ஆனாலும் டைட்டிலில் இந்தப் படத்தின் கதை, சம்பவங்கள் யாவும், யாரையும், எதையும் குறிப்பிடுவன அல்ல என்று ஜாக்கிரதையாக போட்டிருக்கிறார்கள்.

சமத்துவபுரத்தில் வாழும் நாயகன் சங்கர் என்னும் பிருத்விராஜன் கல்லூரி மாணவர். தந்தையை இழந்தவர் என்பதால் வீட்டுச் சுமை தன் மீது விழுந்திருப்பதால் விடிற்காலையில் எழுந்து பேப்பர் போடும் வேலையையும் செய்து வருகிறார்.

ஒரு நாள் வழக்கம்போல பேப்பர் போடப் போகும்போது பார்க்கும் பணக்கார வீட்டுப் பெண்ணான வீணாவை பார்த்தவுடன் லவ்வாகிறார். அவரும் தான் படிக்கும் கல்லூரியிலேயே படிப்பதால் இன்னும் நெருக்கமாக அவரைக் காதலிக்கத் துடிக்கிறார்.

வீணாவின் அப்பாவும், அண்ணனும் சாதிப் பித்துப் பிடித்தவர்கள். தங்களுடைய சாதிய கட்டுமானத்தை மீறி எதையும் செய்யக் கூடாது என்று இருப்பவர்கள். இந்த நேரத்தில் பிருத்வி தனது காதலை இன்ச் பை இன்ச்சாக நகர்த்தி வீணாவின் இதயத்தில் கைக்குட்டை போட்டு இடம் பிடித்துவிடுகிறார்.

பிறகென்ன.. காதலர்கள் காதல் டூயட் பாடி காதலை வளர்த்துக் கொண்டே போக.. விஷயம் வீணாவின் குடும்பத்தினருக்குத் தெரிய வருகிறது. பிருத்வியைக் கூப்பிட்டு நன்கு கவனித்து அனுப்பி வைக்கிறார் வீணாவின் அண்ணன்.

ஆனாலும் காதல் வலிமையானதல்லவா. பிருத்வியும், வீணாவும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். பழனிக்குச் சென்று திருமணம் முடித்துக் கொள்கிறார்கள். மகள் ஓடிப் போன கவலையில் வீணாவின் தந்தை மாரடைப்பால் காலமாகிறார். இதனால் குடும்பத்தில் குழப்பம் கூடுகிறது. கடைசியாக, ஒரு மலைப் பிரதேசத்தில் குடியிருப்பவர்களை வீணாவின் அண்ணன் கண்டுபிடித்து அழைத்து வருகிறார்.

அதே நேரம் வீணா காணாமல் போன வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. விசாரணையின்போது தான் தனது கணவருடனேயே செல்ல விரும்புவதாக வீணா சொல்லிவிட பிருத்வியுடன் அனுப்பி வைக்கப்படுகிறார் வீணா.

இன்னொரு பக்கம் காதலர்களை சேர்த்து வைப்பதாகக் கூறி கட்டப் பஞ்சாயத்து செய்து காசு பார்க்கும் இன்னொரு அரசியல்வாதி ஏ.வெங்கடேஷ். நல்ல பணக்கார பெண்களை பார்த்து காதலிக்கும்படியும், பிரச்சினை என்று வந்தால் தான் பார்த்துக் கொள்வதாகவும் சொல்லி சில இளைஞர்களைத் தூண்டிவிட்டு அதன் மூலமாக பிழைப்பு நடத்தும் கேவலத்துக்காரர்.

இவரிடத்தில் வைத்து ஐக்கியமாகிறார்கள் வீணாவும், பிருத்வியும். இவர்களை வைத்து எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்த ஏ.வெங்கடேஷுக்கு திடீரென்று ஒரு விபரீத ஆசை. அதே நேரம் தன் அப்பாவையும் இழந்து, இந்த வழக்கினால் தனது அரசியல் எதிர்காலமும் குறுகிப் போன கோபத்தில் இருக்கும் வீணாவின் அண்ணன் எம்.எஸ்.குமாரும் ஒரு விபரீத முடிவைக் கையில் எடுக்கிறார்.

அது என்ன என்பதும்.. காதலர்கள் கடைசியில் ஒற்றுமையாய் வாழ்ந்தார்களா.. இல்லையா.. என்பதுதான் மீதமுள்ள படத்தின் திரைக்கதை.

பிருத்விராஜன் தன்னுடைய கேரக்டருக்கு ஏற்றாற்போல் நடித்திருக்கிறார். காதலியா, உயிரா என்று போராடும் காட்சியில் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார். நன்கு நடனமாடுகிறார். டயலாக் டெலிவரியிலும் சிறப்பாகவே இருக்கிறது இவரது நடிப்பு. இருந்தும் இவருக்கு ஏன் பட வாய்ப்புகள் தொடர்ந்து வரவில்லை என்பது தெரியவில்லை. இன்னும் சிறந்த கதையில், சிறந்த இயக்குநர்களின் கைகளில் சிக்கினால் பெரிதும் பேசப்படுவார்.

கேரளாவில் இருந்து வந்திருக்கும் புதுமுக நடிகை வீணா திவ்யாவாக நடித்திருக்கிறார். சிற்சில காட்சிகளில் நடிப்பை பிரமாதமாக காண்பித்திருக்கிறார். ஏ.வெங்கடேஷின் எபிசோடில் கொஞ்சம் கிளாமரைக் காட்டியிருக்கிறார்.  பல காட்சிகளில் வசனங்களை கடித்துத் துப்புவதுபோல இருப்பதுதான் மிகப் பெரிய குறை. பாடல் காட்சிகளில் குறைவில்லாமல் அழகைக் கொட்டியிருக்கிறார். சூஸனுடனான தனது பேச்சில் உண்மையில் தான் செய்யப் போவது என்ன என்பதை ஒரு சிறிய கோடுகூட போட்டுக் காட்டாமல் நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

‘மைனா’ சூஸன் நடிப்பில் வில்லித்தனத்தைக் காட்டியிருக்கிறார். இவருடைய கணவராக நடித்திருக்கும் எம்.எஸ்.குமாருக்கு இதுதான் முதல் வாய்ப்பு என்பதால் குறை சொல்லாமல் வாழ்த்துவோம். அண்ணன் என்ற உரிமைக்காரன், தலைவன் என்கிற கெத்து, சாதித் தலைவர் என்கிற பெருமிதம் ஆக மூன்றையும் கலந்த கலவையாக நடித்திருக்கிறார்.

தன்னுடைய போஸ்டரில் காலை ஊன்றி நின்று கொண்டிருக்கும் பிருத்விராஜனை பார்த்து முறைக்கும் அந்த ஒரு காட்சியில் அவரை மிகவும் ரசிக்க முடிகிறது. கடைசியாக பீம்சிங் படம் போல உண்மையை உணர்ந்து மனம் திருந்தும் நல்ல கேரக்டர். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.

படத்தின் மற்ற கேரக்டர்களுக்கான ஸ்கெட்ச்சை இயக்குநர் சொல்லாமல் விட்டதினால் பிருத்வியின் நண்பர்களின் பழக்கத்தை சட்டென்று ஏற்க முடியவில்லை. கல்லூரி மாணவருக்கு மத்திய வயதையொத்த ஆண் நெருங்கிய நண்பராக இருப்பதும், அவர்களது பழக்க வழக்கம் என்ன என்பது தெரியாமலும் ஏதோ சந்திக்கிறார்கள்.. பேசுகிறார்கள்.. என்பதுபோல் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

பாடல்களும், இசையும் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். உத்தமராசாவின் இசையில் அனைத்து பாடல்களுமே கேட்கும் ரகம். பாடல் காட்சிகளை படமாக்கியதில் ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரின் பங்களிப்பும் அதிகம். ஒளிப்பதிவில் அதிகமாக தொழில் நுட்பத்தைத் திணிக்காமல் இயல்பான ஒளிப்பதிவிலேயே படம் முழுவதற்கும் இருந்தமைக்காக இவருக்கு ஒரு பாராட்டு.

குவாரியில் வைத்து பிருத்வியை புரட்டியெடுக்கும் அந்தச் சண்டை காட்சியை கொஞ்சமும் இயல்புத்தன்மை மாறாமல் படமாக்கியிருக்கிறார்கள். சண்டை பயிற்சியாளருக்கும் நமது பாராட்டுக்கள்..

உடுமலைப்பேட்டை சங்கர்-கவுசல்யா கொலை வழக்காக படம் துவங்கி, கடைசியில் நாமக்கல் கோகுல்ராஜ் படுகொலையில் வந்து நிற்கிறது. இந்த இரண்டுக்கும் முடிச்சுப் போடும்வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் தொடர்பினை இன்னமும் அழுத்தமாகச் சொல்லியிருந்தால் வெகுவாக ரசித்திருக்கலாம்.

சாதிய வெறியை கண்டித்திருக்கும் அதே நேரத்தில் கல்லூரி படிப்பின்போது எதற்குக் காதல் என்று அந்த விடலைத்தனமான காதலையும் இயக்குநர் கண்டித்திருக்கலாம். இந்த விஷயத்தில் ஒரு பக்கச் சார்பாகவே படம் முடிந்திருக்கிறது.

சங்கரும், கெளசல்யாவும் எப்படி தாக்கப்பட்டார்களோ.. அதில் சங்கர் எப்படி இறந்து போனாரோ அதே போன்ற காட்சியமைப்புடன்தான் படத்தைத் துவக்கியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் முற்பாதிவரையிலும் படம் அவர்களின் வாழ்க்கைக் கதையைத்தான் சொல்கிறது என்றே முழுமையாக நம்ப முடிகிறது. ஆனால் இடைவேளைக்கு பின்புதான் தேவையில்லாத ஏ.வெங்கடேஷின் கேரக்டர் ஸ்கெட்ச்சினால் படம் நேர்க்கோட்டில் இருந்து நழுவி வாய்க்காலில் விழுந்துவிட்டது.

ஏ.வெங்கடேஷூக்காக செய்யப்பட்ட மாற்றம் படத்தின் கதையை கொஞ்சம் மாற்றி காதலர்களுக்கு அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்ற நினைப்பவர்களும் சபலக்காரர்கள்தான். அவர்களும் உள் நோக்கத்தோடுதான் காதலுக்கும், காதலர்களுக்கும் ஆதரவு தருகிறார்கள் என்பது மாதிரியான எண்ணத்தைத் தோற்றுவித்துவிட்டது. இயக்குநர் நிச்சயமாக இதனைத் தவிர்த்திருக்க வேண்டும்.

சில திரைக்கதை மாற்றங்களையும் இன்னும் அழுத்தமான, சிறப்பான இயக்கத்தையும் மேற்கொண்டிருந்தால் இத்திரைப்படம் சாதிய எதிர்ப்பு படங்களில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும்.

இருந்தும், இன்றைய சூழலில் மதம், சாதி கடந்து காதலிப்பது தவறே அல்ல என்கிற மன நிலைக்கு மக்கள் வந்துவிட்ட பின்பும், குறுக்கே சாதியை தூக்கிக் கொண்டு வந்து நிற்கும் சாதிப் பிடிப்பாளர்களையும், பற்றாளர்களையும் கேள்விக்குள்ளாக்கும் இது போன்ற திரைப்படங்கள் ஏற்கக் கூடியதுதான். பார்க்கக் கூடியவைதான்..!

Our Score