‘தொட்ரா’ இயக்குநரை மிரட்டும் ஜாதி அமைப்புகள்..! 

‘தொட்ரா’ இயக்குநரை மிரட்டும் ஜாதி அமைப்புகள்..! 

ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.  இயக்குநர் கே.பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப் படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தில், வீணாவின் அண்ணனாக, படத்தை தாங்கி கொண்டு போகிற, கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் ஒரு முக்கிய கேரக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார். இவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஜெய்சந்திராவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்களுடன் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன்,  குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோரும் நடித்துள்ளனர்.

உத்தமராசா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.  வி.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தில் ராஜேஷ் கண்ணன் படத் தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

இந்தப் படம் வரும் செப்-7-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படம் குறித்த சில புதிய தகவல்களை படக் குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா, டெக்ஸ்டைல் பிசினஸ் நடத்தி வருபவர். தனது காதல் கணவர் எம்.எஸ்.குமார் மனதில் கனன்று கொண்டிருந்த நடிப்பு ஆசையை நிறைவேற்ற சினிமா பக்கம் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இதில் என்ன பியூட்டி என்றால் கணவரின் ஆசையை நிறைவேற்ற படம் தயாரித்தாலும்கூட, கணவரை ஹீரோவாகத்தான் நடிக்க வைப்பேன் என அவரும் பிடிவாதம் காட்டவில்லை.. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அவரும் அடம் பிடிக்கவில்லை. சினிமாவுக்குள் சொந்தப் பணத்தை வைத்துக் கொண்டு ஹீரோவாக நடிக்க வருபவர்கள் கவனிக்க வேண்டிய பாடம் இது.

இந்தப் படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கியபோது, நாயகி வீணா அந்த காட்சியின் சீரியஸ்னெஸ் புரியாமல் அதிக டேக் வாங்கினார்..இதனால் கோபமான இயக்குநர் மதுராஜ் நாயகியின் கன்னத்தில் பளார் என அறைவிட அந்த அதிர்ச்சியுடன், குறிப்பிட்ட அந்த காட்சியில் இயல்பாக நடித்து முடித்தார் வீணா.. இது ஏற்கனவே பரபரப்பை கிளப்பிய செய்திதான்..  

ஆனால் இதேபோல இன்னும் சில சீரியஸான காட்சிகளை படமாக்கும்போது அந்த சீரியஸ் மூடுக்கு வீணாவால் உடனடியாக மாற முடியவில்லையாம்.. அதற்காகவே இயக்குநர் மதுராஜிடம்  அடிக்கடி சென்று ‘ப்ளீஸ்.. மீண்டும் என்னை கன்னத்தில் அறையுங்கள்’ என கேட்டாராம். ‘இது என்னடா வம்பா போச்சு.. ஒரு தடவை அறைஞ்சது குத்தமாய்யா’ என ஜெர்க் ஆன மதுராஜ்  ‘யம்மா… ஆள விடு சாமி’ என கெஞ்சாத குறையாக நழுவியிருக்கிறார் இயக்குநர் மதுராஜ்.

இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள உத்தமராசா இதில்தான் அறிமுகம் ஆகியுள்ளார். அடிப்படையில் டிராக் பாடகரான இவர் ஒரு பிரபல இசையமைப்பாளரிடம் உதவியாளராக பணியாற்றினாராம்.

பொதுவாக இசையில் தன்னுடைய குரு யாரென்று சொல்ல சிஷ்யர்கள் தயங்கமாட்டார்கள். ஆனால் உத்தமராசா தனது குருவின் பெயரை சொல்லவே விரும்பவில்லை. அந்தளவுக்கு, தனது சிஷ்யர்கள் நன்றாக முன்னேறுவதை காண சகிக்காத ஆசாமியாம் அந்த இசையமைப்பாளர். யார் அவரோ..? உத்தமராசாவுக்கே வெளிச்சம்.

இந்தப் படம் ஆணவக் கொலை பற்றி உருவாகியுள்ளதாக ஏற்கனவே இயக்குனர் மதுராஜ் பல இடங்களில் சொல்லிவிட்டார்..  அதேசமயம் படத்தை பார்த்த சென்சார் போர்டு படத்திற்கு ‘யு’ சான்றிதழும் கொடுத்துவிட்டது.

ஆனால் அடுத்த வாரம் படம் ரிலீசாக இருக்கும் இந்த நேரத்தில் “இந்தப் படத்தில் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை கதாபாத்திரங்களாக நடிக்க வைத்திருக்கிறீர்கள் என தெரிகிறது. ரிலீஸுக்கு முன்பாகவே எங்களுக்கு படத்தை போட்டுக் காட்டியே தீரவேண்டும். இல்லாவிட்டால் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என பஸ் பிடித்து சென்னைக்கு வந்து  திருவல்லிக்கேணியில் ரூம் போட்டு உட்கார்ந்து கொண்டு இயக்குநர் மதுராஜை மிரட்டி வருகிறார்களாம் சில ஜாதி அமைப்பு ஆட்கள். ‘இது என்னடா புது சிக்கல், இவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம்..?’ என்று நினைத்து பயந்து போயிருக்கிறார் இயக்குநர் மதுராஜ்.

“ஒரு சண்டைக் காட்சியில் நாயகன் பிருத்வியின் முகத்தை தனது காலால் நடிகர் எம்.எஸ்.குமார் அழுத்தி மிதிக்க வேண்டும்.. பிருத்வி எவ்வளவு பெரிய நடிகரின் மகன்.. அவரைப் போய் நான் மிதிப்பதா என எம்.எஸ்.குமார் தயங்க, ‘அட பரவாயில்ல பாஸ்.. சும்மா மிதிங்க’ என அவரை உற்சாகப்படுத்தி அந்த காட்சி இயல்பாக வரும்வரை முகம் சுளிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தாராம் பிருத்வி. இந்தப் படம் பிருத்விக்கு ஒரு திருப்புமுனையாக அமையும்..” என்கிறார் இயக்குநர் மதுராஜ்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரொம்பவே யதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ளன என்றால் அதற்கு காரணம் படத்தின் ஒளிப்பதிவாளர் செந்தில்தான். அதுமட்டுமல்ல புது இசையமைப்பாளர், புது டீம் என்கிற பாகுபாடு பார்க்காமல், கேட்டதும் ஒப்புக் கொண்டு  நடிகர் சிம்பு இந்தப் படத்திற்காக ‘பக்கு பக்கு’ என்கிற பாடலை பாடியுள்ளார். அந்தப் பாடல் யூ டியூப்பில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..

வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படம் ரிலீசுக்கு பின்னால் நிச்சயம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என படக் குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.

Our Score