ஜீவா – நயன்தாரா நடித்துள்ள படம் ‘திருநாள்’. இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கியுள்ளார். கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம். செந்தில்குமார் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று மதியம் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பேசும்போது, “இன்று ஒரு நல்ல நாள். இந்த திருநாளில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. இது ஒரு பாசிட்டிவான டீம். நல்ல எண்ணம் கொண்ட நண்பர்கள் கொண்ட படக்குழு. இந்தப் படத்தின் கதையை நீண்ட நாட்களுக்கு முன்பே கேட்டேன்.
பிறகு தயாரிப்பாளராக செந்தில்குமார் அமைந்தார். அவர் வெறும் தயாரிப்பாளர் அல்ல, எங்கள் குடும்ப நண்பர். சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் ‘சூர்யவம்சம்’, ‘திருப்பாச்சி’ போன்ற பல வெற்றிப் படங்களுக்குப் பின்புலமாக இருந்தவர். அவர்தான் படத்தைத் தயாரிப்பது என்று முடிவானதும் உடனே படப்பிடிப்புக்குப் புறப்பட்டு விட்டோம். ஒரே மூச்சில் படத்தை முடித்தோம்.
பொதுவாகப் படப்பிடிப்பில் தினம் ஒரு பிரச்சினை வரும். ஆனால் ஒரு நடிகனுக்கு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது. எந்தப் பிரச்சினையும் வராமல் இருந்தால்தான் நிம்மதியாக அவனால் நன்றாக நடிக்க முடியும்.
இப்படத்தில் அப்படி எதுவும் தெரியவே இல்லை. நாங்கள் நிம்மதியாக இருந்தோம். எல்லாவற்றையும் செந்தில்குமாரே பார்த்துக் கொண்டார். அவர் பார்க்காத பிரச்சினையா..? அப்படிப்பட்ட அனுபவசாலி அவர்.
படத்தின் இயக்குநர் ராம்நாத் திட்டமிட்டு எடுப்பவர். எல்லாவற்றிலும் தெளிவாக இருப்பவர். இந்தப் படம் முழுக்க வேட்டியில்தான் வருகிறேன். நீண்ட நாட்களாகவே லோக்கலாக இறங்கி படம் பண்ணவில்லை என்று என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி லோக்கலாக அமைந்த படம்தான் ‘திருநாள்’.
ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி சத்தம் போட்டுப் பேசி நான் பார்த்ததில்லை. பதற்றமாகி நான் பார்த்ததில்லை.. .அவருடன் 100 படங்கள்கூட வேலை பார்க்கலாம். கலை இயக்குநர் சீனு ராவ் கடினமான உழைப்பாளி. இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா அழகழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.
‘ஈ’, ‘தெனாவட்டு’ படங்களுக்குப் பிறகு அவருடன் இதில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முதலில் இந்தப் பாடல்களைக் கேட்டு விட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஸ்ரீகாந்த் தேவா எப்போதும் குத்துப் பாட்டுதான் போடுவார் என்று நினைத்தேன். ஆனால் இந்தப் படத்தில் இனிமையான மெலடி பாடல்களை இசையமைத்துள்ளார்.
நயன்தாராவுடன் 9 ஆண்டுகளுக்குப் பின் நடித்திருக்கிறேன். படத்தில் முதலிலேயே அவரைத்தான் நடிக்க வைக்க நினைத்தோம். ஆனால் அப்போது அவர் பிஸியாக இருந்தார். பிறகு வேறு நடிகைகள் எல்லோரையும் பார்த்தோம். சரிப்பட்டு வரவில்லை. ஆனால் காலதாமதமானாலும் நயன்தாராதான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. பிறகு அவரே வந்து சேர்ந்துவிட்டார்.
முதல்நாள் படப்பிடிப்பு முதல் கடைசிநாள் படப்பிடிப்புவரை இயக்குநர் சொன்னதை மட்டும்தான் ஆர்வமாகச் செய்தேன். இப்படத்தில் விருப்பமாக நடித்தேன்., சுதந்திரமாக நடித்தேன். பிளேடு வாயில் வைப்பது போன்ற பல காட்சிகளில் சிரமப்பட்டு நடித்தேன். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும்… ” என்றார்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும்போது, “எல்லோரும் என்னை ‘குத்துப் பாட்டு இசையமைப்பாளர்’ என்பார்கள். ஆனால், இதில் முழுக்க, முழுக்க ‘உருமாறிய கருமாரி’ போல மாறி இருக்கிறேன். நான்கு இனிமையான பாடல்கள் போட்டு இருக்கிறேன். கங்கை அமரன், டி.இமான் போன்ற இசையமைப்பாளர்கள் பாடியிருக்கிறார்கள். எஸ்.ஜானகியம்மா பாடியிருக்கிறார். அது என் நீண்டநாள் கனவு..” என்றார்.
இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் பேசும்போது, “அம்பாசமுத்திரம் அம்பானி’ என் முதல் படம். இது என் இரண்டாவது படம். ‘திருநாள்’ படத்தின் முழுக் கதையையும் பைண்ட் செய்து 5 ஆண்டுகளாக கையில் வைத்துக் கொண்டு வாய்ப்பு தேடியலைந்தேன். தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.
தயாரிப்பாளர் செந்தில்குமார் சார் இரண்டே கால் மணி நேரம் கதை கேட்டார். மறுநாளே ஜீவாவும் இரண்டே கால் மணிநேரம் கதை கேட்டார். உடனே ஓகே சொன்னார். நயன்தாராவும் முழுக் கதையும் கேட்டார். இது கும்பகோணத்தின் பின்னணியில் நடக்கும் ரவுடியிசம் சார்ந்த கதை. இதற்காக ஜீவாவை அவர் நடித்த கடந்த 25 படங்களில் அவர் செய்யாத நடை, உடை, பாவனை, தலைமுடி, சட்டை நிறம் வேட்டி என எல்லாமும் மாற்றினோம். இதில் நயன்தாரா பள்ளி ஆசிரியையாக வருகிறார். ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி எனக்கு பக்கபலமாக இருந்தார். இது மாதிரி படம் தொடங்கியது முதல் படம் முடியும்வரை அதே உற்சாகத்துடன், பலத்துடன் இருக்கும்படியான ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது சிரமம்…” என்றார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எம். செந்தில்குமார், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, பாடலாசிரியர் ஜீவன் மயில், கலை இயக்குநர் சீனுராவ், நடன இயக்குநர் பாலகுமார். ஆகியோரும் பேசினார்கள்.