திருமணம் – சினிமா விமர்சனம்

திருமணம் – சினிமா விமர்சனம்

PRENISS INTERNATIONAL PRIVATE LIMITED நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இயக்குநர் சேரன் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இது சேரனின் 11-வது படைப்பாகும்.

படத்தில் உமாபதி ராமையா நாயகனாகவும், காவ்யா சுரேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், அனுபமா குமார், வெங்கட், அங்கம்மா, வடிவாம்பாள், ஜெயப்பிரகாஷ், மனோபாலா, இவர்களுடன் இயக்குநர் சேரனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ், இசை – சித்தார்த் விபின், படத் தொகுப்பு – பொன்னுவேல் தாமோதரன், நடன இயக்கம் – அசோக்ராஜா, பாலகுமார், ரேவதி, சஜ்னா நஜம், பாடல்கள் – யுகபாரதி, லலிதானந்த், ஒப்பனை – யு.கே.சசி, உடை வடிவமைப்பு – கவிதா, விளம்பர வடிவமைப்பு – தண்டோரா டிசைன்ஸ், மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு மேற்பார்வை – பெஞ்சமின், இணை இயக்கம் – துர்கேஷ் டி.தேவராஜ், சி.இ.ஓ. – வெள்ளைதுரை, தயாரிப்பாளர் – பிரேம்நாத் சிதம்பரம், எழுத்து, இயக்கம் – சேரன்.

‘அறிவுடை நம்பி’ என்னும் சேரன் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். அப்பா இல்லை. தாய் மாமன் தம்பி ராமையா, தனது அம்மா, ஒரே தங்கையான நாயகி காவ்யா சுரேஷுடன் வாழ்ந்து வருகிறார்.

காவ்யா சுரேஷ் ஹலோ எஃப்.எம்.-மில் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் நாயகன் உமாபதி ராமையாவின் குரலைக் கேட்டே காதலிக்கிறார். பின்பு இருவரும் முகநூலில் அறிமுகமாகி சாட்டிங் செய்து, பழகி… தங்களுக்குள் காதல் இருப்பதை உணர்ந்த பின்பு, தங்களது காதலை வீட்டில் இதனைச் சொல்லி ஒப்புதல் கேட்கிறார்கள்.

வாழ்க்கையை திட்டமிட்டு வாழ வேண்டும் என்கிற கொள்கையுடைய சேரன், இந்தக் கல்யாணத்தில் அவசரப்படாமல் முதலில் மாப்பிள்ளை எப்படி.. அவரது குணம் என்ன.. நடவடிக்கைகள் என்ன என்பதையெல்லாம் நன்கு தெரிந்து கொண்டு கல்யாணத்திற்கு ஓகே சொல்கிறார்.

நாயகன் உமாபதிக்கு ஒரேயொரு அக்கா. ‘மனோண்மணி’ என்னும் சுகன்யா. உடன் சித்தப்பா எம்.எஸ்.பாஸ்கர். சகுனம், பஞ்சாங்கம் பார்க்கக் கூடியவர். குடும்பத்தின் மீது மிகுந்த பாசமிக்கவர். பழைய ஜமீன் குடும்பம். ஆனால் இன்னமும் ஊருக்குள் செல்வாக்கும், பண பலமும் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

சுகன்யா தன் தம்பி மீது மிகுந்த பாசம் கொண்டவர். இதனாலேயே தனது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வாழாவெட்டியாகவே இருக்கிறார். இவருக்கு தனது தம்பியின் கல்யாணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று ஆசை. இதற்காக நிறைய கலர், கலர் கனவுகளோடு காத்திருக்கிறார். இவரும், இந்தக் காதல் கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்.

ஆனால், கல்யாணத்தை எப்படி நடத்துவது என்று பேசும்போது சேரனுக்கும், சுகன்யாவுக்கும் இடையில் மிகப் பெரிய பிரிவினை ஏற்படுகிறது. சேரன் சிக்கனமாக நடத்த முயலும்போது சுகன்யா அதைத் தடுக்கிறார். இந்தப் பிரச்சினை பெரிதாகிப் போய் ஒரு நாள்வெடித்துவிட.. “கல்யாணத்துக்கு பொண்ணு மட்டும் வந்தால் போதும். அவங்க வீட்ல இருந்து யாரும் வரக் கூடாது…” என்று சுகன்யா உத்தரவிடுகிறார்.

இதைக் கேட்டு கோபமடையும் காவ்யா தன் அண்ணனும், அம்மாவும் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள தனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட திருமணம் நின்று போய்விடுகிறது. ஆனாலும் காதலர்கள் இருவரும் உள்ளுக்குள் காதலில் உருகிக் கொண்டிருக்கிறார்கள்.

கடைசியில் என்னாகிறது என்பதுதான் இந்தத் ‘திருமணம்’ படத்தின் திரைக்கதை.

‘அறிவுடை நம்பி’ என்னும் அழகான தமிழ்ப் பெயருக்கேற்றாற்போல் தனது கேரக்டர் ஸ்கெட்ச்சை வடிவமைத்திருக்கிறார் சேரன். தான் செய்வதெல்லாம் கஞ்சத்தனம் இல்லை. சிக்கனம் என்பதைப் புரிய வைக்க அவர் சுகன்யாவிடம் பெரும்பாடு படுவதெல்லாம் சுவையான திரைக்கதை.

ஒரே நாளில் 30 லட்சம் ரூபாயை செலவு செய்து திருமணம் செய்வதைவிட சிக்கனமாக 2 லட்சத்தில் செலவு செய்து மீதித் தொகையை தம்பதிகளிடத்தில் கொடுத்து அவர்களை வாழ வைப்பதுதான் புத்திசாலித்தனம் என்று சொல்லும் சேரனின் பேச்சுதான் படத்தின் ஹைலைட்.

ஒரு பக்கம் தங்கைக்கு பாசமுள்ள அண்ணன்.. இன்னொரு பக்கம் அம்மாவுக்கு பிரியமான மகன்.. அலுவலக வேலையில் நேர்மை.. சம்பந்தம் பேச வந்த இடத்திலும் வருமான வரித்துறைக்கு பணியாற்றும் அவரது கடமையுணர்வு பாராட்டுக்குரியது.

யதார்த்தமாகவும், தேவையில்லாமல் டென்ஷனைக் காட்டாமல் கோபப்படாமல் மிகையில்லாத நடிப்பைக் காண்பித்திருக்கிறார் சேரன்.

நாயகன் உமாபதிக்கு இது இரண்டாவது படம். இந்தக் கேரக்டருக்கு ஏற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார். கண்ணியமான காதலன் என்ற அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு பாதகமில்லாத நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார். கல்யாண ரிசப்ஷனில் அணிய விரும்பி அவர் தேர்வு செய்த உடையினால் வரும் சண்டையின்போது அவருடைய பதற்றமில்லாத நடிப்பு நமக்கும் பதற்றத்தைக் குறைத்திருக்கிறது.

இடையில் இவருக்கு நடனமும் வரும் என்று சொல்லும்விதமாக ஒரு பாடலில் நாலாவித நடனங்களையும் அள்ளி வீசியிருக்கிறார். அடுத்தடுத்து நல்ல வேடங்கள் கிடைத்து நடிப்பாற்றலை வெளிப்படுத்த வாழ்த்துகிறோம்.

நாயகியான காவ்யா சுரேஷ் தங்கையாக.. காதலியாக.. பொறுமையான குணத்தோடு இருப்பவராக அழகாக நடித்திருக்கிறார். சுகன்யா அவருடைய பொறுமையை சோதிக்கும் வண்ணம் கடையில் பேசும்போது அவர் காட்டும் கோப நடிப்பு அருமை. இதேபோல் தனக்கும் இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று அவர் சொல்லும்போதும் அழுத்தமான அந்தக் காட்சி பார்வையாளர்களின் மனதில் பதிகிறது. இதற்கு உதவுவதுபோல் இருக்கிறது இவரது நடிப்பு.

நடனத்திலும் தேறியவர் என்பதை இவரது பரத நாட்டிய சோலோ நடனம் சாட்சியாக அமைந்திருக்கிறது. இந்தக் காட்சியில் ஒரு பாடலையே போட்டிருக்கலாம். நன்றாகத்தான் இருந்திருக்கும்.

சுகன்யா இன்னொரு பக்கம் தனது தனித்திறமையைக் காண்பித்து ஸ்கோர் செய்திருக்கிறார். தம்பிக்காக உருகுவதும், ஆசைப்படுவதும்.. கவுரவத்தை இழக்க வேண்டி வருமே என்றெண்ணி சேரனிடம் சண்டையிடுவதும்.. கடைசியில் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் தாலியை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு ஓடி வருவதுமாக ஒரு சிறந்த அக்காவாக வாழ்ந்திருக்கிறார். மிக நீண்ட நாட்கள் கழித்து அவருக்கே திருப்தியான கேரக்டராக இந்த மனோண்மணி இருக்கும் என்று நம்பலாம்.

தம்பி ராமையாவும், எம்.எஸ்.பாஸ்கரும் குணச்சித்திர கேரக்டரில் ஒருவரையொருவர் போட்டி போட்டு நடிப்பார்கள். அப்படிப்பட்டவர்களை ஒரே படத்தில் நடிக்க வைத்தால்.. தங்களுடைய சொந்தக் கதையை இருவரும் சொல்லும்போது, கண் கலங்கி விடுகிறது. அந்த அளவுக்கு இருவருமே நடிப்பைக் கொட்டியிருக்கிறார்கள்.

பால சரவணனுடன் எம்.எஸ்.பாஸ்கரின் மோதல் கலகலப்பு எனில், தம்பி ராமையாவும், சேரனும் பேசும் சில பேச்சுக்களும் பதில் கலகலப்பு. வசனத்தில் வெறுமனே அறிவுரைகளை மட்டுமே சொல்லாமல் தனது இயக்கத் திறமையினால் சில நகைச்சுவை காட்சிகளையும் இயல்பாகக் கொணர்ந்திருக்கிறார் இயக்குநர் சேரன்.

இன்னொரு பக்கம் ஜெயப்பிரகாஷின் தனி டிராக்கும் கதையோடு ஒட்டி உறவாடுகிறது. வீட்டுப் பெண்களின் அதீத ஆசை எப்படி ஒரு நேர்மையான மனிதரையும் மடைமாற்றி கடைசியாக அவரை படுகுழிக்குள் தள்ளுகிறது என்பதை நம்பும்வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் சேரன். படம் பார்த்தவர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவில் வித்தைகளைக் காட்டாமல் மிக யதார்த்தமாக என்ன இருக்குமோ அதையேதான் பதிவாக்கியிருக்கிறார். காவ்யா சுரேஷ் ஆடும் நடனத்தை பதிவாக்கியவிதம் மிக அருமை. அந்த நடன இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.

சித்தார்த் விபினின் இசையில் பாடல்களின் வரிகள் தெளிவாகக் கேட்கின்றன. அருமையான தமிழ் வரிகளை இழைத்திருக்கிறார் பாடலாசிரியர். ‘ஆசையைச் சொல்ல நினைக்கிறேன்’ பாடலும், ‘தேடாதே தேடாதே’ பாடலும் காதலையும், மெலடியையும் இணைத்து ஒலிக்கிறது. ‘எத்தனை கனவு கண்டிருப்போம்’ ஒரு நிமிடம் தியேட்டருக்குள் இருப்பவர்களையும் சிந்திக்க வைத்திருக்கிறது. சித்தார்த் விபினுக்கு நமது பாராட்டுக்கள்.

இப்போதைய காலக்கட்டத்தில் ஒரு வீட்டில் கல்யாணம் என்பதே அந்தக் குடும்பத்தை கலகலக்கவும் செய்யும். கலைக்கவும் செய்யும். இன்றைய பொருளாதாரம் சார்ந்த சமுதாயத்தில் கல்யாணத்திற்கு ஆகும் செலவுதான் பெற்றோர்களையும், உடன் பிறந்தவர்களையும் கண் கலங்க வைத்துவிடுகிறது.  

பணக்காரர்கள் என்றால் கவலையில்லை. சேர்த்து வைத்திருப்பதை எடுத்துவிடுகிறோம் என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால் மத்திய தர வர்க்கத்தினர்தான் இந்தக் கல்யாண விஷயத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர்.

ஒரு கல்யாணத்தை நடத்துவதற்குள் அந்தக் குடும்பத்தினர் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. பணக்கார வீட்டுக் கல்யாணத்தைப் பார்த்துவிட்டு அதேபோல் தனக்கும் கல்யாணம் நடத்த வேண்டும் என்று கேட்கும் பிள்ளைகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்கள் சில பெற்றோர்கள்.

இன்னொரு பக்கம் பெரிய பணக்காரக் குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொண்டு அவர்கள் கேட்பதையெல்லாம் செய்து கொடுப்பதற்குள் தவித்துப் போய்விடுகிறார்கள் மத்திய தர வர்க்கத்தினர்.

கடன் வாங்கி பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைத்து அந்தக் கடனைக் கட்ட முடியாமல் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான பெற்றோர்கள் இந்தியாவில் உண்டு. அவர்களின் கண்ணீர்க் கதையை வைத்தே பல திரைப்படங்களை உருவாக்கலாம். அதுவொரு முட்டாள்தனமான செயல் இந்தப் படத்தில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சேரன்.

இது மட்டுமல்ல.. இப்போதெல்லாம் நிறையவே நடைபெற்று வரும் விவாகரத்துக்கள் ஏன்.. எதற்காக.. அதிகமாக நடக்கின்றன என்பது பற்றியும் ஒரு டிராக்கில் சொல்லியிருக்கிறார். வீட்டில் பெண்களின் அளவுக்கதிகமான ஆசையினால் பாதிக்கப்படும் ஆண்களின் கதையையும் சொல்லியிருக்கிறார்.

மகன் மற்றும் மகளின் பொருந்தாத ஆசைகள்.. இதனால் ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினைகள், குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்.. இவற்றுடன் திருமணம் நடந்த உடனேயே தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகள்.. விரிசல்கள்.. கணவன்-மனைவி பிரிவு… இதெல்லாம் ஏன் ஏற்படுகிறது என்று இப்போதைய தமிழ்ச் சமூகத்திற்குத் தேவையான பல விஷயங்களை இத்திரைப்படம் பேசியிருக்கிறது.

கூடவே இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தைப் பற்றியும் மிகச் சரியான கோணத்தில் இத்திரைப்படம் சொல்கிறது. படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தமே இல்லாமல் பலரும் இப்போது பணியாற்றி வருகிறார்கள். அதுபோல் மனதுக்குப் பிடிக்காத வேலையைச் செய்து மனதுக்குள் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதைவிட அதைவிட்டு விலகி மனதுக்குப் பிடிக்கும் வேலையை செய்வதே சாலச் சிறந்தது என்பதை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சேரன்.

இப்படி ஒரே திரைப்படத்தில் இன்றைய தமிழகத்திற்குத் தேவையான அனைத்துவித புத்திமதிகளையும் ஒருங்கே சேர்த்து அனைவரும் ரசிக்கும்வகையில் திரைக்கதை எழுதி, மனதில் நிற்கும் அளவுக்கு நடிகர்களை நடிக்க வைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் சேரன் இத்திரைப்படத்தின் மூலமாக மீண்டு வந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

இது மக்களுக்கு விழிப்புணர்வை கூட்டும் திரைப்படம் என்பதில் சந்தேகமேயில்லை. அதே சமயம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம் இது என்பதை நூறு சதவிகிதம் அழுத்தமாகச் சொல்லலாம்..!

அவசியம் பாருங்கள் மக்களே..!

Our Score