“சேரன் என் மாணவனா என்று பலரும் சந்தேகப்படுகிறார்கள்…”-இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு..!

“சேரன் என் மாணவனா என்று பலரும் சந்தேகப்படுகிறார்கள்…”-இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு..!

PRENISS INTERNATIONAL PRIVATE LIMITED நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் தயாரித்துள்ள திரைப்படம் ‘திருமணம் – சில திருத்தங்களுடன்’.

இயக்குநர் சேரன் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இது சேரனின் 11-வது படைப்பாகும்.

படத்தில் உமாபதி ராமையா நாயகனாகவும், காவ்யா சுரேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், அனுபமா குமார், வெங்கட், அங்கம்மா, வடிவாம்பாள், ஜெயப்பிரகாஷ், மனோபாலா, இவர்களுடன் இயக்குநர் சேரனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ், இசை – சித்தார்த் விபின், படத் தொகுப்பு – பொன்னுவேல் தாமோதரன், நடன இயக்கம் – அசோக்ராஜா, பாலகுமார், ரேவதி, சஜ்னா நஜம், பாடல்கள் – யுகபாரதி, லலிதானந்த், ஒப்பனை – யு.கே.சசி, உடை வடிவமைப்பு – கவிதா, விளம்பர வடிவமைப்பு – தண்டோரா டிசைன்ஸ், மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு மேற்பார்வை – பெஞ்சமின், இணை இயக்கம் – துர்கேஷ் டி.தேவராஜ், சி.இ.ஓ. – வெள்ளைதுரை, தயாரிப்பாளர் – பிரேம்நாத் சிதம்பரம், எழுத்து, இயக்கம் – சேரன்.

Audio Launch Stillls (50)

படத்தில் சேரன் தன் தங்கையின் திருமணத்தை நடத்தி வைக்க என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறார்..? அத்திருமணத்தால் உருவாகும் பொருளாதாரப் பிரச்சினைகள், குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்.. இவற்றுடன் திருமணம் நடந்த உடனேயே தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகள்.. விரிசல்கள்.. கணவன்-மனைவி பிரிவு இதெல்லாம் ஏன் ஏற்படுகிறது என்று இப்போதைய தமிழ்ச் சமூகத்திற்குத் தேவையான விஷயங்களை படம் பேசுகிறதாம்.

படத்தின் சேரனின் தங்கையாக நாயகி காவ்யா சுரேஷ் நடித்துள்ளார். மாப்பிள்ளையாக நாயகன் உமாபதி ராமையா நடித்துள்ளார். சேரனின் தாய் மாமனாக தம்பி ராமையா நடித்திருக்கிறார். மாப்பிள்ளையின் அக்காவாக நடிகை சுகன்யா நடித்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர்கள் மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், மாரி செல்வராஜ், லெனின் பாரதி, கார்த்திக் தங்கவேல், கோபி நயினார், நடிகைகள் மீனா, சுகன்யா, மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தியேட்டரின் முகப்பை திருமண மண்டபத்தின் நுழைவு வாயில்போல் வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்டி அலங்கரித்து இருந்தார்கள். தியேட்டர் முகப்பில் இருந்து தியேட்டரின் நுழைவு வாயில் வரையிலான நடைபாதையை தென்னங்கீற்றுகளால் அழகுபடுத்தி இருந்தார்கள். தியேட்டருக்குள் நுழைந்ததும் பாரம்பரியமான தவில்-நாதஸ்வர கச்சேரி பரவசப்படுத்தியது.

படக் குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் பட்டு வேட்டி-சட்டை, பட்டு சேலை அணிந்திருந்தார்கள். விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் திருமண வீட்டுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது.

vairamuthu

இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து பேசும்போது, “இயக்குநர் சேரன் நுட்பமான பார்வை உடையவர். கதையை எழுதுபவர் அல்ல.. செதுக்குபவர். ‘திருமணம் – சில திருத்தங்களுடன்’ என்ற படத்தை இப்போது அவர் இயக்கியிருக்கிறார்.

மனித குல வரலாற்றில் திருமணம் என்ற நிறுவனம் மிகவும் புதியது.  மனித குலம் தனது வசதிக்கு கட்டமைத்துக்கொண்ட பிற்கால நாகரிகம்தான் திருமணம். இந்த நாகரிகம் மாறாது என்று சொல்ல முடியாது. இது மாற்றங்களோடு தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கலாம்; அல்லது காலப்போக்கில் மறைந்தே போகலாம்.

பல ஆயிரம் ஆண்டுகளைக் கொண்ட நாகரிகங்கள் அழிந்ததைப்போல், சில ஆயிரம் ஆண்டுகள் கொண்ட இந்தத் திருமண பந்தங்களும் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

‘திருமணம் என்பது முற்றுகையிடப்பட்ட கோட்டை; வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்லத் துடிக்கிறார்கள்; உள்ளே இருப்பவர்கள் வெளியே வர தவிக்கிறார்கள்’ என்று ஒரு பழமொழி உண்டு.

இத்திரைப்படம் திருமணத்தைத் திருத்தப் பார்க்கிறதா..? அல்லது திருமணத்தையே நிறுத்தப் பார்க்கிறதா..? என்பதை படம் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்..” என்றார்.

director k.s.ravikumar

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “ஒரு ஆப்பிரிக்க தம்பதிக்கு வெள்ளையாக குழந்தை பிறந்தால் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். அந்த மாதிரிதான் பலரும் சேரன் உங்ககிட்டயா உதவி இயக்குநரா இருந்தாரு என்று ஆச்சரியப்படுகிறார்கள்.

ஏனெனில் நான் பக்கா கமர்சியல் இயக்குநர். ஆனால் சேரனோ கிளாஸ் இயக்குநர். ரெண்டு பேருக்கும் ஏணி வைச்சாலும் எட்டாது. ஆனாலும் அவர் எனது மாணவரா இருந்து என் பெயருக்கும், புகழுக்கும் பெருமை சேர்த்துக்கிட்டிருக்கார். அதுக்காக நான் ரொம்பப் பெருமைப்படுகிறேன்.

சேரனின் இந்தத் திருமணம் நிச்சயமாக வெற்றி பெறும். வெற்றி பெற்றாக வேண்டும். இதேபோல் அவருடைய வீட்டிலும் இந்தாண்டே இரண்டு திருமணங்கள் நடக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்..” என்றார்.

director bharathiraja

இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசுகையில், “வைரமுத்து சொன்னதுபோல சேரன் தன் படங்களில் அனைத்து விஷயங்களையும் நுட்பமாகக் காண்பித்தவன். எனக்குப் பிறகு கிராமியக் கதைகளில் அழுத்தமாகவும், நுணுக்கமாகவும் காட்சியமைப்பையும், கதாபாத்திரங்களையும் வடிவமைத்தவன் சேரன்தான். இத்திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்..” என்று வாழ்த்தினார்.

seran

இறுதியாக நன்றியுரை நிகழ்த்திய இயக்குநர் சேரன், “ஒரு குடும்பத்தில் ஒரு திருமணம் நடந்தேறும்போது அந்தக் குடும்பத்தில் ஏற்படும் பலவித சிக்கல்களுடன், முக்கியமாக பொருளாதாரச் சிக்கலை இத்திரைப்படம் பேசுகிறது.

இப்போதெல்லாம் பொருளாதாரம்தான் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் மூல காரணி. பொருளாதாரம்தான் உறவுகளைத் தீர்மானிக்கிறது. நமது வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. அப்படிப்பட்ட சிக்கல் கொண்ட ஒரு திருமணத்தை எப்படி நல்லபடியாக நடத்தி முடிக்கிறோம் என்பதுதான் இத்திரைப்படம்.

என்னுடைய ஒவ்வொரு திரைப்படமும் இந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வகையில் உதவும்வகையில்தான் இருந்திருக்கின்றன. அந்த வரிசையில் இத்திரைப்படமும்  உருவாகியிருக்கிறது..” என்றார்.

Our Score