full screen background image

திருக்குறள் – சினிமா விமர்சனம்

திருக்குறள் – சினிமா விமர்சனம்

இந்த கதையை எல்லாம் படமாக்குவதற்கு நிச்சயமாக ஒரு மிகப் பெரிய தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை பெற்றிருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணனுக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

தெய்வப் புலவன், பொய்யா புலவன் என்றெல்லாம் போற்றப்படும் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

வள்ளுவ நாட்டில் வாழ்ந்து வரும் புலவன் வள்ளுவன் குரு குல பாட சாலையை நடத்தி வருகிறார். அந்தப் பாட சாலையிலேயே தன்னுடைய திருக்குறளையும் எழுதி அதை மாணவர்களிடமும் பரப்புரை செய்து வருகிறார்.

வள்ளுவ நாட்டுக்கும் அருகிலுள்ள மற்றொரு நாட்டுக்கு இடையில் மோதல் ஏற்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் போர் மேகம் சூழ்கிறது. போரையும், உயிர்ப் பலிகளையும் விரும்பாத வள்ளுவர் தன்னுடைய நாட்டு மன்னனிடம் பேசி போரை தவிர்க்ரும்படி அறிவுரை சொல்கிறார்.

அதே நேரம் தான் எழுதி வரும் திருக்குறளை மதுரை தமிழ்ச் சங்கத்தில் தமிழ்ப் புலவர்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்யவும் நினைத்திருக்கிறார்.

அந்தப் போர் நடைபெற்றதா.. அல்லது நடைபெறாமல் போனதா… வள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றம் செய்தாரா.. இல்லையா… என்பதுதான் இந்தப் படத்தின் மிக எளிமையான திரைக்கதை.

ள்ளுவனாக நடித்திருக்கும் கலைச்சோழன் நாம் கற்பனை செய்து பார்த்திருக்கும் திருவள்ளுவர் தோற்றத்தில் இருந்தாலும் அவருடைய பேச்சு, நடத்தை, உடல் மொழி அனைத்துமே அந்தக் காலத்திய புலவர்களைப் போலவே அமைந்திருக்கிறது.

வசனம் பேசி இருக்கும் முறையும், வசனங்களை அவர் எடுத்தாண்டவிதமும், உச்சரிக்கும்விதமும் மிக அழகு என்று சொல்லலாம்.

தன் மனைவியான வாசுகியிடம் அவர் காதல் மொழி பேசும்போதெல்லாம் நமக்கே ஒரு நகைப்புணர்வு வருகிறது. அந்த காதல் மொழிகள் நமக்கு கொஞ்சம் திகைப்பையும் தெரிகிறது.

இவருடைய காதல் மனைவி வாசுகியாக நடித்திருக்கும் தனலட்சுமிக்கும் நமது வாழ்த்துக்கள். மிக அழகான முகம். தமிழுக்கு ஏற்ற முகம். தமிழச்சி என்று சொல்லக் கூடிய அளவுக்கு தமிழை மிக அழகாக உச்சரித்து பேசி நடித்திருக்கிறார்.

கணவர் தன்னைப் பிரிந்து அயல் நாட்டுக்குச் சென்றிருப்பதால் பசலை நோயினால் பாதிக்கப்பட்ட பெண் போல தன்னுடைய தோழியுடன் அவர் பேசுகின்ற அந்த பேச்சுக்கள் அனைத்துமே மிக மிக ரசனையானவை. அழகான காதல் காட்சிகளில் வெட்கத்தையும், நாணத்தையும் காட்டி நம்மையும் கொஞ்சம் சிலிர்க்க வைத்திருக்கிறார் தனலட்சுமி.

மேலும் பரிதியாக நடித்திருக்கும் குணா பாபு, பவளக் கொடியாக நடித்திருக்கும் பாடினி குமாரும், மாடத்தியாக நடித்திருக்கும் சுகன்யாவும் சிறப்பாக நடித்துள்ளனர்.

புலவர் பெருந் தலைச்சாத்தனராக நடித்திருக்கும் கொட்டாச்சி சில காட்சிகள் என்றாலும் நம் மனதை கவர்ந்திருக்கிறார். குமணனாக நடித்திருக்கும் அரவிந்த ஆண்டவன், பாணனாக நடித்திருக்கும் கார்த்தி, பரிதியின் தோழனாக நடித்திருக்கும் யாசர் என்று அத்தனை நடிகர்களுமே மிகச் சிறப்பாக தமிழில் பேசி நடித்துள்ளனர்.

வள்ளுவர் மதுரை தமிழ் சங்கத்தில் தன்னுடைய திருக்குறளை அரங்கேற்றம் செய்யப் போகும்பொழுது நாலடிக்கும் குறைவாக இருக்கின்ற விருத்தங்களை ஏற்கக் கூடாது என்று வாதிடும் நக்கீரனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா ஒரு பக்கம் நம் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அதேபோல் அதை மறுதலித்து ஈரடியில் எழுதப்பட்டிருக்கும் இந்த செய்யுள் உலகத்தையே ஆளப் போகிறது என்று சொல்லும் பாண்டிய மன்னன் சுந்தரின் அந்த குரலின் கம்பீரமே நமக்கு மிகவும் பிடித்துப் போகிறது.

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டு வாழ்க்கையை நம் கண்முன்னே கொண்டு வந்துள்ள இத்திரைப்படம் பட்ஜெட்டுக்கும் குறைவாக செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது காட்சிக்கு கட்சி நமக்கே தெரிகிறது.

படத்தில் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் மறைந்த சுரேஷ் கல்லூரி தன்னுடைய பணியை தன்னால் முடிந்த அளவுக்கு மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். அதேபோல் உடை அலங்காரத்தை செய்திருக்கும் சுரேஷ்குமார் தன்னுடைய பணியில் குறையில்லாமல் செய்திருக்கிறார்.

மற்றும் ஒரு பாராட்டு இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ள செம்பூர் கே ஜெயராஜ் சென்றடைகிறது. வள்ளுவனும், வாசுகியும் பேசுகின்ற காதல் மொழி பேச்சுக்களும், வாசுகியின் உடல் அழகை அவர் வர்ணிக்கும்விதமும் கொஞ்சம் டபுள் மீனிங்காக அவர் பேசுகின்ற பேச்சுக்களும் மிக அழகாக எழுதப்பட்டிருக்கிறது. அதேபோல் பரிதி தன் காதலி பவளக் கொடியிடம் பேசுகின்ற அந்த காதல் பேச்சுகளும் மிக சுவையானவை ருசிகரமானவை.

எட்வின் சகாயின் ஒலிப்பதிவு இத்திரைப்படம் பட்ஜெட் திரைப்படம் அல்ல.. மிகப் பெரிய பட்ஜெட் திரைப்படம் என்று சொல்ல வைத்திருக்கிறது. அந்த அளவுக்கு ஒளிப்பதிவினை தரமாக செய்திருக்கிறார்.

இசைஞானி இளையராஜாவின் பாடல்களும் இந்த படத்திற்கு ஒரு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது. முல்லை வாசம், கொத்துக் கொத்தாய் என்கின்ற அந்த இரண்டு பாடல்களையுமே திரும்பத் திரும்ப கேட்கலாம் போலிருக்கிறது. பின்னணி இசையில் நாடகத்தனத்தை சுத்தமாக கைவிட்டுவிட்டு இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு பின்னணி இசை அமைத்திருக்கிறார் இசைஞானி.

2000 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஒரு வாழ்க்கையை இப்பொழுது காட்ட வேண்டும் எனில் அதற்கு மிகப் பெரிய பொருட்செலவு ஏற்படும். ஆனால் கிடைத்த  பணத்தில் ஒரு தரமான படமாகவே இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஜெ. பாலகிருஷ்ணன்.

பெரும்பாலான வசனங்கள் சங்க காலத்தைப் போல இருந்தாலும் சில வசனங்களை கொஞ்சம் சமரசத்திற்காக இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் மாற்றி இருப்பதால் கொஞ்சம் குழப்ப நிலை ஏற்படுகிறது.

போர்க்களக் காட்சிகளை பட்ஜெட் பற்றாக்குறையினால் சிறு குழந்தைகள் தெருவில் சண்டையிட்டுக் கொள்வதுபோல அமைத்திருக்கிறார்கள். ஆனாலும் வேறு வழியில்லை. அவர்களால் முடிந்தளவுக்குத்தான் செய்திருக்கிறார்கள் என்று நம் மனதை நாமளே தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

“வள்ளுவனை உலகிற்கே தந்து பெரும் பெருமை கொண்ட தமிழ்நாடு” என்று பாரதியார் பாராட்டப்பட்ட வள்ளுவன் வாழ்க்கையை தன்னால் முடிந்த அளவுக்கு ஒரு சிறந்த படைப்பாக கொண்டு வந்து தந்திருக்கும் இந்தப் படத்திற்கு தமிழக அரசு முழு வரி விலக்கு அளித்து ஆதரவு அளிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

RATING : 3 / 5

Our Score