சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.கே. பாலமுருகன் மற்றும் ஆர். பாலகோபி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘திரி’.
அஷ்வின் கக்கமனு, ஸ்வாதி ரெட்டி, ஜெயப்பிரகாஷ், கருணாகரன் மற்றும் AL அழகப்பன் அனுபமா குமார், சென்ட்ராயன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
‘சதுரங்க வேட்டை’ புகழ் கே.ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவில், ராஜா சேதுபதி படத்தொகுப்பில், ‘தளபதி’ தினேஷ் சண்டை அமைப்பில், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வைரமான வரிகளுக்கு இசையமைத்துள்ளார் S.S. தமன். அறிமுக இயக்குநர் அசோக் அமிர்தராஜ் படத்தினை இயக்கியுள்ளார்.
படம் பற்றி பேசிய இயக்குநர் அசோக் அமிர்தராஜ், “‘திரி’ என்பதை தூண்டிவிட வேண்டும். அந்த தூண்டல் தீபத்திற்காகவும் இருக்கலாம், அதுவே தீப்பந்தமாகவும் மாறலாம். எனினும் தூண்டல் ஒன்றுதான்.
‘தாயை போல பிள்ளை’ என்ற பழமொழி என்னை பாதித்தன் விளைவுதான் இந்தக் கதை. ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் பெற்றோர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்ற அடிப்படையில் மனித உணர்வுகளை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளேன்.
‘திரி’ யதார்த்தம் நிறைந்த கமர்சியல் பொழுதுபோக்கு திரைப்படம். தன் பொறுமையைக் காப்பவன்தான் சிறந்த வீரன். தேவைப்படும் இடத்தில் நேரம் பார்த்து அந்த பொறுமையை துறப்பதும் அத்தியாவசியம் என்பதை கூற வருகிறது இந்தத் ‘திரி’ திரைப்படம்.
விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்துடன் அமைந்துள்ள இப்படத்தில், அஷ்வின் தனது முந்தைய படங்களில் இல்லாத அளவுக்கு நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். இப்படம் அவருக்கும் புதிய உயரத்தை கொடுக்கும் என்பதில் ஐயம் இல்லை. ‘திரி’ குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஒரு பொழுது போக்கு திரைப்படம்.” என்றார்.









