full screen background image

திரைக்கு வராத கதை – சினிமா விமர்சனம்

திரைக்கு வராத கதை – சினிமா விமர்சனம்

தமிழில் இதுவரையிலும் சொல்லப்படாத கதைதான்.. ‘லயனம்’ படம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? 1989-ல் சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சிக்காகவே பட்டி தொட்டியெங்கும் வருடக்கணக்காக ஓடி பல்வேறு விநியோகஸ்தர்களுக்கு பெட்டி, பெட்டியாக பணத்தை வாரிக் கொடுத்த படம்.

நம்ம சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.செளத்ரி தயாரித்த முதல் படம். இதோடு இது மாதிரியான படங்களுக்கு அவர் மங்களம் பாடிவிட்டார். இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் துளசிதாஸின் 35-வது படம் இது. ஏற்கெனவே தமிழில் ‘வீட்டைப் பார் நாட்டை பார்’ என்ற பெயரில் சிவக்குமார் நடித்த படத்தையும் இயக்கியிருக்கிறார்.

மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், திலீப், சுரேஷ் கோபி என்று பலரையும் வைத்து ஹிட் படங்களை இயக்கியவர் துளசிதாஸ். 25 வருடங்கள் கழித்து தமிழில் படம் இயக்கியிருக்கிறார். நல்ல படமாக இருக்குமே என்று நினைத்தால்..?

ஒரு கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவிகளுக்கு பிராஜெக்ட் வொர்க் தரப்படுகிறது. அந்த பிராஜெக்ட் வீடியோ வடிவில் ஒரு படமாக தரப்பட வேண்டும் என்பதால் இனியா, ஆர்த்தி, அர்ச்சனா சுசீலன், காயா, ரேஷ்மா அடங்கிய அணி புதிய கதையை யோசிக்கிறது.

இதுவரையிலும் நம்ம காலேஜ் வரலாற்றிலேயே யாருமே கொடுக்காத பிராஜெக்ட் இதுவாகத்தான் இருக்கும் என்று சொல்லும் இனியா, லெஸ்பியன் கதை ஒன்றை தயார் செய்கிறார். இதற்காக இவர்கள் மலைப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு வீட்டிற்குச் செல்கிறார்கள்.

செல்லும் வழியில் கார் ரிப்பேராகி தனியே நிற்கும் ஈடனை பார்த்து பரிதாபப்பட்டு அவருக்கும் அடைக்கலம் கொடுக்கும் பொருட்டு அவரையும் தங்களது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அவர்களுக்கு சமையல் வேலைக்கு கோவை சரளா வருகிறார்.

ஷூட்டிங்கின்போது இனியாவுடன் நண்பியாக நடிக்கும் ரேஷ்மா ஒரு கட்டத்துக்கு மேல் தனக்கு நடிப்பு வரவில்லை என்று சொல்லி விலகிக் கொள்ள.. அதே வீட்டில் இருக்கும் ஈடனை நடிக்க அழைக்கிறார்கள் அனைவரும். ஈடனும் முதலில் மறுத்து பின் சந்தேகத்துடன் நடிக்கத் துவங்கி, கடைசியில் முழு ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுக்கிறார்.

ஈடன் விடைபெற்றுச் செல்ல.. இவர்களும் கல்லூரிக்கு திரும்புகிறார்கள். இப்போது திடீரென்று ஒரு தினசரியில் ஈடனின் புகைப்படத்தை போட்டு அவருக்கு அஞ்சலி என்று செய்திக் குறிப்பு வந்திருக்கிறது.

இதைப் பார்த்து பயந்து போன மாணவிகள் டீம் தங்கள் வசமிருக்கும் வீடியோவை போட்டுப் பார்க்க அதில் ஈடன் இருக்க வேண்டிய இடத்திலெல்லாம் வெற்றிடமே காணப்படுகிறது. என்ன இது என்று சொல்லி அதிர்ச்சியாகிறார்கள்.

இதே நேரம் இனியாவுக்குள் ஒரு பெரும் மாற்றம் ஏற்படுகிறது. ஈடனின் ஆவி இனியாவுக்குள் புகுந்து ஆட்டிப் படைக்கிறது. அதுவரையிலும் அமைதியாக இருந்த இனியாவின் செயல்பாடுகள் அத்துமீறி போகத் துவங்க.. அவருடைய அம்மா சபீதா ஆனந்த் தோழிகளிடம் புலம்பித் தள்ளுகிறார்.

ஈடனின் வீட்டிற்குச் சென்று விசாரிக்கிறார்கள். ஈடன் இறந்தது உண்மை என்பது தெரிய வர.. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று நினைத்து போலீஸுக்கு வருகிறார்கள். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான நதியாவிடம் இந்தக் கேஸ் வருகிறது. அவர் ஒரு ஆர்வத்துடன் இந்த வழக்கில் குதிக்கிறார்.

மூடப்பட்ட கேஸ் டைரி திறக்கப்படுகிறது. நதியா ஒரு பக்கம் விசாரணையில் இறங்க.. இன்னொரு பக்கம் இனியாவின் நடவடிக்கைகள் ஈடனின் பேயினால் தாறுமாறாக நடக்கிறது. முடிவென்ன..? ஈடனை கொலை செய்தது யார்..? இனியா என்ன ஆனார் என்பதெல்லாம் படம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய கதைதான்..!

இரண்டு பெண்களுக்கு இடையேயான நட்பில் ஒரு பெண் அதீத பொஸஸ்ஸிவ்னெஸ் காரணமாக தன்னைவிட்டு விலகக் கூடாது என்கிறார். இதனை ஏற்காத இன்னொரு பெண் விலகிச் செல்ல முயல.. தனக்குக் கிடைக்காத அந்தப் பெண் இன்னொருவனுக்குக் கிடைக்கக் கூடாது என்று நினைத்து கல்யாணத்திற்கு சில நாட்கள் இருக்கும்போது கொலை செய்கிறாள் காதலித்தவள். செத்துப் போனவள் ஆத்மா சாந்தியாகாமல் தன்னைக் கொலை செய்தவளின் தங்கையின் உடலுக்குள்ளேயே புகுந்து, அக்காவை பழி வாங்குகிறாள்.

இதில் பெண் ஓரினச் சேர்க்கை விஷயத்தை நாசூக்காக, ஆபாசமில்லாமல் வசனத்தாலேயே சொல்லி தாண்டிச் சென்றிருப்பது ஒன்றுதான் இந்தப் படத்திலேயே பாராட்ட வேண்டிய விஷயம்.

படத்தை மொத்தமாக பார்த்தால் திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லை. சுவையான வசனங்களோ, காட்சிகளோ இல்லாமல் வெற்று தரையில் சோற்றை கொட்டி சாப்பிட்டதற்கு சமமாக இருக்கிறது இந்தப் படம்.

ஈடனுக்கும், இனியாவுக்கும் மேக்கப் போட்ட செலவே தனி பில்லாக வந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால் இருவருமே நன்றாகவே நடித்திருக்கிறார்கள். இதேபோல் ஆர்த்தியும், கோவை சரளாவும்தான் கொஞ்சம், கொஞ்சம் செல்போனில் இருந்து தலையை எடுத்து ஸ்கிரீனை பார்க்க வைத்திருக்கிறார்கள். நதியாவுக்கும் இந்தப் படம் எந்த பெயரையும் சம்பாதிக்கக் கொடுக்கப் போவதில்லை.

திரைக்கதையில் ஈர்ப்பில்லை. நடிகைகளும் அதிகமாக நடிக்க வைக்கப்படவும் இல்லை. இயக்கமும் சரியில்லை. படத்துக்கு முக்கியமான தேவையான கதையோ நமக்கு முற்றிலும் அன்னியமான கதை என்பதால் மனதில் ஒட்டவே இல்லை..!

இந்தப் படத்தில் முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள் என்பதையே ஒரு பெரிய சாதனையாக சொன்னார் இயக்குநர் துளசிதாஸ். அப்படி பெண்கள் மட்டுமே நடித்து இந்தப் படம் என்ன சாதனை செய்துவிட்டது என்பதுதான் தெரியவில்லை. இந்தக் கதைக்கு இது போன்ற செட்டப்புகள் தேவையே இல்லை.

ஒளிப்பதிவு, பாடல்கள், இசை, படத் தொகுப்பு போன்றவைகளை பற்றி பேசவே தேவையில்லை என்பது போலவே இருக்கின்றன. மலையாளத்தில் நல்ல ஹிட்டுகளை முன்பு கொடுத்திருக்கும் இயக்குநர் துளசிதாஸுக்கு இப்போது என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. இப்படியொரு விமர்சனமே எழுத முடியாத அளவுக்கு ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்.

மலையாளத்தில் இந்தப் படம் ஓடினால்கூட நிச்சயமாக அது ஆச்சரியம்தான்..!

Our Score