full screen background image

‘திரைக்கு வராத கதை’ படம் லெஸ்பியன் சம்பந்தப்பட்ட கதையா..?

‘திரைக்கு வராத கதை’ படம் லெஸ்பியன் சம்பந்தப்பட்ட கதையா..?

M.J.D. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் K.மணிகண்டன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘திரைக்கு வராத கதை.’

இந்தப் படத்தின் சிறப்பு என்னவெனில், இந்தப் படத்தின் ஒரு காட்சியில்கூட ஆண்களே இல்லை என்பதுதான். முழுக்க, முழுக்க பெண்களே நடித்துள்ளனராம்.

மம்முட்டி, மோகன்லால் மற்றும் கேரளாவின் முன்னனி நட்சத்திரங்களை வைத்து பல வெற்றி படங்களை இயக்கிய மலையாள இயக்குநரான துளசிதாஸ், தமிழில் இயக்கும் இரண்டாவது படம் இது.

இந்தப் படத்தில் நதியா, இனியா, ஈடன், கோவை சரளா, ஆர்த்தி, சபீதா ஆனந்த் மற்றும் பல முக்கிய நடிகைகள் நடித்துள்ளனர்.  

இசை – M.G.குமார், பின்னணி இசை – அரோல் கொரோலி, ஒளிப்பதிவு – சஞ்சீவ் சங்கர். வசனம் – துரைப்பாண்டியன். பாடல்கள் – தமிழமுதன், பரிதி, சக்தி கிருஷ்ணா. சண்டை பயிற்சி – ‘மாஃபியா’ சசி, எழுத்து, இயக்கம் – துளசிதாஸ்.

வரும் தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கும் ‘திரைக்கு வராத கதை’ படத்திற்கு U/A சான்றிதழை வழங்கியிருக்கிறது தணிக்கை வாரியம்.

முழுக்க, முழுக்க பெண்களே இருக்கின்ற படத்தில் எதற்கு இந்தச் சான்றிதழ் என்று விசாரித்தபோது, வேறொரு பூதமும் வெளியில் வந்தது.

படத்தில் பெண்கள் சம்பந்தப்பட்ட லெஸ்பியன் ஆபாசக் காட்சிகள் நிறைய இருந்ததாகவும், அதனால் படத்தின் பெரும்பகுதியை தணிக்கை வாரியம் வெட்டச் சொன்னதாகவும் செய்திகள் பரபரப்பாக எழுந்தன.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, படத்தின் இயக்குநர் துளசிதாஸ், தயாரிப்பாளர் மணிகண்டன், எடிட்டர் ஸ்ரீனிவாசன் மற்றும் இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிடும் விநியோகஸ்தர் ஸ்டாலின் ஆகியோர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.

img_1146

இந்தக் கூட்டத்தில் இயக்குநர் துளசிதாஸ் பேசும்போது, “நான் பிறப்பால் மலையாளி என்றாலும், இந்தக் கோடம்பாக்கம் மண்தான் என்னை முதன் முதலில் ஒரு இயக்குநராக அங்கீகரித்தது. முதன்முதலில் சிவாஜி ஸாரை பார்க்க கஷ்டப்பட்டு ஏவி.எம். ஸ்டுடியோவிற்குள் நுழைந்த நாளை, நான் என்றைக்குமே மறக்க மாட்டேன். அன்று சிவாஜியின் பாதம்பட்ட மண்ணை ஒரு கைப்பிடியளவு எடுத்துச் சென்று, இன்றும் என் வீட்டு பூஜையறையில் வைத்து வழிபட்டு வருகிறேன்.

என்னுடைய இத்தனையாண்டு கால திரையுலக அனுபவங்களை வைத்து ஒரு புத்தகமும் இப்போது எழுதி வருகிறேன். அதனை மலையாளம் மற்றும் தமிழில் வெளியிட இருக்கிறேன். அந்தப் புத்தகத்தின் பெயர்கூட ‘கோடம்பாக்கத்து மண்ணு’ என்றுதான் வைத்துள்ளேன்.

1989-ல் ஆரம்பித்த எனது திரைப்பயணத்தில் இன்றுவரை 34 படங்களை இயக்கியிருக்கிறேன். எப்போதும் திரை ரசிகர்கள் குடும்பத்தோடு பார்த்து மகிழவேண்டும் என்பதை மனதில் வைத்து மிகுந்த பொறுப்புணர்வோடுதான் படங்களை இயக்குவேன்.

சிவகுமார் சார் நடித்த ‘வீட்டைப் பார் நாட்டைப் பார்’ படம்தான் நான் இயக்கிய முதல் தமிழ்ப் படம். அதன் பிறகு இப்போதுதான் தமிழில் படம் இயக்க வந்துள்ளேன். இப்படிப்பட்ட நான், இத்தனையாண்டுகள் கழித்து தமிழுக்கு வந்தவன், ஒரு தப்பான படத்தை கொடுப்பேனா..?

இந்தப் படத்தின் சிறப்பு அம்சமே படம் முழுக்க பெண்கள்தான் இருக்கிறார்கள். ஒரு காட்சியில்கூட ஆண்கள் இல்லை. கேரக்டராக மட்டுமில்லை.. ஏதாவது ஒரு காட்சியில் கும்பலில் ஒருவர். அல்லது தூரத்தில் ஒருவர் என்றுகூட ஒரு ஆணை நான் காட்டவில்லை.

_mg_7818

பிலிம்  இன்ஸ்டிடியூட்  மாணவிகள் சிலர் ஒன்று சேர்ந்து சொந்தமாக ஒரு சினிமா தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அந்த முயற்சியில் கதையின் போக்கில் ஏற்படும் சம்பவங்கள் உண்மை சம்பவங்களாக மாறுகின்றன. இதன் பின்னணியில், த்ரில்லர், சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி கலந்த படமாக உருவாகியிருகிறது ‘திரைக்கு வராத கதை.’ 

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, லெஸ்பியன் என்கிற விஷயம் மையக் கருவாகக் இருக்கிறது. ஒத்துக் கொள்கிறேன். இருந்தாலும் இந்தப் படத்தில் துளி கூட ஆபாசமில்லை. ஆபாசமாமாக இருந்திருந்தால் நதியா இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருப்பாரா..? படத்தில் ஒரு வசனம்கூட ஆபாசமாக இல்லை.

லெஸ்பியன் எனப்படும் ஓரினச் சேர்க்கை கலாச்சாரத்திற்குள் நமது பெண்கள் சிக்கி சீரழிந்து விடக்கூடாது என்கிற விழிப்புணர்ச்சியை ஊட்டும் படம்தான் இது. பெண்கள் அனைவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். 

சென்சார் போர்டு இந்தப் படத்தில் நீக்கச் சொன்னது ஆபாச காட்சிகளை அல்ல. ஒரு காட்சியில் ஊசியில் எழுதப்பட்டிருக்கும் மருந்தின் பெயரையும், ஊசி போடும் காட்சியையும்தான் நீக்கச் சொன்னார்கள். வேறு எதுவுமில்லை. அதையும் நாங்கள் பொது நலன் கருதி ஏற்றுக் கொண்டோம். நீக்கிவிட்டோம்.

இந்த படத்தில் இருக்கும் திரில்லர் காட்சிகளுக்காகத்தான் சென்சாரில் U/A சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். மற்றபடி படத்தில் துளிகூட ஆபாசம் இல்லை. குழந்தைகளுடன், குடும்பம், குடும்பமாக வந்து பார்க்கக் கூடிய படம் இது.

இப்போது தமிழகத்தில் மட்டும் 150 தியேட்டர்களுக்கு மேல் எங்க படத்துக்கு கிடைச்சிருக்கு. தப்பான படமாக இருந்தால் இத்தனை தியேட்டர்களை கொடுத்திருப்பார்களா..?” என்று கேள்வியெழுப்பினார்.

படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. பார்த்துவிட்டு பேசுவோம்.!

Our Score