திமிரு புடிச்சவன் – சினிமா விமர்சனம்

திமிரு புடிச்சவன் – சினிமா விமர்சனம்

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள திரைப்படம் ‘திமிரு புடிச்சவன்’.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாகவும், நிவேதா பெத்துராஜ் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், ஆதிரா, சிந்துஜா, வினோத், தீனா, கதிர், வினோத், செந்தில் குமரன், நிக்ஸன், சாய் ராகுல், கிச்சா, ஜாக் ராபின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் கணேஷா இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கிறார். விசுவல் எஃபெக்ட்ஸ் – ரமேஷ் ஆச்சார்யா, நடன இயக்கம் – தஸ்தா, பாடல்கள் – அருண் பாரதி.

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது.

இதுவரையிலும் வந்த காக்கி உடை படங்களின் அடிநாதமே ரவுடிகளை அடித்து ஒடுக்குவதுதான். ஆனால், இந்தப் படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக ரவுடிகள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்.. யாரால் உருவாக்கப்படுகிறார்கள். எப்படி அவர்களுக்கு டிரெயினிங் கொடுக்கப்படுகிறது என்பது பற்றியெல்லாம் சொல்லி, அந்த சிறுவர்களுக்கு மன ரீதியாக பக்குவப்படுத்தி நல்லவனாக திருத்த முயற்சிக்கும் ஒரு காக்கி அதிகாரியைப் பற்றிய கதையாக இப்படம் வெளிவந்திருக்கிறது.

இந்தப் படத்தின் இந்தக் கதைக் கரு தன்னுடையது என்று பிரபல கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் ‘ஒன் இந்தியா.காம்’-ல் எழுதிய ‘ஒன்+ஒன்=ஜீரோ’ என்கிற கதையில் வரும் ஒரு அத்தியாயம்தான் இந்தப் படத்தின் கதைக் கரு என்கிறார். ஆனால், இயக்குநரோ ராஜேஷ்குமாரின் கதையை நான் படிக்கவே இல்லை என்கிறார்.

எது எப்படியோ.. நமக்கு ஒரு நல்ல கான்செப்ட்டில் ஒரு நல்ல கதை கிடைத்தது.. ஆனால் படம் எப்படி..?

விருதுநகரில் போலீஸ் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருகிறார் விஜய் ஆண்டனி. பிளஸ்டூ வரைக்குமே படித்ததினால் கான்ஸ்டபிளாக மட்டுமே அவரால் முடிந்தது. அவருடைய ஒரே தம்பியை ஆசையாக படிக்க வைக்கிறார். அந்தத் தம்பியை படி, படி என்று உயிரையெடுக்கிறார். இப்போதே போலீஸ் வேலைக்கு டிரெயினிங் கொடுத்து டார்ச்சர் செய்கிறார்.

ஆனால் இதனை அவரது தம்பியால் ஏற்க முடியவில்லை. அவனது சின்ன வயது புத்தி எங்கேயாவது ஓடிப் போகலாம் என்று முடிவு செய்கிறது. அவனது புத்தியில் ரவுடிகள்தான் கெத்து.. போலீஸெல்லாம் வேஸ்ட்டு என்றே பதிவாகிறது. இதனால் சென்னைக்கு ஓடிப் போகிறான் விஜய் ஆண்டனியின் தம்பி.

சென்னையில் வசிக்கும் பிரபல ரவுடிக் கும்பலின் தலைவனான பத்மா என்னும் சாய் தீனா 18 வயதுக்குள் இருக்கும் சின்னப் பையன்களை மூளை சலவை செய்து அவர்கள் என்ன குற்றம் செய்தாலும் அவர்களுக்குத் தண்டனை கிடைக்காது என்று புகழ்ந்து சொல்லி அவர்களை குற்றம் செய்ய வைத்து அவர்கள் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னிடம் அடியாள்களாக இருக்கும் சிறுவர்களை வைத்து கொலை, கொள்ளைகளை திறம்பட நடத்துகிறார்.

விஜய் ஆண்டனியின் தம்பி சென்னை வந்தவுடன் தீனாவுடன் ஐக்கியமாகி ஒரு கூலிக் கொலையாளியாக உருவெடுத்துவிடுகிறான். சிறிது காலம் கழித்து விஜய் ஆண்டனியும் சென்னைக்கு மாற்றலாகி வருகிறார்.

சென்னையில் தன் தம்பி செய்யும் ஒரு கொலையை நேரில் பார்க்கும் விஜய் ஆண்டனி தானே அதற்கு சாட்சி என்று மீடியாக்களுக்கு பேட்டியும் தருகிறார். ஆனால் கொலை செய்தவன் தனது தம்பிதான் என்று விஜய் ஆண்டனிக்குத் தெரியாது.

இப்படியாவது தன்னைக் கொல்ல ஆள் வரும். அப்போது அவர்களைப் பிடித்துவிடலாம் என்று திட்டம் போடுகிறார் விஜய் ஆண்டனி. ஆனால் வருவது அவரது தம்பியாக இருப்பதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஆனாலும் போலீஸ் கடமையை மனதில் வைத்து தன் சொந்தத் தம்பியையே சுட்டுக் கொல்கிறார்.

இதனால் பதவி உயர்வு வழங்கப்பட்டு உடனேயே சென்னை ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பதவியேற்கிறார். அதே ஸ்டேஷனில்தான் நிவேதா பெத்துராஜ் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றுகிறார். கை நீட்டும் பழக்கமுள்ள அந்த ஸ்டேஷன் காவலர்களுடன் முதலில் ஒன்றிணைந்து வேலை செய்ய முடியாமல் தவிக்கிறார் இன்ஸ்பெக்டரான விஜய் ஆண்டனி.

இடையில் விஜய் ஆண்டனிக்கு ஒரு விபரீதமான நோய் தாக்குகிறது. அவரால் சரியாகத் தூங்க முடிவதில்லை. ரத்த அழுத்தம் அடிக்கடி ஏறி, இறங்கி அவரை இம்சைப்படுத்துகிறது. இந்தப் பிரச்சினைகளுக்கிடையேதான் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலையையும் அவர் செய்து வருகிறார்.

தனது தம்பியை தான் கொலை செய்தாலும், அவனது தவறான வழி காட்டுதலுக்கு காரணமாக இருந்த பத்மாவை வேரோடு அழிக்க நினைக்கிறார் இன்ஸ்பெக்டர். அதனால் பத்மாவுக்கு இவர் செக் வைக்க.. பத்மா பதிலுக்கு விஜய் ஆண்டனியை பழி வாங்கத் துவங்க.. இறுதியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் இந்த ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் திரைக்கதை.

ரவுடிகளிடம் சிக்கியிருக்கும் சிறுவர்களின் தலையெழுத்தை மாற்ற நினைக்கும் நல்ல இன்ஸ்பெக்டராக விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். படத்தில் ஒரு வசனத்தில் “எல்லாத்துக்கும் ஒரே மாதிரி முகத்தைக் காட்டுறியே..?” என்று அவரையே கிண்டல் செய்கிறார்கள். இதை தெரிந்துதான் வைத்திருக்கிறார் போலும்.

சிற்சில இடங்களைத் தவிர பெரும்பாலான காட்சிகளில் விஜய் ஆண்டனி வித்தியாசமே இல்லாமல்தான் நடித்திருக்கிறார். ஆனால் அழுத்தமான இயக்கத்தினால் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் படும் கஷ்டத்தை உணர வைப்பதுபோல் நடித்திருக்கிறார் என்பதில் மிகையில்லை.

 “ஆமா.. போலீஸ் பெரிய புடுங்கிதான்..” என்று ஆரம்பித்து காவல்துறை மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்கிறது என்பதை விஜய் ஆண்டனி பட்டியலிடும்போது நன்றாகத்தான் இருக்கிறது அவரது நடிப்பு. ஆனால் போலீஸ் செய்யும் அராஜகங்களைத் தாண்டியே தியேட்டருக்குள்ளே வந்திருக்கும் பொது ஜனங்களுக்கு இது சிரிப்பாய் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்தப் படத்தின் ஸ்பெஷலே சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ்தான். இந்தப் பெண் இத்தனை நடிப்பை எங்கே ஒளித்து வைத்திருந்தார் என்று தெரியவில்லை. பிரமாதமான நடிப்பு. காக்கி உடையை டைட்டாக போட்டுக் கொண்டு இளசுகளின் மனதைக் கவ்வியிருக்கிறார் நிவேதா.

விஜய் ஆண்டனியை சோளம் விற்கும் ஆளாகவே நினைத்து மாமூல் கேட்டு கலாய்ப்பதில் துவங்கி, இன்ஸ்பெக்டர் என்று தெரிந்தவுடன்(என்னவொரு லாஜிக் மிஸ்டேக்..?) அசடு வழிந்து தங்களது ஸ்டேஷனில் இப்போதைய ஒரே கொள்கை மாமூலை கரெக்ட்டா வசூல் பண்றதுதான் என்பதை சொல்லும்போதும் வழிய வைக்கிறார்.

விஜய் ஆண்டனியை தான் காதலிப்பதாக விதம்விதமாகச் சொல்வதும், அதற்கு விஜய் ஆண்டனி கவுண்ட்டர் அட்டாக் கொடுத்து கதையை திருப்பிவிடுவதும் சுவாரஸ்யமாக இருக்கிறது இவர்களது காதல் திரைக்கதை.

மருத்துவமனையில் தானும் காதலிப்பதாக விஜய் ஆண்டனி சொன்னவுடன் நிவேதா காட்டும் ஆக்சன்களும், கண்ணாடியை போட்டுக் கொண்டு மொட்டை மாடிக்குப் போய் குதியாட்டம் போடுவதும் கண்டிப்பாக செம ரொமான்ஸ்கள்தான்..! வெல்டன் நிவேதா..!

வில்லனாக சாய் தீனா.. நிறைய படங்களில் வில்லன்களில் ஒருவராக நடித்தவர்.. இந்தப் படத்தில் மெயின் வில்லனாகவே காட்சியளிக்கிறார். சொந்த அப்பனையே கொலை செய்யும் அளவுக்குத் துணியும் அவருக்கான ஸ்கோப்புகள் படத்தில் நிறைய இருப்பதால் ரசிக்க முடிகிறது. ஆனால் யதார்த்தமே இல்லாத திரைக்கதை என்பதால் இவருடைய கேரக்டரே வேஸ்ட்டாகிவிட்டது..!

தனது மகன் பெற்ற அவமானத்தைத் தாங்க முடியாமல் தவிக்கும் அப்பா கேரக்டரில் செந்தில்குமரன் அனைவரும் கவர்ந்திழுக்கிறார். “நீங்க கண்ணுக்கு எதிரா நின்னீங்கன்னா தைரியமா இருக்கும் ஸார்…” என்று சொல்லி விஜய் ஆண்டனியை அழைத்துவந்துவிட்டு கவுன்சிலருடன் இவர் போடும் சண்டை “போடுறா மவனே..” என்று சொல்ல வைக்கிறது. செந்தில் குமரனின் இந்தக் கோபம்தான் சாதாரண பொது ஜனங்களின் தீர்ப்பாக இருக்கிறது..!

தனது மகனை வன்முறைக்கு பலி கொடுத்துவிட்டு தவிக்கும் ஆதிராவும் இன்னொரு பக்கம் தாய்மையுணர்வோடு நடிப்பில் கண் கலங்க வைத்திருக்கிறார். போலீஸ் ஏட்டுவாக சம்பத்ராம்.. விஜய் ஆண்டனியை ஸ்டேஷனை விட்டு தூக்கியே ஆக வேண்டும் என்று நிற்பவர், விஜய் ஆண்டனியின் நல்ல மனதையறிந்து திசை மாறுகிறார்.

திருநங்கை சிந்துஜா இன்னொரு பக்கம் தனது மானம் போனாலும் பரவாயில்லை. விஜய் ஆண்டனி தீனாவுக்கு பணிந்துவிடக் கூடாது என்று கதறுகிறார். இப்படியொரு கோணத்தில் திருநங்கைகளை இதுவரைக்கும் காட்டியதே இல்லை. இப்போது காட்டிவிட்டார்கள்..!

ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு அருமை. சண்டை காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் பாஸ் மார்க் எடுக்க பெரிதும் உதவியிருப்பது இவரேதான். சில காட்சிகளில் கோணங்களின் சிறப்பினால்தான் அந்தக் காட்சிகளையும் ரசிக்க முடிந்திருக்கிறது. நிவேதா பெத்துராஜின் சில குளோஸப் காட்சிகளே அவரது நடிப்புக்கு எடுத்துக்காட்டாய் அமைந்திருக்கிறது. இதற்கு பெரிதும் உதவியிருக்கும் ஒளிப்பதிவாளருக்கு அவர்தான் நன்றி சொல்ல வேண்டும்.

கோழி பிரச்சினை காரணமாய் நடக்கும் சண்டை காட்சியின்போது அதைப் படமாக்கியிருக்கும்விதம்தான் விஜய் ஆண்டனியின் போலீஸ் மீதான பெருமையை ரசிகர்களின் மனதில் பதிய வைத்திருக்கிறது. நன்று..!

விஜய் ஆண்டனியின் இசையில் ‘நக நக’ பாடல் பக்திப் பரவசம் கலந்து ஒலிக்கிறது. ரசிகர்களை பக்தர்களாக்கி அதன் மூலம் கவர்ந்திழுக்க முடிவு செய்தார்கள் போலிருக்கிறது. நல்லவேளையாக டூயட்டுகளை வைக்காமல் நம்மைக் காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர்.

சண்டை பயிற்சியாளருக்கு நமது சல்யூட். தொழில் நுட்பத்தின் உதவியே இருந்தாலும்கூட சிறிதளவுகூட பிசகு தெரியாமல் காட்சிகளை அமைத்துள்ளார். அதேபோல் படத்தின் படத் தொகுப்பாளரும் இந்த சில சண்டை காட்சிகளுக்காகவே பாராட்டப்பட வேண்டியவர்.

100 சதவிகிதம் இப்போதைய சூழலில் ஒத்தே வராத ஒரு திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர். இப்போதெல்லாம் இருக்கின்ற பணிச் சுமையில் ரவுடிகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ளிவிட்டு போய்க் கொண்டேயிருக்கத்தான் நினைக்கிறது காவல்துறை.

ஆனால் அவர்களே சிறுவர்களை வைத்து ரவுடித்தனம் செய்தால் அவர்களை சிறார் முகாமுக்கு அனுப்பி வைத்து அறிவுரை சொல்ல வைக்கிறார்கள். அதையும் மீறி அடிதடியில் இறங்குபவர்கள் மெல்ல, மெல்ல முழு நேர ரவுடிகளாகி ஒரு நாள் போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாவார்கள்.. அல்லது சக ரவுடிகளின் அரிவாளால் வெட்டுப்பட்டே சாவார்கள். இதுதான் உலக நியதி.

பட்டென்று போட்டுத் தள்ளிவிட்டு போவதைவிட்டுவிட்டு இப்படி “பத்மா, பத்மா…” என்று வில்லன் தீனாவுடன் போய் மல்லுக் கட்டுறாரே என்று முன் வரிசை ரசிகர்களே கலாய்க்கும் அளவுக்கு கதைக் கரு இருப்பதால் படத்தோடு ஒன்ற முடியவில்லை.

நல்ல நல்ல கதைத் திருப்பங்களை வைத்து இப்படியிருந்தால் நன்றாக இருக்குமே என்று நாம் கனவில் நினைக்கும் அளவுக்கு நல்லதொரு போலீஸ்-பொதுமக்கள் உறவினை கண்ணில் காட்டியிருக்கிறார் இயக்குநர். ஆனால் யதார்த்த நிலைமை அப்படியில்லையே இயக்குநரே..!?

தீனாவுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறதா இல்லையா என்பதே சொல்லப்படவில்லை. இல்லையென்றால் இத்தனை நாட்களாக விட்டுவைத்திருப்பார்களா போலீஸார்..? ஒருவர் லஞ்சப் பிசாசு என்றால் அடுத்த போலீஸ் அதிகாரி நேர்மையானவராக வந்திருப்பாரே..!? அவர்கூடவா தீனாவை விட்டு வைத்திருப்பார்..?

ராயப்பேட்டை போலீஸ் சரகத்தின் துணை ஆணையர் என்று சொல்லப்படு்ம் முத்துராமன் ஒரு காட்சியில் தீனாவுடனேயே பணிவுடன் போனில் பேசுகிறார். சில காட்சிகள் தாண்டி தீனாவை என்கவுண்டரில் போடச் சொல்லி உத்தரவு போடுகிறார். அப்படியே போட்டுவிட்டாலே பிரச்சினை முடிந்துவிடுமே..? எதற்கு கிளைமாக்ஸ் வரைக்கும் இழுக்க வேண்டும்..?

இடையில் முருகனுக்கு வேண்டுதல்.. மாலை போடுதல்.. என்று திரைக்கதையில் திருப்பம் வேறு. இதெல்லாம் தேவையே இல்லாதது.. ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபிள், வடபழனி பூத்தில் வேலை செய்கிறார். இது என்ன வகையான லாஜிக் என்று தெரியவில்லை.

கையில் இருக்கும் ஒரு மிகப் பெரிய ஆதாரத்தைவிட்டுவிட்டு தீனாவை காமெடியன் அளவுக்குக் கொண்டு போகப் போகிறேன் என்று சொல்லி பிளான் போடுவதெல்லாம் அரைவேக்காட்டுத்தனம். இதை செய்வது போலீஸாக இருக்கவே முடியாது.

தலையை உள்ள தூக்கிப் போட்டாலே போதும்.. வெளியில் இருக்கும் வால்களின் கொட்டத்தை மிக எளிதாக அடக்கிவிடலாம். இதுதான் போலீஸாரின் ராஜதந்திரம்.. இயக்குநர் சொதப்பிவிட்டார்.

இதற்குப் பிறகும்கூட எத்தனையோ கொலை, அடிதடி வழக்கெல்லாம் கியூவில் காத்திருக்க.. சாதாரண கோழி கேஸில் பிடித்து உள்ளே வைப்பதும், அதற்கு ஜாமீன் கிடைத்து வெளியே வரும்வேளையில் மீண்டும் சண்டை போட வைத்து தீனாவை திரும்பத் திரும்ப சிறையில் வைப்பதும் கடைசியில் காமெடி படமாகவே மாறிவிட்டது.

கிளைமாக்ஸ் காட்சியில் சண்டை.. நடுத்தெருவில் போலீஸும், ரவுடியும் ஒருவரையொருவர் மாற்றி, மாற்றி அடித்துக் கொள்கிறார்கள். பக்த கோடிகளும், பொது மக்களும் வேடிக்கை பார்க்கிறார்களாம். அந்த இடத்தில் வேறு எந்த உயரதிகாரியும்கூடவா இல்லை..? இப்படி அநியாயத்துக்கு ஹீரோயிஸ படமாக மாற்றியதால்தான் படத்தின் போக்கு மாறிவிட்டது..!

‘திமிருக்கே திமிரு பிடிச்சவன்’ என்பார்களே அந்த அளவுக்கு திமிரான திரைக்கதையில் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்..! போலீஸ் சம்பந்தப்பட்ட படங்களுக்கு எடுத்துக்காட்டாக முன்பேயே ‘விசாரணை’ படமெல்லாம் வந்திருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநரான கணேஷா, அதையெல்லாம் கொஞ்சம் பார்த்துவிட்டு மனதில் வைத்திருந்து இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கலாம்..!

ஓவர் டோஸாக கொடுத்துவிட்டதால் அறிவுரைகள் அனைத்தும் திகட்டிவிட்டது..!

 

Our Score