full screen background image

1990-ல் நெல்லை மாவட்டத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘திலகர்’ திரைப்படம்..!

1990-ல் நெல்லை மாவட்டத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘திலகர்’ திரைப்படம்..!

பிங்கர் பிரிண்ட்ஸ் என்ற புதிய பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘திலகர்’. நீண்ட நாட்கள் தயாரிப்புப் பணியில் இருந்து விடுபட்டு, தற்போது மார்ச் 20-ம் தேதி திரைக்கு வருகிறது இத்திரைப்படம்.

இத்திரைப்படத்தின் இயக்குநரான பெருமாள் பிள்ளை இப்படம் பற்றி நீண்ட பேட்டியளித்துள்ளார்.

அது இங்கே :

“1990-ல் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த ஒருவரின் உண்மைக் கதைதான் இது. ஒரு துணிச்சல்மிக்க இதயம் கொண்டவனின் வாழ்வில் நடந்ததை வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.  அவருடைய கதையை மையமாக வைத்து விரிவாக்கி சிறிது கற்பனையையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ள படம். இப்படத்தின் கதை தனியொருவரின் கதை என்றில்லாமல் கிராமம், மண், மக்கள், கலாச்சாரம் பற்றி யதார்த்தமாக கூறும் படமாகவும் இருக்கும்.

1990-களில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு சினிமாவுக்காக சிலவற்றை இதில் சேர்த்து இருக்கிறோம். அந்த திலகர் பற்றிய நிகழ்வுகள் 2 ஆண்டுகளில் நடந்திருக்கும். இதில் நடப்பது 10 ஆண்டுகள் இருக்கும். இதனால் பிரச்சினை ஏதுமில்லை. தங்கள் ஊர் சம்பந்தப்பட்ட கதை என்றதும் மகிழ்ச்சி அடைந்த நெல்லை மக்கள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

இது நிச்சயம் தமிழ்த் திரையுலகில் பாசாங்கில்லாத, செயற்கை பூச்சு இல்லாத மண் சார்ந்த பதிவாக இருக்கும். மண் சார்ந்த கிழக்குச் சீமையிலே’, ‘தேவர் மகன்’ ஆகிய படங்களின் வரிசையில் ‘திலகர்’ படமும் நிச்சயமாக இடம் பெறும்.

இது நெல்லை மாவட்டத்தின் மண் சார்ந்த கதை. எனவே அந்தப் பகுதியில்தான் முழு படப்பிடிப்பையும் நடித்தி முடித்தோம். குலசேகரப்பட்டினம், பத்தமடை, சேரன்மாதேவி, தென்காசி, அம்பாசமுத்திரம், களக்காடு என்று நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊர்களில்தான் படமாக்கியுள்ளோம். படத்தை 63 நாட்களில் எடுத்து முடித்து விட்டோம். ஆனால் அதற்கான முன் தயாரிப்புக்குப் பல மாதங்கள் எடுத்துக் கொண்டோம்.

இதில் பிரபலங்களை வைத்து எடுத்தால் அவர்களது முகம்தான் தெரியும். அந்தக் கதாப்பாத்திரம் தெரியாது. எனவே நிறைய புதுமுகங்களையே நடிக்க வைத்துள்ளேன். அறிமுகம் துருவாதான் நாயகன். படத்தில் பிரபல நடிகர் என்றால் கிஷோர் இருக்கிறார். அவர் பணம் கிடைக்கிறது என்பதற்காக வரும் படங்களிளெல்லாம்ம் நடிக்கும் நடிகரல்ல. கதை நன்றாக இருந்தால்தான் நடிப்பார். இந்தக் கதையைக் கேட்டு பிடித்துப்போய்தான் உடனே சம்மதித்தார்.

‘பூ’ ராமு முக்கியமான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். அவரது தோற்றத்தைப் பார்த்து அவருடன் வேலை பார்த்தவர்களுக்கே அவரை அடையாளம் தெரியவில்லை.
கதாநாயகிகள் இரண்டு பேர் ஒருவர்  மிருதுளா பாஸ்கர்.  இவர் ‘வல்லினம்’ படத்தின் நாயகி.  இன்னொருவர் கேரள வரவு அனுமோல்.  ‘ஈசன்’ படப் புகழ் சுஜாதா மாஸ்டரும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நாயகன் துருவா எம்பி.ஏ. படித்தவர். என்றாலும் இந்தப் படத்திற்காக சில மாதங்கள் நடிப்புப் பயிற்சி, ஒத்திகை எல்லாம் முறையாகச் செய்துதான் அவரை நடிக்க வைத்திருக்கிறேன்.  இவர் படத்தில் நான்கு வித தோற்றத்தில் வருவார். அதற்காக நிறைய உழைத்திருக்கிறார்.

‘தமிழ்ப் பட’த்திற்கு இசையமைத்த கண்ணன்தான் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். இனி அவர் ‘திலகர்’  கண்ணன் என்று பேசப்படுவார். அந்த அளவுக்கு உழைத்திருக்கிறார். இப்படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்துள்ளார். ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ். இவர் ‘பொக்கிஷம்’ ,’மழை’ , ‘ராமன்தேடிய சீதை’ படங்களின் ஒளிப்பதிவாளர். அவருக்கும் இது முக்கியமான படமாக இருக்கும். எடிட்டர் கோலா பாஸ்கர், இவர் செய்த உதவியும் கொடுத்த ஒத்துழைப்பும் மறக்க முடியாதது.

மைசூரில் வருடந்தோறும் நடக்கும் தசரா விழாவைப் போலவே நெல்லை மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நடக்கும் தசரா விழாவும் மிகவும் பிரபலமானது. கிட்டத்தட்ட இருபது லட்சம் பேர் கூடுகிற திருவிழா அது. அதை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறோம். அந்த விழாவின்போது படத்தின் ஒரு முக்கிய காட்சி நடைபெறுவதாக கதை அமைந்திருக்கிறது.     எட்டு கேமராக்களை அமைத்து அந்தக் காட்சியை நான்கு நாட்கள் படமாக்கினோம்.

படத்தில் ஒரு வாழைத்தோப்பு வர வேண்டும். அதில்தான் பிரச்சினை ஆரம்பமாகும். அந்தத் தகராறில் அந்த வாழைத்தோப்பையே வெட்டி நாசம் செய்து அழிக்க வேண்டும். ஆனால் விவசாயிகள் யாரும் வாழைத்தோப்பினைத் தர தயாராக இல்லை.  ‘காய்த்த பிறகு வேண்டுமானால் முழு தோப்பாக தருகிறோம். இப்படி நாசம் செய்ய நாங்க எந்த விலை கொடுத்தாலும் தர மாட்டோம். வெட்டி அழிக்கவிட மாட்டோம்’ என்றார்கள். அதனால் நாங்களே ஒரு ஏக்கரில் ஒரு வாழைமரத் தோப்பு போட்டு, வளர்த்து அதில்தான் இந்தப் படக் காட்சிகளை எடுத்தோம்.

நாங்கள் ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடத்தினோம். ஒருவரை ஒருவர் மிரட்டுவது போல காட்சி.. என் அண்ணனுக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் என்பான் நாயகன்.  இந்தக் காட்சியை படமாக்கியபோது கூட்டம் கூடியது. வேடிக்கை பார்க்க வந்தவர்கள், ‘ஏன் இங்கே ஷூட்டிங் வைத்திருக்கிறீர்கள்.. வேறு இடம் கிடைக்கவில்லையா?’ என்றார்கள்.. அதே இடத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் கொலை நடந்ததாம். அதில் வேடிக்கை பார்த்த கூட்டத்தில் அந்தக் கொலை செய்துவிட்டு பெயிலில் வந்தவர்களும் இருந்தார்கள். ‘அன்னிக்கு நாங்களும் இதே வசனத்தைத்தான் பேசினோம். நீ நல்லா தைரியமாகப் பேசு தம்பி..’ என்று கதாநாயகனுக்கு நடிக்க டிப்ஸெல்லாம் கொடுத்தார்கள். இப்படி பலவித அனுபவங்களுடன் படமெடுத்தது என்னால் மறக்க முடியாதது..” என்றார் இயக்குநர் பெருமாள் பிள்ளை.

Our Score