full screen background image

திலகர் – சினிமா விமர்சனம்

திலகர்  – சினிமா விமர்சனம்

தமிழகத்தில் வாழும் சாதியினரில் முக்குலத்தோர் இனத்தவருக்கு மட்டும் ஏன் இந்தக் கொலை வெறி..? அரிவாள் வீச்சு என்பதை விளையாட்டுபோல் அவர்கள் பயன்படுத்துவதெல்லாம் எதற்காக..? அதுவும் சொந்த சாதிக்காரர்கள் மீதே.. தங்களுடைய உறவினர்கள் மீதே இந்தக் கொலை விளையாட்டை இவர்கள் செய்வதையெல்லாம் பார்க்கும்போது இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த கோட்டி பிடித்த வேலை என்று சிந்திக்க வைக்கிறது.

மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் பிரிவில் உள்ள மூன்று சாதியினரும், இவர்களது உட்பிரிவில் உள்ள சாதியினரும் ஏற்படுத்தும் இந்த கொலை விளையாட்டுக்களில் பலியானவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் கூடிக் கொண்டே செல்கிறது.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் மனிதர்களுக்குள் மிருக குணமும் உண்டு. ஆனால் அவைகளை தூண்டிவிடும் அளவிற்கான குணாதிசயங்கள் மனிதர்களுக்கு மனிதர் வேறுபடத்தான் செய்கிறது.. இந்த மனிதர்கள் என்பதையும் தாண்டி இந்தச் சாதிக்காரர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமைந்திருக்கும் இந்த பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம்.. அரிவாள் கலாச்சாரத்தை பதிவாக்கியிருக்கிறது இந்தப் படம்.

‘மதயானை கூட்டம்’ படத்திற்கு பிறகு மனிதர்களின் ரத்தச் சகதியில் குளித்திருக்கும் படம் இதுதான். ‘மதயானை கூட்டம்’ உசிலம்பட்டி தேவர்களின் கதை. இது தூத்துக்குடி மாவட்ட தேவரின மக்களிடையேயான கதை..!

பெருமாள் ‘பிள்ளை’ என்கிற இயக்குநர், ராஜேஷ் ‘யாதவ்’ என்கிற ஒளிப்பதிவாளருடன் இணைந்து வழங்கியிருக்கும் தேவரினத்தின் வாழ்க்கைக் கதைதான் இந்தப் படம்..!

உக்கிரபாண்டியான ‘பூ’ ராம், ஊரில் சினிமா தியேட்டர் வைத்துக் கொண்டு பரம்பரையாக ஆட்சி செய்து வந்த குடும்பத்தின் தலைமகன். போஸ்பாண்டி என்னும் கிஷோர், பக்கத்து ஊரில் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருபவர்.

தன்னுடைய தம்பியான துருவாவை வம்புச் சண்டைக்கெல்லாம் போகவிடாமல் தடுத்து அவன் நன்றாகப் படிக்க வேண்டும். நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்கிற ஆசையைத் திணித்திருப்பவர். கிஷோருக்குத் திருமணமாகி மனைவி இப்போது கர்ப்பிணியாக இருக்கிறார்.

கிஷோர் உள்ளூர் மற்றும் அசலூர் இளைஞர்களிடையே கவுரவமான ஆளாகத் தென்படுவதால் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கப்படுகிறார். இது ஒரே சாதியினமாக இருந்தாலும் அந்த ஊரிலேயே கொடி கட்டிப் பறந்த ராமுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. தன்னுடைய ஊரிலேயே பக்கத்து ஊர்க்காரன் பெயர் எடுப்பது அவரை தகுதியிழக்கச் செய்வதாக நினைத்து கருவுகிறார்.

இந்த நேரத்தில் ராமின் தியேட்டரில் ‘அமரன்’ படம் வெளியாகிறது. கையில் அரிவாளுடன் தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்கள் ‘வெத்தல போட்ட ஷோக்குல’ பாடலை திரும்பவும் போடும்படி வற்புறுத்துகிறார்கள். தியேட்டர்காரர்கள் மறுக்க.. படத்தினை தொடர்ந்து ஓட்ட முடியாதபடிக்கு ரசிகர்களின் கூச்சலும், குழப்பமும் ஏற்படுகிறது.

இதனால் கோபம் கொள்ளும் ராம், கிஷோரின் ஊர்க்காரர்களுக்கு மட்டும் தியேட்டரில் டிக்கெட் கொடுக்கப்படாது என்று போர்டு எழுதி மாட்டுகிறார்.

இதனைக் கண்டித்து கலெக்டருக்கு புகார் மனுக்கள் பறக்க.. கலெக்டர், ராமை அழைத்து கண்டித்து அனுப்புகிறார். அதற்கு பின்பும் ராம் பிடிவாதமாக ரசிகர்களுக்கு டிக்கெட் கொடுக்காமல் எருமை மாடுகளை தியேட்டரில் அனுமதித்து படத்தை ஓட்டுகிறார். இதனால் அவரது தியேட்டருக்கான அரசு அனுமதியை ரத்து செய்வதாக கலெக்டர் நோட்டீஸ் அனுப்பி, தியேட்டருக்கும் சீல் வைக்கிறார்.

இது கிஷோர் செய்த வேலைதான் என்று நினைத்த ராம், கிஷோருக்கு பாடம் கற்பிக்க அவரது வாழைத் தோட்டத்தை இரவோடு இரவாக நாசம் செய்கிறார். இதனால் கோப்ப்படும் கிஷோர், ராமின் மகன்கள் மூவரையும் அடித்து, உதைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து வந்து ஒப்படைக்கிறார்.

தாங்கள் ஊர் மக்கள் மத்தியில் அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்த ராமின் 3 மகன்களும் நல்லதொரு முகூர்த்த நாளில் கிஷோருக்கு குறி வைக்கிறார்கள். வளைகாப்பு நடந்து தாய் வீடு சென்றிருக்கும் தனது மனைவியைப் பார்த்துவிட்டு அப்படியே குலசேகரன்பட்டிணத்தில் வருடந்தோறும் நடைபெறும் தசரா விழாவைப் பார்க்கச் செல்கிறார் கிஷோர்.

விழாவில் தனியே வரும் கிஷோரை, தசரா விழாவின் மாறுவேடத்திலேயே ராமின் மகன்கள் மூன்று பேரும் படுகொலை செய்கிறார்கள். கிஷோரின் உடலைப் பார்த்து கதறியழும் அவரது அம்மா ‘பழிக்குப் பழி வாங்கி அவர்களது தலையை வெட்டிக் கொன்று சாம்பலை அள்ளிப் பூசித்தான் தன் மருமகள் தாலியறுப்பாள்’ என்று சவால் விடுகிறார்.

அதுவரையில் வீட்டு சாப்பாட்டிற்காக கோழியை அறுப்பதைக்கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அப்பாவியாய் இருக்கும் தம்பி துருவா.. தனது அண்ணனின் படுகொலையைத் தாங்க முடியாமல் வீர, தீர மனோகரனாக உருவெடுக்கிறார்.  அண்ணனின் கொலைக்குப் பழிக்குப் பழி வாங்கப் போவதாக அண்ணனின் சமாதியில் சபதமெடுக்கிறார்.

இதனைச் செய்து முடித்தாரா..? இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் மிச்சம், மீதிக் கதை..?

‘பூ’ ராம் உக்கிர பாண்டியனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அந்தத் திமிர்.. சொந்த மருமகனின் எதிர்ப் பேச்சைக் கேட்டு எழும் கோபத்தை அடக்கிக் கொண்டு பதில் சொல்வது.. போலீஸ் ஸ்டேஷனில் அழுத்தமான குரலில் தனது மகனை விடுவிக்கச் சொல்வது.. போலீஸ் படையுடன் தன்னைத் தேடி வருபவர்களிடம் தானே சரண்டராவது.. கிஷோரை நினைத்து பொறாமைப்படுவது.. தனது மகன்களின் இறப்பை நினைத்து வருத்தப்படாமல் அதிலும் கவுரவம் பார்ப்பது என்று தான் இருக்கும் பிரேம்களில் எல்லாம் மற்றவர்களுக்கு வாய்ப்பே தராமல் தடுத்திருக்கிறார் ராம். சிறந்த நடிப்பு.. சிறப்பான இயக்கத்தினால்தான் இது அவரால் முடிந்திருக்கிறது என்பதால் இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்..!

கிஷோர் கம்பீரத் தோற்றத்துடன் மிடுக்கான மீசையுடன் தனது இனத்து இளைஞர்களை நினைத்து கவலை கொள்ளும் ஒரு சராசரி தலைவனாக நடித்திருக்கிறார். வசன உச்சரிப்பில் தனி பாணியை இதில் பயன்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கிறோம். தூத்துக்குடி வட்டார பாஷையைக்கூட அனைவருக்கும் புரியும்வகையில் மிகத் தெளிவாக உணரும்வகையில் பேசியிருக்கிறார்.

அதிகம் அலட்டிக் கொள்ளாத நடிப்பு. கோபத்தைக்கூட கட்டுக்குள் வைத்துக் கொண்டு முகத்தில் காட்டாமல் செயலில் காட்டும் வீரனாக தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். இதனாலேயே இவர் மீது கடைசியில் கோபம் வராமல் பரிதாப உணர்வே வந்திருக்கிறது.

படத்தின் ஹீரோவான துருவா முதல் பாதியில் அடக்கமான தம்பியாக.. அப்பாவியான தோற்றத்திலும் இரண்டாம் பாதிக்கு மேல் மிரட்டலான தோற்றத்திலும், பழி வாங்கும் உணர்வுமிக்க சராசரி தேவரின மகனாகவும் நடித்திருக்கிறார்.  தனது அண்ணன் மகனை அவனது தாத்தா வீட்டிற்கு அனுப்ப முடியாது என்று சொல்லும் அந்த அழுத்தமான காட்சியில் கவனமாகப் பதிவாகியிருக்கிறார் துருவா. இறுதியில் தனது குடும்ப வாரிசை பார்த்தபடியே இறக்கும் காட்சியில் உருக்கம் அதிகம்தான்..!

நாயகியாக வரும் இருவரில் மலையாள புது வரவான அனுமோலுக்கு நடிக்க ஸ்கோப் அதிகமில்லை என்றாலும் தாலியறுக்கும் காட்சியில் மிதமிஞ்சிய நடிப்பைக் கொட்டியிருக்கிறார். சத்தியமாக இப்படி நடிப்பது அவருக்கு இதுதான் முதல் முறையாக இருக்குமென்று நம்பலாம். மலையாளத்தில் இவர் நடித்திருக்கும் படங்களும், கேரக்டர்களும் இப்படியல்ல.. ஆனால் அவை பேர் சொன்னவை. அந்த லிஸ்ட்டில் இதுவும் சேரப் போகிறது.

இன்னொரு ஹீரோயின் மிருதுளா. ஏற்கெனவே ‘வல்லினம்’ படத்தில் நடித்திருந்தாலும் இதுதான் முதல் படம் போல அவருக்கே தோன்றும் என்று நம்புகிறோம். படுகொலைகளைப் போலவே தமிழ்ச் சினிமாவில் தவிர்க்க முடியாத காதலையும் சொல்ல வேண்டியிருப்பதால் இவரது போர்ஷனும் அவசியமாகியிருக்கிறது.

எதனால் காதல் உருவானது.. எப்படி உருவாகிறது என்பதையும் மிக யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். தன்னுடைய தாய், தந்தையிடம் ஹீரோவை தனக்குப் பிடிக்கின்ற காரணத்தைச் சொல்லும் காட்சி ‘நச்’ என்ற பதிவு. அதேபோல அவனிடமிருந்து விலகிச் செல்வதாகச் சொல்லிவிட்டுப் போகும் அந்தக் காட்சியிலும் நல்ல நடிப்பைத்தான் காட்டியிருக்கிறார். சரியான இயக்குநர்களிடம் சிக்கினால்தான் சரியான நடிப்பு வெளிப்படும் போலிருக்கு..!

படத்தின் பல காட்சிகளை இன்றைக்குத்தான் புதிதாகப் பார்ப்பது போன்ற காட்சியமைப்புகளிலும், கேமிரா கோணங்களிலும் படமாக்கியிருப்பதுதான் படத்தினை ஆழ்ந்து ரசிக்க வைக்கிறது. கேமிராமேன் ராஜேஷ் யாதவிற்கு பாராட்டுக்கள். சண்டை காட்சிகளை படமாக்கியிருக்கும்விதத்தில் இயக்குநருக்கு மிகப் பெரிய பக்க பலமாக இருந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். இவரும் படத்தில் நடித்திருக்கிறார். வாழ்த்துகள்..!

இசையமைப்பாளர் கண்ணனின் பாடல் இசையைவிடவும், பின்னணி இசைதான் அதிகம் பயமுறுத்தியிருக்கிறது. ராமின் மகன்கள் மூவரும் பலியாகும் காட்சியில் ஒளிப்பதிவும், இசையும்தான் ரங்கராட்டினமாக சுற்றியிருக்கின்றன.

வாழைத்தோட்ட காட்சிகளின் படமாக்கல்.. ராமின் தியேட்டருக்குள் நடக்கும் சண்டைகள்.. அரிவாள்களில் பெயர்களை எழுதி வாங்கி வைப்பது.. கோர்ட்டுக்குள்ளேயே ராமின் மகன்களை கொலை செய்ய திட்டம் தீட்டுவது.. அந்தக் கொலைக் காட்சியை படமாக்கியவிதம், ராமிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக கோப வெறியை ஏற்றுவது.. தன்னைக் கொலை செய்ய ஆட்களை தயார் செய்வது அறிந்து கோபமடையும் துருவா, ராமின் காரை மறித்து காரின் பேனட்டில் அரிவாளால் கொத்திவிட்டு “அவமானப்பட்டுட்டு போ” என்று சொல்வது..  (இந்தக் காட்சியில் ராம் காரில் ஏறாமல் திரும்பி நடந்து செல்லும் காட்சியில் ஏற்படும் உணர்வு சினிமா ரசிகர்களை நிச்சயம் பாதிக்கும்) பேரன்கள் பொங்கியெழுந்து பழி வாங்கும் கதைக்குள் தங்களைத் திணித்துக் கொள்வது.. “நீ திரும்பி ஓடுடா..” என்று மிரட்டியும் துருவா அவர்களை எதிர்த்து நின்று உயிரைவிடுவது என்று திரைக்கதையில் ஒரு மகாபாரதக் கதையையே திணித்திருக்கிறார் இயக்குநர். இப்படிப்பட்ட திரைக்கதையினால்தான் படம் கடைசிவரையிலும் சுவாரசியமாகவே சென்று முடிந்தது..

இத்தனை கோரமான கொலைகளை காட்டினாலும் அதில் இருக்கும் கோபம் உண்மையாக இருப்பதால் இது தவறாகப்படவில்லை. ஆனால் இயக்குநர் பட ரிலீஸுக்கு முன்பாக கோபப்பட்டதுபோல சென்சார் போர்டின் மீது எந்தத் தவறுமில்லை. இந்தப் படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் என்பது சரியானதுதான்..!

வெறும் குத்துப் பாட்டு, ஆபாச நடனம், இரட்டை அர்த்த வசனங்கள், வன்முறைகள் இவற்றையும்விட வன்முறையைத் தூண்டும் காட்சியமைப்புகளும் சிறுவர், சிறுமியர் பார்க்க்க் கூடாதவைதான்.

அதிலும் இதில் முதல் காட்சியில் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் இருக்கும் கொலையாளிகளான 18 வயதுக்குட்பட்ட ராமின் பேரன்கள் பேசுகின்ற பேச்சுக்களெல்லாம் மிகப் பெரியவை. அவர்களது வயதையொத்தவர்களால் இதனை ஜீரணிக்க முடியாவை.

இவர்கள் செய்கிற செயலும் மன்னிக்க முடியாதவை. சின்னப் பையன் கழுத்தில் கத்தியை வைத்து அவனைவிட 10 வயது பெரியவன் மிரட்டுவதெல்லாம் பயங்கரவாத காட்சியின் முதல்படி. இதனைத் தவிர்த்திருக்கலாம்..

ஆனால் இதே காட்சியை மனதில் வைத்து கிளைமாக்ஸில் அன்புதான் இப்போதைக்கு தேவை என்று சொல்லி அறிவுரையாக முடித்திருப்பதை எப்படி ஏற்றுக் கொள்வது..? ரசிகர்களால் ஏற்க முடியுமா என்பதெல்லாம் நமக்குத் தெரியவில்லை. ஆனால் சொல்ல வேண்டிய விஷயம்தான். 7 வயது பையனால் இதையெல்லாம்.. இப்படியெல்லாம் சிந்திக்க முடியுமா என்பதுதான் நாம் முன் வைக்கும் கேள்வி..!?

எப்படியிருந்தாலும் ‘உங்களுக்குள்ள அடிச்சிக்கிட்டு செத்துத் தொலையாமல் ஒண்ணுக்குள்ள ஒண்ணா சாதி, சனத்தோட இயைந்து வாழ்ந்து தொலைங்கடா’ என்கிற இயக்குநரின் கருத்தை நாமும் வழிமொழிந்து பாராட்டுகிறோம்..!

‘திலகர்’ தில்லான தேவன்..!

Our Score