full screen background image

தெரு நாய்கள் – சினிமா விமர்சனம்

தெரு நாய்கள் – சினிமா விமர்சனம்

ஸ்ரீபுவால் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் ‘ஐ’ கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தெரு நாய்கள்.’  

இந்தப் படத்தில் நாயகனாக பிரதீக்கும், நாயகியாக அக்க்ஷதாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி, ராம்ஸ், பாவேல், ஆறு பாலா, மைம் கோபி, சாய் தீனா, மதுசூதனன், கூல் சுரேஷ், நிலானி, சரண்யா, நிலா, சம்பத்ராம், கஜராஜ், ‘வழக்கு எண்’ முத்துராமன், பிர்லா போஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு – தளபதி இரத்தினம்,  இசை – ஹரீஷ், சதீஷ், படத் தொகுப்பு – மீனாட்சி சுந்தர்,  சண்டை பயிற்சி – பில்லா ஜெகன்,  பாடல்கள் – முத்தமிழ், லலிதானந்த், GKB, மாஷா சகோதரிகள், பாடியவர்கள் – வைக்கம் விஜயலட்சுமி, மகாலிங்கம். இணை தயாரிப்பு – உஷா, தயாரிப்பு – சுசில்குமார், எழுத்து, இயக்கம் – ஹரி உத்ரா.

தற்போது தமிழகத்தின் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வரும் டெல்டா விவசாயக் கிராமங்களில் மீத்தேன் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்க்கும் விவசாயிகளின் பிரச்சனையை இந்தப் படம் பேசியிருக்கிறது. 

மன்னார்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் என்னும் மதுசூதனன். மக்கள் சேவையைவிடவும் ரவுடியிஸத்தில் கொடி கட்டிப் பறப்பவர். தற்போது வாக்குப் பதிவு நடைபெற்றிருக்கும் சட்டப் பேரவை தேர்தலிலும் அதே மன்னார்குடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் வாக்குப் பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கைக்காக மாநிலமே காத்திருக்கும் நிலையில்.. ஒரு நாள் இரவில் 5 பேர் கொண்ட இளைஞர்கள் குழு அந்தப் பள்ளிக்குள் தைரியமாக நுழைந்து வாக்குப் பெட்டிகளை கவர்ந்து செல்கிறது.

அடுத்த நாளே மதுசூதனனையும் கடத்திச் செல்கிறது. மதுசூதனின் கண்கள் கட்டப்பட்டிருப்பதால் அவருக்கு தன்னை யார் கடத்தியவர்கள் என்று தெரியவில்லை. ஏன் கடத்தினார்கள் என்றும் தெரியவில்லை.

ஒரு பக்கம் போலீஸ் இந்தச் செயலைச் செய்தவர்களை வலைவீசி தேடுகிறது. அதில் இளைஞர்களின் குழுமத்தைச் சேர்ந்த ஒருவன் மட்டும் மாட்டிக் கொள்ள.. மற்றவர்கள் பற்றி அவனிடத்தில் விசாரிக்கிறது போலீஸ்..

இவன் மற்றவர்களைக் காட்டிக் கொடுத்தானா..? இல்லையா..? எதற்காக மதுசூதனன் கடத்தப்பட்டார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

முன் பின் நகரும் பிளாஷ்பேக் உத்தியில் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். இப்போதைய திடீர் கவன ஈர்ப்பு செய்யும் திரைப்படங்களின் சாயல்தான் இந்தப் படத்தில் அதிகமாகத் தெரிகிறது. குறிப்பாக மிஷ்கின் ஸ்டைல் காட்சியமைப்புகள்.. இருப்பினும் இதுவும் சிறப்பாகவே இருப்பதால் வரவேற்கத்தான் வேண்டும்.

திரைக்கதையில் ஒரு சுவாரசியத்தைக் கொண்டு வந்த இயக்குநர் அதனை படமாக்கும்போது ஏனோ சிறிது கோட்டைவிட்டுவிட்டார். வாக்குப் பெட்டிகளைக் கடத்துகிறார்கள். ஏன் என்று முதலில் சொல்லப்படவில்லை. இரண்டு ரவுடிகளை ஒருவருக்கொருவர் மோதும்படி வலை பின்னுகிறார்கள். ஏன் என்று முன்பே தெரியவில்லை.

கடைசியாக மதுசூதனனை கடத்துகிறார்கள். இப்போதுதான் இதற்கான பின்புலத்திற்கான காரணம் விரிகிறது. இந்தக் கதைக்குள்ளாக பிரதீக் மற்றும் அக்சதா இருவருக்குள்ளான காதலையும் சொல்லியிருக்கிறார்கள்.

மீத்தேன் வாயுவுக்கான குழாய்களை பதிக்க இடம் தர மறுக்கும் இமான் அண்ணாச்சி தன்னுடைய டயலாக் டெலிவரியில் கலக்கியிருக்கிறார். அந்த நீண்ட ஸ்டெடிகேம் ஷாட்டில் தன்னுடைய அத்தனை செயல்பாடுகளையும் கொஞ்சமும் பிசிறு தட்டாமல் பேசியிருக்கும்விதம் இந்தப் படத்தின் ஸ்டைல் தனி என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

விவசாயத்தை அழிக்க வந்திருக்கும் அரக்கன் என்று சொல்லும் மீத்தேன் திட்டத்திற்காக தனது உயிரைக் கொடுக்கிறார் இமான் அண்ணாச்சி. அண்ணாச்சியின் இந்தக் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் இளைஞர்களாக நடித்திருக்கும் பிரதீக், அப்புக்குட்டி, ஆறு பாலா, பாவேல் கூட்டணி சிறப்பாகவே நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அப்புக்குட்டியின் காதல் போர்ஷனை மட்டும் கொஞ்சம் வெட்டி நீக்கியிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். உடனேயே காதல்.. உடனேயே டூயட்டின் சில வரிகள் என்று இழுத்திருப்பது தேவையற்றது.

இன்ஸ்பெக்டரான மைம் கோபியின் எதார்த்தமான பல வசனங்கள் இன்றைய தமிழகத்தை அப்படியே அம்பலப்படுத்துகிறது. ரவுடிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் ஆட்சி அதிகாரமும், அதிகார வர்க்கமும் எந்த அளவுக்கு கூட்டு வைத்து மக்களை ஏமாற்றி வருகின்றன என்பதை மைம் கோபியின் கேரக்டரே வெளிப்படுத்தியிருக்கிறது.

அக்சதாவின் டயலாக் டெலிவரிலேயே அவர் அயல் நாட்டுப் பெண் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. புரிகிறது. நல்ல தமிழ் நடிகைகள் கிடைக்கலையா இயக்குநர் ஸார்..? ரேகா சுரேஷுக்கு தங்கச்சின்னு சொல்லிட்டு இப்படி ராஜஸ்தான்ல இருந்து வந்த மாதிரி பொண்ணைக் காண்பித்தால் எப்படி..?

அதிலும் ஹீரோயின் உடற்பயிற்சி செய்யும் அழகை அத்தனை குளோஸப்பில் காட்டியிருக்க தேவையில்லைதான். ஏனெனில் இது காதல் காட்சி இல்லை. காமக் காட்சி. அக்கா கணவர் இதனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க.. கதை கந்தலாகும் என்று எதிர்பார்த்த நேரத்தில் திரைக்கதையில் டிவிஸ்ட் அடித்து நம்மைக் காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர்.

பணம் சம்பாதிப்பது என்கிற ஒரு கொள்கைக்காகவே அரசியலில் நுழைந்து வேடம் போடும் சொக்கலிங்கம் என்கிற மதுசூதனனின் நடிப்பு.. எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்பதை உணர்ந்து அரசியல்வியாதிகள் போடும் திட்டத்தில் சிக்கிக் கொள்ளும் இமானின் தம்பி, பிரதீக்கை மட்டும் பிடித்துவிட்டு அவனை கடைசியாக என்ன செய்வது என்று தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டு முடிவெடுக்கும் போலீஸ் அதிகாரிகளான முத்துராமனும், இன்னொரு உயரதிகாரியும்.. கூல் சுரேஷும், தீனாவும் இன்னொரு பக்கம் சேட்டை உசுப்பிவிட்டு குளிர் காயும் ரவுடி கும்பல்.. இப்படி நிஜ வாழ்க்கையில் நாம் பார்க்கும் சில கேரக்டர்களை உலாவ விட்டிருக்கிறார் இயக்குநர்.

தளபதி ரத்தினத்தின் ஒளிப்பதிவு கண்கட்டு வித்தை. இரவு நேர காட்சிகளில் பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிற கலர் டோனில் அழகுற படமாக்கியிருக்கிறார். பிரதீக்கை கொலை செய்யும் காட்சியில் ஏரியல் வியூ காட்சி விரியும்போது அந்த இடத்தில் அழகும் சேர்ந்தே படத்தைக் கவனிக்க வைத்திருக்கிறது.

‘கண்கள் கதை பேசும்’ பாடலும், இசையும் கேட்க வைத்திருக்கிறது. வைக்கம் விஜயலட்சுமியின் குரல் என்பதால் படத்திற்குள் ஈர்த்திருக்கிறது இந்தப் பாடல்.

மீத்தேன் திட்டத்தை பற்றி மட்டுமே சொல்லி, மக்கள் எழுச்சியுடன் போராடி ஜெயிப்பதுபோல வைத்திருந்தால் நிச்சயமாக இயக்குநரை பெரிதும் பாராட்டியிருக்கலாம். படமும் முழு கவனத்தை ஈர்த்திருக்கும்.

ஒரு ரீல்விட்டு இன்னொரு ரீலில் படம் நன்றாக இருந்தால் எப்படி அந்தப் படத்தை நீங்கள் நினைப்பீர்களோ, அப்படித்தான் இந்தப் படமும் ஆகிவிட்டது. ஒட்டு மொத்தமாய் பாராட்டைப் பெற வேண்டிய படம், சிற்சில தவறுகளால் கவனிக்க வேண்டிய படமாய் மட்டுமே போய்விட்டது.

அடுத்தப் படத்தில் முழுமையாய் வெற்றியடைய இயக்குநருக்கும் அவரது குழுவினருக்கும் நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

Our Score