full screen background image

விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்த்து உருவாகியுள்ள ‘தெரு நாய்கள்’ திரைப்படம்

விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்த்து உருவாகியுள்ள ‘தெரு நாய்கள்’ திரைப்படம்

ஸ்ரீபுவால் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தெரு நாய்கள்’.

இப்படத்தின் நாயகனாக அப்புக்குட்டி நடிக்கிறார். புதுமுகம் அக்சதா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரதிக், ‘கோலிசோடா’ புகழ் நாயுடு, ‘தெறி’ வில்லன் தீனா, மைம் கோபி, இமான் அண்ணாச்சி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் ராம்ஸ், கூல் சுரேஷ், சம்பத் ராம், பவல், ஆறு பாலா, கஜராஜன், வழக்கு எண் முத்துராமன் ஆகியோரும்  நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – தளபதி இரத்தினம், இசை – ஹரிஷ் – சதீஷ், படத் தொகுப்பு – மீனாட்சி சுந்தர், பாடல்கள் – மாஷா (சகோதரிகள்), முத்தமிழ், ஜி.கே.பி, லலிதானந்த், பாடகர்கள் – வைக்கம் விஜயலட்சுமி, மகாலிங்கம், சபேஷன், இணை தயாரிப்பு – உஷா, தயாரிப்பு – சுசில்குமார், மக்கள் தொடர்பு – நிகில்.

Theru Naaigal Movie Stills (5)

படம் குறித்து இயக்குநர் செ.ஹரி உத்ரா பேசுகையில், “தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தில் இன்றைய முக்கிய பிரச்சனையாக இருப்பது விவசாய நிலங்களுக்கிடையில் எரிவாயு குழாய் பதிப்பதுதான்.

கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு எரிவாயுவை கொண்டு செல்வதாக சொல்லி விவசாய நிலங்களை ஆக்கிரமித்து அதில் குழாய்களை பதிக்கப் போவதாக கெயில் நிறுவனம் சொல்லி வருகிறது. சில இடங்களில் இடத்தையும் ஆக்கிரமித்துவிட்டார்கள். மத்திய, மாநில அரசுகள் இதற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றன. ஆனால் அந்த பகுதியைச் சேர்ந்த விவசாய மக்கள் மட்டுமே இதனை எதிர்த்து இன்றுவரையிலும் போராடி வருகிறார்கள்.

கெயில் திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு ஒரு பக்கம் சொன்னாலும், நீதிமன்றமே இதற்குத் தடை போட்டாலும் வேறு, வேறு வழிகளில் இதற்கான வாய்ப்புகளை கெயில் நிறுவனமும், அரசுகளும் செய்து கொண்டுதான் இருக்கின்றன. இது பற்றிய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது இந்தப் படம்.

இதேபோல் மத்திய, மாநில அரசுகளையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் இந்தப் படத்தில் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறோம். ‘கார்ப்பரேட்  அரசியலின் வளர்ச்சி… சமுதாயத்தின் வீழ்ச்சி’ என்ற கருத்தை இப்படத்தில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரமான விளைநிலங்களை நாசமாக்கும் எரிவாயு குழாய் பதிப்புக்காக, ஒரு கார்ப்பரேட் நிறுவனம், ஒரு அரசியல்வாதியை கைக்குள் போட்டுக்கொண்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், அவற்றுக்கு எதிராக விவசாய மக்கள் நடத்தும் போராட்டமும்தான் இப்படத்தின் கதை.

Theru Naaigal Movie Stills (3)

அதேசமயம் இத்திரைப்படத்தில் மற்ற படங்களை போலவே காதலும், இளைஞர்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமும் இணைந்தே இருக்கும்.

இதன் படப்பிடிப்பை மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை முதலிய இடங்களில் நடத்தி முடித்துவிட்டோம். தற்போது இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இசையையும், மே மாதம் படத்தையும் வெளியிட இருக்கிறோம்…” என்றார் இயக்குநர் செ.ஹரி உத்ரா.

“எல்லாம் சரி.. சரியான, தேவையான கருவைத்தான் படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் இதற்காக நீங்கள் வைத்திருக்கும் தெரு நாய்கள் என்கிற தலைப்பு சரியாக, பொருத்தமாக இல்லையே…?” என்று பல மாதிரியான கேள்விகள் கேட்டும், அசராமல் பதிலளித்தார் இயக்குநர் ஹரி உத்ரா.

Theru Naaigal Working Stills (5)

“கதைக்குப் பொருத்தமாக இருக்கட்டுமே என்றுதான் வைத்திருக்கிறேன். நாய் நன்றியுள்ளது என்பதால் நன்றி மறந்தவர்களால் மக்களுக்கு பிரச்சினைகள் வந்திருக்கின்றன என்பதை சிம்பாலிக்காக காட்டத்தான் இதை வைத்திருக்கிறேன்…” என்றார் இயக்குநர்.

“எப்படிப் பார்த்தாலும் இந்தக் கதைக்கு இந்தத் தலைப்பு பொருத்தமாக இல்லை. இதைவிட கேட்ச்சிங்கான தலைப்பை வையுங்கள். அதைப் பார்த்தவுடன் உடனேயே சினிமாவுக்கு போக வேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொரு ரசிகனுக்குள்ளும் வர வேண்டும். அப்படியொன்றை வைத்தாலேயே உங்களுக்கு விளம்பரச் செலவில் பாதி குறையும்..” என்றெல்லாம் எடுத்துச் சொன்ன பிறகு.. “இவ்வளவு பேர் சொல்றீங்க.. கண்டிப்பா இதை ஏத்துக்குறேன். பட ரிலீஸூக்கு இன்னும் நாள் இருக்கு. நிச்சயமாக தலைப்பை மாற்றிவிடுகிறேன்..” என்று உறுதியளித்தார் இயக்குநர்.

சொன்னது போலவே செய்தால் அவருக்கும் நல்லது. படத்தின் தயாரிப்பாளருக்கும் நல்லது.

நல்ல கதையை சொல்லும்போது அதையும் நல்லவிதமான முறையில் மக்களிடத்தில் கொண்டு சென்றால்தான் அது வெற்றியடையும். இது தமிழ்ச் சினிமாவுலகத்தின் அரிச்சுவடி..! அனைவரும் இதை புரிந்து கொண்டால் நலம்..!

Our Score