“செல்பி புள்ள சமந்தா.. குல்பி புள்ள எமி..” – விஜய்யின் ஆச்சரிய கமெண்ட்..!

“செல்பி புள்ள சமந்தா.. குல்பி புள்ள எமி..” – விஜய்யின் ஆச்சரிய கமெண்ட்..!

இளைய தளபதி விஜய் படம் ரிலீஸ் என்றாலே ஊரையே அலப்பறை செய்துவிடுவார்கள் அவருடைய ரசிகர்கள். நேரிலேயே வருகிறார் என்றால் ச்சும்மா விட்டுவிடுவார்களா..?

நேற்று மாலை சத்யம் தியேட்டரில் நடக்கவிருந்த ‘தெறி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக அந்தத் தியேட்டரில் நேற்றைய அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தது. காலை முதலே உள்ளே நுழைய பாஸ் வாங்க வேண்டி ரசிகர் பட்டாளம் தியேட்டரை சுற்றி வளைத்திருந்த்து. ஆனால் அனாவசியமாக கூட்டத்தைக் கூட்டி அல்லாட வேண்டாம் என்று முன்பேயே முடிவெடுத்திருந்ததினால் அளவோடுதான் பாஸ்களை கொடுத்திருந்தார்கள்.

அதிகமான சினிமா பிரபலங்களைகூட அழைக்காமல் கச்சிதமாக அளவெடுத்தாற்போல் அழைத்திருந்தார்கள். மிகச் சரியாக 6.05 மணிக்கு ‘ஜித்து ஜிக்கா’ பாடல் வரிகளடங்கிய வீடியோவோடு நிகழ்ச்சி துவங்கியது. இது முடிந்ததும் அதுவரையிலும் வாசல் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த இளைய தளபதி விஜய் உள்ளே வந்தார். வழக்கம்போல அடுத்த இரண்டு நிமிடங்கள் காது கிழிந்தது..!

DSC_0778

நிகழ்ச்சியை விஜய் டிவி ரம்யா தொகுத்து வழங்கினார். துவக்கத்திலேயே கண்ணழகி மீனாவை மேடைக்கு அழைத்து அவருடைய மகள் நைனிகா இந்தப் படத்தில் விஜய்க்கு மகளாக நடித்தது பற்றி கேட்டார்.

theri-10

"என்னைத்தான் கூப்பிட வந்தாங்களோன்னு நினைச்சேன்"

"முதல்ல தாணு ஸார் ஆபீஸ்ல இருந்து பார்க்க வர்றாங்கன்னு சொன்னவுடனேயே என்னைத்தான் நடிக்க கூப்பிடுறாங்களோன்னு  நினைச்சேன். கடைசிலதான் சொன்னாங்க ‘பாப்பாதான் வேணும்’ன்னு..! நான் முதல்ல வேணாம்ன்னுதான் நினைச்சேன். கடைசில தாணு ஸார் படம்.. விஜய் ஸார் படம்.. பெரிய பேனர்.. நல்ல டைரக்டர்.. பெரிய பட்ஜெட்.. விரும்பி கேக்குறாங்க.. சரி.. போவோம்னு சொல்லி ஓகேன்னு சொன்னேன். இந்தப் படத்தோட ஷூட்டிங் முழுக்க நானும் அவளோட போயிருந்தேன்.. ஒரு நல்ல படத்துல அவ அறிமுகமாகியிருக்காளேன்னு எனக்கும் சந்தோஷம்தான்.." என்றார்.

‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ‘ரஜினி அங்கிள் எங்க இருக்கீங்க..?’ என்று மீனா மழலை மொழியில் அழைப்பார். அதுபோலவே ‘விஜய் அங்கிள் எங்க இருக்கீங்க..?’ என்று நைனிகா கூப்பிட  அரங்கம் அதிர்ந்தது.

theri-6

மொட்டை ராஜேந்திரனின் 'ஐ ஆம் வெயிட்டிங்'

அடுத்து மொட்டை ராஜேந்திரன் மேடைக்கு வந்து நின்றாலும் நின்றார்.. தலையைத் தடவினாலும் கை தட்டல்.. கையை உயர்த்தினாலும் கை தட்டல் என்று ரசிகர்களின் ஆரவாரம் எகிறியது.. படத்தின் டீஸரில் விஜய்யிடம் ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என்று ஸ்டைலாக சொல்லும் மொட்டை ராஜேந்திரனை, அது போலவே மேடையிலும் சொல்ல வைத்துவிட்டுத்தான் படியிறக்கினார்கள்.

தொடர்ந்து நா.முத்துக்குமார் மேடையேறி தனக்கும் அட்லீக்குமான தொடர்பு மற்றும் விஜய்யின் படங்களில் தொடர்ந்து தான் எழுதுவது என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்தார். இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘என் ஜீவன்’ பாடல் மிகச் சிறந்த மாண்டேஜ் காட்சிகளால் தொகுக்கப்பட்டிருந்தது. பாடலும், இசையும் மென்மையாக இருக்க.. "அந்தப் பாடல் இந்தாண்டின் சிறந்த பாடலாக இருக்கப் போகிறது…" என்று ஆரூடம் சொல்லிவிட்டுப் போனார் நா.முத்துக்குமார்.

theri-8

விஜய்க்கு நன்றி சொன்ன பிரபு

அடுத்து வந்த நடிகர் பிரபு "இந்தப் படத்தில் நான் ஒரு சின்ன கேரக்டர்லதான் நடிச்சிருக்கேன். இருந்தாலும் என்னைய கூப்பிட்டு நடிக்க வைச்சதுக்கு இளைய தளபதி விஜய் தம்பிக்கு எனது நன்றி. நான் இந்தப் நடித்திருப்பதைவிட, அப்பா நடித்த ‘தங்கப் பதக்கம்’ படத்துக்கு வசனம் எழுதியவரும், தமிழ் சினிமாவின் தலை சிறந்த இயக்குநருமான மகேந்திரன், இந்தப் படத்தில் நடிகராக அறிமுகம் ஆவதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.." என்று சிக்கனமாக தன் பேச்சை முடித்துக் கொண்டார்.

நிகழ்ச்சி துவங்கிய பின்பே அரங்கத்திற்குள் வந்த நடிகை எமி ஜாக்சன் கலகலப்பாக மேடையேறினார். கச்சிதமான ஆங்கிலத்தில் நீண்ட உரையாற்றிவிட்டு 'ரசிகர்களுக்கு நன்றி' என்பதை மட்டும் அவர்களுக்கு சொல்லும்படி ரம்யாவிடம் கூறிவிட்டு இறங்கினார்.

theri-11

"கெட்ட பய ஸார் இந்த அட்லீ.."

அடுத்து தமிழ்ச் சினிமாவின் உன்னத இயக்குநர் மகேந்திரன் மேடையேறினார். அவர் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் பேசும்போது, “ஒரு நாள் தாணு ஸார் என்னைப் பார்க்க வர்றேன்னாரு. அவர் என்னுடைய 35 ஆண்டு கால நண்பர். கூப்பிட்டால் நானே அவர் ஆபீஸுக்கு ஓடுவேன். ஆனால் அவரே நேரா வந்து பார்க்கணும்னு சொல்லிட்டு வந்தார்.

‘இந்தப் படத்துல நீங்க நடிக்கணும்’னு கூப்பிட்டாரு. எனக்கு அதிர்ச்சி. நான் முதல்ல நம்பலை. ‘இது மிஸ்டர் விஜய்க்கு தெரியுமா?’ன்னு கேட்டேன். ‘அவருக்குத் தெரியாமல் எதுவுமே நடக்காது. அவர் சொல்லித்தான் கேட்க வந்தேன்’ என்றார். நானும் ‘ஓ.கே.’ என்றேன்.

அதோட தாணு ஸார் அப்போ என்கிட்ட சொன்ன ஒரு விஷயத்தை இங்கே சொல்ல கூச்சமாகத்தான் இருக்கு. ஆனாலும் சொல்லித்தான் ஆகணும். ‘இந்த உலகத்துக்கே தமிழ் சினிமாவை காட்டியவர் நீங்க. உங்களை இந்த உலகத்துக்கே காட்ட நான் ஆசைபடறேன்’ என்றார் தாணு. அவர் அன்புக்காகவே இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன்.

அடுத்த நாளே மிஸ்டர் அட்லி வந்தார். அவரும் வந்து கதை சொன்னார். அப்பவும் அவர்கிட்டேயும் கேட்டேன், ‘இது மிஸ்டர் விஜய்க்கு தெரியுமா?’ன்னு.. ‘அவர் சொல்லித்தான் ஸார் வந்தேன்’னாரு. ஏன்னா.. எனக்கு இப்போவரைக்கும் ஆச்சரியமான விஷயம்.. என்னை எப்படி நடிக்க அழைத்தார்கள் என்பதுதான்..!?

ஷூட்டிங் ஸ்பாட்லேயும் அட்லி பம்பரமா சுத்தி வேலை வாங்கினார். அற்புதமான வேலை வாங்கத் தெரிந்த இயக்குநர் அட்லி. ஒரு நாள்கூட டயர்டே இல்லாமல் சுறுசுறுப்பா எனர்ஜியா ஓடிக்கிட்டேயிருந்தார்.. இந்த அட்லி ஒரு கெட்ட பய ஸார்.." என்றார் முத்தாய்ப்பாக.

theri-13

"வசந்தபாலனுக்கு நன்றி"

அடுத்து மேடையேறியவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். இந்தப் படம் அவருடைய 50-வது படம் என்பதால் இசைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து அனைத்து பாடல்களையும் உருவாக்கியிருக்கிறார் என்பது இப்போது பாடல்களை கேட்டாலே தெரிகிறது.

"இந்தப் படத்தின் வாய்ப்பை எனக்களித்த என் நண்பன் அட்லீக்கு எனது நன்றி. இந்த 10 வருஷத்துல 50 படங்களை முடிச்சிருக்கேன்றதை நினைச்சால் ஒரு பக்கம் பெருமையாத்தான் இருக்கு. இந்த வாய்ப்புக்கு காரணமான இயக்குநர் வசந்தபாலனுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக்கிறேன்.

பாடல்களை கேட்டு எல்லாரும் என்ன சொல்வாங்களோன்னு கொஞ்சம் நெர்வஸாத்தான் இருந்தேன். விஜய் ஸார் கேட்டுட்டு ‘டபுள் ஓகே’ன்னு சொன்னார். அவர் சொன்ன அந்த வார்த்தையைக் கேட்ட பின்னாடிதான எனக்கு நிம்மதியே வந்துச்சு..” என்றார்.

theri-5

"விஜய்யின் படங்களிலேயே ரெக்கார்ட் கலெக்சன் இதுதான்..!"

அடுத்து மேடைக்கு வந்த தயாரிப்பாளர் தாணு, தனக்கும் விஜய்க்குமான நட்பை பற்றி விரிவாகவே பேசினார். "நான் தயாரித்த முதல் படமான ‘யார்’ படத்தில் ரஜினி சாரை ஒரு சிறு வேடத்தில் நடிக்க வைத்தேன். அதற்கு முன்பேயே ‘பைரவி’ படத்துக்காக அவருக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தைக் கொடுத்தேன்.

இப்போது அவர் நடிக்கும் ‘கபாலி’ படத்தை நான் தயாரிப்பது எனக்கு ஒரு பெருமையென்றால், இன்னொரு சூப்பர் ஸ்டாரான விஜய்யை வைத்து ‘துப்பாக்கி’யும் தொடர்ந்து இப்போதும் ‘தெறி’யையும் தயாரிப்பதில் எனக்கு இன்னும் ரொம்பப் பெருமையாக இருக்கிறது.

விஜய் தங்கமான மனிதர். அவர் எனக்கு கால்ஷீட் கொடுத்தால் தொடர்ந்து அவரை வைத்து பல படங்களை எடுக்க நான் தயார்.  என் கோரிக்கையை ஏற்று இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்த மகேந்திரன் சாருக்கு எனது நன்றி.  

ஆரம்பத்திலேயே அட்லீயிடம், ‘உனக்கு இசையமைக்க யார் வேணும் ஏ.ஆர்.ரகுமானா..? ஹாரிஸ் ஜெயராஜா?’ன்னு கேட்டேன். அதற்கு அட்லீ, ‘எனக்கு ஜி’வி’பிரகாஷ்தான் வேணும்’ என்றார். அவர்கள் இருவருக்குமிடையே அவ்வளவு  நட்பு. இந்தப் படத்தில் அற்புதமான பாடல்களை கொடுத்துள்ளார் பிரகாஷ் குமார். 

அட்லீ மிகப் பெரிய திறமைசாலி. அவர் என்னிடம் கதை சொல்ல வந்தபோது படத்தின் முதல் பாதியை சொல்லி முடிச்சப்பவே, படம் ஹிட் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது.  ‘ரெண்டாம் பாதியை சொல்லவே வேணாம். ஷூட்டிங் போலாம்’ என்றேன். ‘இல்லை.. இல்லை. நீங்க கேட்டே ஆகணும்’னு கட்டாயப்படுத்தி அந்தக் கதையைக் கேக்க வைச்சார் அட்லீ. அவரும் படத்தை சிறப்பாக எடுத்துள்ளார்..

இந்தப் படத்தை தயாரிக்கும் வாய்ப்பை எனக்களித்த விஜய் ஸாருக்கு எனது நன்றி. இந்தப் படம் நிச்சயமா இதுவரைக்குமான விஜய் படங்களிலேயே அதிக அளவுக்கு ரெக்கார்ட் கலெக்ஷனை வசூலிக்கப் போகிறது என்பதை உறுதியா சொல்லிக்கிறேன்...” என்றார்.

“இன்னும் இரண்டே இரண்டு முக்கியஸ்தர்கள்தான்..” என்கிற ரம்யாவின் அடைமொழியோடு வேகமாக மேடைக்கு ஓடி வந்தார் இயக்குநர் அட்லீ.

theri-2

"ஒரு அம்பது காரா வைச்சுக்கக் கூடாதா..?"

"இந்தப் படம் உருவானதுக்கு முதல் காரணம் விஜய் டிவி மகேந்திரன் ஸார்தான். ‘ராஜாராணி’ முடிஞ்சவுடனேயே 3 கதைகளை நான் தயார் செஞ்சிருந்தேன். அந்தக் கதைகளை அவர்கிட்ட நான் ஷேர் பண்ணிக்கிட்டேன். அப்போ ‘இந்தக் கதை விஜய்க்கு ஷூட்டா இருக்கும். டிரை பண்ணிப் பாருங்க’ன்னு சொன்னார். அடுத்து என்னோட பேமிலி.. அவங்க கொடுத்த ஊக்கமும் இன்னொரு காரணம்.

இந்தக் கதையை நான் ரெடி செஞ்சுட்டாலும், விஜய் ஸார்கிட்ட சொல்றதுக்கு ஒரு நல்ல டைம் பார்த்துக்கிட்டேயிருந்தேன். சட்டுன்னு ஒரு வாய்ப்பு கிடைச்சவுடனேயே கிளம்பிட்டேன்.

விஜய் சாரின் மனைவியான  சங்கீதா அக்காவுக்கு எனது ‘ராஜாராணி’ ரொம்ப பிடித்த படம். அவர் எனக்கு வாழ்த்து  சொல்லி விஜய் சார்கிட்ட அனுப்பினார். விஜய் சார் கதையைக் கேட்டவுடனேயே ‘ம்.. ஓகே.. பண்ணலாம்.. ஆனால் இப்போ நான் வரிசையா இரண்டு படங்கள் செய்யப் போறேன். அது முடிஞ்ச பின்னாடிதான் இதை செய்ய முடியும். பரவாயில்லையா..?’ என்றார்.

‘அது ஓகே ஸார்.. எத்தனை நாளானாலும் இது உங்க படம் ஸார். உங்களை வைச்சுத்தான் ஸார் பண்ணப் போறேன்.. நான் காத்திருக்கிறேன்’னு சொல்லி வெயிட் பண்ணி இந்தப் படத்துல கமிட் ஆனேன்.

விஜய் ஸார்தான் தாணு ஸார்கிட்ட கதை சொல்ல அனுப்பி வைச்சார். அவரும் பாதி கதையைக் கேட்டுட்டு மீதியை கேக்க மாட்டேன்னாரு. ஆனாலும் நான் அடம் புடிச்சு கதையைக் கேக்க வைச்சேன்.

தாணு சார் மாதிரி ஒரு சிறப்பான தயாரிப்பாளரை பார்க்கவே முடியாது. ஒவ்வொரு நாளும் ஷூட்டிங்குக்கு முதல் நாளே என்னென்ன தேவைன்னு ஒரு லிஸ்ட் எழுதிக் கொடுப்போம். அது அவரோட ஆபீஸுக்கு போய் சேர்ந்தவுடனேயே எனக்கு போன் வரும். போச்சு.. நம்மளை காய்ச்சப் போறாருன்னு பயந்துக்கிட்டேதான் போனை எடுப்பேன். எடுத்தவுடனேயே, ‘என்ன தம்பி.. வெறும் பத்து காருன்னு எழுதியிருக்கீங்க. ஒரு அம்பது காரா வைச்சுக்கக் கூடாதா?’ம்பார்.. அவர் அப்பேர்ப்பட்ட தயாரிப்பாளர். அவர் இல்லாமல் இந்தப் படத்தை பத்தி நான் யோசிச்சிருக்கவே முடியாது. 

அப்புறம் இந்தப் படத்துல 55 நிமிஷம் வர்றாப்புல ஒரு சின்ன வயசு குழந்தை கேரக்டர் இருந்த்து. அதுல யாரை நடிக்க வைக்கலாம்னு ரொம்ப யோசிச்சிட்டிருந்தேன். அந்தக் குழந்தை கேரக்டரை தவிர மற்றவர்களையெல்லாம் புக் பண்ணிட்டேன். இந்தக் குழந்தை மட்டும்தான் கிடைக்காமல் இருந்தது. கடைசில என்னோட மனைவி ப்ரியாதான் ஒரு நாள் ஒரு போட்டோவை காட்டி, ‘இந்தக் குழந்தை நல்லாயிருக்குல்ல.. இது பொருத்தமா இருக்கும்ல்ல’ன்னு சொன்னாங்க. அப்பாடான்னு நைனிகாவை தேடிப் பிடிச்சு இதுல நடிக்க வைச்சிருக்கேன்.

நைனிகாவும் நல்ல பொண்ணு.. ரொம்ப ஐஸ் வைச்சு பேசணும்.. அப்பத்தான் நடிக்கும். சில சமயத்துல அதுக்கு மூட் இல்லைன்னா தனியா கூட்டிட்டுப் போய் பேசுவேன். அப்போ நான் என்ன சொன்னாலும், ‘ஆர் யூ ஆங்ரி வித் மீ’ன்னு மழலை மொழில பேசுவா. உடனே ஷாட்டுக்கு வந்தாள்ன்னா அது ஒரே டேக்குல ஓகேயாகும்..

என்னுடைய ஆதர்ச இயக்குநர் மகேந்திரன் ஸார். ஏன்னா மணிரத்னம் ஸாருக்கே மகேந்திரன் ஸாரைத்தான் ரொம்பப் புடிக்கும். அப்பேர்ப்பட்டவரை இதுல நடிக்க வைக்க முடிவு செஞ்சப்ப நான்தான் அவர்கிட்ட போய் கதை சொன்னேன். ஷூட்டிங்ல எந்த ஈகோவும் பார்க்காமல் அவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தார். அவருக்கு எனது நன்றி.

பிரபு ஸார் ஷூட்டிங்குக்கு வரும்போதே டிபன் கேரியரோடதான் வருவார். எல்லாரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால், ‘என்ன சீன்..? என்ன டயலாக்கு’ன்னு கேப்பாங்க. பிரபு ஸார் மட்டும்தான், ‘மொதல்ல சாப்பாடு.. அப்புறம்தான் சீன், டயலாக்கு’ன்னு சாப்பிட வைச்சிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாரு. இந்த ஷூட்டிங் நடக்குற எல்லா நாள்லேயும், நான் பிரபு ஸாரோட சாப்பாட்டைத்தான் சாப்பிட்டிருக்கேன்..

இதுல சமந்தா, எமி ஜாக்சன்னு ரெண்டு ஹீரோயின்ஸ். ரெண்டு பேருமே எனக்கு ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடிச்சுக் கொடுத்திருக்காங்க. அவங்களுக்கு எனது நன்றிகள்..!

ஜி.வி.பிரகாஷ் ‘ராஜாராணி’ படத்துல வொர்க் பண்ணிக்கிட்டிருக்கும்போதே ‘மச்சான் என்னோட 50-வது படம் உன்னோடதான் செய்வேன்’னு புக் பண்ணி வைச்சிட்டான். அப்புறம் அவனைக் கூப்பிடாமல் எப்படி ஆரம்பிக்கிறது..? தாணு ஸார்கூட ஆரம்பத்துல கேட்டாரு.. ‘உங்களுக்கு யார் வேணும்..? ரஹ்மானா..? ஹாரிஸா’ன்னு கேட்டார். ‘வேணாம்ஸார்.. எனக்கு ஜி.வி.யே போதும்’னு சொன்னேன்..! ஜி.வி. என் நம்பிக்கையை வீணாக்கலை.. இந்தப் படத்துல விஜய் அண்ணனே திகைச்சுப் போற மாதிரி மியூஸிக் போட்டிருக்கான்.. எனக்கும் பெருமையா இருக்கு..

கடைசியா விஜய் அண்ணன்.. நான் ஒரேயொரு படம் இயக்கம் செஞ்ச டைரக்டர்தான்.. ஆனாலும் என் மேல நம்பிக்கை வைச்சு இவ்ளோ பெரிய படத்தை எனக்குக் கொடுத்து எனக்கொரு லைபையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்காரு. அதுக்கான பதில் நன்றியை நான் இந்தப் படத்தின் மூலமாக அவருக்குக் கொடுத்திருக்கேன்.. இந்தப் படத்தில் நானும், விஜய் அண்ணனும் ஒரு உடன் பிறந்த அண்ணன், தம்பியாகவே பழகினோம்.

இந்த ‘தெறி’ அரசியல் படம் கிடையாது. இதுவொரு குடும்பப் படம். அப்பா மகன் கதைதான். இந்த நாட்டில் அனைத்து அப்பாக்களும் தங்களது மகன்களை ஒழுங்காக வளர்த்தாலே நாட்டில் ஒரு பிரச்சனையும் வராது என்பதுதான் படத்தின் கதைக் கரு.

இந்தப் படத்துல விஜய் அண்ணனுக்கு மூணு வேடமான்னு எல்லாரும் கேக்குறாங்க. இதுல விஜய் அண்ணனின் ரசிகர்களுக்குப் பிடித்தமான ரொமான்ஸ் விஜய்யும் ஒருத்தர் இருக்காரு. அப்புறம் மாஸ் ரசிகர்களுக்குப் பிடித்தமான போலீஸ் விஜய் ஒருத்தரும் இருக்காரு. கடைசியா எல்லா பேமிலிகளுக்கும் பிடிக்கிற மாதிரியான ஒரு பேமிலிமேன் விஜய்யும் இருக்காரு..." என்று சொல்லி விஜய் இதில் மூன்று வேடத்தில் நடிப்பதை போட்டு உடைத்துவிட்டுத்தான் போனார் இயக்குநர் அட்லீ.

theri-1

"இது ரவுடிகளுக்கே புடிச்ச போலீஸ் கதை"

கடைசியாக ரசிகர்களின் ஏகோபித்த கைதட்டலுக்கிடையே மேடைக்கு வந்தார் நடிகர் விஜய். பேசவேவிடாமல் தொடர்ச்சியாக கைதட்டல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்க 2 நிமிடங்கள் கழித்து கைதட்டல்களுக்கிடையே தன் பேச்சைத் துவக்கினார் விஜய்.

"ராஜா ராணி’ என்ற அழகான காதல் கதையை கொடுத்த இயக்குநர் அட்லீயிடம் இருந்த, என்னை வைத்து ஒரு அதிரடி படம் கொடுக்க வேண்டும் என்ற வெறிதான் இந்த ‘தெறி' படம்.

பொதுவாக ஆடியோ விழாக்களில் இசை அமைப்பாளரைத்தான் விழா நாயகன் என்பார்கள். ஆனால் பல படங்களின் நாயகனான ஜி.வி.பிரகாஷ்தான் இந்தப் படத்தின் விழா நாயகன். சிறப்பாக இசையமைத்திருக்கிறார்.

இன்றுவரையிலும் ஜி.வி.பிரகாஷின் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் ஒலித்துக் கொண்டிருந்த இந்த 'தெறி' படத்தின் பாடல்கள் இன்று முதல் உலகம் முழுவதும் தெறிக்கப் போகிறது..! 

இயக்குநர்களில் கதாநாயகனாக இருப்பவர் மகேந்திரன் ஸார். ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ போன்ற படங்களை கொடுத்து மக்கள் மனதில் இன்னமும் உதிராத பூக்களாக இருக்கிறார். அவர் படத்தில் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது. ‘தெறி’ படத்தில் அவர் நடித்து, அந்த வருத்தத்தை போக்கியுள்ளார்.

இந்த படத்துல ரெண்டு ஹீரோயின்ஸ். ஒண்ணு செல்பி புள்ள சமந்தா. இன்னொன்னு குல்பி புள்ள எமி.. ரெண்டு பேருமே நல்லா நடிச்சிருக்காங்க..

நான் டிஸ்கவரி சேனல்ல பார்த்திருக்கேன்.. ஒரு புலி மான் கூட்டத்தை துரத்திக் கொண்டு ஓடும். அப்போது அந்த புலி எல்லா மான்களையும் துரத்துவதை விட்டுவிட்டு, ஒரு குறிப்பிட்ட மானை மட்டும் இலக்காக வைத்துக் கொண்டு அதை வேட்டையாடி கொல்லும். அந்த புலிதான் இந்த கலைப்புலி. வெற்றி என்ற ஒன்றை மட்டுமே சினிமாவில் இலக்காக கொண்டு, அதை தேடிப் பிடிக்கும் புலியாக திரையுலகில் வலம் வருகிறார். தொடர்ந்து வெற்றியும் பெற்று வருகிறார்,

என் படத்தைப் பத்தி இதுக்கு மேல நானே எப்படி பெருமையாக சொல்வது..? என் ரசிகர்களுக்கு இந்த நேரத்துல ஒண்ணு சொல்லிக்க ஆசைப்படறேன். ஒரு தோல்விக்கு பின்னால் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு வெற்றிக்குப் பின்னால் ஆயிரம் தோல்விகள் இருக்கும். எனவே வாழ்க்கையில் தோல்விகளைக் கண்டு துவளாதீர்கள். 

இயக்குனர் அட்லீ இந்த இளம் வயதில் பெரிய உயரத்தை அடைந்துள்ளார். இது ஆச்சரியம் அளிக்கிறது. அவரைப்போல் நிறைய இளம் இயக்குனர்கள் பெரிய உயரத்தை அடைந்து சாதிப்பது பெருமையாக இருக்கிறது. அது மாதிரி என் ரசிகர்களாகிய நீங்கள் எல்லோரும் உங்கள் வாழ்க்கையில் பெரிய உயரங்களை தொடவேண்டும் என்பது என் ஆசை.

ரசிகர்களாகிய நீங்கள் படம் பார்ப்பதால்தான் என் போன்றவர்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது. அதுபோல் உங்கள் வாழ்க்கையிலும் வெளிச்சம் வர வேண்டும். வெற்றி என்பது ஆயிரம் தோல்விகளுக்கு பிறகு கிடைப்பது. எனவே ஆயிரம் முறை முயற்சி செய்து கொண்டே இருங்கள். வெற்றி கிடைக்கும்.

அதேபோல் அடுத்தவர் தொட்ட உயரத்தை நீங்கள் தொடர முயற்சிக்க வேண்டாம். உங்களுக்கென்று தனியாக ஒரு உயரத்தை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். அதை நோக்கி முன்னேறுங்கள். அந்த உயரத்தை மற்றவர்களும் தொட முயற்சிக்கும் அளவுக்கு முன்னேறுங்கள்.

வாழ்க்கையில் கர்வமின்றி வளர வேண்டும். அதற்கு ஒரு கதை சொல்றேன். ஒரு நாள் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியான மாவோ, சாலையில் போகும்போது ரோட்டோரமாக ஒரு சிறுவன் அவருடைய போஸ்டர்களை வைத்து விற்பனை செய்வதை பார்த்தார். அந்தச் சிறுவனின் அருகில் சென்று பார்த்தபோது, அங்கேயிருந்த அனைத்து போஸ்டர்களுமே தன்னுடையதுதான் என்று தெரிந்து கொண்டார்.

அந்தச் சிறுவனிடம், ‘இனிமேல் என் போஸ்டரை மட்டும் போடாதப்பா.. மத்த தலைவர்களின் போஸ்டர்களையும் போட்டு விற்பனை செய்யுப்பா..’ என்றார் பெருமையாக. அதற்கு அந்தச் சிறுவன்.. ‘மத்தவங்க போஸ்டரெல்லாம் வித்திருச்சு.. இதுதான் விக்காதது..’ என்றானாம். அதனால்தான் சொல்கிறேன்.. வாழ்க்கையில் நாம் கர்வப்படவே கூடாது.

இந்த ‘தெறி’ படம் ஒரு போலீஸ் கதை. சில போலீஸுக்கு குற்றவாளிகளை ரொம்பப் புடிக்கும். அதே நேரம் குற்றவாளிகளுக்கே புடிக்குற போலீஸ்தான் இந்த ‘தெறி’ படம்..” என்று பட்டென்று எதிர்பாராத தருணத்தில் தன் பேச்சை முடித்துக் கொண்டார் விஜய்.

6.05 மணிக்கு துவங்கி 8.30 மணிக்கு மிகச் சரியாக இரண்டரை மணி நேரத்தில் நிகழ்ச்சியை கச்சிதமாக ஒரு குழப்பமும் இல்லாமல் நடத்தி முடித்து அசத்திவிட்டார்கள் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் டீம்.

பாராட்டுக்கள்..! வாழ்த்துகள்..!