நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமனி’ல் இரட்டை வேடமணிந்து ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார் நடிகர் வடிவேலு. ‘இம்சை அரசன் 2-ம் புலிகேசி’ படம் போல இந்தப் படமும் சூப்பர் ஹிட்டாகும் என்பது அவரது நம்பிக்கை..!
சென்ற சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.வுடன் இணைந்து விஜயகாந்தை தாக்கு, தாக்கென்று தாக்கியதில் அவரது தொண்டையும் வற்றிப் போனது.. கல்லாப் பெட்டியும் வற்றிப் போனது.. வீட்டு வாசலில் வந்து நிற்கும் தயாரிப்பாளர்களின் கார்களும் குறைந்து போயின. அதற்குப் பிறகு கொஞ்சம் சுதாரித்து நடிக்கத் தயாரானதும் நிறைய இயக்குநர்கள் வந்து கேட்டும் முடியாது என்று மறுத்துவிட்டார் வடிவேலு.
திரும்பி ஸ்கிரீனுக்கு வரும்போது பம்பர் ஷாட் அடித்து தூள் கிளப்பணும் என்று நினைத்தவர் இது போன்று வரலாற்று பின்னணியில், பெரிய பட்ஜெட் படத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். இவருக்கேற்றார்போல் தமிழ்த் தயாரிப்பாளர்களில் முதன்மையானவர்களான கல்பாத்தி பிரதர்ஸ் சிக்கிக் கொள்ள உடனேயே பூஜையை போட்டு ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்தப் படத்தில் அரசன், தெனாலிராமன் என இரண்டு வேடங்களிலும் வடிவேலுவே நடித்திருக்கிறார். இப்படத்திற்காக பிரமாண்டமான அரண்மனைகள், தர்பார் மண்டபங்கள், அந்தப்புர மாளிகைகள் என்று பலவும் மிக அதிகச் செலவில் போடப்பட்டுள்ளன. கலை இயக்குநர் பிரபாகரன் இதற்காக மிகவும் கஷ்டப்பட்டு தனது உதவியாளர்களுடன் பணியாற்றியிருக்கிறார். இது அவருக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறார். ஒளிப்பதிவாளர் ராம்நாத்ஷெட்டி அந்தக் கால தோற்றங்களை அழகு மாறாமல், இளமை குன்றாமல்.. படம் பிடித்துக் காண்பித்திருக்கிறார்.
பழம்பெரும் கதை வசனகர்த்தாவான ஆரூர்தாஸ் இந்தப் படத்திற்கு வசனம் எழுதி பிரமிக்க வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 85 வயதைத் தொட்டிருக்கும் ஆரூர்தாஸ் இப்போதும் இந்தக் காலத்திற்கேற்றாற்போல் வசனங்களை மாற்றி எழுதிக் கொடுத்தது வடிவேலுவையும், இயக்குநரையும் பெரிதும் கவர்ந்துவிட்டதாம்..
குற்றாலம், அச்சன்கோவில், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. வரலாற்றுக் கதை பின்னணியில் இருந்தாலும் படம் முற்றிலும் நகைச்சுவை கலந்த படம்தானாம்.. சென்ற வாரம் இப்படத்தின் ஷூட்டிங் முற்றிலும் முடிவடைந்து பூசணிக்காய் உடைத்துவிட்டார்கள். இப்போது இசையமைப்பாளர் டி.இமானின் இசைக் கோர்ப்பில் பின்னணி இசைச் சேர்ப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வரும் சித்திரைத் திருநாளில் குடும்பத்துடன் கண்டுகளிக்கும்வகையில் குழந்தைகளையும் திருப்திப்படுத்தும்வகையில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!
நடிகர்-நடிகையர்
வைகைப் புயல் வடிவேலு
மீனாட்சி தீட்ஷித்
ராதாரவி
மன்சூரலிகான்
மனோபாலா
சந்தானபாரதி
ஜி.எம்.குமார்
பாலாசிங்
சண்முகராஜ்
தேவதர்ஷினி
ஜோ.மல்லூரி
பூச்சி முருகன்
மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
தொழில் நுட்பக் கலைஞர்கள்
கதை, திரைக்கதை, இயக்கம் : யுவராஜ் தயாளன்
வசனம் : ஆரூர்தாஸ்
ஒளிப்பதிவு : ராம்நாத் ஷெட்டி
இசை : டி.இமான்
படத்தொகுப்பு : ராஜாமுகமது
கலை இயக்குநர் : எம்.பிரபாகரன்
நடனம் : சிவசங்கர், பிருந்தா, நந்தா
பாடல்கள் : புலவர் புலமைப்பித்தன், கவிஞர் விவேகா
பி.ஆர்.ஓ. : நிகில்
தயாரிப்பு : கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ்