ஜி.எஸ்.ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி.அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் லெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’.
‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி.கே.ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, பி எல் தேனப்பன், தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ.ஏ.கே.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.
சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும். நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும். ஆனால், இறுதியில் தர்மமே ஜெயிக்கும் என்பதை மையப்படுத்தும் திரைப்படம்தான் இந்த தீயவர் குலை நடுங்க திரைப்படம்!
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
இது ஒரு மர்டர் மிஸ்டரி கதைதான். சஸ்பென்ஸ், திரில்லர் வகையில் புதிய கதையில் ஆனால் நாம் கேட்டு பார்த்து பழக்கப்பட்டு போன அதே திரைக்கதையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
ஜெபநேசன் என்ற எழுத்தாளர் ஒரு நள்ளிரவில் மனக் கலக்கத்துடன் காரில் போய்க் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்க வைக்கப்படுகிறார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே முகம் தெரியாத ஒரு ஆளால் படுகொலை செய்யப்படுகிறார்.
இந்த சம்பவத்தை கேளம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரான மகுடபதி என்ற அர்ஜுன் விசாரிக்க துவங்குகிறார்.
சமீப மாதங்களில் இதுவரையிலும் சர்ச்சுக்கே போகாத தன்னுடைய அப்பா அடிக்கடி சர்ச்சுக்கு சென்று வந்தார் எனவும் அதுவும் அவர்கள் வீட்டு பகுதியில் இருந்த சர்ச் இல்லாமல் இன்னொரு பகுதி சர்ச்சுக்கு சென்றதாகவும் அவருடைய மகள் கூறுகிறார்.
கொலை நடந்த இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஓவியம் அர்ஜுனை அலைக்கழிக்கிறது. இன்னொரு பக்கம் ஜெபநேசன் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் காவேரி என்ற ஒரு அப்பார்ட்மெண்ட்டை குறிப்பதாக கண்டுபிடிக்கிறார். ஜெபநேசன் கடைசியாக எழுதிய புத்தகத்தின் தலைப்பு காவிரி கறை என்பது இன்னொரு பக்கத்தில் விசாரணையைத் திசை திருப்புகிறது.
இன்னொரு பக்கம் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு டீச்சராக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுனனுக்கு பழக்கமாகிறார். திடீரென்று கிடைத்த ஒரு ஆதாரத்தை வைத்து தேடிய பொழுது வேல ராமமூர்த்தி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரின் தொடர்புகளும் கிடைக்கின்றன.
இதற்குப் பிறகு அர்ஜுன் என்ன செய்தார்? உண்மையில் குற்றவாளிகள் யார்? இந்தக் கொலைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் என்ன சம்பந்தம்?.. இதுவெல்லாம் இந்த படத்தின் திரைக்கதையில் சஸ்பென்ஸ் வைத்து சொல்லப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் மிக, மிக வித்தியாசமான நடிகர் அர்ஜுன். எந்த ஒரு இடத்திலும் காமெடி பேச்சு அல்லது பாசமான பேச்சுகளோ அவருடைய முகபாவணையில் வெளிவராது. ஆனால் இயல்பாக நடிப்பார். அதே போலத்தான் இந்தப் படத்திலும் ஒரு இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்கு என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்திருக்கிறார். ஆனால் இன்னமும் சிறப்பாக செய்திருக்கலாம் என்பது அவர் நடித்த பல படங்களை பார்த்து நமக்கு தோன்றுகிறது. சண்டைக் காட்சிகளில் கூட அதிகமாக உடம்பை அலட்டிக் கொள்ளாமல் யாரையும் கஷ்டப்படுத்தாமல் கொஞ்சமாக நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். ஆட்டிச குழந்தைகள் மீதான அவர் கொண்டிருக்கும் பாசம் இவரது நடிப்பில் வெளிவந்திருக்கிறது.
இருந்தாலும், இந்தக் கொலையில் அவருக்கான பங்கு எப்படி? ஏன்? என்ற கேள்விகளுக்கெல்லாம் அவர் விடை அளிக்கும்போது இன்னும் கொஞ்சம் அவரை நடிக்க வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
அப்பாவாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி வழக்கம் போலவே பாசமுள்ள ஒரு அப்பாவாக நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் காதலராக நடித்திருக்கும் பிரவீன் ராஜா அவருடைய நண்பரான ராகுலுடன் சேர்ந்து துவக்கத்தில் என்னென்னமோ பேசி காமெடிக்கு ட்ரை செய்தாலும் எதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை. காதல் காட்சிகளில்கூட பிரவீன் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு நடித்திருக்கலாம்.
ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த சிறுமி அனைகா மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார். அவருடைய நடிப்புக்கு அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் பாராட்டக் கூடியது.
பிரவீன் ராஜாவின் அம்மாவாக நடித்திருக்கும் பிரியதர்ஷினியின் கேரக்டர் ஸ்கெட்ச்சை கொஞ்சமும் நம்ப முடியவில்லை. இப்படி ஒரு பிரச்சனையை முடிப்பதற்குகூட தெரியாத வகையில் ஒரு 55 வயது அம்மா இருப்பார் என்பதை நம்மால் ஏற்க முடியவில்லை. இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சை படத்தின் திரைக்கதைக்காக மாற்றி வைத்திருப்பது நம்பும்படியாக இல்லை.
சரவணன் அபிமன்யூவின் ஒளிப்பதிவு தரம். அந்த அப்பார்ட்மெண்ட் காட்சிகளை எல்லாம் பறவை வியூவில் பார்க்கும்படியாக எடுத்திருக்கிறார். அதோடு படத்தின் உரையாடல் காட்சிகள் பெரும்பாலும் குளோசப் ஷாட்டுகளையே எடுத்து தள்ளி இருக்கிறார். ஏனென்றுதான் தெரியவில்லை.
பாரத் ஆசிகவனின் இசையில் பாடல்கள் திரையில் ஒலித்தன. நமக்குத்தான் எதுவும் ஏறவில்லை. பாடல் வரிகள் என்னமோ கொஞ்சம் புரிவதைப்போல இசை அமைத்திருக்கலாம். பின்னணி இசையை வசனம் பேசும்பொழுதும் சேர்த்து போட்டு நம்மை சோதித்திருக்கிறார் இசையமைப்பாளர்.
இயக்குநர் கொண்டு வந்து கொடுக்கும் காட்சிகளைத்தான் படத் தொகுப்பாளரால் எடிட் செய்து தர முடியும். அவர் இயக்குநர் எடுக்காத காட்சிகளை எடிட்டரால் தர முடியாது.
அந்த வகையில் இந்தப் படத்தின் சஸ்பென்ஸ், திரில்லரை காட்டுவதற்காக இன்னமும் கொஞ்சம் நியாயமாக காட்சிகளை படமாகி இருக்கலாம். அதை செய்யாததால் தன்னிடம் வந்ததை ஓரளவுக்கு உருட்டி புரட்டி நமக்கு தந்திருக்கிறார் படத் தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர்.
படம் துவங்கிய உடனேயே ஒரு கொலை நடந்து போலீஸ் விசாரணையும் முழு வீச்சில் நடக்க நமக்கும் பதைபதைப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் போகப் போக படத்தின் விசாரணையின் குறுக்கே ஒரு காதலும், ஐஸ்வர்யா ராஜேஷ் பிரவீன் ராஜன் கதையும் வேறு பக்கம் இழுத்துச் செல்ல நம்முடைய கவனம் திசை திரும்பிவிட்டது.
விசாரணை காட்சிகளிலாவது ஒரு சுவாரசியம் இருக்கும் என்று நினைத்தால் எப்போதும் தன்னுடைய டிரைவருடன் மட்டுமே விசாரணைக்கு வந்து, வந்து செல்கிறார் அர்ஜுன். இதுவும் நமக்கு சலிப்பாக தோன்றுகிறது.
இடைவேளைக்குப் பின்பே இந்த படம் சிறார்கள் எதிரான பாலியல் குற்றத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்பதை எளிதாக கண்டுபிடித்தாகிவிட்டது. இதுவே படத்தின் சஸ்பென்சை உடைத்துவிட்டதால் அதற்கு மேல் நமக்கு எதிர்பார்ப்பு எதுவுமே இல்லை. படத்தின் குற்றவாளிகளாக இருவரை காட்டி அவர்கள் கொல்லப்படுகின்ற காட்சிகளைகூட நாம் எதிர்பார்த்தது போலவே கட்டி இருக்கிறார் இயக்குநர்.
அந்தக் குழந்தை மற்றும் அந்தக் கயவர்கள் சம்பந்தப்பட்ட காட்சியை நிச்சயமாக வேறு வடிவத்தில் கொடுத்திருக்க வேண்டும். இதை சிறு குழந்தைகள் பார்க்க நேர்த்தால் நிச்சயமாக அவருடைய மனம் கலக்கமடையும். இது மாதிரியான காட்சிகளை படம் பார்க்கும்பொழுது இயக்குநர்கள் மிகவும் கவனத்தில் கவனத்தோடு செய்ய வேண்டும்.
நமக்குத் தெரிந்த கதை திரைக்கதையே இயக்குநர் தன்னுடைய பெயரில் போட்டுக் கொண்டு தன்னால் முடிந்த அளவுக்கு படத்தை கொடுத்து இருக்கிறார்.படம் இப்படித்தான் இருக்கும் என்று இடைவேளையிலேயே நம்மால் யூகிக்க முடிகிறது என்றால் நிச்சயம் தவறு இயக்குநர் மீதுதான் வந்து சேருகிறது. ஓடிடியில் வெளியானால்கூட அருகில் பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு இந்தப் படத்தை பார்க்க வேண்டாம் என்று சிபாரிசு செய்கிறோம்.
RATING : 3 / 5









