full screen background image

“காவல்துறை மீது நல்லெண்ணத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது” – நடிகர் கார்த்தியின் பெருமிதம்

“காவல்துறை மீது நல்லெண்ணத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது” – நடிகர் கார்த்தியின் பெருமிதம்

நடிகர் கார்த்தி, நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடிப்பில் ‘சதுரங்க வேட்டை’ இயக்குநர் வினோத்தின் இயக்கத்தில் சென்ற வாரம் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் மாலையில் வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் கார்த்தி, தயாரிப்பாளர்கள் S.R. பிரகாஷ் பாபு, S.R.பிரபு,  இயக்குநர் வினோத், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன், படத் தொகுப்பாளர் சிவநந்தீஸ்வரன், தமிழக காவல்துறையில் கைரேகை நிபுணராகப் பணியாற்றி ஓய்வு பெற்று, இந்தப் படத்திலும் அதே கேரக்டரிலும் நடித்திருந்த தனஞ்ஜெயன் மற்றும் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

producer s.r.prabhu

துவக்கத்தில் அனைவரையும் வரவேற்றுப் பேசிய தயாரிப்பாளர்  S.R. பிரபு, “இயக்குநர் வினோத் இந்த படத்தை ஆரம்பிக்கும்போது அவரிடம் இந்த ஒரு சப்ஜெட் மட்டும்தான் இருந்தது. கதையை அதிலிருந்துதான் மேம்படுத்தினோம்.

முதலில் இந்த கதைதான் ரொம்ப நம்பிக்கையான விஷயமா எங்களிடம்  இருந்தது. இரண்டாவதாக வினோத் மீது எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. அவர், தான் எடுத்து கொண்ட விஷியத்தில் தனக்கு என்ன வேண்டும்.. வேண்டாம் என்பதில் மிக தெளிவாக இருந்தார். தன் இரண்டாவது படத்திலே பெரிய படம் என்ற பதற்றம் இல்லாமல் இருந்தார்.  படம் எப்படி வரும் என்று எங்களிடம் முன்பே சொல்லியிருந்தார். ஆனால், அவர் சொன்னதைவிடவும் படம் நன்றாகவே வந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் சத்யனுடன் எங்களுக்கு இரண்டாவது படம் இது அமைந்திருக்கிறது. முதல் படமான ‘மாயா’வில் எங்களுக்கு முதுகு எலும்பு போல் இருந்தார் சத்யன். அவரும் இருக்கிறார் என்ற நம்பிக்கையில்தான் இருந்தோம். அவரும் அதனை உறுதிப்படுத்துவதுபோல அதிகமான உழைப்பை இந்தப் படத்தில் கொடுத்துள்ளார்.

theeran adhikaaram ondru movie team

கடும் குளிரிலும், கொடுமையான வெய்யிலிலும் உருவான படத்தை எங்களுடைய படக் குழுவினர் நல்ல முறையில் முடித்துக் கொடுத்தனர். படப்பிடிப்பு தளத்தில் எங்களுடன் இருந்து பொருளாதார  நிலையை பார்த்துவிட்டு தானாகவே முன் வந்து கதிர் சார் எங்களுக்கு பெரும் உதவி செய்தார்.

எல்லாரும் பாராட்டும்போதுதான் சிவநந்தீஸ்வரன் இந்த படத்தில் வேலை பார்த்தார் என்பதே தெரிகிறது. அவர் எங்களில் ஒருத்தர்தான் என்று நினைக்கையில் பெருமையாக உள்ளது.

படத்தை முழுமைபடுத்தியது ஜிப்ரானின் இசை. தேவையான இடங்களில் அருமையாக இசை அமைத்து உள்ளார்.

நிஜமான கைரேகை நிபுணரான தனஞ்ஜெயம் இந்தப் படத்தில் அதே கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் உண்மைக் கதையை மையமாக கொண்டதால் படத்தின் கதைக்காக வினோத் பலரிடம் கலந்து பேசினார். அவற்றில் முக்கியமான சிலவற்றை எடுத்து கொண்டார்.

‘கைரேகை நிபுணர் கேரக்டரில் தனஞ்செயம் ஸாரே நடித்தால் இன்னும் நம்பகத்தன்மையாக இருக்கும்’ என்று சொல்லித்தான் வினோத் அவரிடம் நடிக்கக் கேட்டார். தனஞ்செயம் ஸாரும் பெருந்தன்மையுடன் ஒத்துக் கொண்டு படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருக்கு எங்களது நன்றி.

கடைசியாக, காவல் துறையின் மீது நல்ல எண்ணம் ஏற்படும்விதத்தில் படம் அமைந்துதுதான் எங்களுக்கெல்லாம் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக கருதுகிறோம்..” என்றார்.

actor karthi 

விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “ஒரு படம் பார்த்துவிட்டு, ‘படம் நல்லா இருக்கு’ என்று சொன்னால் மட்டும் போதாது. மக்கள் அனைவரும் திரையரங்கில் வந்து படம் பார்க்க வேண்டும்.

எனக்கு இந்த படம் எப்படி அமைஞ்சிருக்குனா என் அண்ணன் சூர்யா சொன்னது மாதிரிதான். ‘நீ உன் பாட்டுக்கு உழைச்சுகிட்டே இரு. வெற்றி, தோல்வி பத்தி கவலைப்படக் கூடாது. உழைப்பு ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட மாதிரி. அது ஒரு இடத்துல போய் உட்காந்துகிட்டே இருக்கும். அதை நீ உடனே எடுக்கவும் முடியாது. ஆனா கண்டிப்பா ஒரு நாள் உனக்கு அது ரிட்டர்ன் கொடுக்கும்’ன்னு சொன்னார்.

இப்படி சூர்யா அண்ணன் எப்பவும் சொல்லிகிட்டே இருப்பாங்க. அப்படி அண்ணன் சொன்ன மாதிரி கிடைச்ச வெற்றிதான் இந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம்.

இப்பக்கூட ‘பருத்தி வீரன்’ படத்த கம்பேர் பண்ணி பேசுறாங்க. எனக்கு முதல் படமா அமைந்த அந்த படம் பெருமையா இருக்கு. ஆனா எத்தனை நாளைக்குத்தான் ‘பருத்தி வீரனை’ பத்தியே பேசிக்கிட்டிருக்கிறது..?

க‌ஷ்டப்பட்டு நடிச்சா அதுக்கான பலன் நிச்சயமா கிடைக்கும்ங்கிறதுக்கு இந்த ‘தீரன்’ படமும் ஒரு உதாரணம். இந்த படத்துக்காக நான் நிறையவே கஷ்டப்பட்டேன். சொல்லப் போனால் இதைவிட அதிகமா நான் கஷ்டப்பட்டு நடிச்ச படம் ‘காற்று வெளியிடை’தான். ஆனால் அதுக்கான ரிசல்ட் உடனே கிடைக்கவில்லை. இருந்தாலும் நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சது.

இந்த வழக்கு பற்றிய செய்தி இயக்குநர் வினோத்துக்கு ஒரு பத்திரிக்கை செய்தியாகத்தான் தெரிய வந்தது. எனக்கும் அது பலவிதங்களில், பலமுறை தேடி, தேடி வந்தது. என்னுடைய கேரியரில் எனக்கு இப்படியொரு நல்ல படமாக இத்திரைப்படம் அமைந்ததில் எனக்கும் பெரிய சந்தோசம்.

இயக்குநர் வினோத் இந்த காட்சியில் இந்த உணர்வுதான் வர வேண்டும் என முதலிலே எழுதி வைத்திருப்பார்.  படப்பிடிப்பை பற்றி அதிக திட்டங்களை வைத்து இருந்தார் வினோத். ஆனால் ஷூட்டிங் நடந்த இடத்தில் பல பிரச்சனைகள் இருந்தன.

ஏனென்றால் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு தலைவர், ராஜா, இளவரசரெல்லாம் இருந்தார்கள். அவர்களிடம் அனுமதி பெறுவதே பெரும்பாடாக இருந்தது. இதனால் தான்  நினைத்த விஷயம் குறைந்து கொண்டே வருகிறது என்று வினோத் வருத்தப்பட்டார். ஆனால் படத் தொகுப்புக்கு பின் படத்தைப் பார்த்துவிட்டு, ‘அவ்வளவு பிரச்னைகளை தாண்டி எடுத்தோம். படம் நல்லா வந்துருக்கு சார்’ என்றார் சந்தோஷமாக.

இப்போது ஒரு படம் எடுப்பதே அப்படித்தான் இருக்கிறது. நாம் பெரிய கனவுகளோடு செல்கிறோம். ஆனால், அதை எடுத்து முடிப்பது இறைவனின் செயலாகத்தான் இருக்கிறது. சிவநந்தீஸ்வரன் நன்றாக உழைத்து உள்ளார். முதல் படத்தில் அவரை பற்றிய கருத்து, நல்ல முறையில் வந்திருப்பது பெருமையாக இருக்கிறது.  

ஜிப்ரான் அனைவருக்கும் பிடித்தது போல் இசை அமைத்து உள்ளார். தனஞ்ஜெயம் சார் நன்றாக நடித்து இருந்தார். கைரேகை எடுப்பதை பற்றி அவர்தான் எங்களுக்கெல்லாம் எடுத்துக் கூறுவார். அதேபோல்தான் காட்சிகள் அமைந்தன. இத்திரைப்படம் காவல் துறை சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் வித்தியாசமான கதையாக அமைய இது போன்ற காட்சிகள்தான் உறுதுணையாக இருந்தன.

இந்த வழக்குகளில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் தங்களது கஷ்டங்கள் வெளியில் தெரியாமல் போய்விட்டது என்று நினைத்து இருப்பார்கள். இந்தப் படத்தை பார்த்துவிட்டு காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர் தொலைபேசி மூலம் என்னிடம் பேசி படத்தை பாராட்டினார்கள். முக்கியமான அந்த வழக்கில் சம்பந்தபட்ட ஒரு உயர் அதிகாரி, படம் பார்க்கும்போது மிக நெகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

கதையை நினைத்தது போலவே திரையில் கொண்டு வருவது என்பது மிக முக்கியமான ஒன்று. பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகளையெல்லாம் நடுநிலையாக இருந்து கதிர் சார் பார்த்துக்கிட்டார். இனி காவல்துறை சம்பந்தபட்ட படங்களிலெல்லாம் அவர் கண்டிப்பாக இருப்பார் என்று தோன்றுகிறது.

ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடத்தும்போது படக் குழுவினருக்கு உணவு பிரச்சனைதான் பெரிய பிரச்சினையாக இருந்தது. அப்போது தயாரிப்பாளர் பிரபு, மொத்த சமையல் குழுவையும் விமானம் மூலம் அழைத்து வந்து படக் குழுவினருக்கு தமிழ்நாட்டு உணவுகள் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

இயக்குநர் வினோத்தின் முதல் படமான ‘சதுரங்க வேட்டை’ மிக அருமையான படம். ஆனால், இந்த படம் அதையும் தாண்டி வந்துள்ளது. வித்தியாசமான கதைகளை இயக்கும் இயக்குநர்கள், தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ச்சியாக படங்கள் பண்ண முடியும்.

இந்த படத்தின் காதல் காட்சிகள் பற்றி பல்வேறு கருத்துக்கள் வந்துள்ளன. சில பேர் ‘காதல் காட்சிகள் நன்றாக இல்லை’ என்றும் சில பேர், ‘காதல் காட்சிகள் அருமையாக வந்துள்ளன’ என்றும் கூறினார்கள்.

ஒரு படத்திற்கு அனைத்துவிதமான விமர்சனங்களும் வரும். ஆனால், இந்தப் படத்திற்கு நல்லவிதமான விமர்சனகள் மட்டுமே வந்திருப்பது, நாங்கள் பெற்ற பாக்கியம்..” என்றார் பெருமையோடு..!

Our Score