தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலான பிரதிநிதிகள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்கள்.
அந்த மனுவில், “திரையரங்கங்களில் திரைப்படங்கள் திரையிடப்படும் நேரத்தை இரவு 2 மணி வரை அதிகரிக்க வேண்டும். திரைப்பட டிக்கெட் கட்டணத்தில் சேர்க்கப்படும் 8 சதவீத உள்ளாட்சி வரியை நீக்க வேண்டும். ஒரே ஒரு திரையுடன் இருக்கும் பெரிய திரையரங்கங்கள் 4 திரைகள்வரை அதிகரித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இருந்தன.
தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர்கள், “தற்போது தமிழகம் முழுவதும் திரையரங்கங்களில் 100 ரூபாய் வரையிலான டிக்கெட்டுகளுக்கு 12 சதவீத வரியும், 100 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கு 18 சதவீத வரியும் ஜி.எஸ்.டி. வரியாக விதிக்கப்படுகின்றது. இவற்றுடன் கூடுதலாக தமிழக அரசு 8 சதவீத உள்ளாட்சி வரி வித்துள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த 8 விழுக்காடு வரியை நீக்க வேண்டுமென தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம்.
திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படும் நேரத்தை காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை அதிகரிக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்கள் குறைந்து வருவதால், ஒரேயொரு திரையுடன் உள்ள பெரிய திரையரங்கத்தை, நான்கு திரைகள் வரை கொண்ட திரையரங்கமாக மாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் மானியமும், வரிவிலக்கு சலுகையும் வழங்கப்பட்டது. பிறகு வந்த ஆட்சியில் அது நீக்கப்பட்டது. மீண்டும் கலைஞர் ஆட்சிக்காலத்தில் இருந்தது போல் தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மானியம், வரிச் சலுகையை வழங்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளளார்.
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏழு நாள் கொண்டாட முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார் என்றும் தெரிவித்தார்கள்.









