full screen background image

கோலிசோடாவைத் தவிர மத்தது அனைத்தும் நஷ்டம்தான்..!

கோலிசோடாவைத் தவிர மத்தது அனைத்தும் நஷ்டம்தான்..!

திரைப்பட விழாக்களுக்குச் சென்றால் போலியாக புகழ்ந்து பேச வேண்டுமென்பது இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், டெக்னீஷியன்களுக்கு விதித்த தலைவிதி. கடமைக்கே என்று அதைச் செய்துவிட்டுத்தான் போகிறார்கள். ஆனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இந்த விதிவிலக்கு பொருந்தாது.. என்னதான் படமெடுத்தாலும், தியேட்டர்கள் இல்லையெனில் என்ன செய்வார்கள்..? எனவே அவர்கள் எங்கே சென்றாலும் உண்மையைத்தான் சொல்வார்கள்..

கடந்த 3 மாதத்தில் வெளிவந்த படங்களில் ‘கோலிசோடா’வைத் தவிர மற்ற அனைத்துமே நஷ்டம்தான்.. தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் மூன்று தரப்பினரும் இந்த நஷ்டத்தில் சிக்கிவிட்டதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதர் பேசியிருக்கிறார்.

நேற்று ‘ஜிகர்தண்டா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசும்போது உண்மையை நாகரிகமாக, தன்மையாக, வெளிப்படையாக பேசிவிட்டுப் போனார். அவர் பேசியதில் சில பகுதிகள்..

Tamilnadu Theatre Owners Association Press Meet Stills

“இப்பல்லாம் தியேட்டருக்கு வரும் கூட்டமே கம்மியாயிருச்சு. யாரையும் நான் காயப்படுத்தறதுக்காக இதை சொல்லலை.. இது நிதர்சனமான உண்மை. சில நாட்களுக்கு முன்னாடி கேயார் போன வருஷம் தயாரிப்பாளர்களுக்கு 200 கோடி நஷ்டம்னு பேசியிருந்தாரு. அது உண்மைதான். அதை யாரும் மறுக்கலை. அது கூடவே வினியோகஸ்தர்களுக்கு ஏற்படக்கூடிய நஷ்டம், திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்படக்கூடிய நஷ்டத்தையும் பார்க்கணும்.

தமிழ்நாட்டுல இருக்கிற மொத்த திரையரங்குகளோட எண்ணிக்கை 934. இவ்ளோதான் இருக்கு. சென்னையில இருந்து கன்னியாகுமரிவரைக்கும். மதியம் 12, 1 மணிக்கெல்லாம் எனக்கு போன் வந்திரும். படத்தோட நிலைமை எப்படியிருக்குன்னு கேப்பாங்க.. எனக்குப் பேசவே சங்கடமா இருக்கும். சுமாரா இருக்குன்னு சொல்லுவேன், ஓபனிங் எப்படின்னு கேப்பாங்க.. சுமாராதான் இருக்குன்னுவேன்.. கலெக்சன் எப்படின்னு கேப்பாங்க.. ஒரு 40 பெர்சண்டேஜ் இருக்குன்னு சொல்லுவேன். இதையெல்லாம் வெளில சொல்ல வருத்தமாத்தான் இருக்கும். ஆனா பேப்பர்ல விளம்பரம் கொடுக்கும்போது மாபெரும் வெற்றி, மாஸ்.. இப்படியெல்லாம் கொடுப்பாங்க. ஆனா, உண்மை இதுல்ல.

தியேட்டருக்கு படம் பார்க்க மக்கள் வரவே மாட்டேங்கிறாங்க. இந்த 6 மாசத்துல தியேட்டர் கலெக்சன் மிகப் பெரிய அளவுக்கு சரிஞ்சிருக்கு. பெரிய ஆர்ட்டிஸ்ட், சின்ன ஆர்ட்டிஸ்ட்ன்னு பாகுபாடு இல்லை. திரையரங்குகளுக்கு ஆடியன்சை வர வைக்கணும். வெள்ளிக்கிழமை காலையில படம் போட்டால், சாயந்தரமே அந்த படத்தைத் தூக்க  வேண்டியிருக்கு. அதிக செலவில் எடுக்கப்பட்ட படங்கள்ன்னால தயாரிப்பாளருக்கும் பெரிய பொருட்செலவு.. அவரோட அந்த படத்தை வாங்கற வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் சேர்ந்து சிரமப்படுறாங்க. இப்போ சமீபத்தில வந்த எந்தப் படமும் ஓடலை.. கோலிசோடா படத்துலதான் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் லாபம் கிடைச்சது.. இதுதான் உண்மை..

தியேட்டர்ல பணம் வசூலானாதான் வினியோகஸ்தர்களுக்கும் பணம் வரும், தயாரிப்பாளருக்கும் பணம் வரும். இதே நிலைமை இப்படியே நீடித்தால்,  இன்னும் சில மாதங்களில் 250 திரையரங்குகள்வரை மூடப்படும் நிலை ஏற்படும். இதை மாத்தணும்.  தியேட்டர்களுக்கு ரசிகர்களை வர வைக்கணும். அது மாதிரி படம் எடுக்கணும். நிச்சயமா இந்தப் படம் அப்படியிருக்கும்னு நம்புறேன்..”  என்று பேசி விட்டுப் போனார்.

ஸ்ரீதர் மறைமுகமாகக் குறிப்பிட்டுச் சொன்ன படங்கள் ‘ஜில்லா’வும், ‘வீரமு’ம்தான்.. இந்த இரண்டு படங்களின் கலெக்சன் ரிப்போர்ட்டுகளை தினமும் பப்ளிஷ் செய்து நாங்கதான் லீடிங்.. நாங்கதான் லீடிங் என்றெல்லாம் சொல்லிக் கொண்டவர்கள்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்..!

Our Score