நடிகர் பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேள்’ படத்தை STUDIO GREEN நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இயக்குநர் A.ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவா, ஈஸ்வரி ராவ் இருவரும் அம்மா, மகனாக நடித்துள்ளனர். C.சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரை பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் நாயகனான நடிகர் பிரபுதேவா பேசும்போது, “இயக்குநர் ஹரிகுமார் மிகச் சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பைவிடவும் பல மடங்கு அற்புதமான உழைப்பை தந்துள்ளார். ரசிகர்கள் இது செட்டா இல்லை.. ஒரிஜினல் லொகேஷனா என சந்தேகப்படும் அளவு அற்புதமாக கலை இயக்கம் செய்துள்ளார்கள். தனஞ்செயன் சாருக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இப்படத்தின் டப்பிங் பணி மிக சுவாரஸ்யமானதாக அமைந்தது. முழு டப்பிங்கையும் அரை நாளில் முடித்துவிட்டேன். இசையமைப்பாளர் சத்யா எனது பள்ளி கெமிஸ்ட்ரி ஆசிரியரை ஞாபகப்படுத்தினார். அவர் இப்படத்திற்கு மிக சிறப்பான இசையை தந்துள்ளார். அவரும், நானும் பல படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
ஒரு தயாரிப்பாளராக K.E. ஞானவேல் ராஜா மிக அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அவர் உருவாக்கி வெளியிட்டு வரும் படங்கள், பல தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.
ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார்.
உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல்முறையாக நடித்திருக்கிறேன். நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை செக் செய்து கொண்டே இருப்பார் இயக்குநர். நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார்.
ஈஸ்வரி மேடம் தமிழில் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார். அவரது நடிப்பு இப்படத்தில் மிக முக்கிய அம்சமாக இருக்கும். இப்படம் மிக அழுத்தமான படைப்பாக, அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும்…” என்றார்.
நடிகை சம்யுக்தா பேசும்போது, “இங்கு திரையிடப்பட்ட பாடலை படமாக்கும்போது நான் ஆக்ஸிடெண்டில் மாட்டிக் கொண்டேன். மைசூரில் பைக் ஓட்டும்போது எதிர்பாராதவிதமாக அது நடந்து விட்டது. பிரபு தேவா சார் அவரது பிஸியான நேரத்திலும் என்னை ஓய்வெடுக்க சொல்லி, ஒரு மாதம் கழித்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இப்போது வரையிலும் நான் 8 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் ஒரு படத்திலும் எனக்கு டான்ஸ் இல்லை. பிரபு தேவா சாருடன் முதல் வாய்ப்பை நான் மிஸ் செய்து விட்டேன். இது எனக்கு இரண்டாவது வாய்ப்பு. பிரபு தேவா சாருடன் நடனம் ஆடாமல் வேறெந்த படத்திலும் நடனமாடக் கூடாது என உறுதி எடுத்துள்ளேன். விரைவில் அவருடன் நடனமாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்…” என்றார்.
இசையமைப்பாளர் C.சத்யா பேசும்போது, “பிரபுதேவா சாரின் படத்திற்கு இசையமைப்பது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். இப்படத்தின் பின்னணி இசைக்காகத்தான் என்னை இப்படத்தில் தேர்ந்தெடுத்தார் இயக்குநர் ஹரிகுமார்.
படத்தில் அனைத்து நடிகர்களுமே அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். படத்தில் ஒரு காட்சியில் பிரபுதேவா தனது அம்மாவை கட்டிப் பிடிப்பார். அது என்னை மிகவும் பாதித்த உணர்வுபூர்வமான காட்சி. அதை இயக்குநரிடமும் சொன்னேன். இப்படத்தில் பிரபுதேவா சார் நடிப்பு மிகப் பெரும் பாராட்டை பெறும். தங்கள் வாழ்வுடன் ரசிகர்கள் தொடர்பு படுத்திக் கொள்ளும் படைப்பாக, மிக அழகான படமாக தேள் இருக்கும்…” என்றார்.
இயக்குநர் ஹரிகுமார் பேசும்போது, “இன்று நான் இங்கு நிற்க, முழுமுதல் காரணம் இயக்குநர் K.E.ஞானவேல் ராஜா சார்தான். என் மேலும் இந்த படத்தின் மேலும் நம்பிக்கை வைத்ததற்கு அவருக்கு நன்றி.
தேள் என்ற தலைப்பின் காரணம் இன்று அனைவருக்கும் புரிந்திருக்கும். தேள் ஒரு நேரத்தில் 40 குட்டிகளை போடும். அவையனைத்தையும் தன் தோள் மீது வைத்து பாதுகாக்கும். ஆல்கஹால் அதன் மீது ஒரு துளி பட்டாலே இறந்து விடும். மேலும் தேள் கடித்தவர்களுக்கு இதய பாதிப்பு வராது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது போல் பல ஒற்றுமைகள் இப்படத்தின் கதையோடு பொருந்திப் போகும்.
இசையமைப்பாளர் சத்யாவும், பாடலாசிரியர்கள் 4 பெரும் இணைந்து படத்தின் உணர்வுபூர்வமான பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளனர். பாடல் வரிகளில் பிரபுதேவா சார் பல யோசனைகள் சொன்னார். இப்படத்தில் வரும் அம்மா மகன் உறவு அனைவரும் எளிதில் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்வதாக இருக்கும்.
இப்படத்தில் பங்கு பெற்ற நடிகர்கள் இப்படத்தில் நடிக்க முதல் காரணம் பிரபுதேவா உடன் இணைந்து நடிக்க வேண்டுமென்பதுதான். இரண்டாவது இது ஞானவேல் ராஜா சார் தயாரிப்பு என்பதாகத்தான் இருந்தது.
ஈஸ்வரி மேடம் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள் இப்படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருப்பார்கள். சம்யுக்தா மிக அழகான நடிப்பை தந்துள்ளார். இந்நேரத்தில் என் தயாரிப்பாளருக்கு, இவ்விழாவிற்காக நன்றி கூறிக் கொள்கிறேன்…” என்றார்.
தயாரிப்பாளர் G.தனஞ்செயன் பேசும்போது, “நான் இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டேன். இந்தப் படம் இயக்குநர் ஹரிகுமார் வாழ்வில் மிக முக்கியமான படமாக இருக்கும். பிரபு தேவா சார் நடிப்பில் அவரின் மிகச் சிறந்த படமாகவும் இப்படம் இருக்கும். சூர்யாவுக்கு ஒரு நந்தா போல் பிரபுதேவா சாருக்கு இந்தப் படம் அமையும். செண்டிமெண்ட் காட்சிகளில் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்.
அனைத்து நடிகர்களும் தொழில் நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பை வழங்கியுள்ளனர். இப்படம் வெற்றிக்கு இப்போதே வாழ்த்துகளை கூறுகிறேன். இப்படத்தின் வசனங்கள் பாராட்டை பெறும்.
சம்யுக்தா வழக்கமாக அவரது நடனத்திற்கு பெயர் பெற்றவர். ஆனால் இப்படத்தில் அவரை வேறொரு கோணத்தில் காண மகிழ்ச்சியாக இருந்தது. அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்படும். இப்படம் K.E. ஞானவேல் ராஜா அவர்களுக்கு ஒரு மைல் கல்லாக அமையும்…” என்றார்.
தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா பேசும்போது, “Studio Green Movies நிறுவனம் எப்போதுமே கமர்சியலாக வெற்றியடையும் வகையிலான தரமான படங்களை தந்து வருகிறது. இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்குமே இப்படம் மிக முக்கியமான படைப்பாக இருக்கும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு பள்ளிக் காலத்திலிருந்தே பிரபு தேவா சாரின் அதிதீவிர ரசிகன் நான். அவரது சகோதரர் நாகேந்திர பிரசாத்தும் நானும் பள்ளி தோழர்கள், இருவரும் அவர் படத்தை ஒன்றாகத்தான் பார்ப்போம்.
ஒரு முறை அவர் வீட்டுக்கு சென்றபோது, பிரபு தேவா சார் ரிகர்சல் செய்வதை வாய் பிளந்து பார்த்து ஆச்சர்யப்பட்டேன். பிரபு தேவா சார் தன் வேலையில் கச்சிதமாக இருக்க கூடியவர் அவர் இடத்தில் இருந்து எனக்கு ஒரு சிறு பிரச்சனைகூட வரவில்லை.
இயக்குநர் ஹரிகுமார் மிக நேர்த்தியான படைப்பை தந்துள்ளார். சிவகார்த்திகேயன் எப்படி ‘டாக்டர்’ படத்தில் வசனங்கள் இல்லாமல் அசத்தியுள்ளாரோ, அதே போல் பிரபுதேவா சாரும் மற்ற நடிகர்களும் இப்படத்தில் அசத்தியுள்ளார்கள். யோகி பாபுவுக்கும் நாயகிக்கும்கூட அதிக வசனங்கள் இருந்தது. இப்படம் பார்க்கும் அனைவரும் அவர்களின் அம்மாவை மிஸ் செய்வார்கள். இப்படம் மிகச் சிறந்த குடும்ப திரைப்படமாக இருக்கும்…” என்றார்.