கடலூர் அரசு மருத்துவமனையிலவ் நடைபெற்ற குழந்தை கடத்தல் பற்றிய ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் ‘ஜோதி’.
இந்தப் படத்தில் வெற்றி, ஷீலா ராஜ்குமார், கிரிஷா குரூப், இளங்கோ குமரவேல், மைம் கோபி, நான் சரவணன், சாய் பிரியங்கா ருத், ராஜா சேதுபதி, பூஜிதா தேவராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – A.V.கிருஷ்ண பரமாத்மா, ஒளிப்பதிவு – செசி ஜெயா, இசை – ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், படத் தொகுப்பு – சத்யமூர்த்தி, பாடல்கள் – கார்த்திக் நேத்தா, பாடகர்கள் – கே.ஜே.ஜேசுதாஸ், பல்ராம், கார்த்திக், ஆர்த்தி கோவிந்த், நடனப் பயிற்சி இயக்கம் – சுவிகுமார், சண்டை பயிற்சி இயக்கம் – சக்தி சரவணன், பத்திரிகை தொடர்பு – வின்சன் சி.எம்., தயாரிப்பு – S.P.ராஜா சேதுபதி.
இந்தப் படம் வரும் ஜூலை 28-ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி பத்திரிக்கையாளரூடனான சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேப்பில் நேற்று மதியம் நடைபெற்றது.
முதலில் பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக இந்த ‘ஜோதி’ படத்தை திரையிட்டனர். படம் முடியும்வரை மிகவும் அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள், காட்சி முடிவில் பலத்த கரகோஷம் எழுப்பினர். அதுவே ஒரு நல்ல படத்திற்கான அடையாளமாக காணப்பட்டது.
ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் வெளியே வரும்போது திரைப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களையும், ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களையும் வாழ்த்தி இது மிகச் சிறந்த திரைப்படம் என பாராட்டு தெரிவித்தனர்.
தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் இயக்குநரான A.V.கிருஷ்ண பரமாத்மா, இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், துணை நடிகர் ஹரி க்ரிஷ், தயாரிப்பாளர் S.P.ராஜா சேதுபதி மற்றும் இந்த உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்மணி அந்த குழந்தையோடு குடும்பத்தாருடன் கலந்து கொண்டார்.
இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் இயக்குநரான A.V.கிருஷ்ண பரமாத்மா பேசும்போது, “இப்படம் ஒரு உண்மை சம்பவம் மட்டுமில்லாமல் பல உண்மை சம்பவங்களை உள்ளடக்கியது. இந்தியாவில் வருஷத்துக்கு 40,000 குழந்தைகள் தொலைந்து அதில் 11,000 குழந்தைகள் கண்டுபிடிக்கப்படாமலேயே போகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 173 குழந்தைகள் காணாமல் போகிறார்கள்.
இப்படம் ஒரு ஆணோட கோபத்தைவிட ஒரு பெண்ணோட அமைதி ரொம்ப ஆபத்தானது என்று நிச்சயமாக உணர்த்தும். வரும் ஜூலை 28-ம் தேதியன்று எங்களின் ‘ஜோதி‘ படம் திரையரங்குகளில் வெளியாகிறது…” என்றார்.
இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் கூறியதாவது, ‘நா நா’ படத்தின் மூலம்தான் இந்தப் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முதலில் என்னிடம் படம் வரும்போது படத்தில் பாடல்களே இல்லை. அதிக காட்சிகளில் பல எமோஷனல் காட்சிகள் இருந்ததால் அதையெல்லாம் பாடல்கள் மூலம் கொடுத்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என நினைத்து என் விருப்பத்தை தெரிவித்தேன். பாடல்கள் சிறப்பாக இருந்ததால் இயக்குநரும், செலவை பொருட்படுத்தாமல் தயாரிப்பாளரும் உடனே சம்மதித்துவிட்டனர்..” என்றார்.
துணை நடிகர் ஹரி க்ரிஷ் பேசும்போது, “என்னை முதலில் ஒரு சிறிய கதாபாத்திரம் என்று சொல்லித்தான் அழைத்தார்கள். படப்பிடிப்புக்கு சென்ற பிறகுதான் தெரிந்தது எனது கதாபாத்திரம் எவ்வளவு பெரியது என்று.!
மற்றவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ அந்த அளவிற்கு எனது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. படப்பிடிப்பின்போது எனது இரண்டு கால் ஜவ்வும் கிழிந்து மூன்று மாத காலம் படுத்த படுக்கையாகவே இருந்தேன். அந்த அளவிற்கு கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறோம்…” என்றார்.
தயாரிப்பாளர் S.P.ராஜா சேதுபதி பேசும்போது, “இந்த உண்மை சம்பவத்தை அறியும்போது இதைப் படமாக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். திரைப்படக் கல்லூரியில் A.V.கிருஷ்ண பரமாத்மா இயக்கிய குறும் படத்தை பார்த்திருக்கிறேன். மிகவும் சிறப்பாக இருந்தது.
அதனால் இந்தக் கதையை எழுதி, இயக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தேன். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. எந்தக் குழந்தையிடம் இருந்து, இந்த படத்தை ஆரம்பித்தமோ, அந்தக் குழந்தையை இப்போது உங்கள் முன் காட்டுகிறோம்…” என்று கூறியவர் அக்குழந்தையையும், அந்தக் குடும்பத்தையும் மேடையில் பத்திரிகையாளர்களிடத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார்.
.