full screen background image

தரமணி – சினிமா விமர்சனம்

தரமணி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஜே.எஸ்.கே.புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஏட்ரியன் நைட் ஜெஸ்ஸி, அழகம்பெருமாள், ஜே.எஸ்.கே., லிஸி ஆண்டனி, சாரா ஜார்ஜ், அபிஷேக் டி.ஷா, நிவாஸ் ஆதித்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர், படத் தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத், இசை – யுவன் சங்கர் ராஜா, கலை – குமார் கங்கப்பன், பாடலாசிரியர் – நா.முத்துக்குமார், ஒலி வடிவமைப்பு – எம்.ரவி, ஆடை வடிவமைப்பு – வீணா சங்கரநாராயணன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, நிழற் படங்கள் – ஜெய்குமார் வைரவன், விளம்பர வடிவமைப்பு – நந்தன் ஜீவா, எழுத்து, இயக்கம் – ராம்.

‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ படத்திற்கு பிறகு தனது மூன்றாவது படைப்பான இந்தத் ‘தரமணி’யிலும் தனது படைப்புத் திறனை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராம்.

இதுவரையிலான ஆண்-பெண் உறவுகள், குடும்பம் மீறிய உறவுகள்.. எல்லை தாண்டிய நட்புகள் இது எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு சில படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் அவைகளில் எந்தப் படமும் இந்த அளவுக்கு பட்டவர்த்தனமாய் உண்மையைப் பேசவில்லை. முதல்முறையாக, முழுமையாக ஒரு ஆணையும், பெண்ணையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் இயக்குநர் ராம்.

தனது முதல் காதல் முறிந்து போன நிலைமையில் வேதனையைச் சுமந்து கொண்டு ஒற்றை அறையில் நண்பர்களுடன் ஷேரிங் செய்து வாழும் டீஸண்ட்டான பிச்சைக்கார ஹீரோவுக்கும், திருமண வாழ்க்கையில் சில மாதங்களே வாழ்ந்து அந்த வாழ்க்கையை தியாகமாய் விட்டுக்கொடுத்துவிட்டு தனியே வந்து ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து இப்போதும் தனியாய், சுயமாய் நின்று உழைத்துக் கொண்டிருக்கும் அல்ட்ரா மாடர்ன் ஆங்கிலோ இந்தியப் பெண்ணுக்குமான நட்பு, காதல், காமம், கலவி, குடும்பம், அன்பு, பாசம் எல்லாவற்றையும் பங்கு போட்டுச் சொல்கிறது இந்தக் கதை.

ஒரு கன மழைப் பொழுதில் தனது இரு சக்கர வண்டியின் சக்கரம் பழுதடைந்த நிலையில் மழைக்காக ஒதுங்கிய இடத்தில் தனது கால்களையும், தன்னையும் குறி பார்க்கும் பிரபு நாத்தை பார்த்து சீறுகிறாள் ஆல்தியா. இதிலிருந்து துவங்குகிறது குழப்பமில்லாத இவர்களது நட்பு.

பார்த்தவுடன், பேசியவுடன் தன்னைப் பற்றிச் சொல்லி தனது முறிந்து போன காதலைப் பற்றிச் சொல்லி நட்பாகிறான் பிரபு. மழை விட்டவுடன் வண்டியை தான் தள்ளலாமா என்று கேட்டு உரிமையுடன் தள்ளி வருபவன், அதே உரிமையுடன் வண்டி தயாரானவுடன் அவள் பின்னால் ஏறி அமர்கிறான்.

இதில் துவங்கும் இவர்களது நட்பு “உனக்கு சிகரெட் பிடிக்கத் தெரியலை…” என்று ஒருவித உரிமைப் போராட்டத்தில் துவங்கி அவளது குழந்தைக்கு உற்ற தோழனாகப் பாவித்து.. அவளுக்கு உரிமையுடன் உதவிகளை செய்யப் போய்.. அவளுக்குள் ஒரு கவன ஈர்ப்பை தன் பால் ஈர்க்கிறான் பிரபு.

அலைந்து திரியும் கேசமும், நீண்ட நெடிய தாடியும்.. சொல்ல முடியாத பதில்களையும் தன்னகத்தே வைத்திருக்கும் பிரபுவை பார்த்தவுடன் ஆல்தியாவின் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. ஆறு மாதங்களுக்கொரு புதிய புதிய ஆட்களை நண்பர்களாக வீட்டுக்கு அழைத்து வரும் மகள் என்கிற கோபத்தில் ‘பிட்ச்’ என்று வார்த்தையை பேரனிடம் பாட்டி உதிர்க்க.. இதையெதிர்த்து ஆல்தியா அந்த இரவில் வெளியேறி தனது முன்னாள் நண்பனின் பிளாட்டில் குடியேறுகிறாள்.

அந்த வீட்டின் பிரமாண்டமும், இனிமேல் ஆல்தியாவுக்கு பின்னணியில் யாரும் இல்லை என்கிற தைரியமும் பிரபுவுக்கு தோள் கொடுக்க தானும் இங்கேயே தங்கிக் கொள்வதாய் சொல்லி உரிமையாய் உள் நுழைகிறான். வீட்டுக்குள் நுழைந்தவன் ஆல்தியாவின் மனதிற்குள் நுழைந்து, கடைசியாய் அவளது உடலையும் ஆக்கிரமிக்கிறான்.

மாதம் 80000 ரூபாய் சம்பாதிக்கும் தைரியம் இருந்தாலும் தனது மகன் ஏட்ரியனுக்காக ஒரு ஆண் துணை தேவை என்று வந்தவனை அரவணைக்கும் ஆல்தியாவுக்கு போகப் போக உளவியல் ரீதியாக சோதனைகளைக் கொடுக்கிறான் பிரபு.

ஆணின் மனம் மிக விசித்திரமானதுதான். ஆனால் பிரபுவின் மனம் ஒட்டு மொத்தமாய் விசித்திரமாய் இருக்கிறது. சந்தேகம் என்னும் பூச்சானை மனம் முழுவதும் அப்பியிருக்கும் பிரபு தனது சந்தேக  கேள்விகளாலும், ஆல்மியாவின் ஒழுக்கம் குறித்து பல நா கூசும் வார்த்தைகளாலும் அவர்களின் அழகிய வாழ்க்கையைச் சிதைத்துப் போடுகிறான்.

ஏற்கெனவே ஆங்கிலோ இந்தியன் என்கிற எல்லாவற்றுக்கும் தயார் என்கிற இனம் சார்ந்த பெயருடன், சிறு வயது பையனுடன், கொள்ளை கொண்ட அழகுடன் இருக்கும், ஆல்தியாவைச் சுற்றி எண்ணற்ற காமக் கண்கள்.. பார்க்கும் ஆண்களெல்லாம் அவரை எங்கே என்று இடம் பார்க்காமல் வலை விரித்தபடியிருக்க.. ஒவ்வொரு ஆணிடமும் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவே படாதபாடுபடும் ஆல்தியாவுக்கு வீட்டிலேயே இருக்கும் தனது லைப் பார்ட்னரின் கொடூர பேச்சுக்கள் கொடுமையை அளிக்க.. அவனை வீட்டைவிட்டு வெளியே அனுப்புகிறாள்.

இருந்தவரையிலும் உணவுக்கும், பணத்துக்கும் பிரச்சினையில்லாமல் இருந்த பிரபுவுக்கு எல்லையற்ற தரமணி பகுதியும், மீதமிருக்கும் சென்னையும் ‘வா’ என்று அழைத்தாலும் பலவித பிரச்சனைகளை அவனுக்குக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கின்றன.

போகாத இடந்தேடி அலைந்து திரிந்து மிகப் பெரிய அவமான அனுபவங்களையும், வாழ்க்கை என்னும் சக்கரத்தின் வியூகத்தையும் கண்ட பின்பு… உண்மை தெரிந்து, உள்ளம் தெளிந்து, மனம் திருந்தி, திரும்பி வந்து நிற்கும் பிரபுவை… ஆல்தியா எப்படி எதிர்கொண்டாள் என்பதுதான் படத்தின் இறுதிப் பகுதி..!

‘தரமணி’ என்பது வெறும் பெயர் மட்டுமல்ல.. நவீன இந்தியாவின் அடையாளமாய் சென்னையில் இருக்கும் பகுதி. ஒரு பக்கம் பழைய பஞ்சாங்கத்தில் ஊறிப் போயிருக்கும் சென்னையின் பூர்வீக மக்களும், இன்னொரு பக்கம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பயணித்து வந்து இந்தியாவை தவிர மற்ற நாடுகளுக்காக இரவு, பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் பல்வேறு மத, இன இளைஞர்களும், இளைஞிகளும் வாழும் பகுதி..!

நவீன யுக யுவதிகளும், இக்கால இளைஞர்களுக்குமாக தரமணியைச் சூழ்ந்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் நடக்கும் இந்தக் கதைக்கு இந்தத் தலைப்பு கச்சிதமான பொருத்தம்.!

இந்தத் ‘தரமணி’ வெறுமனே ஒரு பிரபுவையும், ஒரு ஆல்தியாவையும் மட்டுமே குறிப்பிடவில்லை. இவர்களைச் சுற்றி வாழும் பல்வேறுவகைப்பட்ட மனிதர்களையும், அவர்களுக்குள் இருக்கும் உறவுச் சிக்கல்களையும், தற்காலத்திய குடும்ப வாழ்வின் பிடிமானவங்களையும் துவைத்துப் போட்டிருக்கிறது ‘தரமணி’.

‘காதல்’ என்ற வித்தையைப் பயன்படுத்தி தான் வாழ நினைக்கும் காதலி.. காதலியின் எதிர்பாராத ஏமாற்றத்தால் தன்னை இழந்து தவிக்கும் காதலன்.. ஓரினச் சேர்க்கையாளன் என்பதை இந்தச் சமூகம் ஏற்காது என்பதாலேயே மணமுடிக்கும் ஒரு மகன்.. திருமண பந்தத்திற்குப் பின்பும் தனது ‘கே’ காதலனை கைவிட முடியாமல் தவிப்பனை தான் கைவிட்டு வாழ்த்தி வழியனுப்பும் மனைவி.. கணவன் அகன்ற பிறகு தன் வயிற்றில் வளரும் குழந்தையை அழிக்க நினைக்காமல் தானே பெற்றெடுத்து வளர்க்க முடிவெடுக்கும் தாய்.. அதீத சுதந்திரம்.. கை நிறைய சம்பளம்.. இதனால் தானே சுயமாய் முடிவெடுக்கும் திறன்.. சிகரெட்டும், மதுவும் கூடவே பிரியாமல் இருக்கும் நாயகி.. வல்லூறுகளாய் தன்னைச் சுற்றி வரும் பலவித மனிதர்களையும் சமாளித்தபடியே வாழ்க்கையை நகர்த்தும் ஆல்தியா..

நவீன தொழில் நுட்பத்தின் உதவியோடு முடிந்த அளவுக்கு ஏமாறும் மனைவிகளை, காதலிகளை ஏமாற்றும் ஒரு நாள் காதலன்.. சபலம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கும் அப்பாவி மனைவிகள்.. அதிகாரத்தால் பெண் ஊழியர்களை படுக்கைக்கு அழைக்கும் மேலதிகாரிகள்.. எதற்கும் பயம் வேண்டாம். நான் துணை நிற்கிறேன் என்று பல்லைக் காட்டும் ஆணாதிக்க சமூகத்தின் அங்கத்தினர்கள்.. மகளின் வழி தவறிய வாழ்க்கையை ஏசுவிடம் மட்டுமே இறைஞ்சி கேட்கும் தாய்.

தான் மட்டும் வேலி தாண்டும் வெள்ளாடாக இருந்து கொண்டு வீட்டில் இருக்கும் மனைவியை பத்தினியாக இருக்கும்படி அறிவுறுத்தும் ஆண்கள்.. மனைவிக்கான தேவையை பூர்த்தி செய்யத் தவறி தனது தவறை உணர்ந்து உணர்த்தியவனையும் அரவணைக்கும் தெய்வ குணம் கொண்ட இன்னொரு ஆண்.. அடித்துப் போட்டால்கூட கேட்க நாதியில்லை என்று சொல்வதற்கு எடுத்துக்காட்டாய் திகழும் அயல் மாநிலத்து தொழிலாளிகள்.. ஆணின் ஒழுங்குபடுத்தலில் வாழத் துடிக்கும் பெண்.. அதே ஆணின் வழிகாட்டுதலில் அன்பிற்காக ஏங்கும் சிறுவன்..

அ.முத்துலிங்கத்தின் சிறுகதையில் ஏக்கமாய் ஏங்க வைத்த புறாக் கதை.. சாலையோரத்தில் அம்போவென்று இறந்து கிடக்கும் நாய்..  இந்த நாயினும் கீழாக நைட் கிளப் வரும் பெண்கள் இப்படித்தானோ என்று நினைத்து எவ்வளவு என்று கேட்கும் சில ஆண் நாய்கள்.. காதலனை ஏமாற்றியதற்கு தண்டனையாக கணவன் என்னும் ஒருவன் வந்திறங்கியிருக்கும் கொடூரம்.. அந்த தூய காதலை நினைத்து ஏங்கும் முன்னாள் காதலி..! தான் செய்த திருட்டுக்காக மனம் திருந்தி அக்குடும்பத்தாரிடம் பணத்தைத் திரும்ப ஒப்படைக்கச் செல்லும் ஒருவன்..

இப்படி பலவித கேரக்டர்களின் உணர்ச்சிப்பூர்வ பரிமாணங்களை அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும்விதமாய் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராம். பெரு வணிக மயமாதலில் அடியோடு மாறிப் போன நமது குடும்ப உறவுகள்.. நட்புகள் இதையெல்லாம் இன்னமும் புரிந்து கொள்ளாத நம்மிடையே இருக்கும் சில மனிதர்கள்.. இவற்றையெல்லாம் தொகுத்துதான் இந்தத் ‘தரமணி’யை செதுக்கியிருக்கிறார் ராம்.

ஆல்தியா என்னும் கேரக்டரில் வாழ்ந்திருக்கும் ஆண்ட்ரியாவுக்கு இது மிக மிக முக்கியமான திரைப்படம். அவருடைய அழகான தோற்றம், அற்புதமான உடல் மொழி, சின்ன சின்ன உணர்வுகளைக்கூட வெளிப்படுத்தும் நுட்பமான முக பாவனைகள், அழுத்தமான வசன உச்சரிப்புகள் என்று அனைத்துமே ஆண்ட்ரியாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு பொருத்தமாய் இருக்கின்றன.

போனில் டார்ச்சர் செய்த்தோடு நடு ரோட்டிலும், டூவீலரிலும் பயணிக்கும்போதும் “அவன் ஏண்டி உன்னைக் கட்டிப் பிடிச்சான். நட்ட நடுரோட்டுல அதைச் செய்யலாமா…?” என்று கத்தும் காதலனிடமிருந்து தப்பிக்க நினைக்கும் அந்தக் காட்சிகள் ‘ஐயோ பாவமே’ என்று மாதாவிடம் முறையிடச் செய்கிறது.

வீட்டில் இதேபோல் சந்தேகப்பட்டு கத்து, கத்தென்று கத்தும் காதலனிடம் பதிலுக்கு பதில் பேசும் அந்த நீண்ட, நெடிய காட்சியில் ஆண்ட்ரியாவும், பிரபும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். என்ன சொல்லி பாராட்ட என்று தெரியவில்லை..?!

இதேபோலத்தான் தனது மனைவியின் சிறு சபலத்திற்கு தானும் ஒருவகையில் காரணம் என்றெண்ணி அதையே கோபம் மற்றும் குமுறலாக வடிக்கும் அழகம் பெருமாளும், கடைசியில் அவனை அழைத்து கட்டியணைத்து “ஒரு தப்பை உணர்த்திட்ட..” என்று சொல்லி பெருந்தன்மையோடு மன்னித்து அனுப்பும் அந்தக் காட்சி படம் பார்ப்போரை பெரிதும் நெகிழ வைக்கிறது.

இன்னொரு பக்கம் ஆண் என்னும் திமிரில் அதைவிடவும் போலீஸ் அதிகாரி என்கிற அதிகாரத் திமிரில் தறிகெட்டு அலையும் ஒரு ஆண், தன் மனைவி மட்டும் சீதை போல் கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும் இருக்க நினைத்து அது முடியாமல் போய் வீட்டிற்கு வந்து ருத்ர தாண்டவம் ஆடும் இந்தக் காட்சியில் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், நடிகர்கள், இயக்குநர் அனைவருமே போட்டி போட்டு தங்களது திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்கள். மனதாரப் பாராட்டுகிறோம்..

காவல்துறை அதிகாரி ஜே.சதீஷ்குமாரின் மனைவியாக நடித்திருந்த லிஸி ஆண்டனியின் அற்புதமான நடிப்பில் இந்தக் காட்சிதான் படத்தின் ஹைலைட்டாக இருக்கிறது. இப்படியொரு மனைவிக்கான பின்புலமும் நியாயப்படுத்தப்படுகிறது. “அவன்கூட படுத்தீல்ல..?” என்ற கணவனின் ஆவேசக் கேள்விக்கு “ஆமாம்.. படுத்தேன்.. படுத்தேன்…” என்று பதினோறு முறை ஆக்ரோஷமாக கத்தும் அந்த மனைவியின் நடிப்பு தத்ரூபம்..!

“புத்தகம் படிக்கும்போதே நினைச்சேன்டீ…” என்று கணவன் கத்தும் காட்சியில் ஒலிக்கும் வசனம் அரை நூற்றாண்டு காலமாக இந்தியாவின் வீடுகளில் ஒலிக்கின்ற வசனங்கள்தான்..! கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார் ராம்.

“உனக்குக் கிடைக்க ஹஸ்பெண்ட் நல்லவர்டி..” என்று ஆதங்கமாய் ஆண்ட்ரியா கேட்க, “நாய்ல நல்ல நாய், கெட்ட நாயெல்லாம் ஏதுடி..? பிஸ்கட்டை தூக்கிப் போட்டா வாலாட்டப் போதுக..” என்ற தோழியின் வார்த்தைகள் சுளீர்..!

வசியம் மிகுந்த வார்த்தைகளினால் காதலனை மடக்கி அவன் கொடுக்கும் பணத்திலேயே அமெரிக்கா சென்றடைந்து பின்பு மெல்ல, மெல்ல காதலனிடமிருந்து விலகி ஓடும் காதலி.. தான் யாரை நம்பி கழுத்தை நீட்டினமோ அவனிடமே தனக்கு நிம்மதியில்லை என்று தெரிந்தாலும் தனது முன்னாள் காதலனை அழைத்து தான் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் பாங்கில் காதலியையும் சமன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

இங்கேதான் அந்த ஆணாதிக்கத் திமிர் பொங்கி வழிய.. எந்த உணர்ச்சியும் அற்று படுக்கையில் கிடக்கும் காதலியுடன் செல்பியெடுத்து இதனை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டும் அந்த புத்தி ஆண்களுக்கே உரித்தானது. உடனேயே சாக்லெட் டப்பாவிற்குள் பணத்தை வைத்திருந்து நீட்டும் காதலியின் குணம் இதற்குக் கொடுக்கும் செருப்படி..! அவருடைய மிக நிதானமான, மென்மையான பேச்சு அவருக்குள் இருக்கும் சோகத்தை அழகாக வெளிக்காட்டியிருக்கிறது..! வெல்டன் அஞ்சலி..

அதே சமயம் யாருடைய செயலையும் நியாயப்படுத்தாமல், சரியென்றும் சொல்லாமல் அவரவர் தரப்பில் இருந்து பார்க்கும்போது அது நியாயமாய் தெரியும்விதமாய் காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் மீதான தரத்தை உயர்த்தியிருக்கிறது. அனைத்து குற்றங்களுக்கும் ஒரு பின்னணி உண்டு. அனைத்து உண்மைகளுக்குப் பின்னாலும் ஒரு வலியிருக்கும் என்பதையும் உணர்த்தியிருக்கிறார் ராம்.

புதுமுகம் வசந்த் ரவியை தேடிப் பிடித்து கதாபாத்திரத்திற்கு பொருத்தமாய் பொருந்த வைத்திருக்கிறார் இயக்குநர். அனாதை என்ற உண்மையை பார்த்தவுடன் தெரிவிக்கும் முகமாய் சாந்தமான அவரது தோற்றம்.. காதலியினால் பட்ட ஏமாற்றம்.. ஆண்ட்ரியாவினால் படும் குழப்பம்.. இதனால் அவருக்குள் விழையும் ஆத்திரம்.. இந்த ஆத்திரத்தினால் அவர் செய்யும் குற்றச் செயல்கள்.. இறுதியில் அவர் தனியாய் நாகூருக்கு போய் தான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்யும் செயல்கள் என்று அனைத்திலும் தனியே தனி மரமாய் நின்று உழைத்திருக்கிறார் வசந்த் ரவி.

சென்னையில் படூரின் அருகேயிருக்கும் ஏரிக்கு நடுவில் சாலை.. அந்த ஏரியைக் காட்டும் பிரம்மாண்டம்.. ‘தரமணி’ என்னும் சொர்க்கபூரியின் ஏரியல் வியூ என்று அனைத்தையும் தேனி ஈஸ்வரின் கேமிரா முழுமையாகப் பதிவு செய்திருக்கிறது.

பல காட்சிகளில் கேமிராவில் படமாக்கப்படுவதற்காகவே இத்தனை கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார்களோ என்று எண்ணவும் வைத்திருக்கிறார் தேனி ஈஸ்வர். மேலே குறிப்பிட்ட நான்கு காட்சிகளிலும், கூடுதலாக நாகூரில் பயணிக்கும் காட்சிகளிலும் ஒளிப்பதிவு ஒரு மேதையால் செய்யப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது இந்தப் படம்.

புறாவின் பயணத்தை அத்தனை அழகாக படமாக்கி.. அதன் மரணத்தைக்கூட ‘மரணம்கூட அழகு’ என்ற வாக்கியத்தை நிரூபிப்பதுபோல படமாக்கியிருக்கும் தேனி ஈஸ்வருக்கு ஒரு பூச்செண்டு..!

யுவன் சங்கர் ராஜாவுக்கு, ராம் என்றால் தனி பிரியம். இதில் அடித்து ஆடியிருக்கிறார். பின்னணி இசைக்கென்றே இந்தப் படம் பேசப்பட வேண்டும். அப்படியொரு இசையை வழங்கியிருக்கிறார் யுவன். பாடல் காட்சிகளில் வார்த்தைகளை மிதக்கவிட்டு இசையை அடித்தளமிட்டு ஒலிக்க வைத்திருப்பதால் பாடல்கள் கவனம் பெற்றன. நாகூர் பாடலில் ஒரு இளையராஜாவை திரும்பவும் பார்த்த திருப்தியைக் கொடுத்திருக்கிறார். இறந்தும் வாழ்ந்திருக்கிறார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.

இத்தனை கொடூரமான குடும்பக் காட்சிகள் கொண்ட திரைக்கதையில் வசனங்களை கேட்கவிடாமல் செய்யாத அளவுக்கு பின்னணி இசையை ஒலிக்க வைத்து.. கதாபாத்திரங்களின் உணர்ச்சிபூர்வ நடிப்பை முழுமையாக ரசிக்க வைத்திருக்கிறார் யுவன்.  நன்றிகள் யுவனுக்கு..!

படத் தொகுப்பாளர் கர் பிரசாத்தின் கச்சிதமான நறுக்குதலில் காட்சிகள் ஒன்றையொன்று கத்திரிக்காமல் தொடர்புடன் இருக்க.. காட்சிகள் அனைத்தையும் ரசிக்க முடிந்திருக்கிறது.

படம் முழுவதிலும் ஆண்ட்ரியாவின் முகம் நடித்திருப்பதை போலவே, அவருடைய தொடைகளும் நடித்திருக்கின்றன. இத்தனை சிறந்த திரைப்படத்தில் உடலழகை மையப்படுத்தலாமா என்கிற கேள்விக்கு பதில் படத்தின் கதைக் கருவே இதுதான் என்பதுதான்..!

பெண்கள் எந்த ஆடை உடுத்தினாலும் தூக்கிச் சென்று பலாத்காரம் என்ற செய்தி வரும் இந்த வேளையில் தனக்குப் பிடித்தமான முறையில், பிடித்தமான வடிவமைப்பில் உடையணியும் ஒரு பெண்ணுக்கு அந்த உடையே அவளது குணத்தை நிர்ணயிப்பதாக இருப்பது இந்திய பெண்களுக்கு மட்டுமே நேர்ந்த ஒரு சோகச் செய்தி.

இதைத்தான் இந்தப் படத்தில் பல இடங்களில் குறிப்பிடுகிறார் ஆல்தியா என்னும் ஆண்டிரியா. பார்க்கும் ஆண்களெல்லாம் அவரை படுக்கைக்கு அழைக்க.. ஒவ்வொருவரிடத்திலும் அவர் தப்பிக்கும் பாங்கு.. என்னடா உலகம் இது..? என்றுதான் சொல்ல வைத்திருக்கிறது.

ஆண்ட்ரியாவின் பாஸாக நடித்திருக்கும் அபிஷேக் டி.ஷாவின் வசன உச்சரிப்பும், நடிப்பும் மிக அருமை. அந்தக் காட்சி முழுவதிலுமே புதிய கோணத்தில் படமாக்கியிருப்பதால் மிகவும் ரசிக்கவும் முடிந்திருக்கிறது.

இதேபோல் அபிஷேக்கை அடுத்த நாளே தன் காலில் விழ வைத்து வேலையைவிட்டு அவராகவே ராஜினாமா செய்துவிட்டு போகும் அளவுக்கு டிராமா போடும் ஆல்தியாவின் அந்த புதிய திரைக்கதைக்கு ஒரு ஷொட்டு..!

குறியிடூகள் படம் முழுக்க நிரம்பி வழிகின்றன. படம் துவங்கும் அந்த பறவை பார்வை ஷாட்டில் இருந்து.. இறுதியில் கும்மிருட்டில் கதவுக்கு அந்தப் பக்கம் ஆல்தியாவின் ஏமாற்றமான அழுகையும், இந்தப் பக்கம் தான் திருந்தினாலும் அதை நிரூபிக்க முடியாத சூழலில் திரும்பிப் போகும் பிரபுவின் இருளடைந்த முகம்வரையிலும் படத்தின் தன்மை குறையவில்லை..!

தான் திருடிய பணத்தைத் திருப்பி ஒப்படைக்க நாகூர்வரையிலும் சென்று அங்கே ஒரு பாடத்தைக் கற்றெடுக்கும் பிரபு அங்கேயே அப்போதே தனது ‘தான்’ என்னும் எண்ணத்தை உடைத்தெறிவதாகவும், ஏரியில் மிதக்கும் பிணத்தைத் தன் தோள் மீது தூக்கி வைத்துக் கொண்டு வந்து கரையில் போடும்போதும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் நியாயப்படுத்தப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம்.

ஆல்தியாவின் கிறித்துவ மதம், தன்னுடைய எதிர்பாராத இறப்பினால் பணத்தைத் தொலைக்கும் ஒரு முஸ்லீம் குடும்பம்.. இவற்றுக்கிடையே சதி செய்யும் ஒரு இந்துத்துவ பிரபுநாத் என்று மூன்று மதங்களையும் சேர்த்து படமாக்கியிருந்தாலும், இது இந்துத்துவத்திற்கு எதிரானதா என்றுகூட சொன்னாலும் கவலையில்லை. பெருவாரியான மதத்தில் இருப்பவர்களில் ஒருவர் பிரபு என்று நினைத்துக் கொள்ளுங்களேன். தப்பில்லை..!

இது எல்லாவற்றையும்விட இடையிடையே மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துவரும் இயக்குநர் ராமின் பேச்சும் கலகல.. “இவர்களின் காதலை பற்றி யோசித்த நீங்கள் ஏரிக்குள் இத்தனை பெரிய கட்டிடத்தை கட்டியிருக்கிறார்களே என்று யோசிக்கவில்லை பார்த்தீர்களா…?” என்று கேட்கும் ராமின் கேள்விக்கு பலத்த கைதட்டல்தான் ஒரே பதில்.

இதேபோல் நாகூரில் பணத்தைத் திருப்பிக் கொடுத்தவுடன் பாரதப் பிரதமரின் டிமாண்டிசேஷனால் பண நீக்க உத்தரவு பிறப்பிக்கப்படுவதும்.. இதைச் சரியாகப் பயன்படுத்தியிருப்பதும் தியேட்டரை அதிர வைத்திருக்கும் வசனங்கள்..!

எத்தனை ஆண்டுகள் மாறினாலும் மாறாது இந்திய பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற இந்திய ஆண்களின் மனோபாவம்.. ஒரு பெண் காதலியானவுடன், மனைவியானவுடன் எப்படியிருக்க வேண்டும்.. எப்படி வாழ வேண்டும் என்பதை அந்தக் காதலனோ, கணவனோதான் தீர்மானிக்கிறான் என்பதுதான் இந்தியச் சமூகத்தின் சாபக்கேடு. இந்தச் சாபக்கேட்டை துடைப்பக் கட்டையால் அடிப்பதுபோல எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறது இத்திரைப்படம்.

கே.பாலசந்தரின் அனேக படங்கள் பெண்களுக்கானவைதான். அவர்களின் வாழ்க்கையை அவர்களேதான் அமைத்துக் கொள்ள வேண்டும். அதில் எத்தனை ஆண்கள் நுழைய விரும்பினாலும் அதற்கு அனுமதி கொடுப்பது பெண் மட்டுமே என்பதை வலியுறுத்தியது அவரது அனைத்துப் படங்களும்.. பாரதிராஜாவும், பாலு மகேந்திராவும் பெண்களின் இன்னொரு பக்கத்தையும், நவீன பழக்கங்களை கொண்ட பெண்களை தைரியமாக தங்களது படைப்புகளில் படர விட்டார்கள்.

இந்த இயக்குநர்கள் கேட்காத கேள்வியையெல்லாம் இப்போது இந்தத் ‘தரமணி’யில் கேட்க வைத்திருக்கிறார் இயக்குநர் ராம். இது ஒன்றுக்காகவே இந்தப் படம் ‘இறைவி’ பற்றிய படைப்புகளில் முதலிடத்தைப் பிடிக்கிறது என்று உறுதியாய் சொல்லலாம்.

அதே சமயம் இன்னமும் முழு மனதோடு பெண்களுக்கு விடுதலைப் பத்திரம் கொடுத்திராத இந்தச் சமூகத்தில் எந்த அளவுக்கு சுதந்திரமும், வசதிகளும் பெண்களை திசை திருப்பும் என்பதும் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. புதிய உலகத்தின்படி விவகாரத்து, மறுமணம், குழந்தைகள், காட் பாதராக வருபவர்களின் எதிர்பார்ப்புகள் என்று இந்த உறவுச் சிக்கல்களையும் முழுமையாக கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சமூகத்தின் மிகப் பெரிய பிரச்சினையான ஆண், பெண் சேர்ந்து வாழ்தல், குடும்பம் தாண்டிய காதல் இதனை பாசாங்கில்லாமல் அழுத்தமாய் பதிவு செய்திருக்கும் விதத்திற்கே இந்தப் படத்தை எத்தனை வேண்டுமானாலும் பாராட்டலாம்..!

கொண்டாடப்பட வேண்டிய இயக்குநர்களில் ஒருவர் ராம். இந்தப் படமும் அவரை இன்னொரு உச்சியில் ஏற்றியிருக்கிறது. இத்துணை திறமை வாய்ந்த இயக்குநரை பலப்படுத்துவது தமிழ்த் திரையுலகத்தின் கடமை. அந்தக் கடமையைச் செய்ய தயாரிப்பாளர்கள் முன் வருவார்கள் என்று உறுதியாய் நம்புகிறோம்..!

இந்தத் ‘தரமணி’யில் ஜொலித்த இயக்குநர் ராம் அடுத்து தான் கொண்டு வரப் போகும் ‘பேரன்பு’வில் நம்மையெல்லாம் ஆக்கிரமிக்க இருக்கிறார் என்று நிச்சயமாய் எதிர்பார்க்கலாம்..!

குழந்தைகளை முற்றிலுமாய் தவிர்த்து அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம் இது என்று ஆணையிட்டுச் சொல்கிறோம்..!

Our Score