இந்திய சினிமா உலகில் கனவுகளை காட்சிப்படுத்தும் கலைஞர்களில் ஒருவராக போற்றப்படுபவர் இயக்குநர் – ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா. யதார்த்த சினிமாவை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும், புகழும் அவருக்கு உண்டு.
அவரின் பெயருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வண்ணமாக புதிய இயக்குநராக உருவெடுத்திருக்கிறார் பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறையில்’ பயின்ற ஸ்ரீகாந்தன். பாலு மகேந்திராவின் பள்ளியில் பயின்று, இயக்குநராக உருவாகியுள்ள முதல் மாணவர் ஸ்ரீகாந்தன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய இயக்கத்தில் வெளிவரவிருக்கும் புதிய படமான, ‘தப்பு தண்டா’ திரைப்படம், ரசிகர்கள் அதிகமாக விரும்பக் கூடிய அதிரடி மற்றும் நகைச்சுவையின் கலவையில் உருவாகி வருகிறது.
தயாரிப்பாளர்கள் ராஜன் – சத்யமூர்த்தி இணைந்து தயாரிக்கும் இந்த ‘தப்பு தண்டா’ படத்தில் ஒளிப்பதிவாளராக A.வினோத் பாரதி ஒளிப்பதிவாளராகவும், நரேன் பாலகுமார் இசையமைப்பாளராகவும் மற்றும் S.P. ராஜ சேதுபதி படத் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
‘தப்பு தண்டா’ திரைப்படத்தின் இயக்குநரான ஸ்ரீகாந்தனுக்கு, குறும் படங்களை கதை எழுதி இயக்குவது என்பது கை வந்த கலை. அவருடைய குறும்படங்களான ‘அஃசப்டன்ஸ்’ மற்றும் ‘கலர்ஸ்’ என்ற இரண்டுமே பல மதிப்பிற்குரிய விருதுகளை அவருக்கு பெற்று தந்திருக்கிறது.
“நான் இயக்கிய ‘ஐடன்டிட்டி’ என்னும் குறும்படம்தான் என்னை இயக்குநர் பாலு மகேந்திராவிடம் அழைத்து சென்றது. பாலு சார் எனக்கு அளித்த ஊக்கமும், நம்பிக்கையும்தான் இப்போது என்னை ‘தப்பு தண்டா’ படத்தின் இயக்குநராக உருவாக்கி இருக்கிறது.
பொதுவாகவே பாலு மகேந்திரா சாரின் படம் என்றால் யதார்த்தமாகத்தான் இருக்கும் என்ற கருத்து மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆயினும் பாலு சாரின் ‘சதி லீலாவதி’ மற்றும் ‘ரெட்டைவால் குருவி’ திரைப்படங்கள் மக்களின் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறது. அந்த படங்களை இன்று பார்த்தால்கூட சிரிப்பிற்கு எந்த வகையிலும் பஞ்சம் இருக்காது. அவரின் அந்த வழியைத்தான் இந்தப் படத்தில் நான் பின்பற்றவுள்ளேன். திறமையான நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் என பலரும் ‘தப்பு தண்டா’ படத்தில் பணியாற்றி வருவது எங்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்திருக்கிறது.
‘கேமராவை ஆன் செய்யும் முன் என்னை உங்களது மனதில் நினைத்து கொள்ளுங்கள்’ என்று பாலு மகேந்திரா சார் கூறிய வார்த்தைகள் இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதையேதான் இந்த ‘தப்பு தண்டா’ படத்தில் பின்பற்றினேன், இனி வரும் காலங்களிலும் பின் தொடர்வேன். என்றும் அவர் பெயருக்கு பெருமை சேர்க்கும் மாணவனாக திகழ்வேன்..” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் இயக்குநர் ஸ்ரீகாந்தன்.