தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முதல் படமான ‘மிக மிக அவசரம்’ படம் பார்த்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மனம் நெகிழ்ந்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியங்கா கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குநர் சீமான், ‘வழக்கு எண்’ முத்துராமன், இயக்குநர் ஈ ராமதாஸ், லிங்கா, அரவிந்த், சரவண சக்தி, வெற்றிக்குமரன், வீகே சுந்தர், அறிமுகம் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘மிக மிக அவசரம்’.
கதை, வசனம் – ஜெகன்நாத். ஒளிப்பதிவு – பாலபரணி, படத் தொகுப்பு – சுதர்சன். இசை – இஷான் தேவ். மக்கள் தொடர்பு- எஸ் ஷங்கர். தயாரிப்பு, இயக்கம்- சுரேஷ் காமாட்சி.
பெண் போலீசார் பிரச்சினைகளை அலசும் அதே நேரத்தில், பக்கா கமர்ஷியல் படமாகவும் உருவாகியுள்ளது ‘மிக மிக அவசரம்’ திரைப்படம்.
இந்தப் படம் குறித்து திரையுலகில் ஏற்கெனவே நல்ல எதிர்பார்ப்பு உள்ள நிலையில், படத்தின் சிறப்புக் காட்சியை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்காக நேற்று ஏற்பாடு செய்திருந்தார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி.
படம் பார்த்து முடித்ததும் இயக்குநர் சுரேஷ் காமாட்சியையும், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களையும் வெகுவாகப் பாராட்டினார் கலைப்புலி தாணு.
“தான் முற்றிலும் எதிர்ப்பார்க்காத புதுமைப் படைப்பு இது. பெண்களை மிகவும் பெருமைப்படுத்தும் படம்…” என்று கலைப்புலி தாணு தெரிவித்தார்.
பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்மைக்கு பெருமை சேர்க்கும் உயரிய படைப்பாக தம்பி சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மிக மிக அவசரம்’ வெற்றியடைய வாழ்த்துகிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
கலைப்புலி தாணுவின் பாராட்டு குறித்து இயக்குநர் சுரேஷ் காமாட்சி கூறுகையில், “இப்போதுதான் படம் முடிந்தது. இதுவரை யாருக்கும் படத்தைப் போட்டுக் காட்டவில்லை. அண்ணன் கலைப்புலி தாணுவுக்காகத்தான் முதன் முதலில் நேற்று திரையிட்டுக் காட்டினேன். படம் பார்த்து நெகிழ்ந்துபோய் படக் குழுவினரை பெரிதும் பாராட்டினார். அவராகவே ட்விட்டரில் படம் குறித்து தன் கருத்தையும் தெரிவித்திருந்தார். தமிழ் சினிமாவில் எனக்கு முன்னோடி அண்ணன் கலைப்புலி தாணுதான். அவரது பாராட்டு என்னை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது…” என்றார்.