‘தனி ஒருவன்’ படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் பொருட்டு இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மேடையேறிய ‘ஜெயம்’ சகோதரர்கள் இருவருமே கண்ணீர்விட்டனர்.
ரீமேக் இயக்குநர் என்றே இதுவரையிலும் பெயர் எடுத்திருந்த ‘ஜெயம்’ படத்தின் இயக்குநரும், நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனுமான ‘ஜெயம்’ ராஜா சமீபத்தில்தான் தனது பெயரை ‘மோகன் ராஜா’ என்று பெயர் மாற்றம் செய்தார். பெயர் மாறிய கையோடு அவருடைய சொந்தக் கதையில் தயாரான ‘தனி ஒருவனும்’ ரிலீஸானது.
சிறப்பான திரைக்கதையினாலும், அழுத்தமான இயக்கத்தினாலும் படம் அபார வெற்றி பெற்றுள்ளது. ஒரு வாரம் கடந்த நிலையிலும் இன்றுகூட அந்தப் படத்திற்கு பல ஊர்களில் டிக்கெட் கிடைக்கவில்லை என்கிற செய்திதான் வந்திருக்கிறது.
இந்தப் படத்தின் வெற்றிக்கு பத்திரிகைகளும் ஒரு காரணம் என்பதை உணர்ந்து நன்றி தெரிவிக்க இன்று மாலை 4 மணிக்கு பிரசாத் லேப் தியேட்டருக்கு வந்திருந்த்து தனி ஒருவன் படக் குழு.
நாயகன் ‘ஜெயம்’ ரவி, இயக்குநர் மோகன்ராஜா, நடிகர்கள் ஹரீஷ், தம்பி ராமையா, மற்றும் நண்பர்கள் வேடத்தில் நடித்த நடிகர்கள், எழுத்தாளர் சுபா, சுரேஷ், கூடுதலாக இசையமைப்பாளர் ஆதியும் வந்திருந்தார்.
எழுத்தாளர் சுபா பேசும்போது, இப்படியொரு நல்ல கதையில் எங்களையும் இணைத்துக் கொண்ட இயக்குநர் மோகன்ராஜாவுக்கு எங்களது நன்றி. இந்தப் படத்தில் வசனங்கள் அனைத்தும் நன்றாக இருந்ததாக படம் பார்த்த பலரும் சொன்னார்கள். அந்தப் பெருமையெல்லாம் மோகன்ராஜாவையே சேரும்.
ஸ்கிரிப்ட் பேசும்போதே அந்த இடத்திலேயே உருவான வசனங்கள்தான் அத்தனையும். எதையும் ஸ்பாட்டில் வைத்து எழுதவில்லை. அந்த அளவுக்கு கதைக்குள்ளேயே தனி ஆளாக டிராவல் செய்திருந்தார் இயக்குநர் மோகன்ராஜா. இந்தப் படத்தில் எங்களையும் இணைத்துக் கொண்டதற்கு அவருக்கு எங்களது நன்றி..” என்றார்.
நடிகர் தம்பி ராமையா பேசும்போது, இந்தப் படத்தின் கதை சொல்ல என்னை அழைத்தார் இயக்குநர் மோகன்ராஜா. கதை கேட்டு முடித்தபோது எனக்குள்ளேயே ஒரு இனம் புரியாத வெறியே உண்டானது. எப்பேர்ப்பட்ட கதை இது என்று பிரமிப்புடன் இயக்குநரை பார்த்தேன்.
படத்தின் வசனங்களெல்லாம் அத்தனை கூர்மையாக இருந்தன. இது போன்ற படங்கள் உண்மைத்தனமாக இருந்த்துதான் படத்தின் வெற்றிக்கு காரணம்.. திரைக்கதையின் வேகத்தில் ரசிகர்களெல்லாம் கவிழ்ந்துவிட்டார்கள்.
நான் ஒரு நாள் காரில் போகும்போது ஏஜிஎஸ் கம்பெனி டிரைவர் என்னிடம் “ஸார்.. இந்தப் படம் தோத்தாலும் பரவாயில்லை ஸார்.. உங்க நடிப்பு பிய்ச்சுக்கும்..” என்றார். என் நடிப்புக்கு தீனி போட்டது இயக்குநர் மோகன்ராஜாதான்..
பொதுவாக நான் அதிகமாக படங்கள் பார்க்கிறதில்லை. நேரமும் கிடைக்கிறதில்லை. நான் நடிக்கிற படத்தையே முழுசா பார்க்க மாட்டேன். டப்பிங்ல பார்க்கிறதோட சரி. ஆனால் இந்தப் படத்தைத் தியேட்டரில் போய் பார்த்தேன். காட்சிக்கு காட்சி மக்கள் ரசித்துப் பார்த்தார்கள். ஒரு காட்சியில்கூட ரசிகன் எழுந்து வெளில போகலை. அப்பவே இந்தப் படத்தின் வெற்றி தெரிந்துவிட்டது.
தம்பி ரவி வசன உச்சரிப்பில் பின்னிவிட்டார். தனது நாடி, நரம்பெல்லாம் முறுக்குற மாதிரி பாடி லாங்குவேஜ்ல அவர் பேசின வசனங்களெல்லாம் இதயத்துல இருந்து வந்தது மாதிரியே இருந்தது.. இந்தப் படத்தில் நடிக்க நான் நிச்சயம் கொடுத்து வைச்சிருக்கணும். இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் எனது நன்றி..” என்றார்.
இயக்குநர் மோகன்ராஜா பேசும்போது முதலிலேயே கண் கலங்கிவிட்டார். குரல் கம்மிய நிலையிலேயே சில நிமிடங்கள் பேசினார். இவரது எமோஷனலை பார்த்து ஜெயம் ரவியும் கண் கலங்கிப் போனார்.
“இந்த அளவுக்கு ரசிகர்கள் என் படத்துக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நினைக்கவில்லை. ஜெயிக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இந்த அளவுக்கு என்று யோசிக்கவில்லை. தனிப்பட்ட பழி வாங்கல் கதையில்லை இந்தப் படம்.. அது மாதிரியில்லாமல் புது டைப்ல வந்த படம் இதுதான்..!
இப்படி ஒரு வெற்றியை அனுபவிக்க எந்த ஒரு இயக்குனரும் வரம் வாங்கி வந்திருக்க வேண்டும். ரசிகர்கள் கொடுத்த வரம் இது.
ரீமேக் படங்களா பண்ணிக்கிட்டிருக்கோமே.. சொந்தமா ஒரு நல்ல படம் செய்யணும்னு நினைச்சேன். நல்ல படம்னு நினைச்சதுக்கு காரணம் எங்கப்பதான். அவர் அப்படித்தான் எங்களை வளர்த்திருக்காரு.. நல்ல சினிமாவை பார்க்கணும்.. நல்ல சினிமாவை ரசிக்கணும்ன்ற மாதிரிதான் கிட்டத்தட்ட 10, 12 வருஷமா அவர் என்னை வளர்த்தாரு. அந்த வளர்ப்பும் என்னுடைய படங்களின் வெற்றிக்கு ஒரு காரணம். .
இந்தப் படத்துக்காக 2008-ல அட்வான்ஸ் வாங்கினேன். கொடுக்கும்போதே தயாரிப்பாளர் அகோரம் ஸார்.. ‘ரீமேக் வேண்டாம். சொந்தக் கதைல பண்ணுங்க. உங்க இஷ்டம்போல செய்யுங்க. எந்தத் தடையும் இல்லை’ன்னு சொல்லி ஊக்கம் கொடுத்தார்.
இடைப்பட்ட அந்தக் காலத்துல சில ஹீரோக்கள் அவங்க படத்தை இயக்கக் கூப்பிட்டாங்க. ரீமேக் படம்தான் பண்ண்ணும்னு சொன்னாங்க, என்னுடைய சொந்தக் கதையைக் கேட்கக்கூட அவங்களுக்கு நேரமில்லை. அதையெல்லாம் இப்போ நினைச்சா எல்லாம் நல்லதுக்குதான்னு தோணுது. பெரிய பெரிய இசையமைப்பாளர்கள்கூட இந்தக் கதையை கேட்டுட்டு மியூசிக் பண்ண ஸ்கோப் இல்லையேன்னு சொல்லிட்டு மாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஆனால் இன்னைக்கு அவங்க எல்லாரும் வாழ்த்தறாங்க.
எனக்கு சினிமா எல்லா வசதியும் கொடுத்தது. வசதியான வீட்ல பிறந்தவன் நான் . காரணம் எங்கப்பா சினிமாக்காரர். இந்த சினிமா மூலமா மக்களுக்கு என்ன உருப்படியா கொடுத்தோம் என்ற கேள்விதான் என்னை இத்தனை நாளா கொன்னுக்கிட்டே இருந்தது.
எங்கப்பா மோகன் மிகச் சிறந்த சினிமா எடிட்டர். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. என்னோட பத்து வயசுல என்னை அவரோட மடியில உட்கார வச்சுகிட்டு ‘தி கிரேட் எஸ்கேப்’ என்ற படத்தைப் பார்க்க வச்சு, ‘இதுதான் ஒளிப்பதிவு’, ‘இதுதான் எடிட்டிங்’னு சொல்லிக் கொடுத்தார் . அவரோட எடிட்டிங் ரூம்லதான் நான் வளர்ந்தேன்.
இந்த படம் முடிவான உடனேயே இந்தப் படத்தோட டைட்டில்ல, என் அப்பாவோட பெயரும் வரணும்னு முடிவு பண்ணினேன். அதனாலதான் ‘ஜெயம் ராஜா’வை ‘மோகன் ராஜா’ன்னு மாத்திக்கிட்டேன். எனக்கு ஜெயத்தை கொடுத்ததே என் அப்பா மோகன்தானே.
தயாரிப்பாளர் அகோரம் சாரோட மகள் அர்ச்சனா அண்மையில் விசா வாங்குறதுக்காக இமிக்ரேஷன் செக்கிங்குக்கு போய் இருக்காங்க. அங்க இருந்த எல்லா ஸ்டாப்ஸும் எழுந்து ஓடி வந்து அவருக்குக் கை கொடுத்து ’சூப்பரான படத்தை கொடுத்துருக்கீங்க!’ன்னு பாராட்டினாங்களாம்.
பொதுவா அவங்க எல்லாம் யார் வந்தாலும், சீட்டை விட்டு எழுந்திருக்கவே மாட்டங்க. எனக்கு போன் பண்ணி இதைச் சொன்ன அர்ச்சனா, ”வங்க எல்லாரும் எழுந்து ஓடி வந்து கை கொடுத்தாங்க. எத்தன கோடி கொடுத்தாலும் கிடைக்காத பெருமை இது..”ன்னு பூரிப்பா சொன்னாங்க.
முழுக்க முழுக்க இன்றைய இளைஞர்களை நம்பி எடுக்கப்பட்ட படம் இது. மக்கள் தெளிவாத்தான் இருக்காங்க, ஆனால் நான்தான் இந்த மாதிரி படம் காட்டினால் அவங்க பார்ப்பாங்களோன்னு யோசிச்சேன். நிறைய பேர் இந்தப் படத்தோட கதையைக் கேட்டுட்டு ‘இதையெல்லாம் ரசிகர்கள் எப்படிப் பார்ப்பாங்க?’ன்னு என்கிட்டயே கேட்டாங்க. ஆனால், நான் நம்பிக்கையோட இந்தப் படத்தை செய்தேன். வெற்றியும் பெற்றிருக்கிறேன்.
என் தம்பி ரவி.. எனக்காக இந்தப் படத்தை ஒத்துக் கொண்டு நான் சொல்லியபடியெல்லாம் நடித்துக் கொடுத்தார். இந்த வசதியெல்லாம் நான் வேறு ஆளிடம் போய் எதிர்பார்க்க முடியாது. அதனால்தான் இவனை வைத்தே எடுத்தேன்.
அரவிந்த்சாமியிடம் போய் கதை சொன்னபோது ‘ஓகே பண்றேன்’ என்றவர், கொஞ்சம டைம் கேட்டார். அதுக்கடுத்து ஒரு நல்ல பிட்டான உடம்போடு வந்து நின்னார். அவருடைய கேரக்டர் இன்னிக்கு பேசப்படுதுன்னா அது அவராலதான்.
தம்பி ராமையா ஸார்.. கலக்கிட்டார்.. இன்னிக்கு பலரும் அவர் பேசின டயலாக்கை பத்திதான் திருப்பித் திருப்பி பேசுறாங்க. நயன்தாராவும் தனது பெஸ்ட்டான ஆக்ட்டிங்கை இதுல கொடுத்திருக்காங்க. இந்தப் படத்தைப் பார்த்துட்டு அவங்களால நம்ப முடியல.. நாம நடிச்ச படமான்னு அவங்களுக்கே ஆச்சரியம். ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.
இசையமைப்பாளர் ஆதி, நான் எதிர்பார்க்காத மாதிரியும் இசையமைத்து அசத்தியிருக்கார். பின்னணி இசைல அவரோட பங்களிப்பு அற்புதம். இயக்குநர் கே.வி.ஆனந்த்கூட கேட்டார். ‘டிரெயிலர்லயே பின்னணி இசை கலக்கல்’ என்றார். நான் கொடுத்த காட்சிகளுக்கு உயிர் கிடைக்கிற மாதிரி பின்னணி இசை கிடைச்சிருக்கு. அவருக்கும் எனது நன்றிகள்..!
எழுத்தாளர்கள் சுபா, சுரேஷ் இரண்டு பேருமே இந்தப் படத்துக்குக் கிடைத்த நல்முத்துக்கள். இவங்க இல்லைன்னா என்னால இந்தப் படத்தை இவ்ளோ சரியா கொண்டு வந்திருக்க முடியாது. நான் எழுதியதையெல்லம் சரியா, தவறான்னு பேலன்ஸ் செய்து பார்க்க ஒரு ஆள் வேணும்னு எதிர்பார்த்தேன். அதுக்கு சரியான ஆட்களா கிடைச்சவங்க இந்த இரண்டு பேர்தான். இவங்களாலதான் படம் இன்னிக்கு இந்த உயரத்தைத் தொட்டிருக்கு. இவங்களுக்கும் எனது நன்றிகள்..!
அதோட இந்த படம் சம்பந்தமான டீடெயில்ஸ்களை நான் இணையத்துல இருந்துதான் எடுத்தேன். சமூக வலைத்தளங்கள்ல நிறைய கத்துக்கிட்டேன். அந்த அனுபவமெல்லாம் இந்தப் படத்துக்கு ரொம்ப உதவியா இருந்தது..!
இந்தப் படத்துல நடிச்ச யாரும் என்னை ‘ரீமேக் ராஜா’ன்னு நினைக்கலை, என்னை நம்பி வந்தாங்க. என் கதைக்கு, என் எண்ணத்திற்கு ஒவ்வொருவரும் உயிர் கொடுத்திருக்கிறார்கள். எல்லாருடைய அறிவையும் நான் பயன்படுத்திக் கொண்டேன், நான் அறிவாளி அல்ல, ஆனால் கடும் உழைப்பாளி. இந்தப் படத்துக்காக நிறைய உழைச்சேன். படம் ஜெயித்துள்ளது, அடுத்த படத்துக்கும் உழைப்பேன். அதுவும் நிச்சயம் ஜெயிக்கும்…” என்றார்.
கடைசியாக கண்களைத் துடைத்துக் கொண்டே பேச வந்த நடிகர் ஜெயம் ரவி, எடுத்த எடுப்பிலேயே மேடையில் இருந்த படக் குழுவினரிடம் வந்திருந்த பத்திரிகையாளர்களை பாராட்டி கை தட்டச் சொல்லி தானும் அதைச் செய்து பாராட்டினார்.
“நான் அழ மாட்டேன். ஆனால் என் அண்ணனை பார்த்து சந்தோஷப்படுறேன்.. என்னைவிட என் அண்ணனின் சந்தோஷம்தான் எனக்கு ரொம்ப பெரிய விஷயமா தோணுது.
என் சந்தோஷம்தான் அவர் சந்தோஷமா இத்தனை வருஷமா இருந்தது. அண்ணன் இப்பவும் அப்படியேதான் இருக்காரு. ஆனால், நான் உண்மையாக மனதார என் அண்ணனைப் பார்த்து சந்தோஷப்படும் முதல் நாள் இன்றைக்குத்தான்.
ஏன்னா நான் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படம் பண்ணி முடிச்சப்போ வீட்ல எங்களுக்கு நிறைய பாராட்டு. ஆனால் அதோட நான் வேற வெளி படங்கள்ல நடிக்கும்போது அண்ணன் அப்ப்ப்போ கூப்பிட்டு பாராட்டுவார். பேசுவார். அதுல நல்லா நடிச்சிருக்க.. இதுல நல்லா நடிச்சிருக்கன்னு சொல்வாரு.
எல்லாருக்கும் அவரை ‘ரீமேக்’ ராஜாவாகத்தான் தெரியும். நான் அப்பல்லாம் மனசுக்குள்ளேயே சிரிச்சுக்குவேன். இந்தப் படம் ரிலீசுக்கு முன்னாடி நான் சொன்ன ஒரு விஷயம். ‘எங்க ஃபேமிலிக்கு மட்டுமே தெரிஞ்ச.. ஒரு சீரியஸ் பிலிம் மேக்கர் ராஜா.. இந்தப் படத்தோட ரிலீசுக்கு அப்புறமா உலகத்துக்கே தெரியப் போறாரு’ன்னு சொன்னேன். அதான் இன்னைக்கு நடந்திருக்கு. அதை முன்னாடியே சொன்னேன் என்கிற பெரிய பெருமை எனக்கிருக்கு.
என்னை பாக்கற ரிப்போர்ட்டர்ஸ் எல்லாம் நடிகைகளை பத்தியே கேள்வி கேட்பாங்க. இல்லைன்ன ஏதாவது காமெடியா கேட்பாங்க. நம்மகிட்டயும் உருப்படியா பேசற மாதிரி ஒரு படம் பண்ண மாட்டோமான்னு நினைப்பேன். அந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த படம் இந்த ‘தனி ஒருவன்’.
பொதுவா சினிமா விமர்சனங்களை படிக்கும்போது ‘என்ன இப்படியெல்லாம் எழுதறாங்க’ன்னு கஷ்டமா இருக்கும். ஆனா இந்த ‘தனி ஒருவன்’ படத்துக்கு ஒட்டுமொத்தமாக எல்லா மீடியாக்களும் கொடுத்த ஆதரவை பார்த்து சிலிர்த்துப் போய்ட்டேன்.
எனக்கு பத்திரிகையாளர்கள் மேல முதன்முதலா இப்பத்தான் மரியாதையே வந்திருக்கு. இதுக்கு முன்னாடி அவங்க மேல ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால் மரியாதைன்றது இப்பத்தான் இந்தப் படத்தோட விமர்சனங்களை படிச்ச பின்னாடிதான் வந்திருக்கு..!
நாம நல்ல படம் கொடுத்தா அவங்க நல்லபடியா எழுத தயாராத்தான் இருக்காங்க. நாம நல்ல படம் தராம அவங்க மேல வருத்தப்படுறதுல என்ன நியாயம்ன்னு என்னை நானே கேள்வி கேட்க வச்ச படம் இந்த ‘தனி ஒருவன்’.
படத்தில் நடித்த பலரும் பலவிதங்களில் இந்தப் படத்தின் வெற்றிக்கு உதவியிருக்காங்க. தம்பி ராமையா ஸார் ஸ்பாட்டுக்கு வந்துட்டு முதல் ரெண்டு மூணு நாள்ல சரியா பேசலை. அப்படி, இப்படின்னு உலாத்திக்கிட்டேயிருப்பார்..
நானே அண்ணன்கிட்ட சொன்னேன்.. ‘அவர் தேசிய விருது. அப்படித்தான்னு..!’ ஆனால் படத்துல அசத்திட்டாரு.. அதேபோல் சிறப்பா இசையமைத்து, பாடல் வரிகளை அற்புதமா எழுதியிருந்தாரு ஆதி. அவருக்கு ஹாட்ஸ் அப் சொல்லிக்கிறேன்.
எனக்கு ஒரு மரியாதையையும், அந்தஸ்தையும் இந்தப் படம் மூலமா எங்க அண்ணன் ஏற்படுத்திக் கொடுத்திருக்காரு. நன்றி என்பதையும்தாண்டி அவருக்கு ஒரு சல்யூட், ஹேட்ஸ் ஆஃப்ணா.
இப்போகூட இங்க சந்திச்ச பிரஸ்காரங்க, இப்போவரைக்கும் ‘ஜெயம்’ ரவின்னு உங்க பேர் இருக்குது.. அதை இனிமேல் ‘தனி ஒருவன்’ ரவின்னு மாத்தீப்பீங்களான்னு கேட்டாங்க. ‘ஜெயம்’கறது எனக்கு ஒரு விசிட்டிங் கார்டு மாதிரி. அதை நான் மாத்தவே முடியாது, ‘தனி ஒருவன்’ என் நெஞ்சுல குத்தின பச்சை. என் உடம்போட ஒட்டினது அது, அதை யாராலேயும் எடுக்கவே முடியாது. உயிர் உள்ளவரை, உடல் உள்ளவரை, ‘தனி ஒருவன்’ என் நெஞ்சில்தான் இருக்கும். என்கூட நடிச்ச அத்தனை பேரும் சிறப்பா நடிச்சாங்க.. அவங்க எல்லாருக்கும் எனது நன்றி..” என்றார்.
தனது முதல் சொந்தப் படைப்பிலேயே வெற்றி பெற்றிருக்கும் ‘தனி ஒருவன்’ இயக்குநர் மோகன்ராஜாவுக்கும், அவருடைய குழுவினருக்கும் நமது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்..!