full screen background image

“இதுவரைக்கும் காட்டாத உழைப்பையும், நடிப்பையும் விக்ரம் காட்டியிருக்கார்”-இயக்குநர் பா.ரஞ்சித்தான் பாராட்டு!

“இதுவரைக்கும் காட்டாத உழைப்பையும், நடிப்பையும் விக்ரம் காட்டியிருக்கார்”-இயக்குநர் பா.ரஞ்சித்தான் பாராட்டு!

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரிக்கும், இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான்’.

இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா,  இன்று சென்னையில் படக் குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில் பிரமிக்க வைக்கும்  ‘தங்கலான்’ படத்தின் டீசர் மற்றும் மேக்கிங்க் வீடியோ பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்குத் திரையிடப்பட்டது.

இந்நிகழ்வினில் ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா பேசும்போது, “சீயான் விக்ரம் சார், ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ்  நிறுவனத்துடன் பணியாற்றும் முதல் படம் இதுதான். அவர், மிகவும் அன்பானவர்.  கடின உழைப்பாளி. தன் வேலையை மிக அர்ப்பணிப்புடன் செய்பவர்.

நானும், பா.ரஞ்சித்தும் விக்ரம் சாரை சந்திக்கச் சென்றபோது “எந்தத் தேதிகள்  வேண்டும்..?” என்றார்.  அந்த தேதிகள் தள்ளிப்போனபோதுகூட அதே கெட்டப்பில் தன்னை மாற்றிக் கொள்ளாமல் இந்தப் படத்துக்காக காத்திருந்து உழைத்தார். அவர் அர்ப்பணிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டோம். அவரது உழைப்பு மிகப் பெரியது. இந்தப் படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி.

ரஞ்சித் சார் எப்படிப்பட்ட படம் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், முதல் படத்திலிருந்து இதுதான் செய்ய வேண்டும் என முடிவு செய்து மிகச் சரியாகச் செய்து வருகிறார். அதற்கான வெற்றியையும் அவர் பெற்று வருகிறார். இந்தப் படம் அவருக்கு இன்னும் பெரிய இடத்தைப் பெற்றுத் தரும்.

ஜீ.வி.பிரகாஷ் எங்கள் வீட்டுப் பிள்ளைபோல இந்தப் படத்திற்காகச் சிறந்த இசையைத் தந்துள்ளார். கிஷோர் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார், எல்லோரும் விஷுவல் பார்த்து அவரைப் பற்றிக் கேட்டார்கள். அவர் மட்டுமில்லாமல் கலை இயக்கம், ஸ்டண்ட் என எல்லாத் துறையும் இந்தப்ப டத்தில் பேசப்படும்.

இந்த மாதிரியான ஒரு படத்தில் நானும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி. இது உலக அளவில் அனைவரும் ரசிக்கும்படியான படமாக இருக்கும். நம் தமிழ் சினிமாவின் பெயரை உலகம் முழுக்க இந்தப் படம் சொல்லும்.

ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ்  ஆரம்பித்தபோது பாலா சாரை வைத்து படம் எடுப்பதாக இருந்தது, அப்போது ஹீரோவாக யாரை நடிக்க வைக்கலாம் என்றபோது, சீயான் சாரை சொன்னார்.  விக்ரம் சாருக்கு அது தெரியாது. அவரை வைத்து முதல் படம் தயாரிக்க இந்த நிறுவனத்திற்கு சூர்யா சார் வைத்த பெயர்தான் ‘ஸ்டூடியோ க்ரீன்’. சூர்யா சார், விக்ரம் சாருக்காக வைத்த பெயர்தான் இது. அப்போது அது நடக்கவில்லை,  இப்போது நடப்பது மகிழ்ச்சி…” என்றார்.

படத் தொகுப்பாளர்  R.K.செல்வா பேசும்போது, “என் கேரியரில் இது மிக முக்கியமான படம். எனக்கு நீண்ட காலமாக வரலாற்றுப் படத்தில் வேலை பார்க்க ஆசை இருந்தது. அது இந்தப் படத்தில் அமைந்தது மகிழ்ச்சி. பா.ரஞ்சித் அண்ணா, ஒவ்வொரு படத்திலும் அவருடன் எங்களையும் வேறு உயரத்திற்கு அழைத்துச் செல்கிறார்.  விக்ரம் சாரை விஷுவல்களில் பார்த்து நிறைய முறை பிரமித்திருக்கிறேன். எப்படி இந்த மனுசன் இவ்வளவு உழைக்கிறார் எனத் தோணும்.

இது விஷுவலாக பேசும் படம். அதனால், டீசரில் அதைக் காட்டலாம் என நினைத்துதான் டயலாக் இல்லாமல் எடிட் செய்தோம். இந்தப் படத்தில் எல்லோருமே கடினமாக உழைத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்…” என்றார்.

கலை இயக்குநர் S.S.மூர்த்தி பேசும்போது, “கல்லூரி காலத்திலிருந்தே பா.ரஞ்சித் சார் எனக்குப் பழக்கம்.  அவருடன் பணிபுரிவது மகிழ்ச்சி. எனக்கு முழு சுதந்திரம் தந்தார். ஒரு வேலையைச் சொல்லிவிட்டால் முழுதாக என்னிடம் விட்டுவிடுவார். அதைப் பற்றிக் கேட்கவே மாட்டார். விக்ரம் சாருடன் பணி புரிந்தது மிகச் சந்தோஷமாக இருந்தது. என்னுடன் இணைந்து உழைத்த இந்தப் படத்தின் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்..” என்றார்.

பாடலாசிரியர் உமாதேவி பேசும்போது, “இலக்கியப் பரப்பிலிருந்து எனது கவிதைகளைத் திரை உலகிற்குக் கொண்டு சேர்க்க  எனக்கு உறுதுணையாக இருக்கும் தாயுமானவன் ரஞ்சித் சாருக்கு நன்றி. ஸ்டூடியோ க்ரீனில் என் முதல் பாடல் அமைந்தாலும், இந்த தங்கலான்’ மிக முக்கியமான படமாக உள்ளது. இதற்கு பா.ரஞ்சித் எனக்கு மிக உறுதுணையாக இருந்தார்.  இந்தத் ‘தங்கலான்’ படத்தில் நான் எழுதிய இரண்டு பாடல்களும் அட்டகாசமாக வந்துள்ளது..” என்றார்.

உடை வடிவமைப்பாளர் ஏகாம்பரம் பேசும்போது, “நான் படித்த படிப்பிற்குக் கிடைத்த முழுமையான வேலையாக தங்கலானைப் பார்க்கிறேன். 10 வருடங்களாக நேச்சுரல்  டை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். இந்தப் படத்தில் அதைப் பயன்படுத்த முடிந்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் ஸ்பாட்டிலேயே நேச்சுரல் டை தயாரித்து, அங்கு உடைகள் தயாரித்து ஆர்டிஸ்டுக்கு தந்தேன்,  பா.ரஞ்சித் அண்ணா என்னிடம் இந்த வேலையைக் கொடுத்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் இயற்கையோடு இணைந்து உடைகளை உருவாக்கியுள்ளோம். பா.ரஞ்சித் இயற்கையை நேசிப்பவர். அவருடன் வேலை பார்த்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றிகள்…” என்றார்.

எழுத்தாளர் தமிழ் பிரபா பேசும்போது, “என் முதல் சினிமா மேடை இதுதான். பா.ரஞ்சித் அவர்களுடன் இணைந்து எழுதும் இரண்டாவது படம் இது என்றாலும், அந்த முதல் படம் ஓடிடிக்குப் போய்விட்டது. இதுதான் என் கன்னிப் பேச்சு.  

பொதுவாக எழுத்தாளர்களைத் தமிழ் சினிமாவில் மதிப்பதில்லை, மலையாளத்தில் மரியாதை தருகிறார்கள் என்ற கருத்து இருக்கிறது. ஆனால் அதை ரஞ்சித் உடைத்துத் தொடர்ந்து தனது படங்களில் எழுதும் எழுத்தாளர்களுக்கு முழு மரியாதை தந்து வருகிறார். அதற்காக எழுத்தாளர்கள் சார்பில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

ஒரு திரைக்கதையாக இந்தப் படம் தனித்துவமாக எப்படி இருக்கப் போகிறது என்பதில் ரஞ்சித் அவர்களுடன் இணைந்து எழுதியது மிக உற்சாகமாக இருந்தது, சவாலாக இருந்தது. இந்தப் படம் உங்களை பல்வேறு வகையான சிந்தனைக்குள் கொண்டு செல்லும் எல்லோருக்கும் நன்றி..” என்றார்.

நடிகர் முத்துக்குமார் பேசும்போது, ”இயக்குநர் ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. ‘சர்பட்டா பரம்பரை’ படத்திற்கு பிறகு இந்தப் படத்திலும் ஒரு முக்கியமான ரோல் தந்துள்ளார். அவர் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் என நினைக்கிறேன். டீசரைப் பார்த்துவிட்டு மிரண்டுவிட்டேன்.  விக்ரம் சாருக்கு நன்றி.  ‘மகானு’க்குப் பிறகு அவர் உழைப்பைப் பார்த்துப் பிரமிப்பாக இருக்கிறது…” என்றார்.

ஒளிப்பதிவாளர் கிஷோர்குமார் பேசும்போது, “என்னைத் தொடர்ந்து மேடை ஏற்றும் ஒரே கலைஞர் ரஞ்சித் அண்ணாதான். சினிமாவை நேசிப்பவர். நிறையப் படங்கள் பற்றி அவருடன் பேசுவேன். இடங்களை அப்படியே  அதன் பிரமிப்பைத் திரையில், அதே ஒளியில் கொண்டு வர ஆசைப்படுவார்.  என்னைப் பார்த்து, என் வேலையைப் பார்த்து உடனுக்குடன் பாரட்டுவார். முடிந்தளவு இயற்கை ஒளியோடு திரைக்கு இந்தக் கதையைக் கொண்டு வந்துள்ளோம்.

நான் முதன்முதலில் கல்லூரியில் பார்த்து ரசித்த ஹீரோ விக்ரம் சார்தான். அவரை ஒரு நாள் நானே படம் பிடிப்பேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை. அப்போதிருந்த அதே எனர்ஜியோடு இப்போதும் மிரட்டுகிறார் விக்ரம் ஸார். டீசரில் நீங்கள் என்ன பார்த்தீர்களோ, அதைவிடப் பிரமிப்பான பல விசயங்கள் படத்தில் உள்ளது..” என்றார்.

ஸ்டன்னர் சாம் பேசும்போது, “இந்தப் படம் மிக வித்தியாசமான படம். இதில் ஸ்டண்ட் காட்சிகள் மிகக் கடினமான பணியாக இருந்தது, மற்ற படங்களைபோல கேமராவை நினைத்த மாதிரி வளைக்க முடியாது. எல்லாமே ஒரே ஷாட்டாக இருக்கும். ஆனால் எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்து, விக்ரம் சார் கலக்கியிருக்கிறார்.

அவருக்கு இந்தப் படத்தில் பல காட்சிகளின்போதும் உடலில் அடிபட்டது. ஆனால் அதையும் தாண்டி வந்து ஆக்சன் காட்சிகளில் நடித்தார். அவரிடம் இதற்காக நான் சாரி கேட்டுக் கொண்டே இருப்பேன். அந்த அளவுக்கு அவர் அடிபட்டிருக்கிறார்.  இந்தப் படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். தங்கலான் உங்கள் மனதில் நிச்சயமாகத் தங்குவான்…” என்றார்.

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் பேசும்போது, “எனக்கு மிக முக்கியமான, வித்தியாசமான படம் இந்த தங்கலான்.  இப்படத்தின் இசையை இண்டியன் டிரைபலையும், இண்டர்னேசனலையும் மிக்ஸ் பண்ணி புதுமையாகச் செய்துள்ளோம். அதை எல்லோரும் கவனித்துப் பாராட்டுகிறார்கள்.

தங்கலான் ஒரு  கோல்டன் டீம். எல்லோரும் அவ்வளவு உழைத்திருக்கிறார்கள். எல்லோரும் அவர்களுடைய பெஸ்ட்டை தந்துள்ளார்கள்.  விக்ரம் சார் இந்தப் படத்தில் மிகப் பெரிய உழைப்பைத் தந்திருக்கிறார், ஒவ்வொரு படத்திலும் அவர் பாத்திரத்திற்காக மெனக்கெடுவார். ஆனால், இந்தப் படத்தில் கதையும் அவருக்கு வித்தியாசமாக அமைந்திருக்கிறது. இந்தியாவின் கிறிஸ்டியன் பேர்ல்போல  உழைத்திருக்கிறார். என்ன கஷ்டப்பட்டாலும் அதை வெளிக்காட்ட மாட்டார்.  

ஒவ்வொரு படத்திலும் பா.ரஞ்சித் வேறு உயரத்தைத் தொடுகிறார், அவர் படத்தை வடிவமைக்கும்விதம் பிரமிப்பாக இருக்கிறது. அவருக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்கும் எப்போதும் கேப்டன் கூல் மாதிரி கூலாக இருக்கிறார். கலை இயக்குநர் S.S.மூர்த்தி இந்தப் படத்தில் அட்டகாசமாக உழைத்திருக்கிறார். எடிட்டர் மிகச் சிறப்பாக எடிட் செய்திருக்கிறார். கிஷோர் விஷுவல்கள் அருமையாக வந்திருக்கிறது. இந்தப் படம் உங்கள் எல்லோரையும் அசர வைக்கும்..” என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, “டீசர் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். இது டீசர் வெளியீடுதான். இன்னும் பல மேடைகள் இருக்கிறது.

இந்தப் படம் நாங்கள் நினைத்ததைவிட பட்ஜெட் அதிகமாகி விட்டது, ஆனால் இன்றுவரை அதைப் பற்றி ஒரு கேள்விகூட ஞானவேல் சார் கேட்கவில்லை. அவருக்கும் எனக்குமான உறவு 10 ஆண்டுகளுக்கு மேலானது. அட்டகத்தியில் இருந்து இப்போதுவரை தொடர்கிறது. அவர் கமர்ஷியல் தயாரிப்பாளர். ஆனால் அவர் ஆர்டிஸ்டிக் படம் எடுக்கிறார் என்றால் என்கூடத்தான் செய்வார். அந்தளவு என்னை நம்புகிறார். அவர் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன் என நினைக்கிறேன் அவரைத் திருப்திப்படுத்துவது கஷ்டம், இந்த டீசருக்கு கூட நிறையக் கட் கேட்டார். கடைசியாக அவர் பிடித்திருக்கிறது என்று சொன்னவுடன்தான் எனக்குத் திருப்தியாக இருந்தது.

விக்ரம் சார், ஒரு  நடிகனாக அவருக்கு நான் மிகப் பெரிய ரசிகன், அவருடன் இணைந்து வேலை பார்க்க வேண்டும் என்று எனக்கே ஆசை இருந்தது. ‘சர்பட்டா’விற்கு பிறகு அவருடன் இணைகிறோம் என்றபோது, என்ன மாதிரி இருக்க வேண்டும் என்று நிறைய யோசித்தோம். இந்தக் கதையைச் சொன்னபோது அந்தக் கதாபாத்திரமாகவே மாறி வந்தார்.

பொதுவாக நான் என் நடிகர்களின் கதாப்பாத்திர லுக்கை மாற்ற நிறைய உழைப்பேன், சின்ன, சின்னதாக நிறைய வேலை பார்ப்போம். ஆனால், முதல்முறையாக விக்ரம் சார் எனக்கு நிறைய சாய்ஸ் தந்தார். அவர் அந்த கதாபாத்திரமாக முழுதாக மாறிவிட்டார். இந்தப் படத்திற்காக அவர் பட்ட கஷ்டம் பெரியது.  இத்தனை வருடத்திற்குப் பிறகும், இத்தனைப் படத்திற்குப் பிறகும் ஏன் இவ்வளவு கஷ்டப்பட  வேண்டும்  என ஆச்சரியமாக இருக்கும்.

அவரிடமே கேட்பேன். நடிப்புதான் அவருக்கு எல்லாமே. ஒரு சண்டை காட்சியில் அவருக்கு அடிபட்டுவிட்டது. ஆனால் அதற்கப்புறமும் ஒரு ஆக்சன் காட்சி எடுக்க வேண்டி இருந்தது. காட்சி எடுக்கும்போது அவரால் முடியவில்லை என எனக்குத் தெரியும். “என்ன  சார் வலிக்குதா..?” என்றால் “ஆமா” என்பார்,  ஆனாலும் ரீ டேக்கில் நடிப்பார்.  அவர் உழைப்பு பிரமிப்பானது. அவர்தான் இந்தப் படத்தைத் தாங்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் நடித்த மற்றைய நடிகர்கள் எல்லோருமே மிகப் பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள். பார்வதி வித்தியாசமான ஒரு ரோலில் அசத்தியிருக்கிறார். பசுபதியின் கேரக்டரை நீங்கள் எல்லோருமே ரசிப்பீர்கள். இந்தப் படத்தில் எல்லோருமே மிகப் பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள். ஜீ.வி.யை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்திற்கு அவர் இசையமைக்கிறார் என்றபோது, நடிக்கப் போய்விடுவாரே என்று பயமாக இருந்தது. ஆனால் அதைத் தாண்டி ஒவ்வொரு முறையும் அவர் இசையை என்னிடம் காட்டும்போது பிரமிப்பாக இருந்தது. அவர் கையில்தான் இந்தப் படம் மொத்தமும் உள்ளது.

எடிட்டர் செல்வாவைப் பார்த்து எனக்கே பயம். விஷுவல்ஸ்ஸை பார்த்து என்ன சொல்வாரோ என்று நினைப்பேன். அவர் வேலை எப்போதும் சிறப்பாக இருக்கும் இந்தப் படத்திலும் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். ஸ்டண்ட் சாம் மிரட்டியிருக்கிறார்.  கிஷோர் விஷுவல்கள் கண்டிப்பாகப் பேசப்படும்.  இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் உங்களுக்கு இந்தப்படம் பிடிக்கும் நன்றி..” என்றார்.

நடிகர் சீயான்  விக்ரம் பேசும்போது, “வரலாற்றில் நடக்கும் நல்ல விசயங்களைக் கொண்டாட வேண்டும். கெட்ட விசயங்களை மறக்கக் கூடாது என்று என் தந்தை என்னிடம் சொல்லியிருந்தார்.

எல்லா நாட்டிலும் அவர்கள் வரலாற்றைக் கொண்டாடுகிறார்கள். பதிவு செய்துள்ளார்கள். டைட்டானிக் காதல் கதை என்றாலும், அதன் பின்னணி, அந்த கதை நடக்கும் இடம் கப்பல், அதன் வரலாறுதான் முக்கியம்.

இந்தியாவில் அது போல் நிறைய விசயங்கள் நடந்துள்ளது. ஆனால் இப்போதைய தலைமுறைக்கு அது தெரியவில்லை. நம் வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வை அந்தக் காலகட்டத்தை அவர்கள் வாழ்க்கையைச் சொல்கிற படம் இது.

இந்தப் படத்தைத் திரையில் கொண்டு வருவது அத்தனை கடினமாக இருந்தது. இந்தப் படம் செட்டுக்குள் எடுக்கவில்லை கே.ஜி.எஃப்.-பில் போய் அங்கு தங்கி எடுத்தோம், அங்கே தேள், பாம்பு எல்லாம் சர்வசாதாரணமாக இருக்கும். கல் முள்ளில் வெறும் காலில் நடந்து,  அவர்கள் உடையை போட்டுக் கொண்டு நடித்தேன்.

முதல்முறையாக லைவ் சவுண்டில் நடித்திருக்கிறேன் அது இன்னும் கஷ்டம். டப்பிங்கில் நான் நிறைய மாற்றி விடுவேன், ‘அந்நியனில்’  ‘ரெமோ’ எல்லாம் டப்பிங்கில் மாற்றியதுதான். ஆனால், இந்தப் படத்தில் அது நடக்காது. லைவ்வில் கச்சிதமாக அதே டோனில் பேச வேண்டும்.  கேமராவும் ஷாட் கட்டாகுது ஒரே ஷாட்டில் சுற்றி வரும். ரெஸ்ட்டே இருக்காது. ஆனால், எத்தனை கஷ்டப்பட்டாலும் மறுநாள் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

நான் இது மாதிரி உணர்ந்ததே இல்லை. ரஞ்சித்திற்கு நன்றி. ரஞ்சித் ‘சார்பட்டா’ படத்தைவிட 100 மடங்கு இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார். நான் முன்னமே எந்தப் படத்திலும் இல்லாத மாதிரி இருக்க வேண்டும் என முடிவு பண்ணித்தான் இந்தப் படத்தினை செய்தேன். ரஞ்சித் மிக அற்புதமான இயக்குநர். அதை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார்.

ஜீ.வி. இந்தப் படத்திற்கு அட்டகாசமாக இசையமைத்திருக்கிறார்.  அவர் நடிக்க வந்தபோது “வேண்டாம் நடிக்காதே…  இயக்குநர்கள் இசையமைப்பாளர்கள் நடித்தால்  எனக்கு வாய்ப்பு வராதே” என நகைச்சுவையாகச்  சொன்னேன். ஜீ.வி., நடிப்பதால் இசை நன்றாக வருமா என நினைத்தேன்  ஆனால் நடித்துக்கொண்டே எப்படி இப்படி பிரமாதப்படுத்துகிறார் என்று தெரியவில்லை, அவர் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் பெரிய படங்களில்  அசத்துகிறார்.

ஞானவேல் ராஜாவும், நானும் முன்பேயே படம் செய்யப் பேசினோம். கடைசியாக இந்தப் படம் அமைந்தது மகிழ்ச்சி. இது எல்லோருக்கும் மிக முக்கியமான  படமாக, அதேசமயம் இந்திய சினிமாவிலும் ஒரு குறிப்பிடத்தக்க நல்ல படமாக இருக்கும்..” என்றார்.

ந்த ‘தங்கலான்’ திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதியன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score