full screen background image

ஒட்டன்சத்திரம் சந்தையில் நடக்கும் கதைதான் ‘தங்க ரதம்’ திரைப்படம்

ஒட்டன்சத்திரம் சந்தையில் நடக்கும் கதைதான் ‘தங்க ரதம்’ திரைப்படம்

என்.டி.சி மீடியா மற்றும் வீகேர் புரொடக்சன் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும்  ‘தங்க ரதம்’ என்ற தமிழ் திரைப்படம் ஜுன் 16-ம் தேதியன்று வெளியாகிறது. இதனை தமிழகம் முழுவதும் சத்யம் சினிமாஸ் வெளியிடுகிறது.

இதில் வெற்றி, சௌந்தரராஜா, அதிதி கிருஷ்ணா, நான் கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், லொள்ளு சபா சுவாமிநாதன், ராண்டில்யா, பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இதனை அறிமுக இயக்குநர் பாலமுருகன் இயக்கியிருக்கிறார். ஆர் ஜேக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்ய, டோனி பிரிட்டோ என்ற அறிமுக இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார். சி.எம்.வர்கீஸ் மற்றும் பினுராம் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

தமிழகத்தின் பெரிய சந்தைகளில் ஒன்று ஒட்டன்சத்திரம் சந்தை. தென் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் இங்கிருந்து பொருள்கள் செல்கிறது. எப்போதும் பரபரப்புடன் பல்வேறு வகையான மனிதர்களுடன் வலம்வரும் இந்த சந்தையை பின்னணியாகக் கொண்டு இதுவரை தமிழில் எந்த திரைக்கதையும் வெளியாகவில்லை.

thanga ratham movie stills

இந்நிலையில் படத்தின் இயக்குநர் பாலமுருகன் இந்த சந்தையில் ஒரு வணிகராக இருந்து செயல்பட்டபோது கிடைத்த அனுபவங்களை ஆதாரமாக வைத்து உருவானதுதான் இந்த படத்தின் திரைக்கதை. 

இந்த சந்தைக்கு பக்கத்து கிராமப் பகுதியிலிருந்தும், விவசாயிகளிடமிருந்தும் காய்கறிகளை தங்களது டெம்போ வண்டியில் ஏற்றிவரும் இரு இளைஞர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்வதுதான் இந்த படத்தின் கதைக் கரு.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் டெம்போ குறையாத ‘தங்க ரதம்’ என்று பெயர் பொறிக்கப்பட்ட டெம்போவின் கதை.

தங்க ரதம் என்பது கதையின் நாயகனான  செல்வா(வெற்றி)  ஒட்டிவரும் டெம்போவிற்கும்,  பரமன்(சௌந்தரராஜா)  என்ற டெம்போவிற்கும் இடையே நடைபெறும் தொழில் போட்டியை அதன் இயல்பு தன்மை மாறாமல் சொல்லியிருக்கிறார்களாம்.

அத்துடன் செல்வாவிற்கும், ஒட்டன்சத்திரம் கல்லூரியில் படிக்கும் ஆனந்தி (பரமனின் தங்கை)க்கும் இடையே ஏற்படும் காதலையும் மண்ணின் மனம் மாறாமல் சொல்லியிருக்கிறார்கள்.

DSC_2761

திரைக்கதையை வலுப்படுத்துவதற்காக மலைச்சாமி என்ற கேரக்டரில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடித்திருக்கிறார். இவரின் தோற்றத்தையும், கேரக்டரின் சிறப்புகளையும் சொல்லும் வகையில் பாடலொன்று இடம் பெற்றிருக்கிறது. அந்த பாடலை இயக்குநர் பாலமுருகன் எழுதியிருக்கிறார்.

இந்த பாடலின்போது நான் கடவுள் ராஜேந்திரனுடன் நடனமாடியிருக்கிறார் சுசித்ரா. இவர் முன்னாள் கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் இளைய சகோதரி என்பதும். தெலுங்கில் இவர் நடித்திருந்தாலும், இவர் தமிழில் அறிமுகமாவது இந்த பாடலில்தான் என்பதும் இதன் சிறப்பம்சம். 

படத்தில் நாயகனாக நடித்திருப்பவர் வெற்றி. இவர் ஏற்கனவே சித்தார்த் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ என்ற படத்திலும், பா.விஜய் நடித்த ‘ஸ்ட்ராபெர்ரி’ என்ற படத்தில் வில்லனாகவும் நடித்தவர்.

இவர் கதையின் நாயகனாக நடித்து அறிமுகமாகும் முதல் படம் இது. ஆறடிக்கும் அதிகமான உயரம் கொண்ட இவர், படத்தில் டெம்போ டிரைவராக நடிக்கும்போது தன் தோற்றத்தை கேரக்டருக்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். அத்துடன் படத்தில் இவர் ஓட்டும் வாகனத்தையும் இவர் உயத்திற்கேற்றவகையில் மாற்றியமைத்து படமாக்கியிருக்கிறார்கள். அதே போல் சேசிங் மற்றும் சண்டைக் காட்சிகளின்போது இவர் டூப் போடாமல் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

IMG_1373

படத்தைப் பற்றி இயக்குநர் பாலமுருகன் பேசும்போது, “இந்தப் படம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையை பின்னணியாக கொண்டு தயாராகியிருக்கிறது. இந்த சந்தைக்கு டெம்போவில் காய்கறிகளை ஏற்றி வரும் இரண்டு இளைஞர்களை சுற்றிப் பின்னப்பட்ட யதார்த்தமான வாழ்வியல் கதைதான் இந்த படம். இந்த படத்திற்காக பரபரப்பாக காணப்படும் இந்த ஒட்டன்சத்திரம் சந்தையில் ஏழு நாட்கள் படமாக்கியிருக்கிறோம்.இது தமிழ் சினிமாவிற்கு புதியதாக இருக்கும்.

காதல் காட்சிகளாகட்டும், ஏனைய காட்சிகளாகட்டும் எல்லாமே யதார்த்தம் மீறாத வகையிலேயே திரைக்கதை அமைத்து காட்சிப்படுத்தியிருக்கிறேன். அதனால்தான் இதனை சிறப்பு காட்சியாக பார்த்த திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ் ஸார் படத்தை மனதார பாராட்டினார். இதை எனக்கு கிடைத்த கௌரவமாகவே கருதுகிறேன். கமர்சியலுக்காக எந்த சமரமும் செய்து கொள்ளவில்லை. ஆனால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மனதில் வைத்து படம் தயாராகியிருக்கிறது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கொடுத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். இதையும் ஒரு வெற்றியாகவே பார்க்கிறேன்.

IMG_4272

படத்தில் மலைச்சாமி என்ற கேரக்டரில் விவசாயியாகவும், எந்நேரமும் குடித்துக் கொண்டிருக்கும் குடிகாரராகவும் நான் கடவுள் ராஜேந்திரன் நடித்திருக்கிறார். படத்தில் இவருக்கு ஒரு பாடல் காட்சியை வைத்திருக்கிறோம். அந்த பாடல் வரிகளை நான் எழுதியிருக்கிறேன். அந்த பாடல், படம் வெளியானவுடன் பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்…” என்றார்.

படம் பற்றி நடிகர் வெற்றி பேசும்போது, “ஸ்ட்ராபெர்ரி என்ற படத்தில் வில்லனாக நடித்தபோதே கதையின் நாயகனாக ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்ற எண்ணம் உதயமானது.

நல்லதொரு கதைக்காக காத்திருந்தேன். அப்போதுதான் ஒரு பொதுவான நண்பர் மூலமாக இயக்குநர் பாலமுருகன் எனக்கு அறிமுகமானார். அவர் ‘தங்க ரதம்’ படத்தின் கதையைச் சொன்னபோது அதிலுள்ள ஜீவன் என்னை கவர்ந்தது.

DSC_2988

அண்ணன், தங்கை உறவு குறித்த அவரது வாழ்வியல் அனுபவம் படத்தின் சிறப்பம்சமாக இருந்தது. அதன் பிறகு நான் கதையின் நாயகனாக நடிக்க இந்த கதையே பொருத்தமானது என்று எண்ணி, இவருடன் பயணிக்கத் தொடங்கினேன்.

இந்த கதைக்கான தயாரிப்பாளர் தேடலில் ஒரு வருடம் கரைந்தது. அதன் பிறகு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வர்கீஸ் அறிமுகமானார். அவர் இந்த கதையை தயாரிக்க முன்வந்தார். ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்தோம். படத்திற்காக ஒட்டன்சத்திரம் சந்தை, பழனி, வள்ளியூர், நாகர்கோவில் என பல இடங்களில் படபிடிப்பு நடைபெற்றது. கதாநாயகியாக நடிகை அதிதி கிருஷ்ணா நடித்தார்.

சண்டை காட்சிகளிலும், சேசிங் காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்தது மனதிற்கு ஆறுதலாக இருந்தது. இனி தொடர்ந்து கதையின் நாயகனாக நடிப்பதா..? இல்லையா..? எனக் கேட்டால் எந்த கேரக்டராக இருந்தாலும் என்னுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்தும் கேரக்டரில் நடிக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். அதாவது நல்ல நடிகனாக வரவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது. 

ஜுன் 16-ம் தேதியன்று வெளியாகும் ‘தங்கரதம்’ என்னுடைய திரையுலக பயணத்தை நல்லபடியாக தொடங்கி வைக்கும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்…” என்றார்.

Our Score