சமீபத்தில் வெளியான படங்களில் ‘தலக்கோணம்’ படம் இசை மற்றும் பாடல்களுக்காக பெரியளவில் பேசப்பட்டுள்ளது. சுபாஷ் ஜவஹர் என்ற இரட்டை சகோதரர்கள் இணைந்துதான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள்.
படத்தின் ஹீரோவான ஜிதேஷ் தன்னை ‘தலக்கோணம்’ படம் சம்பந்தமான விழா எதற்கும் அழைக்காமலேயே படத்தை ரிலீஸ் செய்திருப்பது குறித்து தனது அதிருப்தியை சில நாட்களுக்கு முன்னால் ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்த தனது தனிப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார். இப்போது அதே ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் படத்தின் இசையமைப்பாளர்களின் இந்தத் தனிப்பட்ட பிரஸ்மீட்டும் நடந்தது.
சகோதரர்களில் ஒருவரான ஜவஹர் பேசும்போது, “எங்கள் குடும்பம் ரொம்ப ஒற்றுமையானது. அண்ணன் . தம்பியான எங்களுக்குள் நான்கு வயதுதான் வித்தியாசம். இருந்தாலும் நாங்கள் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் சண்டை சச்சரவு எல்லாம் இருக்காது. நான் பேசுகிற அளவுக்கு அண்ணன் அதிகம் பேச மாட்டார்..” என்றார் ஜவஹர்.
உண்மையில் அண்ணன் அமைதியாக இருக்க தம்பியே, அனைத்து கேள்விகளுக்கும்கூட பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
“எங்கப்பா, எங்களை படிக்க பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியதைவிட இசையைக் கற்றுக் கொள்ள அனுப்பியதுதான் அதிகம்.. சிறுவயது முதலே கர்நாடக சங்கீதம், கீபோர்டு. பியானோ என்று மாறி மாறி இசை வகுப்புகளுக்குப் போய்க் கொண்டிருப்போம். இதனாலேயே எங்களுக்கும் இசை மீது ஆர்வம் அதிகமானது. அதே சமயம் படிப்பையும் நாங்கள் விடவில்லை. நான் பி.எஸ்.ஸி. பிசிக்ஸ் முடித்தேன். தம்பி பி.இ. முடித்தார்.
படித்த வேலைக்கு எங்களை அனுப்பி வைக்க எங்கப்பாவுக்கு விருப்பமில்லை.. இசைத் துறையில் நாங்கள் பெரிய அளவில் சாதிக்கணும்னு நினைச்சார். அவர் நினைத்தது போலவே நாங்களும் இந்த இசைத் துறையில் காலடி எடுத்து வைத்தோம்..” என்றார் அண்ணன் சுபாஷ்.
துவக்கத்தில் டிவி விளம்பரங்களுக்குத்தான் இந்த இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். ‘மெடிமிக்ஸ்’ முதல் ‘காளிமார்க் சோடா’ கம்பெனிவரையிலும் சிறிய, பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
கூடவே பல இசையமைப்பாளர்களிடம் கீபோர்டும் வாசித்துள்ளார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ் போன்ற மூத்தவர்களிடம் மட்டுமல்ல… யுவன் சங்கர்ராஜா, ஸ்ரீகாந்த் தேவா போன்ற இளைய இசையமைப்பாளர்களிடமும் கீபோர்டு வாசிப்பு, மற்றும் பின்னணி இசைக் கோர்ப்பில் இவர்கள் பணியாற்றியுள்ளனர். தங்களுடைய ஆர்க்கெஸ்ட்ரா மூலம் வெளிநாடுகளிலும் மேடைக் கச்சேரிகள் செய்துள்ளனர்.
“நாங்கள் இசையமைத்த முதல் படம் ‘பூவே பெண் பூவே’. இஷாக் ஹுசைனி நடித்த படம். அடுத்த படம் ‘என்னவோ பிடிச்சிருக்கு.’ இந்த ரெண்டுமே சரியா போகலை. இதனாலேயே எங்களை யாரும் கவனிக்கலை. மூன்றாவதா மலையாளப் பட இயக்குநர் லோகிததாஸின் ‘மீண்டும் மீண்டும்’ படத்திற்கு இசையமைத்தோம். கதையே இசை வித்வான் ஒருவரின் வாழ்க்கைக் கதை. படமும் வெற்றி பெற்றது. எங்களுக்கு நல்ல பெயரும் கிடைத்தது. ஆனாலும் தமிழில் எங்களை நிலை நிறுத்த வேண்டும் என்பதால் தொடர்ந்து வந்த மலையாள படங்களை ஏற்க மறுத்து தமிழுக்கே வந்துவிட்டோம்..” என்றார் சுபாஷ்.
“எங்கப்பாவும் இசைத் துறையில் இருந்தவர்தான்.. அப்பா எழுதி இசையமைத்து நிறைய பக்திப் பாடல் கேசட்டுகள் வெளியாகியுள்ளன. இந்த நேரத்தில் நாமே ஒரு படம் எடுத்தால் என்ன என்று அப்பா யோசித்தார். அப்படி உருவான படம்தான் இந்த ‘தலக்கோணம்.’ சமுத்திரக்கனியின் உதவியாளர் பத்மராஜ் வந்து கதை சொன்னார். எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தின் கதைப்படி காட்சிகள் பெரும்பாலும் காட்டில்தான் நடக்கும். எனவே பின்னணி இசைக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. பாடல்களுக்கும் இடம் இருந்தது. எனவே இதனைத் தயாரிப்பது என்று முடிவெடுத்தோம்..“ என்றார் ஜவஹர்.
“தலக்கோணம் படம் பார்த்துவிட்டு இசை நன்றாக இருக்கிறது என்று இயக்குநர்கள் சுசீந்திரன், பேரரசு, எஸ்.எஸ்.ஸ்டான்லி போன்ற இயக்குநர்கள் பாராட்டியது மறக்க முடியாது…” என்று பெருமிதப்படுகிறார்கள் சகோதரர்கள்..
கேள்வி-பதில் சீஸனில் ‘தலக்கோணம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் வரிகள் மிக ஆபாசமாக இருந்ததை பற்றிக் குறிப்பிட்டபோது சங்கடத்துடன் அதை ஒத்துக் கொண்டார்கள். “இனி வரும் படங்களில் அது போல இல்லாமல் பார்த்துக் கொள்வோம்” என்றார்கள்.
சகோதரர்களில் இளையவரான சுபாஷ் நோட்ஸ்களை குறித்துக் கொடுக்க பாடகர்களை வைத்து கான்டாக்ட் செய்யும் வேலையை அண்ணன் செய்வாராம்.. “இப்படி இசையமைப்பில் வேலைகளை தங்களுக்குள்ளேயே பிரித்துக் கொள்வதால் பிரச்சினையில்லை…” என்கிறார்கள்.
‘தலக்கோணம்’ படத்தில் இடம் பெற்ற ‘மாயவா மாயவா’ பாடல் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. “அது கல்யாணி’ ராகத்தில் அமைந்த பாடல்.. அந்த சந்தோஷ உணர்வைக் காட்ட அந்த ராகத்தில் அமைத்தோம். இன்றைக்கு பலராலும் பேசப்பட்ட பாடலாகவும் அது இருக்கிறது..” என்றார் சுபாஷ். பொதுவாக ராகங்களை, பாடல் காட்சியின் சிச்சுவேஷன் பொறுத்தே தேர்வு செய்வார்களாம்..!
அடுத்து என்று கேட்டவுடன், “இந்தப் படத்தை பார்த்துவிட்டு தெலுங்கில் ஒரு படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பும் எங்களுக்கு கிடைத்துள்ளது. எல்லாம் ‘தலக்கோணம்’ கொடுத்த பரிசு என்றார்…” சுபாஷ்.









