இந்த மாதிரி படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு?
இந்தப் படத்தை கே ஆர் குரூப் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜென்சன் திவாகர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தயாரிப்பு நிறுவனம் – கே.ஆர்.குரூப், தயாரிப்பாளர் – கண்ணன் ரவி, எழுத்து, இயக்கம் – நித்திஷ் சகாதேவ், எழுத்து – சாஞ்சு ஜோசப், நித்திஷ் சகாதேவ் அனுராஜ், ஒளிப்பதிவு – பப்லு அஜு, இசை – விஷ்ணு விஜய், படத் தொகுப்பு – அர்ஜுன் பாபு, கலை இயக்கம் – சுடில் குமரன் பத்திரிகை தொடர்பு – சதீஷ்.
படத்தின் ஹீரோவான ஜீவா அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர். ஊரில் எந்த நல்லது கெட்டது என்றாலும் முதல் நபராக போய் நிற்க வேண்டியவர். அதே ஊரில் வசிக்கும் இளவரசுவுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பி ராமையாவுக்கும் ஏழாம் பொருத்தம். எப்பொழுதும் சண்டைதான். சண்டைக் கோழிகளாகத்தான் இருக்கிறார்கள்.
இளவரசுவின் மகளான பிரார்த்தனாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது . நாளை காலை அவருக்கு திருமணம். அவரது வீட்டு வாசலிலேயே திருமணம் நடைபெற இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து மாப்பிள்ளை வீட்டாரும் பஸ்ஸில் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் இருக்கும் தம்பி ராமையாவின் அப்பா திடீரென்று இறந்து போகிறார். பக்கத்து வீட்டில் கல்யாணம்.. அடுத்த வீட்டில் சாவு காரியமும் நடந்தால் நன்றாக இருக்குமா என்று தலைவர் ஜீவா விசனப்படுகிறார்.
தம்பி ராமையாவின் அப்பாவின் உடலை தோட்டத்திற்கு கொண்டு போய் வைக்கலாம் என்கிறார் ஜீவா. ஆனால் தம்பி ராமையா அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். இளவரசு என் பொண்ணு கல்யாணம் இங்கதான் நாளைக்கு காலைல 10:30 டூ 11 மணிக்கு கண்டிப்பாக நடக்கும் என்கிறார். “அதே நேரத்தில்தான் நானும் என் அப்பாவின் இறுதி சடங்கை தொடங்குவேன்” என்கிறார் தம்பி ராமையா. இவர்கள் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கிறார் ஜீவா.
இடையில் திடீரென்று மணப்பெண்ணும் காணாமல் போக மொத்த பழியும் ஜீவாவின் தலையில் விழுகிறது. இதை அவர் எப்படி சமாளித்தாரா? திருமணம் நடந்ததா? சாவுக் காரியங்கள் நடந்தனவா? மணப்பெண் திரும்பி வந்தாரா? இதெல்லாம் படம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீவா தனக்கென்று ஒரு தனி அடையாளம் இருக்கும் வகையில் ஒரு நல்ல கதையில் நடித்திருக்கிறார்.
ரொம்பவும் விமர்சிக்கப்படும் அளவுக்கு இந்தப் படத்தில் ஜீவாவுக்கு நடிப்பில்லை. ஆனாலும் அவர் ஒரு சாதாரண பஞ்சாயத்து யூனியன் தலைவராக அவரால் என்ன பேச முடியுமோ அதை மட்டும் பேசியிருக்கிறார். ஒரு சில இடங்களில் கோபம் கொண்டு கத்துகின்ற பொழுது நமக்கே பாவமாக இருக்கின்றது. அப்படி ஒரு இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கிறார். இரண்டு பேரையும் சமாளிக்கும்போது தன்னுடைய நடிப்பை அழகாக காண்பித்து இருக்கிறார் ஜீவா.
தம்பி ராமையா, இளவரசு இருவருமே குணசித்திர நாயகர்கள். எப்படியெல்லாம் நடிக்க முடியுமோ… அப்படி எல்லாம் தங்களுடைய வித்தையை காட்டுவார்கள். அதேபோலத்தான் இந்தப் படத்திலும் இருவருமே சரிக்கு சரியாக நடிப்பை கொட்டி இருக்கிறார்கள்.
தம்பி ராமையா அமைதியானால் இளவரசி பொங்குகிறார். இளவரசு சற்று ஓய்ந்தால் தம்பி ராமையா கொந்தளிக்கிறார். ஆக இவர்கள் இருவரின் கோப பேச்சுக்களும், சண்டையும் பல இடங்களில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறது. அதிலும் திடீர், திடீரென்று சாமி வருவதைப்போல தம்பி ராமையா ஆடுகின்ற அந்த ஒன் மேன் ஷோ அபாரம்.
இறந்து போனவரின் அண்ணனாக நஞ்சு என்ற கதாபாத்திரத்தில் வரும் நடிகர் நம்மை மிகவும் கவனிக்க வைத்திருக்கிறார். அதேபோல் இளவரசுவின் மனைவியாக நடித்தவரும், தம்பி ராமையாவின் மனைவியாக நடித்தவரும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போகலாம் என்று சொல்லும் பொழுது பெண்கள் எப்போதும் ஒரே மாதிரிதான் என்று நம்மால் நினைக்க முடிகிறது.
மணமகனாக நடித்தவர் கன்னியாகுமரி பாஷையில் இழுத்து, இழுத்து பேசுகின்ற அந்த பேச்சும், சிச்சுவேஷன் புரியாமல் மணமகளிடம் வழிவதும் நகைச்சுவையை கூட்டி இருக்கிறது.
இரண்டு வீடுகளும் வெட்டும் குத்துமாக டென்ஷன் உச்சத்தில் இருக்கும்போது மணமகளை ஒருதலையாய் காதலித்த நபர் கையில் தாலிக் கயிறோடு வந்து வா ஓடிப் போகலாம் என்று பேசுகின்ற காட்சியில் வெடி சிரிப்பு வந்தது.
கல்யாண சந்தோஷத்தையே அனுபவிக்க விடாமல் செய்த சண்டையினால் மனம் குலைந்து போய் மணமகள் பிரார்த்தனா நிறுத்தி நிதானமாக தன்னுடைய திருமணம் பற்றி பேசுகின்ற அந்த ஒரு காட்சியில் மொத்த தியேட்டரும் அமைதியாகிறது. அந்த ஒரு காட்சியிலேயே மொத்த ஆடியன்ஸையும் தன் பக்கம் வரவைத்துவிட்டார் இயக்குநர் நலன் குமாரசாமி.
பப்லு அஜ்ஜுவின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள்தான் அதிகம் என்பதால் படம் முழுவதையும் அவ்வளவு அழகாக ரம்மியமாக படமாக்கி இருக்கிறார்.
விஷ்ணு விஜயின் பின்னணி இசையில் ஒரு போர்க்களம் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட ஒரு பின்னணி இசையை அழுத்தமாக கொடுத்து இருக்கிறார்.
பாபுவின் படத் தொகுப்பு படத்தை கடைசிவரையில் க்ரிப்பாகவே கொண்டு சென்றிருக்கிறது. படத்தில் இருக்கும் எளிமையான வசனங்களும், சுவாரசியமான திரைக் கதையும் இந்தப் படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் என்றே சொல்ல வைக்கிறது.
இரண்டு ஆண்களின் ஈகோ பிரச்சனையால் இரண்டு குடும்பத்து பெண்களும் அல்லல்படுகிறார்கள். ஊரும் கதறுகிறது. இடையிடையே அரசியலும் வந்து பிரச்சனையை தூண்டி விடுகிறது. அரசியல் வியாதிகளும் குடும்பத்திற்கு உதவி செய்வதுபோல உபத்திரம் செய்வதையும் அழகாக படமாக்கி இருக்கிறார் இயக்குநர்.
நிச்சயமாக குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்து சிரிக்க வேண்டிய திரைப்படம் இது.
மிஸ் பண்ணி விடாதீர்கள்!
RATING : 4 / 5








